Advertisement

நிழல் 14

மாயா தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கையில், அவளை இன்னும் வெறுப்பேற்றும் விதமாக, கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான் கௌதம்.

’நான் வேணும்னு நெனச்சு உருகி உருகி காதலிச்சதா சொன்ன உனக்கே என்கிட்ட பேச ஒன்னுமில்லைன்னா… என் சம்மதமே இல்லாம நடந்த இந்த கல்யாணத்துல எனக்கு கோபங்கள் இருக்கே தவிர பேச ஒன்னுமில்ல…’ என்று தானும் சென்று கட்டிலின் மறுபக்கம் அவனுக்கு முதுகு காட்டியவாறு படுத்துக் கொண்டாள் மாயா.

மனதில் இன்னதென்று புரியாமல் மாற்றி மாற்றி சுழன்றடிக்கும் உணர்வுகளால் சோர்ந்திருந்த மனமும் உடலும் தன்னையறியாமல் ஒய்வெடுத்துக்கொள்ள, படுத்த சில நிமிடங்களிலேயே உறங்கிப் போனாள் மாயா.

அவளைச் சீண்ட தான் செய்த காரியம், தனக்கு தானே ஏற்படுத்திக் கொண்ட முட்டுக்கட்டையாகிப் போனதில், கௌதமும் வேறு வழியின்றி உறங்கும் வழியை தேடிக் கொண்டிருந்தான்.

மாயாவின் சலனமற்ற ஆழ்ந்த உறக்கத்தைக் கண்ட கௌதம் ஏங்கிப் போனான் என்றால், என்ன செய்து அவளின் உறக்கத்தை கலைக்கலாம்…? என்று யோசித்துக் கொண்டிருந்தாள் நேகா அவளின் முகத்திற்கு நேரே தன் முகம் இருக்குமாறு மாயாவைப் பார்த்தபடி அந்தரத்தில் படுத்திருந்தாள் நேகா.

உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த கௌதம் ’ஒருவேளை மாயா விழித்திருந்தால்…?’ என்ற எதிர்பார்ப்போடு எட்டி மாயாவின் முகத்தை நோட்டமிட, மாயாவின் விழியோரத்தில் அவளறியாமல் கசிந்து கொண்டிருந்த கண்ணீர்த்துளிகளை தன் நாவால் ருசித்துக் கொண்டிருந்தாள் நேகா.

பார்த்த அதிர்ச்சியில் சட்டென பின் விழுந்த கௌதமின் அதிர்வால் கண்விழித்த மாயா, தன் முகத்தருகே உரசி நிற்கும் நீண்ட சிவந்த நேகாவின் நாவைக் கண்டதும் வீச்சென கத்திவிட,

மகிழ்வாய் கொக்கரித்தாள் நேகா. அந்த அறை முழுதும் அவளே நிற்பது போல் ஆங்காரமாய் எழுந்து நின்றவள். “என்னை மறந்திட்டு நிம்மதியா நீ தூங்கினா, நான் இப்படி அலையுறதுக்கு அர்த்தமென்ன மாயா… என் வாழ்க்கையை அழிச்ச உன்னை இத்தணை நாள் வளரவிட்டது எதுக்குக்காக…? எப்படி நான் அவஸ்தை படுறன்னு உனக்கு புரியத்தான்….”

“அறியா வயசுல அனுபவிக்கக்கூடாதெல்லா கொடூரமா அனுபவிச்சேன் அந்த வலிய இப்பவாச்சும் நீ உணரவேணாமா… நிம்மதியா தூங்குனா எப்படி…?” என்ற நேகாவின் பேச்சிற்கு,

“அப்படி நான் உன்ன என்ன தான் செஞ்சேன் நேகா… எதுக்காக என்னை இப்படி வாழவிடாம துரத்துற… உன்னைப் பத்தி கவலைப் படாம நான் அன்னிக்கு ஓடி வந்தது தப்பு தான். யார்கிட்டயாச்சும் சொல்லி உன்னை காப்பாத்தியிருக்கனும்… நான் செஞ்சது தப்பு தான் அதுக்காக நீ கொடுக்குற தண்டனை ரொம்ப பெரிசு… என் வாழ்க்கை முழுசும் நீயே ஆக்கிரமிச்சுகிட்ட… நான் இன்னும் என்ன தான் செய்யனும்னு நீ எதிர்பாக்கிற…. என்ன செஞ்சா நீ என்ன விட்டு தொலைஞ்சு போய் என்னை நிம்மதியா வாழவிடுவ…? சொல்லு…?”

”எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம என்ன செஞ்சிட்டேன்னு கேக்குற… அன்னிக்கு என் தலையில அடிச்சு என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனதே நீதான்…”

“என்னது…!” என்று உச்சபட்ச அதிர்ச்சியில் இருந்தாள் மாயா.

“ஏன் நம்ப முடியலையா… நம்பித்தான் ஆகணும்… மாயா நீ நீதான் என்னை கட்டையால அடிச்சிட்டு ஓடுன…”

“நானா நானா நானா இல்ல இல்ல இல்ல… நான் அவ அவன தான் அடிச்சேன்…”

“கண்ணை மூடிகிட்டு அடிச்சிட்டு ஓடுன உனக்கு யார அடிச்சன்னு எப்படி தெரியும்… நான் இரத்த வெள்ளத்தில கிடந்தது எப்படித் தெரியும்… அந்த அந்த தாடிக்காரன் ராஜீவ் என்னை சீரழிச்சது எப்படித் தெரியும்…?”

“நோ நோ நோ….” என்று கண்ணை மூடிக் கொண்டு கத்துபவளை பார்க்க கௌதமிற்கு இதயத்தை அறுக்கும் வலி.

ஆனாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை அவனால், என்ன நடந்தது என்பதை நேகாவாக சொன்னால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.

“கேட்க நல்லா இல்லைங்குறதுக்காக பொய் சொல்ல முடியாதே மாயா… நீ நம்பலைன்னாலும் இதான் உண்மை… இப்ப சொல்லு உன்னை துரத்தாம வேற யார துரத்த சொல்ற… என் வாழ்க்கைய காத்துல அலையவிட்டுட்டு… உன் வாழ்க்கை மட்டும் தென்றலா இருக்கணும்னா எப்படி முடியும்…?” என்ற நேகாவின் கேள்விக்கு மாயாவால் பதில் சொல்ல முடியவில்லை.

குற்ற உணர்வில் கூனிக்குறுகி மண்டியிட்டிருந்தவளுக்கு, எப்போதும் தன்னால் சிறு தீங்கு கூட யாருக்கும் நேரிடக்கூடாது என்ற எண்ணம் தீவிரமாக இருக்கும்.

இப்போதும் தன்னால தான் நேகாவின் வாழ்வு இப்படி ஆனது என்று முழு தவறையும் தன் மீதே போட்டுக் கொண்டவள் ராஜிவ் என்ற ஒருத்தனை எண்ணவுமில்லை, அவன் செய்த காரியத்தை கேட்கவும் இல்லை.

அவளைப் பொறுத்தவரை தன் தவறால் நேகாவின் உயிர்போய்விட்டது. அதற்காக அவள் பழிவாங்குகிறாள். தவறி செய்தது தான் என்ராலும் தண்டனையை ஏற்றுக் கொள்ள தயாரானாள் மாயா.

ஆனால் கௌதமின் மனது, ராஜிவ்வை விடுத்து மாயாவை மட்டும் தண்டிப்பதில் என்ன நியாயம் உள்ளது என்று மாயாவிற்காய் முன் வந்து நின்றது.

கௌதமின் மனக்குரல் நேகாவை எட்டியதோ என்னவோ நேகா இப்போது கௌதமின் முன் நின்றாள்.

“நீ என்ன நெனக்குறன்னு எனக்கு புரியுது… யாரையும் விடமாட்டேன்… கவலைப்படாத… ஆனா முதல் குற்றவாளி உன் பொண்டாட்டிதான்… முதல் காவும் அவளைத்தான் வாங்குவேன்…” என்று மண்டியிட்டு அழுது கொண்டிருந்த மாயாவை நோக்கிப் பாய்ந்த நேகாவின் பற்கள் அவள் கழுத்தை பதம் பார்க்கத்துவங்கிய நேரம்,

எங்கிருந்தோ வந்த கடப்பாரை நேகாவின் நடுமண்டையில் இறங்கியது. கோரமாய் கத்திய நேகா மாயாவை விட்டு விலகியிருந்தாள்.

அதேநேரம் அடுத்தடுத்து கடப்பாரை உடல் முழுதும் ஆங்காங்கு இறங்கி கரிய இரத்தம் உடலெங்கும் பரவ துடித்திருந்த நேகா கண்களை மூடி யோசிக்க அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பியிருந்தாள்.

மூடப்படாத கதவின் வழியே கௌரி அந்த நேரம் வருவார் என்று கௌதம் எதிர்பார்க்கவில்லை. கையில் விபூதி குங்குமத்துடன் வந்தவர் எதுவும் கேட்கவுமில்லை பேசவுமில்லை.

அழுது அழுது ஓய்ந்திருந்த மாயாவை கட்டிலில் படுக்கவைத்திருந்தான் கௌதம். அவனை விலகச் சொல்லியவர். மாயாவின் கழுத்திலிருந்த காயத்திற்கு விபூதி வைத்தார். அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்தவர் திரும்பியும் பார்க்கவில்லை சென்றுவிட்டார்.

சுடுநீரால் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திவிட்டு மருந்திடலாம் என்று எண்ணியிருந்த கௌதமின் எண்ணத்திற்கு முற்றிலும் மாறாய் விபூதியை வைத்து செல்கிறாரே என்று ஒரு புறம் கோபம் வந்தாலும், சரியான நேரத்திற்கு வந்ததை எண்ணி ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தான்.

‘அம்மாவிற்கு எப்படித் தெரியும்… நிகழ்ந்த உரையாடல்களை அவரும் கேட்டிருப்பாரோ…’ என்று எண்ணியபடி மாயாவின் கழுத்தை ஆராய, அங்கே காயம் பட்டதற்கான தடம் கூட இல்லை.

வழிந்து கொண்டிருந்த இரத்தம் இல்லை. முன்னிலும் பொலிவாய் தெரிந்தாள் மாயா. நெற்றியிலிருந்த குங்குமம் அவளின் அழகைக் கூட்டியது போலொரு பிரம்மை தோன்றாமலில்லை.

 

மட்டை விழுந்த அதிர்ச்சியில் விழுந்தானோ, முத்தண்ணாவிற்கு பதிலாக யார் தன்னை இங்கு அழைத்து வந்திருப்பார்கள்… எதனால் தன்னால் இந்த இடத்தை விட்டு போகமுடியவில்லை. கடை இருந்த இடத்தில் சுடுகாடு போல் மண்மேடுகள் அல்லவா இருக்கிறது அப்படியானால் தனக்கு விபரம் சொன்ன பெண்மணி யார்… கோபம் கொண்டாரே அவர் யாரா இருப்பார்… என்ற தொடர் யோசனையில் மயங்கினானோ… நடுநிசி கடந்தும் மயக்கம் தெளியாமல் அந்த யாருமில்லா பாதையில் ஜீப்பின் அருகே விழுந்து கிடந்தான்.

போலீஸ் ஜீப் என்பதால் அவனின் வாக்கி டாக்கி அதிலிருந்தது. அதில் சிக்னல் இருந்ததால் தொடர்ந்து அழைப்பு வந்தபடி இருந்தது.

அந்த சத்தத்திர்கெல்லாம் அவர்கள் நிறுத்தவில்லை. நேகாவின் கல்லறையை இடித்துக் கொண்டிருந்தனர்.மேலிருந்த கான்கிரீட்டைத்தாண்டி மண்ணைத் துளைத்துக் கொண்டிருந்த கடப்பாரையின் இரத்தத்துளிகள் வருமென அவர்கள் எண்ணியும் பார்க்கவில்லை.

இருளில் தெரியாத அந்த துளிகளைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் மேலும் மேலும் கடப்பாரையால் குத்திக்கொண்டே இருக்க, அந்த நால்வரின் கால்களை மண்ணிலிருந்து கிளம்பிய கைகள் பிடித்துக் கொண்டன.

பிடித்திருந்த கைகளின் இறுக்கம் தாளாமல் வலியால் கத்தத்துவங்கினர் அங்கு இடித்துக் கொண்டிருந்த நால்வரும்.

கீழே குனிந்து பிடித்திருந்த கைகளை பார்க்கவோ தடுக்கவோ இயலாமல் வலியால் துடித்தவர்கள் மெல்ல மெல்ல பூமிக்குள் சென்று கொண்டிருந்தனர்.

தடுக்கும் வழியறியாமல் அவர்களை காப்பாற்றவும் முடியாமல் அங்கிருந்து ஓடத்துவங்கிய நபரின் முன் சட்டென்ற வந்து நின்றாள் நேகா.

தடுமாறி விழுந்த அவரைக் கண்டவளுக்குத் தான் அதிர்ச்சி மிகுந்திருந்தது. காரணம் அவள் உயிரோடிருந்தவரை அவளை எப்போதும் நெஞ்சில் சுமந்த அவளின் தாய்மாமன் மாதய்யன் தான் அது.

நேகா அங்கு வருவாள் என்று அவர் எதிர்பார்த்தார். அவளின் கல்லறையை முற்றிலுமாய் சிதைத்து அழித்துவிடும் முடிவோடு அவர் வந்திருக்க அங்கு நேகாவின் வரவு இயல்பானதுதான் என்று அவர் அறிந்திருந்தார்.

ஆனால் அவளுக்கு தன்னை எச்சூழலிலும் அடையாளம் காட்டிடக் கூடாது என்பதாலேயே வேறு நால்வரை அழைத்து வந்திருந்தார்.

அவர்களுக்கு ஆபத்து என்றதும் அவ்விடம் இனி இருக்கக்கூடாது என்று ஓடத்துவங்கியவரின் முன் நேகா வந்து நின்றிருந்தாள்.

தடுமாறி விழுந்தவரின் தலையில் கல்லொன்று மோதி அவர் மயங்கிவிட, அவர் தன் கல்லறையை சிதைக்க \வந்தவரா… காக்க வந்தவரா என்று புரியாமல் ஒரு நொடி நின்றிட, அப்போது தான் அங்கு மயங்கிக் கிடந்த சிவாவைப் பார்த்தாள்.

அவன் இங்கு என்ன செய்கிறான்…? அவன் வேலை தானா இதெல்லாம் என்று ஆத்திரத்தில் பொங்கிய நேகாவின் கண்கள் அவனருகில் கிடந்த தென்னைமட்டையை எரியூட்டியிருந்தாள்.

அதுவரை மயக்கத்தில் இருந்த சிவாவிற்கு விழிப்பு தட்டியது. அருகில் எரிந்து கொண்டிருந்த நெருப்பைக் கண்டு பதறி ஓடியவனை தாக்க வந்த நேகாவின் முன் தடையாய் வந்து நின்றிருந்தாள் ஸ்ருதி.

 

 

 

 

 

 

 

 

                                  

 

 

 

 

  

 

 

 

 

  

 

Advertisement