Advertisement

நிழல் 12

அவள் வீட்டிலிருந்து கிளம்பும் வரை இருந்த உற்சாகம் பரவசம் எல்லாமே காற்றில் கரைந்துவிட்ட பனியைப் போல் காணாமல் போயிருந்தது கௌதமிற்கு.

காரைக் கிளப்பியது முதல் இந்த ஒருமணிநேரமும் மாயா திரும்பத் திரும்ப அதே கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.

எத்தணை முறை பதில் சொன்னாலும் அதனை அவள் ஏற்பதாக இல்லை.

“யாரக்கேட்டு என்னைக் கல்யாணம் பண்ணீங்க…? நான் சொன்னேனா என்னைக் கல்யாணம் செஞ்சுக்கோங்கன்னு, இல்ல எங்க அம்மா அப்பா வந்து கேட்டாங்களா… உங்க கைல இருந்த மோதிரம் எப்படி என் கைக்கு வந்துச்சு… நீங்க என்ன காரணம் சொன்னாலும் இத நான் ஒத்துக்க முடியாது. என்னை இப்பவே எங்க வீட்டில கொண்டுபோய் விடுங்க, இல்ல காரை நிறுத்துங்க… இல்லைன்னா இப்படியே குதிச்சுடுவேன்…” என்று அவளும் நிறுத்தாமல் கத்திக் கொண்டே வர சற்றுமுன் இருந்த சந்தோசம் முற்றிலும் வடிந்திருந்தது கௌதமிற்கு.

அவனின் பதிலை அவள் கேட்கக் கூட தயாராயில்லை.

“ஒரு நிமிஷம் பொறுமையா நா சொல்றதை கேளு மாயா… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்…” கத்தி கூட பார்த்துவிட்டான் கண்ணை மூடிக் கொண்டு இடைவிடாமல் அவள் போக்கிற்கு பேசிக் கொண்டே இருக்க,

“பளார்….” என்ற சப்தத்தின் முடிவில் மாயாவின் கைகள் அவளின் கன்னத்தை தாங்கியிருந்தது. இடைவிடாமல் பேசிக் கொண்டிருந்த வாய் தன்னைப்போல மூடியிருக்க, அப்போது தான் கவனித்தாள் கார் நின்றிருப்பதை எதிரே இருந்த அழகிய பங்களாவை ஆரத்தி தட்டுடன் நிற்கும் பெண்மணியை.

அதற்கு மேல் அவள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அமைதியாக மருண்ட விழிகளுடன் இறங்கியவளைப் பார்க்க அவனுக்கே கொஞ்சம் பாவமாகக்கூட இருந்தது. ஆனால் அந்த கரிசனத்தை கண்ணில் தவறிக் கூட காட்டிடவில்லை அவன்.

இவ்வளவு நேரம் அவன் காட்டியபோதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாதவள், இப்போது அதற்காக ஏங்கவும் துவங்கினாள்.

ஆனால் அவனோ அவளைத் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் கால்கள் சென்ற திசையில் சென்றவளை இழுத்துப் பிடித்து நிறுத்தியிருந்தார் கௌதமின் தாயாரான கௌரி.

தன்னிடம் விசயத்தை சொன்ன போது கௌதமின் குரலில் இருந்த உற்சாகம் இப்போது முகத்தில் இல்லை என்பதை குறித்துக் கொண்டவர்,

“சேந்து நில்லும்மா…” என்று மகனோடு மாயாவை இடித்த படி நிற்கவைத்து ஆரத்தி எடுத்தார்.

அவனுடன் இப்படி ஒட்டிக் கொண்டு நிற்பது, முப்பது நொடிகள் தான் என்றாலும் மூன்று மணி நேரம் போல இருந்தது மாயாவிற்கு.

எப்போதடா மூன்று சுற்று முடியும் என்று அவள் காத்திருக்க, ஏனோ அவஸ்தையாய் இருந்தது பெண் மனதிற்கு.

வெளியில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் முகத்தை வைத்திருந்தாலும் மனதினுள் அம்மாவை மெச்சிக் கொண்டான் கௌதம்.

ஏனோ கௌரியால் தான் மாயாவை இயல்புக்குக் கொண்டு வர முடியும் என்று தோன்றியது அவனுக்கு. நேகாவின் சித்துவிளையாட்டுகள் கூட அம்மாவிடம் சற்று தள்ளித்தான் நிற்கவேண்டும் என்று மனதினுள் அம்மாவிற்கு திரிசூலத்தை கையில் கொடுத்து அம்மனாகவே காட்சிப்படுத்திக் கொண்டான் கௌதம்.

“நேரா அப்பா ரூமுக்கு போய் அவர் முன்ன நிக்காதே, சாமி ரூமுக்கு மருமகளை கூட்டிட்டு போ விளக்கேத்தி சாமி கும்பிடுங்க….” என்று ஆரத்தி வாசலில் ஊற்றி விட்டு வந்த கௌரி இவர்கள் இருவரையும் சாமிரூமுக்கு அழைத்துச் சென்றார்.

தெய்வீக மணம் கமழும் அந்த அறையில் பெரிய பெரிய சுவாமி படங்கள் இருந்தன. பெரிய வெள்ளிக்குத்துவிளக்குகள் இரண்டு ஐந்து முக தீபத்தோடு ஒளிர்ந்து கொண்டிருக்க, மத்தியில் இருந்த காமாட்சி விளாக்கை மருமகள ஏற்றுவதற்காக தயார் படுத்தி வைத்திருந்தார் கௌரி.

வீட்டில் வேலைக்காரர்கள் எத்தணை பேர் இருந்தாலும் அவர்களுக்கு சுவாமி அறைக்குள் அனுமதி இல்லை. காரணம் அவரே சுவாமி படங்களை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்து விளக்கேற்றினால் தான் திருப்தி.

மருமகள் விளக்கேற்றும் முன் தலை நிறைய மல்லிகைப் பூவை சூட்டி விட்டவர், அவள் சுடிதாரில் நிற்பது உறுத்தினாலும், பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டார்.

விளக்கேற்றி சுவாமியை மனதார வணங்கிக் கொண்டிருந்த தம்பதிக்கு, ”அந்த அநாதைக்கு சோறு போட்டு வளர்த்ததே தப்புங்குறேன், அது ஒண்ண கூட்டிட்டு வந்திருக்கு தெண்டச்சோறுக்கு, மானங்கெட்டதுங்கள மொதல்ல வெளியில தொறத்துடி கௌரி… ஏ கௌரி எங்கடி போய்த் தொலஞ்ச… உம் புத்திரனுக்கு இப்பகல்யாணம் ஒரு கேடா… இப்ப இங்க வரியா இல்லையா…?” என்ற பேச்சுகள் தான் காதில் விழுந்தது.

“நீங்க அதெல்லாம் காதுல வாங்காதீங்க, அது ஒரு வெறிநாய் அப்படித்தான் கொலைக்கும்… நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க… என்கூட வாம்மா…” என்று ஆசீர்வதித்து அவளை மட்டும அழைத்துச் சென்றவர்,

வரப்போகும் மருமகளுக்கென அவர் எடுத்துவைத்திருந்த பட்டுப்புடவையை மாயாவிற்கு கட்டிவிட்டவர், அவரின் அத்தணை நகைகளையும் மாயாவிற்கு அணிவித்து அழகு பார்த்தவர், “இப்போ வா போகலாம்…” என்ரு அவளை அழைத்து வந்தார் கௌதம் முன்.

ஒரு நொடி என்றாலும் பிரமித்து நின்றிருந்தான் இரண்டாம் முறையாக. இதுவரை அவளிடம் இல்லத ஏதோ ஒன்று இப்போது புதிதாக பூத்திருப்பதைப் போல் தோன்றியது. உச்சி முதல் பாதம் வரை உற்றுப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்த்த மாயாவிற்கு தன்னையுமறியாமல் கன்னங்கள் சிவந்திருந்தன.

”வாங்க மேல போலாம்…” என்று மூர்த்தியின் அறைக்கு அழைத்துச் சென்ற கௌரி மூர்த்தியின் இடைவிடாத சாபங்களை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

கௌதமின் கையில் தாலி கோர்த்த செயினைக் கொடுத்தவர் மாயாவின் கழுத்தில் அந்த மங்கல நாணை பூட்டச்செய்தார்.

அதுவரை கத்திக் கொண்டிருந்த மூர்த்தியின் வாய் கப்பென மூடிக் கொண்டது. மாயா கௌதமின் ஜோடிப் பொருத்தத்தை கௌரி மெச்சிக் கொண்டிருக்க,

“ஏய்ய்ய்ய்ய் ஸ்ருதி நீ நீ நீ எப்படி இங்க உயிரோட…” என்று பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தார் மாயாவைப் பார்த்து.

இவர்கள் மூவரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, பயத்தில் வியர்த்துக் கொட்டியது மூர்த்திக்கு, பேசமுடியாமல் வாய் குழறி வாயில் உமிழ்நீர் மட்டும் நிற்காமல் ஊற்றிக் கொண்டிருக்க, பதறிய கௌரி அங்கிருந்த டவலால் அவர் முகத்தை துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, மாயாவின் முகத்தில் வித்தியாசமான குரூரம் தெரிந்தது. கௌதம் பார்க்கும் போது எப்போதும் போலிருக்கும் மாயாவின் முகம் மூர்த்தி பார்க்கும் போது கண்களில் ரத்தம் வடிந்து விழிகள் சிவப்பாகி கோரமாய் மாறியது.

இதை கவனித்த கௌரி, “கௌதம் மாயாவைக் கூட்டிட்டு போ…” என்று கூற மீண்டும் மாயாவின் முகம் இயல்பானது.

அதே நேரம் மூர்த்தி மூர்ச்சையாகி இருக்க, மருத்துவருக்கு அழைத்துவிட்டு வெளியே வந்தவர், நேரே மாயாவைப் பார்க்கச் சென்றார்.

மாயாவை தன் அறையில் இருக்கச் செய்த கௌதம் வினோதனின் அழைப்பு வரவும், வெளியே வந்திருந்தான்.

கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மாயாவிற்கு கண்ணாடியில் நேகாவின் முகம் தெரிந்தது.

ஆனால் பின்னிருந்த பார்த்துக் கொண்டிருந்த கௌரிக்கு மாயாவின் கோரமான முகமே தெரிந்தது.

“என்ன மாயா எப்படி இந்த கல்யாணம் நடந்துச்சுன்னு குழப்பமா இருக்கா… நான் தான் நானே தான் உன்னை சம்மதிக்க வைச்சேன் நீயே சம்மதிக்கிற மாதிரி உன்னை சொல்லவும் வைச்சேன்… நீ என்னமோ என்ன பார்த்து பயமும் இல்ல குற்ற உணர்ச்சியும் இல்லன்னு சொல்ற ஆனா உண்மை அதில்லையே… உன்னோட பயம் தான் உன்னை நான் அடைஞ்சதுக்கான சாவி அது தெரியுமா உனக்கு அந்த குற்ற உணர்ச்சி தான் நான் சொல்றபடியெல்லாம் உன்னை செய்ய வைக்கிது… இதை வச்சு என்னவெல்லாம் செய்வேன்னு தெரியுமா தெரியுமா…

உன் வாழ்கையை நாசமாக்குவேன்… உனக்காக பரிஞ்சிகிட்டு வந்தானே அந்த கௌதம் அவன் கையாலயே அவங்கப்பனை கொல்ல வைப்பேன்… அந்த மூர்த்திக்கு நீ தான் பரம எதிரியா தெரியப் போற, உன்னை கல்யாணத்தை நெனச்சு நிம்மதியா இருக்காங்களே உங்கம்மா அதுக்கு ஆயுசு ரொம்ப கம்மின்னு அவங்களே புரிஞ்சுப்பாங்க… அந்த மூர்த்தி துடிதுடிச்சு சாகுவான் அதுக்கு நீ தான் காரணமா இருப்ப, இப்ப உன்னை கொஞ்சுதே உன் மாமி அவங்க கையாலயே உன்னை இந்த வீட்ட விட்டு தொறத்துவா…

நீ பைத்தியம் பிடிச்சு ரோட்டுல அலையுற வரைக்கும் உன்னை நான் விடமாட்டேன். ஏதோ பயத்தில என்னை விட்டுடுன்னு கெஞ்சியிருந்தா பாவம் பார்த்து உயிரோட மட்டுமாவது விட்டிருப்பேன், எப்ப நீ என்ன எதிர்த்து நின்னியோ இனிமே உன் வாழ்க்கையில நடக்குறதெல்லாம் என் இஷ்டப்படிதான் நடக்கும்…” என்று அகோரமாய் சிரித்த நேகா கௌரியின் கண்களுக்கு மாயாவாகவே தெரிந்தாள்.

இந்த வீட்டையும் தன் கணவனையும் அழிக்க வந்திருக்கிறாள் மாயா என்று புரிந்து கொண்ட கௌரி “உனக்கு பாடம் நான் கத்து தரேன் மாயா, நீ பேய்தான் என் மகனுக்கு புரியவைச்சு, உன்னைக் கூட்டிட்டு வந்த அவனே அவன் கையால உன்னை துரத்த வைக்குறேன்…” என்று அவர் ஒரு புறம் சூலுரைத்துச் செல்ல அதையும் மாயாவிற்கு கண்ணாடியில் காட்டிய நேகா மீண்டும் மீண்டும் சிரிப்பென்ற பெயரில் கர்ஜித்தாள்.

தன் உருவத்தைக் காணவேண்டிய கண்ணாடியில் இதையெல்லாம் பார்த்த மாயா அயர்ந்து போய் அமர்ந்துவிட்டாள் மெத்தையில். அந்த அறையின் இன்னொரு வாயில் வழியாக நடந்த அத்தணையும் பார்த்துக் கொண்டிருந்தான் கௌதம்.

மாயா அறியாமலே அவளைக் காக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டவன், ராஜீவ் சொன்ன விசயங்களையும் திடிரென காணாமல் போன வாட்ச்மேன் மகள் ஸ்ருதியையும் தன் தந்தையின் நிலையையும் கணக்கிட்டுப் பார்த்து மீண்உ மூர்த்தியின் அறைக்கே சென்றிருந்தான்.

அங்கே நேகா ஒரு புறம் ஸ்ருதி ஒருபுறம் மூர்த்தியின் கழுத்தை குதற கூரிய பற்களுடன் போட்டி போட, பயத்தில் அலறித்துடித்துக் கொண்டிருந்தார் மூர்த்தி.வாயில் பல்லிலும் ரத்தம் வழிந்தோட,

“என்ன மூர்த்தி வலிக்குமேன்னு பயப்படுறியா… கவலைப்படாத ராஜீவ் அந்த தாடிக்காரனுக்கு நீயும் உடந்தையா தான இருந்த இந்த வலியக் கூட அனுபவிக்கலன்னா எப்படி…?” என்று நேகா கேட்க,

ஸ்ருதியும் நேகாவும் மூர்த்தியின் கழுத்தை கடித்து ரத்தத்தை குடித்துக் கொண்டிருந்தனர். வலியில் மூர்த்தி எழுப்பும் ஓலம் அந்த அறையைத் தாண்டி வெளியே வரவே இல்லை என்பது கௌதமிற்கு ஆச்சர்யமாய் இருந்தது.

தடுக்கத் தோன்றாமல் நின்றிருந்த கௌதம் அடுத்த பத்து நிமிடங்கள் அந்த ஓலத்தை சகிக்க முடியாமல் காதுகளை பொத்திக் கொண்டான்.

ஆனால் அடுத்த நொடியே, நேகாவும் ஸ்ருதியும் விலகி நிற்க, மூர்த்தி உடல் மீண்டும் இயல்பிற்கு திரும்பியிருந்தது. அவரும் உறங்குவதைப் போல் படுத்திருக்க, கௌதமிற்கு தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.

தன் கையாலாக நிலையை எண்ணி சுவற்றில் முட்டிக் கொள்ள சென்ற கௌதமின் முன் வந்து நின்ற நேகா, “ஒரே தடவையில சாகடிச்சிட்டா அந்த வலியே தெரியாதே கௌதம், உங்கப்பனை எனக்கு திருப்தியா நீ தான் கொல்லனும் சரியா…” என்றிட அவள் கண்ணிலும் வாயிலும் இரத்தம் வழிந்தபடியே இருக்க நாவால் சுவைத்த படி நகர்ந்து சென்றாள் நேகா.

 

 

Advertisement