Advertisement

நிழல் 3
நம் மனநிலையை தீர்மானிப்பதிலும், தீவிரமான எண்ணங்களை மறக்கவைப்பதிலும், மறந்து போனவற்றை நினைவூட்டுவதிலும் வாழ்விடங்களுக்கு பெரும்பங்கு உண்டு.
நிதசர்னத்தில் பெரும்பான்மையாக ஒத்துப்போகும் இந்த கூற்று மாயாவின் வாழ்விலும் எதிரொலித்தது. மாயா உட்கொண்ட மருந்தின் வீரியத்தில் அவள் உறங்கிக் கொண்டிருக்கையில் இரவோடு இரவாக தங்கள் வீட்டை காலி செய்துவிட்டு கோவையிலிருந்து ஊட்டிக்கு வந்திருந்தனர் அவள் பெற்றோர்.
அவளின் மனநிலைக்கு முதல் மருந்து அது தான் என மருத்துவர்கள் தெளிவாக சொல்லிவிட்டதாலும், இயற்கை எழில் கொஞ்சும் அந்த இடம் அவளுக்கு மிகவும் பிடித்தமானதாய் போனதாலும், ஊட்டியே அவர்களின் முதல் தேர்வாகிப் போனது.
கம்பளியின் கதகதப்பில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவளை பார்க்க பார்க்க அவளின் அன்னைக்கு கண்களில் நீர் கோர்த்தது. அவளை எழுப்ப வந்தவர், நீண்ட நாட்களுக்கு பின் அமைதியாக உறங்கும் அவளைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டார்.
எப்படி சுட்டித்தனமும் சுறுசுறுப்புமாய் வலம் வந்த மகள் இன்று எதைக் கண்டாலும் அரண்டு தனக்குள் நத்தையாய் சுருங்கிக் கொள்வதைக் கண்டு கலங்கியிருந்தது அந்த தாயுள்ளம்.
ஆதரவாய் தேளில் விழுந்த தன் கணவனின் கையை அழுத்திக் கொண்டவர் தனக்கு மேல் மகளை எண்ணி மனசஞ்சலத்தில் இருப்பவரை தேற்றும் விதமாய், “இனி எல்லாம் சரியாகிடும் ஒண்ணும் கவலைப்படாதீங்க…” என்றுவிட்டு நகர்ந்துவிட்டார்.
அவர்களின் எண்ணம் முற்றிலும் பொய்யாகிடவில்லை. அந்த இடம் அவளுக்கு மிகவும் பிடித்த சூழல் என்பதாலேயே அவளுக்கு மனதிலிருந்த பயம் நீங்கி சற்றே தெளிவு பிறக்கத்துவங்கியிருந்தது.
அதற்கு ஏற்றார்போல் அவளை தனியாக விடுவதை அவள் அன்னையும் முற்றிலுமாய் தவிர்த்திருந்தார். விடிவெள்ளி கண்ட விடியலாய் மெல்ல மெல்ல அகலத்துவங்கியிருந்தது இருள் அவள் வாழ்வில் இருந்து.
புது பள்ளி முற்றிலும் மாறான இயற்கை சூழல் அவளை கொஞ்சம் கொஞ்சமாய் நேகாவிடமிருந்து பிரித்திருந்தது. ஆனாலும் இரவு நேரங்களில் தன்னை மறந்து தூக்கத்தில் அலறுபவளை அணைத்தபடி ஆறுதலாய் அவளின் தாய் அரவணைக்க நேகாவும் அந்த தாடிக்காரனும் ஜன்னலுக்கு வெளியேயே நின்றிருந்தனர் அவளை நெருங்க முடியாமல்.
பிரச்சனையாகட்டும் பேயாகட்டும் நாம் பார்த்து பயப்படுகிறோம் என்றால் மட்டுமே நம்மை மிரட்டிப்பார்த்து ரசிக்கும். அதனை எதிர்கொள்ளவோ தவிர்க்கவோ முழுமையாக அறிந்து கொண்டுவிட்டால் நெருங்கவே யோசிக்கும்.
நாட்கள் மெல்ல மெல்ல நகரத்துவங்கியது, பள்ளிப்பாடங்களில் மீண்டும் மூழ்கத்துவங்கினாள் மாயா. முன்பிருந்த சுட்டித்தனங்கள் மறைந்து போயிருக்கும் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கியிருந்தாள்.
அவளின் சுட்டித்தனங்கள் இருமடங்காகியிருந்தது. தன்னை சூழ்ந்திருக்கும் மாயநிழலை உடைக்க ஏனோ அவளுக்கு அவை தேவைப்பட்டது போலும்.
அவளின் சேட்டைகள் அதிகமானது. எல்லா இடத்திலும் தன்னை மிகையாக வெளிப்படுத்தத் துவங்கினாள்.
அதிக பேச்சு, அதிகமான விளையாட்டு என எல்லாமே அவளின் இயல்புக்கு மாறாய் இருந்தது. எங்கே தான் அமைதியாக இருந்தால் நேகா வந்துவிடுவாளோ என்ற பயம் அவளின் ஆழ்மனதில் பதிந்திருந்தது.
ஆறப்போட்ட எரிமலையாய் அடிநெஞ்சில் கிடந்த உணர்வுகளை மெல்ல மெல்ல சாம்பலாக்கிக் கொண்டிருந்தாள்.
நாட்கள் வருடங்களானது பருவம் வந்தது படிப்பும் முடிந்தது.
இளமையில் தழுவும் தென்றலான மிக இயல்பான உணர்வுகள் அவளை நெருங்கக்கூட இல்லை.
தூரத்தில் ஆண்களிடம் தன்னை மிக தைரியசாலியாக சுட்டிப்பெண்ணாய் துடுக்கானவளாய் காட்டிக் கொள்ளும் அவளுக்கு, அதே ஆண் இரண்டடி தூரத்திற்கும் குறைவாய் தன்னை நெருங்கினால், நெஞ்சம் பதறத் துவங்கியது.
உள்ளுக்குள் ஒரு கோரமான சிரிப்பு, தன்னை கூனிக் குறுக வைத்திடும் அந்த தருணங்களை அடியோடு வெறுக்கத்துவங்கினாள்.
நண்பனெனக் கூட எந்த ஆணும் தன்னை நெருங்க இயலாதவாறு தன் வட்டத்தை இரும்புக் கோட்டையாக்கினாள்.
ஆனால் இரும்பையும் உருக்கும் வல்லவன் இருக்கிறானே…..
வாழ்க்கை இயல்பாகிவிட்டதாகவே தோன்றியது அவளுக்கு. ஆண்டுகளானாலும் அனலின் சாம்பலுக்கு அடியில் புதைந்திருக்கும் நெருப்பு துண்டங்களின் எச்சம் விதைகளாய் உயிர் கொள்ளும் மாயம் அவளறியவில்லை.
”அம்மா அம்மா இன்னும் எவ்வளவு நேரம் அந்த புளிச்ச மாவை பேக் செய்யுறதுக்கு…”
“அடிகழுதை தோசை தான் வேணும்னு அடம்பிடிச்சது நீ, இப்போதான் புளிச்ச மாவா தெரியுதோ…”
“விடு விடு அம்சவேணி, ரெண்டு நாளைக்கு முன்னாடி அரைச்ச மாவை புது மாவுன்னா சொல்ல முடியும், அரிசி மாவைச் சொன்னா அம்சவேணிக்கு கோவத்தை பாரு…”
”வர வர உனக்கு வாய் ரொம்ப அதிகமா போயிடுச்சு மாயா, பெயரையா சொல்ர…” என அவர் கையிலிருந்த தோசைக் கரண்டியோடு துரத்த அவளோ கையில் காய்கறிகளோடு வந்து கொண்டிருந்த அவளின் தந்தை .
“ஆபீஸ் கிளம்புற பிள்ளைகிட்ட என்ன விளையாட்டு அம்சா…”
“நல்லா கேளுங்க பா, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை…”
“என்னங்க அவ தான்…”
“அட விடு மா, பாப்பாகிட்ட போய் வம்பு வளர்த்துகிட்டு இருக்க, நீ கிளம்பு கண்ணு…“ என்று மனைவியை அடக்கி விட்டு மகளுக்கு ஆதரவாய் பேசும் அப்பாக்களின் வரிசையில் முதல் ஆளாய் நிற்கும் அவரை என்னவென்று சொல்வது.
பலநாட்களாய் அடிமனதில் உறுத்திக் கொண்டிருந்த பெரிய பாரம் இறங்கிவிட்டதைப் போல் மனம் லேசாகிப் போக, அடுத்த வேலைகளை செய்ய உற்சாகத்துடன் உள் சென்றனர் மாயாவின் பெற்றோர்.
அவளுக்கே அவளுக்கென இருந்த தோழியர் கூட்டம் அனைவரும் திசைக்கு ஒன்றாய் பறந்து சென்றுவிட, தான் எவ்வளவு முயன்றும் வெளியூர் வேலை அனுப்ப மறுத்து விட்ட பெற்றோர்களிடம் எப்படியோ போராடி உள்ளூரிலேனும் வேலைக்குச் செல்ல வெற்றிகரமாக அனுமதி வாங்கி இதோ முதல் நாள் வேலைக்கென கிளம்பியும் விட்டாள்.
சில்லென்ற பூங்காற்று முகத்தில் மோத அவள் சூடியிருந்த அவிழ்ந்தும் அவிழாத ரோஜாமொட்டு சிரித்தபடி ஒய்யாரமாய் அவள் சிகையில் அமர்ந்திருந்தது.
பச்சைபுல்வெளியில் பனிதுளிகள் விழிக்காத காலையில் குளிர்மேகங்கள் மலையில் முகட்டிலிருந்து நகராத காட்சிகளை விழிகளால் படம்பிடித்தபடி அந்த சறுக்கலான பாதையில் இறங்கி பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்தாள்.
கற்றையாய் பூங்கொத்துகளை அடுக்கிக் கொண்டிருந்த பெண்மணியின் தையல் போட்ட ஸ்வெட்டரின் பின்னால் ஒளிந்துபடி நின்றிருந்த சிறுமியை யதேச்சையாய் பார்த்தவள்.
அந்தச் சிறுமியோ இவள் பார்ப்பதைப் பார்த்ததும் அவள் அன்னையின் பின்னால் நன்றாக மறைந்து கொண்டாள். இப்படியே மாயாவும் அந்தச் சிறுமியும் விளையாடிக் கொண்டிருக்க, பேருந்து வரவேண்டிய நேரம் தாண்டியும் இன்னும் பேருந்து வராததை கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அந்த நேரம் வேகமாய் கடந்து சென்ற பைக் ஒன்று மீண்டும் திரும்பி வந்தது. பூங்கொத்துகளை விற்பனைக்கு அடுக்கிக் கொண்டிருந்த அந்த பெண்மணியிடம் இரண்டு பூங்கொத்துகளை வாங்கினான் அந்த பைக்கில் வந்தவன்.
தன் ஹெல்மெட்டை கழற்றாமல் பைக்கிலேயே அமர்ந்திருந்தவன் அன்னையை வேலை செய்யவிடாமல் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை அப்போது தான் கவனித்தான்.
“பாப்பா பேசாம இரு கொஞ்ச நேரம் அந்த அங்கிள் வெயிட் பண்றாங்கல்ல…”
“ம்ம்மா நான் ஒண்ணுமே பண்ணலைமா, அந்த அக்காவை பாருமா அவங்க தான் என் கிட்ட விளையாடிகிட்டே இருக்காங்க, ஹி ஹி…“ என்று தன் மழலைமொழியில் சொல்லிக் கொண்டிருக்க அதை கவனித்தவன், அப்போது தான் மாயாவைப் பார்த்தான்.
கடிகாரத்தையும் பேருந்தையும் மாறி மாறி பார்த்தவள், மனமில்லாமல் அந்த மழலையை விட்டுவிட்டு பேருந்தை நோக்கிச் சென்றாள்.
அதுவரை இருவரின் கேளிக்கைகளை கவனித்த அந்த பெண்மணி பைக்கில் காத்திருந்தவனிடம் பூங்கொத்துகளை கொடுத்துவிட்டு, தன் மகளை பார்க்க, அவளோ பேருந்தில் ஏறச் சென்று கொண்டிருந்த மாயாவை ஏக்கமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சட்டென தன் மகளை தூக்கிக் கொண்டவர், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த மாயா பார்ப்பதைக் கண்டு, “அங்க பாரு நேகா அக்காக்கு டாட்டா சொல்லு…” என்றார்.
எதிர்பாரா நேரத்தில் விழுந்த இடியாய் சற்றும் எண்ணியிராத இந்த பெயர் மீண்டும் தன் வாழ்வில் வருமென அவள் எண்ணவில்லை. ஊட்டியின் குளிரிலும் வியர்த்துவிட்டது அவளுக்கு.
அந்தச் சிறுமியை அதற்கு மேல் அவளால் பார்க்கவும் முடியவில்லை பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை.
மனம் வேண்டாம் வேண்டாம் என்றாலும் தன்னிச்சையாக திரும்பிய தலையை அவளால் கட்டுப்படுத்த இயவில்லை. ஒரு நேரம் கைநீட்டி அவளை நோக்கி அழைப்பதும், அடுத்த நொடி முன் பற்கள் விழுந்த தன் சிரிப்பை சற்றே கடினமாய் காட்டுவதுமாய், அந்த வளைவில் மறையும் வரை அந்த சிறுமி செய்து கொண்டே இருந்தாள்.
தன் மலர்ச்சி மகிழ்ச்சி அனைத்துமே, சற்றுமுன் தலைகாட்டத் துவங்கியிருந்த சூரியனால் மறைந்த பனித்துளிகளைப் போல மண்ணில் வடிந்திருந்தது.
அதன்பிறகு எப்படி இறங்கினாள், அலுவலக வளாகத்திற்கு எப்படி வந்தாள் என்று கூட அவள் அறியவில்லை, இத்தனை நாளாய் மறந்துவிட்டதாய் நினைத்த முகம் மீண்டும் அவள் கண்முன் நிழலாடியது.
“ஹலோ ஹலோ எவ்வளவு நேரமா கூப்பிடுறது, ஆபீஸிக்கு உள்ளே வரும் போதே எம்.டி ஆயிட்ட மாதிரி கனவோடு வரவேண்டியது…”
அவள் முன் மிகஎளிமையாய் ஆனாலும் மிக நேர்த்தியாய் உடையணிந்து கண்ணில் கேலியும், கையில் பூங்கொத்துமாய் நின்றிருந்தான் அவன்.

Advertisement