Advertisement

நிழல் 10               

குளிருக்கு இதமாக கம்பளியை தலை வரை இழுத்து போர்த்திக் கொண்டு அருகே இருந்து நாய்குட்டி பொம்மையைக் கட்டியபடி வாகாய் படுத்திருந்த மாயாவின் கால்களை யாரோ சுரண்டுவது போல் இருந்தது.

காலை உதறியவள் மீண்டும் உள்ளிழுத்துக் கொண்டு தூங்கத் துவங்கியிருந்தாள் இம்முறை பலமாக கால்கள் எதைக் கொண்டோ கீறப்பட்டது. சட்டென போர்வையோடு எழுந்தமர்ந்தவளின் கன்னத்தில் இடைவிடாமல் முத்தங்கள் தெறித்தபடி இருக்க, கிடைத்த இடைவெளியில் முகத்தைத் தள்ளிப் பார்க்க அங்கே மது நின்றிருந்தாள்.

“என்ன கும்பகர்ணி மணி 8 ஆகுது இன்னுமா தூங்குற… ஏதோ வேலைக்கெலாம் போறதா சொன்னாங்க பெரிம்மா, நீ என்னடான்னா இன்னும் எழவே இல்ல…” என்று படபடவென பொரியும் மதுவைப் பார்த்ததும் மாயாவிற்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.இன்னும் அவளிட்ட முத்தங்களால் கன்னங்கள் பரவசத்தில் திளைத்திருந்தாள் மாயா.

அபரிமிதமான அன்பு மாயாஜாலங்கள் புரியும் மந்திரக்கோல் போன்றதல்லவா. உற்சாகமெனும் ஊற்றை மாயாவினுள் பெருக்கெடுக்கச் செய்திருந்தது.

“வாடி என் உடன்பிறப்பே… ஹப்பா எத்தணை நாளாச்சு உன்னப் பாத்து…”

“நாளில்லடி வருசம்… எத்தணை வருசமாச்சுன்னு கணக்கு போடு…”

“எப்படியோ இப்பயாச்சும் வந்தியே…”

“நானாகட்டும் இப்ப வந்துட்டேன், நீ எப்ப தான் வரப்போற சொல்லு…”

“நானா…” என்று மாயா யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ”கல்யாணம் முடிஞ்சு உங்க ஊருக்கு தான வரப்போறா மது, அப்போ அடிக்கடி பாத்துக்குவீங்க….”

“என்னது கல்யாணமா…” என்று மது கேட்கையில் மாயாவும் அவளுடன் ஒன்றும் தெரியாதவள் போல கோரஸ் பாட, அவளின் அன்னையின் முறைப்பை வாங்கிக் கொண்டாள்.

“ஆமா மது உங்க ஊர் தான் மாப்ள…”

“என்னது ஓசூர் ல யா…”

“ஆமா மாப்ள டைட்டன் கம்பெனியில வேலை பாக்குறார்… இன்னிக்கு நிச்சயம் செய்ய வராங்க, உங்கம்மாட்ட வாடின்னு போன் பண்ணா நீ ஒரு பெரிய மனுசின்னு உன்னை அனுப்பிருக்கா…”

“அம்மா இத என்கிட்ட சொல்லவே இல்லயே பெரியம்மா…”

“அவ எதை தான் சொல்றா… சரிவிடு தண்ணி சூடா இருக்கு போய் குளிச்சிட்டு வா, சூடா தோசையும் பூண்டு சட்னியும் ரெடி பண்ணிருக்கேன் சாப்பிடலாம்…” என்ற அம்சவேணி மாயாவைக் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட,

“ம்மா ம்மா என்ன மா ஒண்ணுமே சொல்லாம போற…” பின்னாடியே கத்திக் கொண்டு செல்ல, அம்சவேணி கண்டுகொள்ளாமல் சென்றுவிட்டார்.

“போ போ வந்து உன்னை கவனிச்சுக்குறேன்…” என்று மனதினுள் எண்ணியவள் வாய்விட்டும் சொல்லியிருந்தாள்.

“அப்பா அப்பா எங்கயிருக்கீங்க…?” என்று வீடு தோட்டம் எல்லா இடமும் சுற்றி வந்தும் அவர் மாயாவின் கண்களுக்கு சிக்கவில்லை.

அதன் பின் அவரை மாப்பிள்ளை வீட்டாருடன் தான் பார்த்தார் மாயா.

ஆனால் அப்போது எதுவும் பேசுவதற்கோ சொல்வதற்கோ இடம் இருந்திருக்கவில்லை.

இவர் தான் மாப்பிள்ளை, இன்றைய நாள் திருமணம் என்பதைத் தவிர அவளுக்கு வேறு எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.

மாயாவிற்கு அவ்வளவு ஆத்திரம் வந்தாலும் சிரித்தபடி நிற்கவேண்டிய சூழ்நிலை.

கடனுக்கு நின்றிருந்தவளிடம் அவர்கள் தங்கள் உறவுமுறையை விளக்கிக் கொண்டிருந்தனர்.

அவளும் அவர்கள் சொல்லச் சொல்ல ஒவ்வொருவரையும் பார்த்து ஸ்னேகப்புன்னகையை சிந்திவைத்தாள்.

இறுதியாக இவரு ராஜீவ், மாப்பிள்ளையோட பெரியப்பா பையன், இங்க தான் கொஞ்ச வருஷம் முன்னாடி வரைக்கும் வேலைபார்த்துட்டு இருந்தாப்ல, இப்ப வெளிநாட்டுல இருக்காரு, லீவுக்காக வந்துருக்காரு…” என்ற அறிமுகப்படலத்தின் முடிவில் மாயாவிற்கு புன்னகை அரும்பவில்லை, மாறாக முகம் கோபத்திலும் ஆத்திரத்திலும் சிவந்து பல்லை நறநறவென கடித்தபடி அவனை நோக்கி முன்னேறியவள், சட்டையைக் கோர்த்துப் பிடித்து தூக்கியிருந்தாள்.

அவனின் கால்கள் தரையிலிருந்து அரைஅடிக்கு மேலிருந்தது. சட்டையோடு சேர்த்து அவனின் குரல்வளை நெரிக்கப்பட முட்டைமுட்டையாய் கண்கள் வெளியே வரத்துவங்கியிருந்தது.

மாயாவிற்கு சட்டென அத்தணை பலம் எங்கிருந்து வந்ததென யாருக்கும் புரியவில்லை.

மாப்பிள்ளை வீட்டினர் ஆளுக்கொருபுறம் கூச்சலிட, அம்சவேணி மாயாவை கோபத்தோடு அழைத்துக் கொண்டிருந்தார்.

”மாயா மாயம் என்ன இதெல்லாம் அந்த தம்பிய இறக்கிவிடு, இறக்கிவிடு சொல்றேன்ல…” அம்சவேணி குரல் மாயாவின் காதுகளை எட்டவேயில்லை.

ஒரு படி மேலே சென்று மாயாவின் தந்தை கையைப் பிடித்து அசைத்து அவளை உலுக்கி அவளை நடப்பிற்கு கொண்டு வர முயன்றுகொண்டிருந்தார்.

தன் மகளின் மெல்லிய கைகளுக்கு இத்துணை பலம் எப்படி வந்ததென்று அவருக்கும் புரியவில்லை.

அத்தனை பேரின் கூச்சலைத் தாண்டி மாயாவின் குரல் ஓங்கி ஒலித்தது.

“நேகாவ என்னடா பண்ண…? சொல்லுடா சொல்லு நேகாவை என்ன பண்ண… அவளுக்கு என்ன ஆச்சு… நேகாவை கொன்னுட்டு என்ன தைரியம் இருந்தா என் முன்னாடியே வந்து உக்காந்திருப்ப…”

அவளின் கேள்வியில் தாடியை மழித்து மாடர்னாக மாறியிருந்த ராஜிவ்வுக்கு சப்தநாடியும் ஒடுங்கிப் போனது.

“இப்ப சொல்லப் போறியா என் கையிலயே இப்ப சாகப்போறியா… ம்ம்ம்…” என்று மாயா பெண்புலியாய் உறும,

“நேகா மட்டுமில்ல மாயா, இவனால என் ஸ்ருதி மாதிரி இன்னும் எத்தனை பொண்ணுங்க உயிரவிட்டாங்களோ தெரியல, இவனை இவ்வளவு ஈசியாலாம் கொல்லக்கூடாது…” என்ற படி இன்ஸ்பெக்டர் சிவா உள்ளே வர, அவனோடு கௌதமும் , வினோதனும் வந்து கொண்டிருந்தனர்.

மெல்லிய பூவாக அவளை எண்ணிக்கொண்டிருந்த கௌதம் அவள் கையில் தொங்கும் ராஜிவ்யும், அவள் கண்களில் தெறிக்கும் ருத்ரத்தையும் கண்டு பிரமித்துப் போய் நின்றுவிட்டான்.

வினோதனிற்கு உண்மையில் இப்போது மனம் குதூகலித்தது. “இவ இவ இவ தான் டா மாயா…” என்று மனதிற்குள் சபாஷ் போட்டுக் கொண்டான்.

அவனுக்கு எப்போதும் மாயாவின் துணிவும் தைரியமும் தான் அவளின் முகமாக இருக்கவேண்டும். பயத்தில் கூனிக் குறுகும் மாயாவைக் கண்டால் அவனுக்கு வரும் கோபத்திற்கு அளவே கிடையாது.

இவர்களோடு அங்கே நின்றிருந்த நேகாவிற்கும் மாயாவின் செயல்கள் புதுமையாய் இருந்தாலும் அவள் தனக்காய் புது அவதாரம் எடுத்து நிற்பதைப் பார்கையில், பெருமிதம் தோன்றினாலும், ராஜிவ்வை அப்படியே நிறுத்தி வைத்திருப்பதில் சற்றே வருத்தம் தான்.

அவளின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல், ஓலமிட்டு கதறத்துவங்கினான் ராஜிவ்.

மாயாவின் கட்டைவிரலும் ஆள்காட்டிவிரலும் அவனின் கழுத்தை பதம்பார்க்க, இருபுறத்திலும் அவனின்குருதி வழிந்து தரையில் சொட்டிட, கையை கீழிறக்கிய மாயா, காலால் அவனை ஓங்கி விட்ட உதையில், ஓரத்தில் சுருண்டிருந்தான் ராஜிவ்.

மாப்பிள்ளை வீட்டார் என்று வந்திருந்தவர்கள் அனைவரும் கப்சிப் என்றிருக்க, மாப்பிள்ளை என வந்தவன், எங்கோ பின் சென்று ஒளிந்திருந்தான்.

இத்தணையிலும் நேகாவின் எண்ணம் மாயாவிற்கு எப்படித் தெரிந்தது என யோசித்துக் கொண்டிருந்தார் அம்சவேணி.

மணப்பெண்ணென அலங்காரம் செய்யப்பட்டவள் காளி அவதாரமெடுத்து நிற்பாள் என அவர் என்ன கனவா கண்டார்.

சற்று சுதாரித்தவர், சிலையென நின்றிருந்த மதுவை உசுப்பி, மாயாவை அழைத்து உள்ளே செல்லுமாறு சைகை செய்ய, அவளோ பயந்தது போல் நடித்து இரண்டடி பின்னே சென்றிருந்தாள்.

சமயம் பார்த்து அவளை பின்னிழுத்த கௌதம் அவள் தவறி விழுகையில் கையில் ஏந்திக் கொண்டான். மாயாவும் இதுதான் சமயமென மயக்கமுற்றதைப் போல் சரிந்து விட, அவளை ஏந்தியவன் உள் அறையில் சென்று அவளைப் படுக்க வைத்திருந்தான்.

அதே நேரம் ராஜிவ்வின் கைகளில் விலங்கு பூட்டியிருந்தான் சிவா. நடந்ததில் பித்து பிடித்தது போல் நின்றிருந்த மாயாவின் தந்தையை அழைத்து வினோதன் தான் சூழ்நிலையை விளக்கியிருந்தான்.

“சார் நீங்க கவலைப்படாதீங்க, மாயாவுக்கு எதுவும் ஆகல், அவ இப்ப தான் நார்மலா இருக்கா… என் மாயா எப்பயும் இப்படித் தான் இருப்பா, போல்ட்டா, எதுக்கு பயப்படாம…”

“அதில்ல பா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பாரு, அவளுக்கு எதோ பேய் பிடிச்சிருக்குன்னு பேசிட்டு பேறாங்க…”

“சார் நல்லா சொல்லிடப்போறேன் அவன் ஒரு மாப்பிள்ளை, அவங்க சொல்றதெல்லாம் போய் காதுல வாங்கிகிட்டு போங்க சார், என் மாயாவுக்கு அவனெல்லாம் தகுதியே இல்ல…”

வினோதன் பேசுவதையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மது. அவனின் மாயா மீதான உரிமையான பேச்சுக்களைக் கேட்கும் போது காரணமில்லாமல் சற்று பொறாமை கூட எட்டிப் பார்த்தது அவளுக்கு.

மாயாவைப் பற்றி இவனுக்கு என்ன…? என்று முதலில் தோன்றினாலும், இப்படி ஒருவன் நம் மீது பாசம் வைத்தால் எப்படி இருக்கும் ஏடாகூடாமாய் எண்ணம் எட்டிப் பார்த்தது.

அவனின் பந்தா இல்லாத செய்கை, இயல்பான பேச்சு, புன்னகை ஒட்டிய இதழ்கள், அடிக்கடி அவனை கோதச்செய்யும் முன்நெற்றி கேசம் என அவனை இன்ச் இன்சாய் ரசித்துக் கொண்டிருந்தாள் மது.

வினோதன் அப்படி ஒரு ஜீவன் அங்கு இருப்பதாய் கூட கவனித்தது போல் தெரியவில்லை.

வந்தவர்காள் சுவடு தெரியாமல் சென்றிருக்க, ராஜிவ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழலில் சிவாவின் ஜீப்பில் பயணித்துக் கொண்டிருந்தான்.

மாயாவின் துணிவு மீண்டதில் வினோதன் குஷியாய் விடைபெற்றிருக்க, ஏனோ மீண்டும் அவள் தன்னிடம் சண்டையிட மாட்டாளா என்று ஏங்கியது மனம்.

இத்தனையும் இயல்பாகுகையில் அதுவும் நடக்கும் என்றெண்ணி “என்றென்றும் புன்னகை…முடிவிலாப் புன்னகை…”என சீட்டியடித்தபடி அவனின் ஹோண்டாவை கிளப்பியிருந்தான் இருகண்கள் அவனையே பின் தொடர்வது அறியாமல்.

”எவ்வளவு நேரம் தான் நானும் மயக்கம் போட்டது மாதிரியே நடிக்கிறது, யாராச்சும் தண்ணி தெளிச்சு எழுப்புவாங்கன்னு பாத்தா, குடும்பமா இது… கொலகாரப் பாவிங்க… இரக்கம் இருக்குதா பாரு…” என்று திட்டியபடியே சாவுகாசமாக எழுந்து அமர்ந்த மாயாவை வைத்த கண்வாங்காமல் பார்த்து நின்றான் கௌதம்.

போனிடெயிலில் மட்டுமே பார்த்த அவளின் கேசம் சரம் சரமாய் மல்லிகையை சூடியிருந்தது. சல்வாரிலும் குர்தாவிலும் மட்டுமே காட்சியளித்தவள் சரசரக்க பட்டுடுத்தியிருந்தாள்.

இருக்கிறதா இல்லையா என்று தெரியாத செயினும், இன்றும் ஆரமும் அட்டிகையுமாய் மினுமினுக்க, அவளின் ஒற்றைக்கல் மூக்குத்தி கூட இன்று வைரமாய் இருக்குமோ என்று எண்ண வைத்தது.

கலகலக்கும் வளையோசையும், செஞ்சாந்தின் சாரல் தெறித்த உதடுகளும் அவனிடம் என்னவோ பேசத் துடிக்க, இவன் தான் கனவில் நின்றானோ….!

“கௌதம் சார்… கௌதம் சார்…” என்று அவள் அழைத்தது அறியாமல் நின்றவனின் முன் கைகளை அசைத்து அவனை நினைவிற்கு கொண்டு வர முயல, கண் முன் நிகழ்வதெல்லாம் ஸ்லோமோசனில் அவனுக்குத் தெரிய பின்னணியில் “முழுமதி அவளது முகமாகும்…” என்று ரகுமான் இசையில், நா.முத்துக்குமார் வரிகளில் கார்த்திக் பாடிக் கொண்டிருந்தார்.

மாயாவின் குரலும் சைகையும் அசைக்காத கௌதமை, நேகாவின் குரல் திரும்பிப் பார்க்க வைத்தது.

“என்ன கௌதம் எல்லாத்தையும் மறந்திட்டியா… மூர்த்தி எங்க… மூர்த்தி எங்க….” என்ற நேகாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த கௌதமை விலக்கி நேகாவின் முன்னே வந்து நின்றிருந்தாள் மாயா.

Advertisement