Advertisement

நிழல் 15
விடிவெள்ளி முளைக்கத் துவங்கியிருந்த நீல வானில் நட்சத்திரங்கள் அகலாத வைரங்களாய் மின்ன, கண்களின் ரௌத்திரம் கைகளில் வெளிப்பட ஓங்கி வந்த மாயாவின் முன் ஸ்ருதி வந்து நிற்க, ஒரு நொடி தாமதித்தவள் ஓங்கிய கையை இறக்காமல் அதனை அங்கு இடை வரை மண்ணில் புதைந்த படி மயங்கிச் சரிந்திருந்த நால்வர் மீதும் பாய்ச்ச, மின்னல் தாக்கியதைப் போல் அதிர்ந்து அங்கிருந்து தூக்கி வீசப்பட்டனர் அவர்கள்.
உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகச் சொற்பமாகவே தெரிய, மெல்லிய முனகல் தோன்றி மறைந்தது அதில் ஒருவனிடமிருந்து.
அதே நேரம் கையில் பெரிய மூங்கில் கம்புடன் ஒரு பெரியவர் அங்கு வர, சிவா மாயாவிடமிருந்து தப்பிக்க பக்கவாட்டில் நகர்ந்து சென்றவன் அந்த பெரியவர் மீது மோதி நின்றான்.
மோதி நின்றவன் நிமிர்ந்து பார்க்கையில் ஆதவன் வருகையை தன் பின் புலமாக்கி ஜோதி பிழம்பின் சொரூபமாய் நின்றிருந்தார் அவர்.
இருளும் எதிர்மறை எண்ணங்களும் முற்றிலும் விலகிடும் அவரின் பார்வை தீட்சண்யத்தில் மூளையின் கட்டளையின்றி தானாக கைகள் அவரை நோக்கி கூப்பியிருந்தது.
சாந்தமான அவரின் முகத்தைக் கண்டவனின் நிலை, மூச்சுத் திணறி சுவாசிக்கப் போராடுபவனுக்கு சில்லென்ற தென்றல் காற்று இதமாக கிட்டியதைப் போல் ஆசுவாசமாயிருந்தது.
அடுத்த நொடி அவனைத் துரத்தி வந்த ஆபத்து நினைவில் வர, சட்டென்று திரும்பிப் பார்க்க இதுவரை கண்ட காட்சிகள் அனைத்தும் கனவோ என்னும் படி இயல்பாய் இருந்தது அவ்விடம் நேகா இருந்ததற்கான அடையாளம் கூட இல்லை.
வாழ்வே மாயபுதிராக செல்கையில் கண்முன் கண்ட அனைத்தும் மாயமாய் மறைந்திட இன்னும் இன்னும் அதிர்ச்சிகளைத் தாங்கிக் கொண்டான். ஆனால் இது சற்று நிம்மதியளிக்கும் அதிர்ச்சியாகத் தான் பட்டது அவனுக்கு. பெரியவருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பிட வேண்டும் என்று திரும்பியவனுக்கு அந்த பெரியவரும் இல்லாததது மீண்டும் பீதியைக் கிளப்பியது.
அதற்கு மேல் தாமதிக்காமல் அங்கிருந்த ஜீப்பில் கிளம்பியவன், ஊட்டி காவல் நிலையம் வந்து தான் வண்டியை நிறுத்தினான்.
விடிந்து சில மணி நேரம் ஆகியிருந்த போது பனிப்போர்வை விலக்காத பசும் எழில் பாவையாய் மலையரசி இருக்க, காவல் நிலையத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த பூந்தோட்டத்தில் வண்ண வண்ண ரோஜாமலர்கள் பனித்துளி விலகாமல் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.
அழகான காலைப்பொழுது ஒன்றில் இதே இடத்தில் தான் ஸ்ருதியைக் கண்டான் முதன் முதலாய். அவள் வீட்டில் எவ்வளவோ மலர்செடிகளையும் ரோஜாக்கள் கொத்தாக மலரும் கொடிவகைளையும் கூட வைத்திருக்கிறாள் தான் என்றாலும் இங்கு பூக்கும் பன்னீர் ரோஜாவின் மணமும் நிறமும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
வீட்டிற்கு அருகே இருப்பதால் காவல் நிலையம் என்றெல்லாம் பார்ப்பதில்லை அவள். அவளுக்கு தேவை ரோஜா மட்டுமே.
அங்கிருக்கும் முத்தண்ணா, அவர் மகளின் வகுப்புத்தோழி தான் ஸ்ருதி என்பதை அறிந்தவராதலால் அவளுக்கு அங்கு சென்று பூக்களைப் பறித்திட இன்னும் உரிமை கூடியிருந்தது.
அப்படி ஒரு நாள் பறித்துச் செல்கையில் தான் சிவா அவளைப் பார்த்தது. அவன் உறுத்துப் பார்ப்பதைப் பார்த்து முத்தண்ணா தானாகவே வந்து அவளைப் பற்றிய விபரங்களைச் சொல்லி, தன் மகளின் தோழி என்றிட, அதற்கு மேல் அவளைப் பற்றி எண்ணாது தன் வேலைகளை கவனிக்கத்துவங்கியிருந்தான்.
“ஏண்டி எத்தனை தரம் சொன்னாலும் கேக்காம அந்த போலீஸ் ஸ்டேசனுக்கு போய் பூ பறிச்சிட்டு வர, யார் சகவாசம் வச்சாலும் போலீஸ்காரனுங்க சகவாசம் மட்டும் ஆகாதுடி, அவனுங்க கண்ணுல நீ படவே கூடாதுன்னு நான் சொல்லீட்டு இருக்கேன், நீ என்னடான்னா, தினம் அவனுங்க மூஞ்சியிலயே முழிச்சிட்டு வர, எல்லாம் உங்கப்பனைச் சொல்லனும், என்னிக்கு இங்க போலீஸ் ஸ்டேசன் வந்துச்சோ, அப்பயே இந்த வீட்ட வித்துட்டு வேற எங்கயாச்சும் போய் வாங்கிக்கலாம்னு சொன்னா கேட்டாத்தான… அவங்க அம்மா சொன்னாங்களாம் சாகுறத்துக்கு முன்ன, இந்த வீட்ட மட்டும் வித்துறாதப்பான்னு… அந்த கிழவி பேச்சுக்காக என் பொண்ண ஆபத்துல வச்சிருக்கார் இந்த மனுசன்…” என்று ஸ்ருதியின் அன்னை தன் வழக்கமான துதியை பாடி முடிப்பதற்குள் கல்லூரிக்கென தயாராய் வந்து நின்றாள் ஸ்ருதி அந்த பன்னீர் ரோஜாவை காதோரம் சூடிய படி.
அவள் அன்னையின் பயம் பலித்தது போல், சிவாவின் மனதில் அவனையுமறியாமல் ஸ்ருதி மெல்ல மெல்ல அவன் மனதினுள் நுழைந்து கொண்டிருந்தாள். தினம் தினம் நடந்த பார்வை பரிமாறல்கள், அந்த வயதிற்கே உண்டான ஈர்ப்பும், சிவாவின் கம்பீரமான நடை உடை பாவனையில் ஸ்ருதியின் உள்ளம் மெல்ல மெல்ல அவன் புறம் சாய, ஸ்ருதியின் அழகில் அவளின் இயல்பான யதார்த்தமான குணத்தில் அவனும் அவளின் பால் மனதை சரிய விட்டிருந்தான்.
உறவுகள் பலம் பெற உண்டானது தான் பிரிவு என்பதைப் போல, சிவாவிற்கு சிறப்புப் பணி ஒதுக்கப்பட்டிருந்தது கோவையில். ஒரு மாதம் அவளைக் காணாமல் இருக்கப் போகிறோம் என்பது ஆரம்பத்தில் அவ்வளவு பெரிய விசயமாக தோன்றாத அவனுக்கு நாட்கள் செல்லச் செல்ல அதுவே கடினமானது. ’அவளிடம் சொல்லிவிட்டு வந்திருக்கலாமோ.. என்னவென்று சொல்வது ஒரு மாதம் பிரியப்போகிறேன் என்றா… சொன்னால என்ன சொல்வாள்… நீ போனால் எனக்கென்ன என்று சொல்லிவிட்டால்… இல்லை என்னிடம் ஏன் சொல்கிறாய் என்று கேட்டுவிட்டால் என்ன செய்வது… அவள் மனம் என்னவென்றே தெரியாத போது என்ன சொல்வது அவளிடம்…’ என்று விட்டுவிட்டான்.
அவளுக்கு இதே நிலை தான் ஆனால் கையறு நிலை யாரிடமும் கேட்கவும் முடியாது சொல்லவும் முடியாது. அவன் வருவான் என்று ஆசையை வளர்த்துக் கொள்ளவும் முடியவில்லை. வரமாட்டான் என்று மனதால் எண்ணக்கூட முடியவில்லை. என்ன செய்வாள் மனதுக்குள் யோசித்து யோசித்து ஓய்ந்து போனாள்.
தலைவியின் பசலை நோயைக் கண்டு அவளை நகையாடியபடி தலைவனிடம் தூது செல்ல செல்லக்கிளியும் இல்லை அவளிடம்.
காத்திருந்தாள் காலம் ஒன்றைத்தவிர பதில் சொல்வார் யாருமில்லை இவர்களுக்கு. ஒரு மாதத்தை ஒரு யுகமாய் நகர்த்தியவர்கள், அந்த நாளை எண்ணிக் கொண்டிருந்தனர்.
என்று சந்திப்போம் என்று அவளும் உடல் மெலிந்து கண்ணில் உயிரை வைத்தபடி தினம் தினம் காவல் நிலையம் வந்து போனாள்.
பூவை பறிக்க வந்தவள் அதை மறந்து தினம் தினம் சிவாவை மட்டும் தேடிவிட்டுச் செல்வாள்.
அன்றும் அப்படித்தான் தோட்டத்தில் சுற்றி வந்தவள் காவல் நிலையத்தின் ஜன்னல்கள் வழியே சிவாவின் அடையாளங்கள் தென்படுகிறதா என்று கண்களால் துழாவிக் கொண்டிருந்தாள்.
சிவா சென்றதிலிருந்து அவனின் இடம் காலியாகவே இருப்பதை கவனித்து வந்தவள் இன்றேனும் அந்த இடத்தில் சிவா இருப்பானா என்று ஆவலுடன் பார்க்க,
அதே நேரம் அவளின் காதோரம் ஏதோ உரசியது. தோட்டத்தில் இருந்து பார்ப்பதால் ஏதேனும் இலையாக இருக்கக்கூடும் என்று அதை தவிர்த்தவள் மீண்டும் தேட, மீண்டும் அதே போல் காதுமடல்களில் குறுகுறுப்பு.
’என்ன இடைஞ்சல் இது…’ என்று சலிப்புடன் திரும்பிய ஸ்ருதியின் முன் கையில் அவளின் பிரியமான பன்னீர் ரோஜா பூவுடன் நின்றிருந்தான் சிவா இன்னும் கம்பீரமாய்.
தனக்காய் ஒரு உள்ளம் ஏங்குகிறது… தன்னை இரு விழிகள் தேடுகிறது… தன் வரவுக்காய் பெண்ணொருத்தி தவிக்கிறாள் என்பது ஆணின் ஆகப்பெரிய பலமும் பலவீனமும் ஆகிறதல்லவா…
பிரிவில் வாடிய பலவீனத்தை மறைத்தவன், அவள் முன் பலத்தை மட்டும் காட்டி கம்பீரமாய் நின்றான்.
கனவில் மட்டுமே வந்து தன்னை கொள்ளை கொண்ட ராஜகுமாரன் கண்முன் வந்து நிற்கவேண்டும் என்று ஏங்கினாலும், இப்படி இன்பதிர்ச்சி கொடுப்பான் என்று எதிர்பாராத ஸ்ருதியும் அவன் வரவில் பூரித்து பார்வையில் மையலாகி மனம் அவன் வசமாகியதை கன்னங்களில் செம்மை பூத்து உணர்த்திட்டாள் அவனுக்கு.
வார்த்தைகள் கோர்க்காமல், பின்னணியில் காதல் சங்கீதம் இசைக்காமல் மௌனத்தில் லயித்து விட்ட இதயங்கள் கண்களால் கூடியிருக்கையில் எங்கிருந்தோ தன் இணையைத் தேடும் குயிலொன்றின் குரல் வந்து நடப்பிற்கு நகர்த்தி வந்தது அவர்களை.
அவன் கையிலிருந்த ரோஜாவோடு அவன் இதயத்தையும் பறித்துக் கொண்டவள் துள்ளிச் சென்ற பாதையை தன்னை மறந்த முறுவலோடு ரசித்துக் கொண்டிருந்த சிவாவை முத்தண்ணா வந்து அழைத்தார்.
“சார் எப்ப வந்தீங்க… தோட்டத்தில நிக்குறீங்களே…?”
“இப்ப தான் வந்தேன் ண்ணா…”
“ஒரு மாசம் ஓடுனதே தெரியல சார்… கேம்ப் எப்படி இருந்துச்சு சார்… நீங்க தான் எக்ஸலண்ட்டா பண்ணீங்களாம்… அடுத்து உங்களுக்குத் தான் ப்ரமோஷன்னு பேசிகிட்டாங்க சார்..”
”அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லண்ணா…” என்று விட்டு மீண்டும் அவள் சென்ற பாதையைப் பார்த்தது போல் இன்றும் அவளின் நினைவில் அவளை எதிர்பார்த்து நின்றிருந்தான்.
அவளை அரூபமாக காணும் நிலையில் நிற்பவன் மனதில் மட்டுமே சுமக்கின்ற காதல் சுமைதான் என்றாலும் அவளின் நினைவுகளால் சுகமாய் உணர்ந்தான்.
காதல் அசாத்தியமாய் இருவருக்குள் நுழைந்திடும் ஸ்ருதி சிவாவைப் போல, ஆனால் மாயா கௌதமிடத்தில் நுழைந்தாயிற்று என்றாலும் தன்னை மெய்பிப்பது காதலுக்கு சற்று சவாலாய் தான் இருந்தது.
இரவின் இனிமைகளை சுகிக்க முடியாவிட்டாலும் இன்பமான உறக்கத்தை அருகாமையையும் நாடியவர்களுக்கு அதுவும் தூரமாகிப் போயிருந்தது நேகாவால்.
அதிலும் அவள் சொன்னது, ’தன்னை கொலைகாரி…’ என நேகா சொன்னதை இப்போது வரை நம்ப முடியவில்லை அவளால்.
முழு இரவையும் உறக்கமின்றி கழித்த கௌதம் விடிகாலையில் தான் உறங்கிப்போனான்.
உறக்கம் தொலைத்த மாயாவின் விழிகள் விடிந்து அதை நாடவில்லை. முதல் வேலையாய் தன் அன்னைக்குத் தான் அழைத்தாள்.
அவளின் அழைப்பு காத்திருப்பில் இருக்க, அவர் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருப்பதாக கணினிக்குரலாய் ஒலித்த பெண்குரல் கூறியது.
இவ்வளவு காலையில் யாராயிருக்கும் என்று மீண்டும் மீண்டும் அவள் முயற்ச்சித்துக் கொண்டே இருந்ததில் எரிச்சலுற்ற அம்சவேணி அவள் அழைப்பை துண்டிப்பதற்கு பதிலாய் ஏற்றிருந்தார்.
அவர் காதோடு வைக்கையில் காதுமடல் பட்டு அது கான்வ்ரென்ஸ் காலாகிப் போனது. அது தெரியாத அம்சவேணி தன் உடையாடலைத் தொடர்ந்தார்.
அவராக பேசட்டும் என்று காத்திருந்த மாயா அத்தணையும் கேட்கும் படி ஆயிற்று.
“என்ன அண்ணா ஏன் கவலைப் படுறீங்க… என் பொண்ண உங்கபையனுக்கு கல்யாணம் செய்யவே முடியாதுன்னீங்க… இப்போ அது தானா நடக்கலையா… இந்த நேகா விசயமும் கொஞ்சம் மெனகெட்டா முடியப்போகுது…”
“என்னம்மா சொல்ற அந்த நேகாவைத் தான் அடக்க முடியலையே…”
“அடக்கமுடியும் ண்ணா… அதுக்கான ஏற்பாட்டை நேத்தே ஆரம்பிச்சுட்டேன்… அதுவும் அவளோட தாய்மாமன் கையாலயே… அவளோட அவ குடும்பமும் போய் சேர்ந்திடுச்சு… இனி அவ கல்லறை மட்டும் அந்த ஊர்ல என்ன பண்ணப் போகுது… அது ஒண்ணு இருக்குறதால தான இவ இந்த ஆட்டம் ஆடுறா… முதல்ல அதுக்கு வைக்குறேன் வேட்டு… அப்புறம் பாருங்க…”
“இதெல்லாம் நடக்குமாம்மா…”
“இதுவும் நடக்கும் கூடிய சீக்கிரம் நீங்களும் எழுந்து நடப்பீங்க… கவலைப்படாதீங்கண்ணா…”
“சரிண்ணா நான் அப்புறம் பேசுறேன் அவர் எழுந்திடுவார்… மாயாவேற போன் பண்ணிட்டே இருந்தா அவகிட்ட பேசிட்டு அப்புறம் பேசுறேன் ண்ணா…” என்று மூர்த்தியின் அழைப்பை துண்டிக்கையில் தான் பார்த்தார் அதில் மாயாவின் அழைப்பும் இருந்தது என்று.

Advertisement