Advertisement

நிழல் 13

சிவா இதற்கு மேலும் தாமதிப்பது சரியல்ல என்று தன் விசாரணையைத் துவக்கியிருந்தான். ராஜீவ் என்ற மனிதனைப் பற்றி ஆதி முதல் அந்தம் அறிந்தாக வேண்டும் அப்போது தான் தெளிவாகும் என்று எண்ணியவன் அவனின் புகைப்படத்தோடு அவனின் சொந்த ஊரான செட்டிபாளையத்திற்கு புறப்பட்டிருந்தான்.

“இந்த போட்டோல இருக்கவன யாருன்னு தெரியுமா…?” என்று அங்கிருந்த டீக்கடையில் விசாரிக்க, அங்கிருந்த நடுத்தர வயதுடையவர்,

“இவனா…! இன்னும் உயிரோடயா இருக்கான்… பாவிப்பய இவனையெல்லா சுட்டுக் கொல்லுங்க சார்…” என்று ஆத்திரத்தோடு கத்தத் துவங்கிருந்தார்.

“ஏன் என்னாச்சு கோவப்படாம கொஞ்சம் தெளிவா சொல்றீங்களா… விசாரணைக்காக வந்திருக்கேன்…”

“திரும்ப திரும்ப வந்து விசாரிப்பீங்க அப்புறம் அவனை வெளியில விட்ருவீங்க அதுக்கு எதுக்கு சார் வரீங்க… போங்க சார் முதல்ல….”

அவரின் கோபத்திற்கான காரணம் என்னவென்று அறிந்து கொள்ள, “எதுன்னாலும் நீங்க தெளிவா சொன்னா தான் நடவடிக்கை எடுக்க முடியும். இவன் இப்ப எங்க கஷ்டடியில தான் இருக்கான். சோ தைரியமா சொல்லுங்க…”

“சொன்னா மட்டும் என்ன சார் பண்ணுவீங்க அவனுக்கு இருக்க செல்வாக்குக்கு ஈசியா வெளியில வந்திடுவான்…”

“அதெல்லாம் வரமுடியாது. அவன் அந்தளவுக்கு பெரிய ஆளா என்ன…? நீங்க சொல்லுங்க…?”

அதற்குள் கடைக்குள்ளிருந்து வந்த பெண்மணி, ”அவங்க பேசுறத பெருசா எடுத்துக்காதீங்க சார்… அவர் பொண்ணு செத்ததுல இருந்து இப்படித்தான் ஆகிட்டார். உங்களுக்கு என்ன விபரம் வேணும் சொல்லுங்க நான் சொல்றேன்…” என்றார்.

மீண்டும் போட்டோவை காட்டினான் சிவா.

“சார் எங்க வீட்டுக்காரர் சொன்னதெல்லாம் உண்மைதான் இவன் இவன்…”

“யாரு இவன் நீங்க சொல்றதெல்லாம் வச்சு பாத்த எனக்கு முன்னாடி என்ன மாதிரி இவனைப் பத்தி விசாரிக்க போலீஸ் காரங்க வந்தாங்களா என்ன…?”

“ஆமாங்க சார் உங்களுக்கு முன்னாடி வருஷம் ஒருத்தங்க இவனைப் பத்தி விசாரிக்க வந்துட்டுதான் இருக்காங்க ஆனா எந்த நடவடிக்கையும் எடுத்த மாதிரியே தெரியல… இன்னமும் ஊருக்குள்ள பொம்பளப்புள்ளைங்க காணாம போயிட்டு தான் இருக்குங்க…”

“வருஷம் ஒருத்தர் வந்து விசாரிச்சாங்களா….? எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனுமே…”

“சொல்லுங்க சார்….”

“இந்த ஊர்ல முதல் முதல்ல இந்த சம்பவம் எப்ப நடந்துச்சு, ராஜிவ் சம்பந்தப்பட்டிருந்தானா… என்ன நடவடிக்கை எடுத்தாங்க என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம ஆரம்பத்துல எனக்கு விளக்கமா சொல்ல முடியுமா…”

“அதுக்கென்ன தாராளமா சொல்றேனுங்க… வாங்க இப்படி வந்து உக்காருங்க…” என்று அந்த பெண்மணி அமர சொன்ன இடத்திற்கு அருகே ஒரு சமாதி இருந்தது.

காய்ந்த சருகுகளால் சூழப்பட்டிருந்த அந்த சமாதியைப் பார்த்தவனால் அதிலிருந்து கண்களை அகற்ற முடியவில்லை. அந்த நொடி சட்டென்று அடித்த சுழல்காற்றில் கண்ணில் தூசி விழ கண்ணைத் துடைத்துவிட்டு நிமிர்ந்த சிவா அந்த சமாதியைப்பார்க்கும் போது சருகுகள் விலகி நேகா என்ற பெயர் கண்ணில் தெரிய சட்டென நரம்புகளில் மின்சாரம் பாய்ந்தது போலொரு அதிர்ச்சி மின்னி மறைந்தது.

அதே நேரம் அந்த பெண்மணி கையில் மோர் சொம்புடன் வந்திருந்தார்.

“மோர் குடிங்க சார்…”

“இருக்கட்டும் நீங்க சொல்லுங்க…”

அந்த பெண்மணி கூறியவற்றை தன் மொபைலில் பதிவு செய்து கொண்டான் சிவா.

அவனுக்குத் தேவையான விசயங்களை தெரிந்து கொண்டதில் திருப்தி முழுமையாய் வராவிடினும் வந்ததற்கு மோசமில்லை என்று எண்ணும் அளவிளான தகவல்கள் கிட்டியிருந்தது.

கிளம்பலாம் என்று அவன் முடிவு செய்கையில் மணி இரவு பத்தைக் காட்டியது அவனின் தொடுபேசியில்.

டிரைவரிடம் “கிளம்பலாம் முத்தண்ணா… போற வழியில எங்கயாச்சும் டிபன் பண்ணிக்கலாம்…” என்றவன் ஜீப்பில் ஏறி அமர்ந்ததும் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

சில்லென்ற காற்று அவனுக்கு புதிதில்லை என்றாலும் அப்போது வீசிய காற்று நன்கு இதமாக இருந்தது. கண்களை மூடிக் கொண்டான். இரவின் மடியில் இசைராஜாவின் பாடலில் மெய்மறந்திருந்தான்.

“இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்…”

என்ற வரிகளில் ஜானகியம்மாவின் குரலில் சொக்கி போனவனை சடன் பிரேக் போட்டு முன் கண்ணாடியில் மோத வைத்திருந்தான் முத்தண்ணா.

வண்டி நின்றதன் காரணம் புரியாமல் சிவா கேள்வியாய் முத்தண்ணாவைப் பார்க்க அவரோ புரியாமல் விழித்தார்.

“என்னண்ணா ஏன் வண்டிய நிறுத்துனீங்க…”

“தெரியலைங்க சார்… நல்லா ஓடிட்டு இருந்த வண்டி எப்படி நின்னுச்சுன்னே தெரியல…”

“சரி கீழ இறங்கிப் பாருங்க…” என்று விட்டு திரும்பியவனின் கண்களில் நேகாவின் கல்லறை இருந்தது.

நேகாவின் கல்லறை அரைமணி நேர பயணத்திற்கு பின்னும் எப்படி இருக்கும் இது என்ன இடம் என்று தானும் இறங்கிப் பார்க்கையில் எங்கிருந்து கிளம்பினானோ அங்கேயே நின்றிருந்தான்.

ஆனால் அங்கிருந்த கடை அதிலிருந்த தம்பதி தனக்கு விபரம் சொன்ன பெண்மணி என யாரும் இல்லாமல் அந்த கடை இருந்த இடத்தில் இரண்டு மண் மேடுகள் மட்டுமே இருந்தது.

முத்தண்ணா முத்தண்ணா சீக்கிரம் கிளம்புங்க… என்னாச்சு வண்டிக்கு பாத்தீங்களா போலாமா… என்று கேட்டவனுக்கு அங்கு எந்த பதிலும் கிட்டவில்லை.

மிரட்சியோடு திரும்பிப் பார்த்தவன் கண்ணிற்கு அங்கு கரிய இருளைத் தவிர யாரும் புலப்படவில்லை.

மொபைலை எடுத்தவன் விரல்கள் படபடவென முத்தண்ணாவின் எண்ணை அழைக்க…

“சார் ஏதும் அவசரமுங்களா..? பத்து மணிக்கு கூப்புடுறீங்க…?”

“அண்ணே எங்க போயிட்டீங்க… வந்து ஜீப்ப எடுங்க…”

“ஜீப்பை எடுக்கவா… நான் தான் இன்னிக்கு லீவ் சொன்னேனே சார்…”

“லீவ்வா எப்ப எடுத்தீங்க நீங்க என் கூட ஒரு இன்வஸ்டிகேசனுக்கு வந்தீங்க, இங்க ஜீப் நின்னு போச்சுன்னு இறங்கி போய் பாத்தீங்க ஆள காணோமேன்னு போன் பண்ணா இப்படி சொல்றீங்க…”

“நான் உண்மையை தான் சொல்றேன் சார் நான் வீட்டில இருக்கேன். நீங்க இன்னிக்கு செல்ப் டிரைவ் பண்ணிக்கிறேன்னு சொல்லீட்டீங்க.,..” என்றவரின் அழைப்பு அதோடு துண்டிக்கப்பட்டுவிட, அடுத்த அழைப்பை விடுக்கும் தெம்பின்றி, பேசி தன் உயிரை விட்டிருந்தது.

அதே நேரம் நேகாவின் கல்லரையை யாரோ இருவர் வந்து கடப்பாரையால் உடைக்கத் துவங்கியிருந்தனர்.

காற்றும் மழையும் சட்டென அடித்ததில் அங்கிருந்த தென்னை மரத்தின் காய்ந்த மட்டை சிவாவின் தலையில்விழ மயக்கமுற்று கீழே விழுந்திருந்தான் சிவா.

 

கௌதம் நேகாவைப் பற்றிய யோசனையில் இருந்து வெளியே வர முயன்று கொண்டிருந்தான். தன் திருமண ஆன நாளின் முதல் இரவே இத்தனை பயங்கரமானதாய் இருந்திருக்க வேண்டாமோ என்று எண்ணியபடி வந்தவனிற்கு உண்மையில் இன்ப அதிர்ச்சி தான் காத்திருந்தது.

மெல்லிய ஜரிகை வைத்த இளஞ்சிவப்பு நிற பட்டில் தலை நிறைய மல்லிகையை சூட்டியிருந்தாள் மாயா. உடலை உறுத்தாக நகைகளை அணிந்திருந்தவள் கண்களுக்கு மையிட்டுக் கொண்டிருப்பதை கண்டவன் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் மாயாவைக் காண்கையில் சொக்கித் தான் போனது கௌதமின் மனது.

கல்லூரிக்காலம் முழுதும் அவளிடம் நெருங்கக்கூட முடியவில்லை. அவள் தன்னை கவனித்திருப்பாளா என்பது கூட அவனறியவில்லை. ஆனால் இன்று அவள் தன் மனைவி. அழகான நொடிகளாய் அவள் சம்மதித்த நொடிகளை மனதில் பொதிந்து வைத்திருந்தவனுக்கு, அவளின் சண்டைகளும் நினைவில் வந்து போகாமல் இல்லை.

தான் ஒத்துக் கொள்ளவே இல்லை என வாதிடுவதிலிருந்து இது நேகாவின் வேலையோ என்று சந்தேகம் தோன்றியது. ஆனாலும் தான் அடித்ததுதான் மனதில் அதிகமாய் வலித்தது.

மாயாவை சம்மதிக்க வைத்து தன் காதல் வாழ்வில் ஒளியேற்றி வைக்கும் அளவிற்கு நேகா நல்லவள் என்றால் ஏன் தன் தந்தை உயிரைக்குடிக்க அவரை அணுஅணுவாய் சித்திரவதை செய்யத் துடிக்கிறாள்.

இந்த திருமணத்தின் மூலமாய் அவள் மாயாவிற்கு தனக்கு நன்மை செய்கிறாளா, இல்லை தன் தந்தையைக் கொல்ல மாயாவையே துருப்புச்சீட்டாக்குகிறாளா என்று எவ்வளவு யோசித்தும் விடை மட்டும் கிடைத்தபாடில்லை.

காலையில் திருமணத்திற்கு சம்மதித்த மாயா, அங்கிருந்து வீடு வந்து சேர்வதற்குள் தனக்கு விரோதமானது நடந்துவிட்டதைப் போல் அத்தணை சண்டையிட்டாள். வீட்டுக்குள் வந்ததும் என்ன கலாட்டா செய்வாளோ என்று யோசித்துக் கொண்டிருக்கையில் இணக்கமாக நின்றாள். அடிதான் காரணம் என்றில்லை, தன் கையால் தாலி வாங்கிக் கொண்டவளைக் காண்கையில் காதல் பெருக்கெடுத்தது.

தன்னை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாளோ தன் காதலை அறிமுக செய்வதற்கான சந்தர்ப்பத்தை கூட தர மறுக்கிறாளே என்றதில் தான் அவன் கை ஓங்கியது.

புரிந்து கொள்வாள் என்ற நம்பிக்கையில் முதல் அடி எடுத்து வைத்திருந்தான் அவனறையில். திரும்பிப் பார்ப்பாள் என்ற எதிர்பார்ப்பை அவளும் ஏமாற்ற வில்லை.

நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ளாத பக்குவமற்ற பெண்ணல்ல மாயா. தனக்கு நடப்பது விசித்திரமாய் இருக்கிறது என்பதற்காக விலகி இருந்தால் வழிகள் பிறவாதல்லவா…

அதிலும் அத்துணை மோசமில்லை கௌதமுடனான திருமணம். சற்று முன் அலைபேசியில் பேசிய தன் அன்னையின் வார்த்தைகள் இன்னும் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

”கௌதம் உன்னை நாலு வருசமா காதலிக்கிறாராம் பாப்பா… நேகாவால இந்த முறை தான் உனக்கு நல்லது நடந்திருக்கு… உன்னை விரும்புனவரோட வாழ்க்கையை நரகமாக்கிடாத சந்தோசமா வாழு…”

கௌதமின் வாயால் தெரிவிக்கப்படவில்லை எனினும் காதல் அறியப்பட்டதில் மனம் மையல் கொண்டது அவன் மேல்.

ஆனாலும் ரகசியமாய் வைக்கவேண்டும் என்ற அவள் எண்ணமெல்லாம் முகத்தில் தெரிந்த மலர்ச்சியில் புஸ்வானமாகிப் போனது.

மனம் அமைதியாய் இல்லாத போதும் அவளின் மையல் கொண்ட விழிகளை நேருக்கு நேர் சந்தித்ததில் அவளின் இதழோரப்புன்னகை இவன் மீசையிலும் ஒட்டிக் கொண்டது.

சுற்றுப்புறமெங்கும் காதல் மட்டும் விரவி இருக்க தான் நுழையும் மார்க்கம் தேடிக் கொண்டிருந்தாள் நேகா.

“என்ன ஒரு சர்ப்ரைஸ்…?” என்பதை முறுவல் பூக்காமல் கேட்க முடியவில்லை அவனால்.

கம்பீரமான அவன் முகத்தில் முதல் முறையாய் அவள் காதலைக் காணும் கண்கள் நீடித்திருக்க மறுத்து இமைகளைத் துணைக்கழைத்துக் கொண்டது.

நாணத்தால் பூக்கும் செம்பூக்கள் மலரத் துவங்கியிருந்தது பதில் மட்டும் இன்னும் வந்தபாடில்லை.

“என்ன சர்ப்ரைஸ் பண்ற…? ம்ம்ம்… சொல்லு…?”

“நான் என்ன சர்ப்ரைஸ் பண்ணேன்… எல்லாம் கேஸுவல் தான்…”

“நீ இப்படி இருக்குறது…. மேக்கப்… என்கிட்ட இப்படி இதமா பேசுறது எதுவுமே கேஸுவல் இல்லையே…”

“நான் உங்க பெட்ரூம்ல இருக்குறது கூட தான் கேஸுவல் இல்லை… அதுக்கு என்னவாம்… இந்நேரம் எங்க வீட்டில தூங்கியிருப்பேன்… உங்களுக்காக இப்படி காத்திருக்க மாட்டேன்…”

“எனக்காக காத்திருக்கியா…”

“இல்லையா பின்ன…”

“அப்படியா எதுக்கு காத்திருக்க…? இங்க கூட தூங்கலாமே..” என்று மெத்தையைக் காட்ட,

’தூங்கத் தெரியாமத்தான் முழிச்சுருக்கோமா… பெருசா இடம் காட்டுரார் வேற…’ என்று எண்ணியவளின் முகம் சுருங்கிக் கொள்ள, அவளைச் சீண்டிப் பார்க்கும் எண்ணம் துளிர்விட்டது கௌதமிற்கு.

”தூங்கலாமா….” என்றான்.

ஏதேதோ எதிர்பார்த்திருந்த மாயாவிற்கு அவனின் தூங்கலாமா கடுப்பைக் கொடுக்க,

’ லவ் பண்ணார்னு அம்மா சொன்னதெல்லாம் பொய்யா இருக்குமோ… அவங்களுக்கு யார் சொல்லியிருப்பா… இப்படிப்பட்ட பொய்யை…’ என்று யோசித்தவளுக்கு விடைமட்டும் கிடைக்கவில்லை.

அவனின் வாய்மொழியாய் தன் மீதான காதலை இன்றேனும் வெளிப்படுத்துவான் என்று எதிர்பார்ப்பு தான். நான்கு வருட காதல் என்றார்களே எனக்கு ஏன் தெரியவில்லை….

Advertisement