Advertisement

நிழல் 4

”ஹாய் மாயா, எவ்வளவு நேரமா கூப்பிடுறேன், காதிலயே வாங்க மாட்றீங்க, ஃப்ர்ஸ்ட் டே இன் ஆஃபீஸ் அப்படி என்ன சிந்தனை…”

நான்கைந்து முறை கேட்டு எந்த பதிலும் வராததால் குரலை சற்று உயர்த்திக் கேட்டான் கௌதம்.

அவன் போட்ட சத்தத்தில் சுயநினைவுக்கு திரும்பிய மாயா அத்தனை அருகில் கௌதமை பார்க்கவும், அதிர்ந்து இரண்டடி பின்னே சென்றாள்.

“ஹேய் மாயா நத்திங் சீரியஸ், கூல் கூல்…” என்று மீண்டும் முன்னோக்கி வர அவள் முகம் பதட்டத்தில் வியர்த்துவிட்டது.

சாதாரணமாய் வரவேற்றதுக்கு அவளின் பாவனைகள் இப்படி மாறுமென அவன் நினைக்கவில்லை. கல்லூரியில் அவளைப் பார்த்திருக்கிறான் பழக நினைத்த போதெல்லாம் அவளின் நட்பு வட்டத்தைக் கூட நெருங்க முடியவில்லை அவனால்,

படிப்பை முடித்ததும் வெளிநாட்டிற்கு பறந்துவிடவேண்டும் என்ற அவன் கனவிற்கு அவனின் அப்பா இடைக்காலத் தடை போட்டிருந்தார். குறைந்தது ஒரு வருடமாவது நம் கம்பெனியில் பொறுப்பை கவனிக்காமல் வெளிநாட்டிற்கு கனவில் கூட செல்லக்கூடாது என்று.

இந்த ஒரு வருடத்திற்கு நாட்களை எப்படிக் கடத்தப்போகிறோம் என்று முதல் நாள் அலுவலகம் வந்தவனுக்கு, கொடுக்கப்பட்ட முதல் கோப்பு, அடுத்த மாதம் பணியில் புதிதாய் இணையப்போகிறவர்களின் பட்டியல்.

முதல் பெயராய் இருந்தது “மாயா…” பெயரில் கூட அத்தனை மயக்கம் பிறக்குமா, அவனுக்கு வியப்பாய் இருந்தது, இது அவள் தானா என்று சந்தேகமும் இருந்தது.

அடுத்த திங்கள் வரப்போகிறவளைப் பற்றி இப்போதென்ன சிந்தனை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே, வந்தான் விநோதன். கடந்த ஒரு வருடமாக அங்கு பணிபுரிகிறான்.

கார்மெண்ட்ஸ் தொழில் கொடிகட்டிப்பறக்கும் திருப்பூரைச்சேர்ந்த மிகப்பெரிய நிறுவனத்தின் கிளை ஊட்டியில் இயங்கிக் கொண்டிருந்தது.

அதன் பொறுப்பு தான் கௌதமிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு வேலை பார்க்கும் விநோதன் முதல் சந்திப்பிலேயே சினேகமாகிவிட அவன் நினைத்தது போல் அத்தனை கடினமானதாக இல்லை அந்த நாட்கள். அவள் முன் தன்னை மிகச் சிறப்பாகக் காட்டிக் கொள்வதற்காகவே, அலுவலகப்பணிகளை சிரத்தையோடு கற்றுக் கொண்டான். நாட்களை கடத்த வந்தவன், அந்த ஒரு மாதத்தில் அனைத்து பொறுப்புகளையும் தனதாக்கிக் கொண்டு, சிறப்பாக நிர்வகிக்கவும் துவங்கியிருந்தான்.

அடுத்த நாள் அலுவலகத்தில் தன்னோடு அவளிருப்பாள் என்ற நினைவே அத்தனை சுகமாயிருந்தது அவனுக்கு.

“என்ன கௌதம் சார், க்லோசப் விளம்பரத்துக்கு உங்களை யாரும் புக் பண்ணியிருக்காங்களா என்ன…” என்றபடி உள்நுழைந்தான் விநோதன்.

“என்ன, என்ன கேட்டீங்க விநோதன்…?”

“அது சரி நான் என்ன கேட்டேன்னு கூட தெரியலையா உங்களுக்கு…”

“ஏதும் முக்கியமா விசயமா, எதாவது செக்ல சைன் பண்ணனுமா..?”

“அது கெட்டுது போங்க…”

“செக் ஏதும் பௌன்ஸ் ஆகிடுச்சா, அதுகெல்லாம் சான்ஸ் இல்லையே…”

“சார் யார் அந்த பொண்ணு, நல்லா மந்திரிச்சு விட்டிருக்கு…”

“பொண்ணா நோ நோ அதெல்லாம் இல்லையே, நோ நோ விநோதன்…”

“எதுக்கு இவ்வளவு பதட்டம் சார், நான் கூட உங்களுக்கு வீட்டில பொண்ணு பார்த்துட்டாங்களோ என்னவோ, அந்த கனவுல தான் மிதக்குறீங்களோன்னு நினைச்சேன்…”

“பொண்ணு தான் பட் வீட்டில பாக்கலை, நான் பாக்க போறேன்…”

“வாவ் சார் லவ்வா… சூப்பர் போங்க, யார் அந்த பொண்ணு , யார் அந்த லக்கி கேர்ல்…”

“நான் நெனக்கிறது நடந்திட்டா, நான் தான் லக்கி விநோதன்…”

“விஸ் யூ ஆல் சக்ஸஸ் பாஸ்…”

“ஹா ஹா தான்க் யூ மேன்…”

“அப்போ இன்னிக்கு மீட்டிங் சார்…”

“இது தனி அது தனி மீட்டிங்கு அரேஞ் பண்ணுங்க, ஐ வில் பீ தேர் இன் ஃபைவ் மினிட்ஸ்….”

“எஸ் சார்…” என்று புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றவனை மீண்டும் அழைத்தான் கௌதம்”

“எனக்கு ஒரு ஃபேவர் பண்ணுங்க விநோதன் நாளைக்கு வரும் போது ஃப்ரெஷ் ரோஸ் கொஞ்சம் வாங்கீட்டு வாங்க….”

“காதல் மணக்கும் ஒரே பூவா, ஹா ஹா கண்டிப்பா சார்…”

“யூ டூ ரொமேண்ட்டிக் மேன்…”

“அடப்போங்க சார்…”

நேற்றைய உரையாடல் எல்லாம் அர்த்தமில்லாமல் போனது அந்த ஒரு நொடியில், மாயா கௌதமைக் கண்டு பார்த்த அந்த மிரட்சி பார்வையில்.

அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூட அவனால் நிற்க முடியவில்லை. தன் அறைக்கு சென்றுவிட்டான்.

வேகமாக அவன் செல்வதைக் கண்டு சுயனினைவிற்கு வந்த மாயா அப்போது தான் எங்கிருக்கிறோம் என்று உணர்ந்தாள்.

அருகிலிருந்த ரிசப்ஷனிஷ்ட்டிடம் தன் பெயரைச் சொல்ல, அந்த பெண்மணி ”மீட் மிஸ்டர் விநோதன்…“ என்று தன் வலதுகை பக்கம் காட்ட அங்கிருந்த அறை நோக்கிச் சென்றாள்.

ஆயிரம் கனவுகளோடு காத்திருந்தவனுக்கு அத்தனையும் நொருங்கிப் போன நொடி வந்த கோவத்திற்கு அளவே இல்லாமல் இருந்தது.

”என்ன பண்ணீட்டேன்னு அப்படி ரியாக்ட் பண்ணுறா, ஷிட்….” என்று குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தான் கௌதம்.

அறைவாசல் வரை வந்தவள், ஒரு நொடி நின்ற் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தனக்குத் தானே “கூல் மாயா நத்திங் சீரியஸ், எதுக்கு பதட்டப்படுற, தேவையில்லை, நல்லா மூச்சை இழுத்துவிடு, புருவத்தை ரிலாக்ஸா விடு, கண்ணை நல்லா மூடித் திற, சிரி, அவ்வளவு தான், கமான் மாயா சியர் அப்…” என்று பார்த்திபன் பாணியில் தனக்குத் தானே கைகுலுக்கிக் கொண்டவள், கதவை மெதுவா திறக்க முயன்றாள், திறக்கமுடியவில்லை.

அதே நேரம் உள்ளிருந்த கௌதமும் வெளியே வர கதவைத் திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒரே நேரத்தில் இருவரும் பிடித்து இழுத்ததில் கதவு எந்தபுறமும் திறக்காமல் சண்டித்தனம் செய்தது.

ஒரு வேளை மாத்தித் திறக்கிறோமோ, நமக்குதான் இந்த புஷ் புல் க்கு இன்னும் சந்தேகம் தீரலையே, எதுக்கு ஒரு தடவை அந்தபக்கம் தள்ளிப் பார்ப்போமே என்று மாயா எதிர்திசையில் தள்ள, எதிர்ப்புறம் பலம் கொண்டு இழுத்துக் கொண்டிருந்த கௌதம் சட்டென திறந்த கதவில் சற்றே தடுமாற, மாயா கதவில் மோதிக் கொண்டாள்.

மீண்டும் ஒரு எதிர்பாராத மிக அருகிலான சந்திப்பு.

இந்த முறை என்ன நடந்தது என்று யோசித்ததில் இருவரும் சிரித்துவிட, அதோடு மாற்றி மாற்றி சாரி சொல்லிக் கொள்ள, இதற்கு முன்பிருந்த மனநிலை இருவருக்குமே மாறியிருந்தது.

இயல்பாகி தத்தம் நிலையில் வந்து நின்ற போது, ”சாரி விநோதன், ஐ ஆம் மாயா, நியூ அப்பாயிண்ட்மெண்ட் ஃபார் டிசைன் செக்‌ஷன்…”

”குட் மாயா, பட் ஐ ஆம் நாட் வினோதன்…” என்ற கௌதம் அதற்கு மேல் அங்கு நிற்கவில்லை.

முன்பிருந்ததை விட இன்னும் அதிகமாய் கோவம் வந்தது கௌதமிற்கு, அதுவும் மாயா, விநோதன் பேரைச் சொல்கையில் , அதை சொல்லும் போது அவள் முகத்தில் தெரிந்த பிரகாசம், அதே நேரம் தன்னை கண்டதும் வந்த மிரட்சி எல்லாம் மாறி மாறி கண்முன் வந்தது.

அதற்கு மேல் அலுவலகத்தில் இருக்கப் பிடிக்காமல் தன் காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

ஒன்றும் புரியாத மாயாவோ, அந்த அறைக்கு மேல் இருந்த பெயர் பலகையை பார்க்க, அதில் கௌதம், பொதுமேலாளர் என்று இருந்தது.

“ஸ்ஸ்ஸ்… என்று நாக்கைக் கடித்து கண்ணைச் சுருக்கி தன் தவறை எண்ணி தலையில் தட்டிக் கொண்டவளை, யதேச்சையாய் தன்னறையிலிருந்து வெளியே வந்த விநோதன் பார்த்தான்.

காலையில் பூங்கொத்து வாங்குகையில் பார்த்த அதே பெண், இவளை எங்கோ பார்த்திருக்கிறோமே, என்று யோசித்தான்.

”ஹலோ சார், இங்க விநோதன்ங்குறது…”

யோசிக்கவைத்தவளே யோசனையை கலைத்தும் விட்டாள்.

“எஸ் ஐ ஆம் விநோதன்…”

“ஹப்பாடி, இப்பவாச்சும் கரெக்ட்டா கண்டுபிடிச்சேனே…”

“வாட்”

“அதில்லை சார், இங்க வந்ததுல இருந்து நான் சரியில்லையா என் நேரம் சரியில்லையான்னு தெரியலை, ஒரே கன்பியூசன், ரிசப்ஷனை கண்டுபிடிச்சு, இப்ப விநோதனை கண்டுபிடிக்குறதுக்குள்ள முட்டிமோதி ஒரு வழியாயிட்டேன்…”

அவளின் நீளமான பேச்சுக்கு மெல்லிய சிரிப்பைக் கூட அளவாய் உதிர்த்தவன், ”எஸ் கம் இன்…“ என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.

“எஸ் கம் இன்…” என்று அவனைப் போலவே சொல்லிப் பார்த்துக் கொண்டவள், தானும் அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றாள்.

டேக் யுவர் சீட் மிஸ் மாயா, பை தி வே உங்களுக்கான ட்ரெயினிங் நாளையில இருந்து தொடங்கும், இது உங்க டாஸ்க் லிஸ்ட், ட்ரெயினிங் முடிச்சதும் உங்களுக்கு ஒரு டெஸ்ட் வைப்போம் அதுல நீங்க பாஸானாதான் இங்க ஜாப் ல கண்டினியூ பண்ணமுடியும், இன்னிக்கு நம்ம கம்பெனியை பத்தின டிடெய்ல்ஸ் நம்ம வெர்க்கிங்க், இதெல்லாம் ஸ்டடி பண்ணிக்கோங்க, உங்க கேபினை ராமு அண்ணா காட்டுவார்…” என்று பேசி முடித்தவன், இண்டர்காமில் ராமுவையும் அழைத்திருந்தான்.

அவன் பேசிய வேகத்திலும், நேர்த்தியிலும், இது அவனுக்கு மிகவும் பழக்கமான வசனம் போலும் என்று எண்ணிக் கொண்டவள், அந்த அறையை நோட்டம் விட்டாள்.

கம்பெனியின் புது மாடல்கள், டிசைன்கள், அதோடு சில ஓவியங்களும் இருந்தது. டேபிளின் மீது புத்தர் சிலையொன்று சிரித்தபடி இருந்தது. கோப்புகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. அவன் முன்னால் இருந்த கணினி அடுத்து அடுத்து வந்து கொண்டிருந்த மின்னஞ்சல்களால் நிரம்பிக் கொண்டிருந்தது.

இவற்றை இவள் கவனித்து முடிக்கும் முன் ராமு அங்கே வந்திருந்தார்.

“மிஸ் மாயா, டிசைன் செக்‌ஷன் நியூ அப்பாயிண்ட்மெண்ட், கேபினைக் காட்டிடுங்க…” என்றான்.

“தாங்க் யூ மிஸ்டர் விநோதன்…“ என்று கிளம்பியவள் மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டு சென்றாள்.

ஏனோ இனி நினைக்கவே கூடாது என்று வைத்திருந்த எண்ணங்கள் மெல்ல அவளுக்குள் தலைதூக்கியது.

தன் பள்ளி, இன்பமாய் தான் துள்ளித்திரிந்தது, ஆசிரியர்களிடம் நற்பெயர் வாங்கியது. தேவதை வேடமிட்டு நடித்தது, மிட்டாயில் கட்டிக் கொண்ட கைக்கடிகாரம் என ஒவ்வொன்றாய் நினைவிற்கு வந்தது.

வேண்டாமென்று நினைப்பவற்றிலும் சில நல்ல நினைவுகள் இருக்கத்தான் செய்கிறது போலும் என்று நினைத்தவள் மனதில் திடீரென்று அந்த அரக்கன் வந்தான் தான் தேவதையாய் வேடமிட்டு நடிக்கையில் அரக்கனாய் வேடமிட்டவன், அவன் முகமும் விநோதன் முகமும் மாறி மாறி கண்முன் வந்தது, அந்த அரக்கனைத் தொடர்ந்து தன் வாழ்வைச் சூன்னியமாக்கத்துணிந்த அந்த தாடிக்காரன் வந்தான், அவனை பின் தள்ளிவிட்டு, என்னை மறந்துட்டியா மாயா என்று நேகாவும் வந்தாள்.

வருடக்கணக்காய் போராடி பின் தள்ளிய அத்தனை நினைவுகளும் நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் கண்முன் வந்துவிட்டது. அந்த நேரம் மூச்சுவிடவே மிகவும் கஷ்டமாக இருந்தது அவளுக்கு. வாயைத்திறந்து மூச்சுவிட முயன்றும் கேவல் வந்ததே ஒழிய சுவாசிக்கப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை.

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது, முகமெல்லாம் வியர்த்துபோனது. கால்கள் அடுத்து நகரமுடியாமல் நின்றது அந்த நேரம் நேகா வந்து நின்றாள் அவள் முன்னே.

காலையில் பூக்கடையில் பார்த்த சிறுமியும் நேகாவும் மாறிமாறி தோன்றினர். என்ன எவ்வளவு தூரம் நீ விரட்டினாலும், நான் உன்கூடயே தான் இருப்பேன் மாயா, என்னை நீ பிரியவே முடியாது.

”ஹா ஹா ஹா…” என்று மிகக்கோரமாய் சிரித்தாள் நேகா.

“மாயா “

காதிற்கு மிக அருகில் கேட்டது அந்தக் குரல், வேகமாய் திரும்பியவளின் முகத்தில் மோதியபடி நின்றிருந்தான் அந்த தாடிக்காரன்.

“என்ன மாயா சௌக்கியமா இருக்க போல, ரொம்ப அழகா வளர்ந்துட்டியே…”

அலறித்துடித்துவிட்டாள் மாயா.

”நானும் இருந்திருந்தா உன்னை மாதிரி வளர்ந்திருப்பேன்ல மாயா, என்னைய பாத்தியா இன்னும் இப்படியே இருக்கேன், இங்க பாரு என் பல்லு கூட வெள்ளையா இல்லை…” என்று காட்டிய நேகாவின் பற்களில் குருதி சொட்டிக் கொண்டிருந்தது.       

Advertisement