Advertisement

நிழல் 11

”என்ன மாயா பயம் போயிடுச்சா, உன்னால தான் என் வாழ்க்கை போச்சு, இப்படி ஆவியா அலையுறேன் அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாம, என் முன்னாடியே தைரியமா வந்து நிக்கிற…” என்ற நேகாவின் குரூர குரல் மாயாவை சற்றும் அச்சுறுத்தவில்லை என்பதே நேகாவின் மிகப்பெரிய ஏமாற்றமாய் இருந்தது.

சிலரின் பலம் என்பது எதிரில் இருப்பவரின் பயமும் பலவீனமும் இருக்கும் வரை மட்டுமே என்பது மாயாவின் துணிவில் நேகாவிற்கு புரிந்துவிட, அவ்வளவு எளிதில் தோல்வியை ஒத்துக் கொண்டு விலகிப் போகும் ரகம் இல்லயே நேகா.

மாயாவை அடிமையாய் வைத்துக் கொண்டு அவள் செய்ய வேண்டிய காரியங்கள் பல இருந்தன அவளுக்கு.

ஆனால் மாயா இப்படி தன்னை நேருக்கு நேர் சமாளிக்க தயாராவாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

ஒருவேளை அம்சவேணி ஏதேனும் சொல்லியிருப்பாரோ என்று அவரைப் பார்த்தாள். அவரும் நடப்பவற்றை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்க, இது அவரின் வேலை இல்லை என்று புரிந்து கொண்டாள்.

திடீரென்று இவளுக்கு என்ன ஆனது என்ற யோசனையில் நின்று விட்ட நேகாவை, மாயாவே அழைத்தாள்.

”நீ சொல்ற பயம், குற்ற உணர்ச்சி இந்த ரெண்டுக்காகவும் தான் என்னை நானே தொலைச்சேன். உண்மையா நியாயமா என் மனசாட்சிப்படி, உனக்கு உன் நிலைமை என்னால தான்னு நம்புனேன். அதுக்காக நீ என் வாழ்க்கையை எவ்வளவு நரகமாக்குனப்பவும் தாங்கிக்கிட்டேன். ஆனா இனிமே அப்படி இருக்க மாட்டேன்…”

“ஏன் ஏன் ஏன்…?” முகத்திற்கு அருகே வந்து நேகா கோரமாய் கேட்டபோதும் மாயா சிறிதும் சலனமில்லாமல் நின்றாள்.

மாயா ஏதோ ஓர் முடிவிற்கு வந்துவிட்டாள் இனி அவளை அசைப்பது சற்று கடினம் என்று எண்ணிய நேகா, அவள் படில் சொல்லாமல் இருப்பது எதிர்பார்த்தது தான் என்பது போல் கௌதமை நோக்கி திரும்பினாள் நேகா.

அதற்குள் சிவாவிடமிருந்து கௌதமிற்கு அழைப்பு வந்தது. ” ஹலோ கௌதம் ராஜீவ் ரொம்ப சீரியஸ் உடனே ஹாஸ்பிடல் வாங்க… ராஜீவ் எதாவது ஆனா நாங்க மாயாவைத் தான் கைது செய்வோம், மாயாவைக் கையோட கூட்டிட்டு வாங்க…” என்ற சிவாவின் அழைப்பில் அதிகம் மகிழ்ந்தது நேகா தான்.

அவளின் எக்காளச்சிரிப்பில் அந்த வீடே அதிர்ந்தது. என்னைக் கொன்ன அவனுக்கும் தண்டனை இத்தனை வருசம் கழிச்சு என் மனசார அவனைக் கொல்ல இன்னிக்குத் தான் முடிஞ்சது. அதுல கூடுதல் சந்தோசம் என்னன்னா… அதுக்காக மாட்டப்போறது நீ மாயா நீ தான் நீ மட்டும் தான். நம்பவைச்சு ஏமாத்தின துரோகி…” என்றவள் புகையாய் மறைந்துவிட,

அடுத்த நொடி கௌதம் அங்கிருந்து கிளம்பினான். ஆனால் மாயா எவ்வளவு சொல்லியும் அவளை அழைத்துச் செல்லமாட்டேன் என்றவன், அவளின் அன்னையின் கையில் அவளை பத்திரமாக ஒப்படைத்துவிட்டு ஆஸ்பத்திரி நோக்கி விரைந்தான்.

ராஜீவ்க்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற வேண்டுதலோடு. அத்தணை தூரம் வேண்டும் அளவிற்கு அவனொன்றும் நல்லவனும் அல்ல, வேண்டியவனும் இல்லைதான் என்றாலும் அவனால் அறியப்படவேண்டிய உண்மைகள் அதிகம் இருப்பதாகப்பட்டது கௌதமிற்கு.

தன் தந்தையின் இந்த நிலைக்கும் ராஜீவ்வுக்கும் எதோ சம்மந்தம் இருப்பதாக ஆழமாக தோன்றவும் இன்னும் இன்னும் வேகமெடுத்தான் அந்த வளைந்த பாதைகளில்.

ஏனோ வினோதனிற்கு அழைக்க அவனுக்கு மனம் ஒப்பவில்லை. தன் தந்தையைப் பற்றிய உண்மைகள் வினோதனிற்கு தெரிவதில் அவனுக்கு விருப்பமில்லை.

அசுர வேகத்தில் மருத்துவமனையை அடைந்திருந்த கௌதம் வேகமாக சிவாவைத் தேடிப்போக, அவனோ எந்த பதற்றமும் இல்லாமல் அமர்ந்திருந்தான்.

“என்ன சிவா ராஜிவ்க்கு சீரியஸ்ன்னு கால் பண்ணீங்க…”

“அப்படியா இல்லயே எப்போ…?”

“ஒரு அரைமணினேரம் முன்னாடி….”

“இல்லையே கௌதம் பத்துநிமிஷத்துக்கு முன்ன தான் ஹாஸ்பிடல்க்கு நாங்களே ரீச் ஆனோம்… உள்ள ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு… இன்னும் டாக்டர்ஸ் வெளிய வந்து ஒண்ணும் சொல்லவே இல்லையே…”

“என்னது அப்ப எனக்கு யார் கால் பண்ணது…?”

”நான் கால் பண்ணல கௌதம்… நாங்க வந்து சேரவே இவ்ளோ நேரம் ஆச்சு, இதுல எப்படி நான் கால் பண்ண, அதுவும் நீங்க எப்படி இவ்ளோ சீக்கிரம் வந்தீங்க…”

“அது அதெல்லாம் விடுங்க… ராஜீவ் எங்க…?”

“அதோ அந்த ரூம்ல தான் இருக்கான், டாக்டர் இருக்காங்க…”

உடனே அந்த ரூமை நோக்கி விரைந்த கௌதம் அங்கிருந்த கண்ணாடி வழியே உள்ளே நடப்பதை எட்டிப்பார்த்தான்.

மருத்துவர்களின் சிகிச்சையை மீறி துள்ளிக் கொண்டிருந்தது ராஜீவ்வின் உடல்.

அதில் ஒரு செவிலி மட்டும் அவன் துடிப்பதை நின்று ரசித்துக் கொண்டிருந்தாள். அவளின் முகத்தில் நேகாவின் கண்களைக் கண்டான் கௌதம்.

சற்றும் தாமதிக்காமல் உள்ளே நுழைந்தவன் அங்கிருந்த மருத்துவர், செவிலியர்கள் சொல்வதையெல்லாம் காதில் வாங்காமல் ராஜீவ்வின் அருகில் சென்று நின்றான்.

கௌதமின் வருகைக்காகவே காத்திருந்தவன் போல, அவனைக் கண்டதும் படபடவென பேசத்துவங்கினான். மூச்சு வாங்க வாங்க அவன் கூறுவதைக் கேட்க கேட்க கௌதமிற்கு ரத்தம் கொதித்தது.

அவனிடம் மீதி உண்மைகளையும் கேட்டு தெரிந்து கொள்ளும் பொருட்டு பல்லைக் கடித்து அவனின் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

ராஜீவ்வும் தன் நினைவு தப்புவதற்குள் சொல்ல முடிந்தவற்றை கூறியவன், தனக்கும் மூர்த்திக்கும் என்ன தொடர்பு என்பதை மட்டும் கூறாமல் மயங்கியிருந்தான்.

அவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் கோமாவிற்கு சென்று விட்டதாக அறிவித்தனர்.

நடைபெறும் மர்மநிகழ்வுகளில் ராஜிவ் கிடைத்ததும், உண்மைகளை சொன்னதும், கோமாவில் படுத்ததும் அவனுக்கு எந்தவிதமான அதிர்வையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை என்றாலும், மூர்த்திக்கும் ராஜிவ்விற்கும் தொடர்பு மட்டும் தெளிவாகத் தெரியாததில் உறுத்தலாகவே இருந்தது.

அதற்கு ஏற்றாற்போல் மூர்த்தியின் போக்கும் நெருடலாகவே இருந்தது.

ஏனென்றால் மூர்த்தியிடம் தனக்கு விவரம் தெரிந்தது முதல் இப்படி ஒரு வெறுப்பைக் கண்டதில்லை அவன்.

கார்மெண்ட்ஸின் பொறுப்புகள் கௌதமிடம் வந்தபோது மாறத் துவங்கியிருந்த அவரின் குணம் ராஜிவ்வின் பெயரைக் கேட்டதும் அன்று உச்சத்தைத் தொட்டிருந்தது.

அன்று முதல் காரணங்களை அலசி ஆராய்ந்தவனுக்கு மாயாவின் நடவடிக்கைகள் இன்னும் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

மீண்டும் மீண்டும் அவள் மூர்த்தியை கேட்பதிலிருந்து, அவரும் ஏதோ சொல்லமுடியாத அளவிற்கான பாவத்தை செய்திருப்பாரோ அதன் காரணமாகத்தான் படுக்கையிலிருந்து கொண்டே வாழும் நரகத்தை அனுபவிக்கிறாரோ என்று கூடத் தோன்றியது.

இவை அனைத்திலும் மாயா இருந்தாள். கல்லூரியில் தனக்கென வட்டத்தை அமைத்துக் கொண்டு யாரையும் அதில் நுழையவிடாதவளை தன் அலுவலகத்தில் கண்டபோது வந்த பூரிப்பு, கனவில் கைப்பிடிப்பது வரை சென்றிருந்தது.

வினோதனிடம் உரிமையாய் பழகுவதும் தன்னிடம் ஒருஅடி விலகி நிற்பதும் மனதில் உறுத்தினாலும் காதல் அதிகமானதே ஒழிய குறையவில்லை.

அதிலும் அவளைக் காணாத பொழுதுகளில் அவளுக்காக உயிரே போகும் அளவென்றாலும் அதனினும் அவளே முக்கியம் என்னும் முடிவுகள் பிறந்திருந்தன.

சிவா கேட்ட கேள்விகளுக்கு கூட பதிலளிக்காதவன், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து நேரே மாயா முன்பு தான் போய் நின்றான்.

அவளின் அன்னை தந்தை என யாரைப் பற்றியும் கவலைப் படாதவனாய் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தான்.

“மாயா வில் யூ மேரி மீ…?”

அப்போது தான் தன் இயல்பிற்கு திரும்பியிருந்த மாயா விரிந்த இமைகளுக்குள் சிலையான விழிகளுடன் இதயம் துடிக்கிறதா…? இல்லை பதில் சொல்லென நெஞ்சத்தை இடிக்கிறதா..? எனப்புரியாமல் நின்றிருந்தாள்.

அவளின் கட்டுப்பாடற்றது என எண்ணவைக்கும் படி அவளின் உதடுகளின் இதயத்திலிருந்து மட்டும் பதில் சொல்லியிருந்தது

“வொய் நாட்…!” என்று…

அவளின் பதில் மூளைக்கு புதிதாய் இருந்தாலும் இதயத்திர்கு இதமாய் இருந்தது.

சற்றும் தாமதிக்காமல் தன் கையிலிருந்த மோதிரத்தை கழற்றி அவள் முன் நீட்ட அவளும் எந்த தயக்கமும் இல்லாமல் தன் விரலை நீட்டினாள்.

அவளின் தந்தையும் தாயும் அதிர்ச்சியில் வாய் பிளந்தபடி இருக்க, அவர்களை அட்டேன்ஷனில் நிறுத்திவைத்து கால்களில் விழுந்திருந்தனர் கௌதமும் மாயாவும்.

மறுக்கத்தோன்றாத அவர்களின் ஜோடிப் பொருத்தமும் முகமலர்ச்சியும், பெண்ணின் திருமணம் குறித்த அவர்களின் பயத்தை எதிர்காலத்தைக் குறித்த மாயாவின் பாதுகாப்பையும் உறுதி செய்திருந்ததில் மனநிறைந்த ஆசீர்வாதத்தை வழங்கியிருந்தனர் இருவரும்.

“அடப்பாவிங்களா பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்லி வரசொல்லிட்டு, ஆக்‌ஷன் பிலிம் காட்டுனீங்க, இப்ப என்னடான்னா கல்யாணத்தையே முடிச்சிட்டீங்க… என்னயா நடக்குது இங்க…?” என்ற மதுவின் கேள்வியில் இறுக்கம் மறைந்து அனைவரும் சிரித்துவிட,

“போகப் போக உனக்கே புரியும் மது…” என்றவன்,

உடனே தன் அன்னைக்கு அழைத்திருந்தான்.

“ம்மா நான் கல்யாணம் செய்துகிட்டேன் மா…”

“என்னமோ புதுசா ஒரு நாய்குட்டி வாங்கிருக்கேன்ற மாதிரி சொல்ற… என்னடா…”

“உண்மை தான் மா… நம்பு…”

“ஏன் டா கல்யாணம்னா எவ்வளவு சடங்கு சம்பிரதாயம் இருக்கு… எவ்வளவு வேலை இருக்கு, முக்கியமா நானெல்லாம் இருக்க வேணாமாடா, பொசுக்குன்னு சொல்ற…”

“ம்மா உடனே கட்டிக்கணும் தோணுச்சு அதான்…”

“அதுசரி யார்ரா பொண்ணு அந்த மாயோ போயோ சொல்லுவியே அவளா…”

“ம்மா எத்தனை தரம் சொல்லிருக்கேன்…”

“இப்ப தானடா சொன்ன… கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு…”

“அதில்ல மா, அவ பேரு மாயான்னு…”

“அப்பயே நெனச்சேன் இப்படி எதாச்சும் தான் நடக்கும்னு…”

“ம்மா நாங்க கிளம்பி வரோம் ஆரத்தி தட்டோட ரெடியா நில்லு…”

“என் நேரம் டா, உங்கப்பனை எப்படி சமாளிக்கிறதுன்னு கொஞ்சமாச்சும் எண்ணவெசனம் இருக்கா பாரு…”

“ம்மா சரியா சிக்னல் இல்ல நான் வந்து பேசுறேன் வை…” என்றவன் அடுத்த ஒருமணி நேரத்தில் அவனின் வீட்டில் இருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

                                  

 

 

 

 

  

Advertisement