Advertisement

 

 

 

 

இருளிலும் பின் தொடரும்…

                          

நிழல் 1

நிசப்தமாய் இருந்த அந்த மிகப்பெரிய அறையில் பூட்ஸ் காலணிகளின் சப்தம் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தது. “டக் டக் டக் “ என்ற ஓசை அவளின் படபடப்பை இன்னும் அதிகமாக்கி வியர்வைத் துளிகளைச் சொட்ட வைத்தது.

மனதின் பயத்தை துளியும் வெளியே காட்டக்கூடாது என்ற வைராக்கியம் மெல்ல மெல்ல கரைந்து கைகளில் நடுக்கமாய் தெரிந்தது. இனியொரு தரம் அந்த நரகத்திற்கு சிக்கிவிடக்கூடாது என்ற தவிப்பில் தான் மறைந்திருந்த அலமாரியில் தன்னை இன்னும் லாவகமாக பொருத்திக் கொண்டாள்.

இறுக்கமாகப் பூட்டியிருந்ததால் அந்த அலமாரி திறக்கப்பட்டிருக்குமோ என்னவோ, லேசாக திறந்திருந்த காரணத்தினால், பரிசோதிக்கப்படாத அந்த அலமாரி அந்த நேரம் மாயாவின் அரணாகியிருந்தது. பூட்டப்பட்ட பெட்டிகளில் மட்டும் தான் புதையல் இருக்குமென்ற மனோநிலை அந்நேரம் அவனுக்கு சொந்தமாய் இருந்ததால் அவள் இன்னும் பத்திரமாக இருக்கிறாள்.

ஆனால் இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கும் காலடி ஓசையில் அவளின் மூளை மரத்து போகத்துவங்கியிருந்தது. என்ன செய்து இங்கிருந்து தப்பிக்க போகிறோம் என்று புரியாமல் நின்றிருந்தாள் அவள். சுற்றிலும் இருள், கால் படும் இடத்திலெல்லாம் துணிகள், தைத்தும் தைக்கப்படாமலும் குவிந்து கிடந்தது.

இருளுக்கு விழிகள் பழகியிருந்தது. ஆங்காங்கே இரும்பு அலமாரிகள், வரிசையாக பொருத்தப்பட்ட தட்டுகள், ஓரத்தில் ஓர் மேசை, சில காகிதங்கள் அதனோடு சில நோட்டுகள், அதனிடுக்கில் பேனா இருந்திருக்கக்கூடும்.

ஆராய்ந்த வகையில் அங்கு தொலைப்பேசி இல்லை என்பது ஊர்ஜிதமாகிவிட்டது. இனி ஆராய வேண்டியது தப்பிக்கும் வழி, இன்னும் எத்தணை நாட்கள் இதில் இருக்க முடியும் என்பது தெரியவில்லை.

அந்த மிகப்பெரிய கம்பெனியின் ஸ்டாக் கோடௌன் சிறையாகி அவள் கைதியாகி இன்றோடு நான்கு நாட்கள் முடியப்போகிறது. வந்த வழி புரியாமல் போகும் வழி தெரியாமல் நெஞ்சம் விம்மிய இரவுகளில் மீண்டும் மீண்டும் தன்னை துரத்தி வந்த அந்த கொடூர முகங்களே மீண்டும் மீண்டும் வந்து போனது அவளுக்கு.

வாழ்வை புரட்டிப் போடும் சம்பவங்கள் சிலரது வாழ்வில் பூ மலர்வதைப் போல உற்றுப் பார்த்துக் கொண்டே இருந்தாலும், மலர்ந்த தருணத்தை சிறைபிடிக்க முடியாது, அது இயல்பாய் நிகழ்ந்துவிடும்.

ஆனால் சிலருக்கோ புயலாய் மாறி புரட்டிப் போட்டு தன் ருத்ர தாண்டவத்தில் கோரமுகத்தைக் காட்டி இப்படித்தான் உன் வாழ்வை மாற்றினேன் என்று ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்டே செல்கிறது.

புயலுக்கு முந்தைய அமைதியான வாழ்வு மாயாவுடையது. சீரான ஓடமாய் வாழ்க்கை செல்வதை எண்ணி எப்போதும் அவளுக்குள் ஒரு மகிழ்ச்சி இருந்தது. அந்த நாள் வரை….

பரந்து விரிந்து தன் கிளைகளால் அந்த சிறு பள்ளியின் பெரும்பகுதி மைதானத்தை அடைத்தபடி நின்றிருந்த வேப்பமரத்தின் வயதை யோசித்தால் அந்த பள்ளியின் தொன்மை விளங்கும்.

அதன் நிழலில் பழங்காலத்து ஓட்டுக்கட்டடம் மூன்று தனித்தனியே நின்றிருந்தது. அதுதான் மொத்த பள்ளியுமே உயரமான ஒரு மாணவன் வந்து அந்த இரும்பு கம்பியால் விடாமல் அந்த பெரிய இரும்பு பட்டையில் அடிக்க, சொல்லவும் வேண்டுமோ அது பிள்ளைகள் வீட்டிற்குச் செல்லும் இறுதி மணி என்று….

பட்டாம்பூச்சிகள் புத்தகங்களோடு வெளியே வந்து கொண்டிருந்தார்கள். சிறுமிகள் சிறுவர்களுமாய் வந்து கொண்டிருக்க, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி என்ற பெயர்பலகை தன் வெளுத்துப்போன எழுத்துக்களோடு கை அசைத்துக் கொண்டிருந்தது.

சிட்டுகளாய் பறக்கும் பிள்ளைகள் ஆங்காங்கே குழுமி நிற்க ஒரு குவியலில் நெல்லிக்காய், ஒரு குவியலில் மாங்காய், அதே போல் சர்க்கரைவள்ளிக்கிழங்கு, குச்சிக்கிழங்கு, தேன்மிட்டாய், சூடமிட்டாய், சீடை என பல பண்டங்கள் அவர்களை நிறுத்தி வைத்திருந்தது.

சற்று நேரத்தில் அத்துணை கூட்டத்தையும் தன் வசமாக்கிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். நீண்ட குச்சியின் முனையில் பொம்மையை வைத்து அதன் கைகள் தாளம் போடும் படி ஆட்டிக்கொண்டே, குச்சியில் கட்டியிருந்த சலங்கைகளை ஆட்டி ஆட்டி அவர் சொன்ன கதையும் அந்த பொம்மையின் வினோத நடனமும், இளஞ்சிவப்பு நிறத்தில் அவர் பாடிக் கொண்டே அங்கிருந்த சிட்டுகளுக்கு கட்டிவிட்டிருந்த மிட்டாய் கடிகாரமும், பெரும் பங்கு ஜவ்மிட்டாய் தீரும் வரை அந்த கூட்டத்தை கலைய விடவில்லை.

ராகத்தோடு அவர் சொன்ன கதை புரிந்ததோ இல்லையோ,

“ஹே என்னோட வாட்ச் தான் நல்லாயிருக்கு…”

“எனக்கு அவர் குடுத்த வாத்து பொம்மைதான் நல்லாயிருக்கு” என்று பேசிக்கொண்டே சென்றார்கள் பிள்ளைகள். வழக்கம் போல் மொத்த கூட்டமும் சிட்டாக பறந்த பின்னே தான் தன் புத்தக மூட்டையோடு வெளியே வந்தாள் அவள்.

முழங்கால் வரையில கருநீல பாவடையும், வெள்ளச்சட்டையும், முழுக்க சாக்பீஸ் துகள்கள் நிறைந்திருந்தது. அவள் ஆசிரியர் தந்த நோட்ஸைப் பார்த்து கரும்பலகையில் எழுதி போட்டுவிட்டு தானும் எழுதாமல் புத்தகங்களை எடுத்து பையில் வைக்காமல், ஆசிரியரிடம் நல்ல பேரை வாங்கிக் கொண்டு, அந்த நோட்ஸையும் சேர்த்து வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள் தன் நோட்டில் எழுதிக் கொள்ள.

எப்போதும் இவளுக்கு வழக்கமானது தான், படிப்பில் படு சுட்டி, ஆசிரியர்களுக்கு செல்ல பிள்ளை, யார் என்ன உதவி கேட்டாலும் தயங்காமல் செய்வாள், மற்ற நேரங்களில் இவளைச் சுற்றிக் கொண்டு திரியும் பிள்ளைகள் வீட்டிற்கு செல்கையில் விட்டு விடுவார்கள்.

கையில் கூடையை ஆட்டிக் கொண்டே வேடிக்கை பார்த்தபடி செல்லும் அவளை இரு கண்கள் விடாமல் பின் தொடர்ந்தது. தினம் தினம் அவள் பள்ளிக்கு சீக்கிரம் வருவதையும், கடைசியாக போவதையும் தினமும் கவனித்து வந்தது.

அந்த கண்களில் இருந்தது என்ன என்பதை அவள் அறியவில்லை. அவள் அதை கவனிக்கக் கூட இல்லை. இதுவே தொடர ஆரம்பித்தது. பள்ளி மைதானத்தை சுற்றிலும் இருந்த கம்பி வேலிகள் வழியே அடுத்திருந்த பிள்ளையார் கோவில் திண்ணையில் அமர்ந்து அவள் விளையாடுவது படிப்பது என அனைத்தையும் கவனிக்க ஆரம்பித்தது.

வெண்முகில் சேர்த்து வடித்த தேவதையென அவள் பள்ளி ஆண்டு விழாவில் தேவதை வேடமேற்று நடித்தாள். அதன் பிறகு வெறும் பார்வையால் அல்லாது, சின்ன சின்ன சப்தங்கள் எழுப்பி அவளை திரும்பி பார்க்க வைத்தான்.

துவக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் அவளுக்கு அதையெல்லாம் கவனிக்கத் தோன்றவில்லை. அடுத்த கட்டமாக அவளின் பெயரை அறிந்து கொண்டு அவள் போகும் போது அழைக்கத்துவங்கினான்.

அன்று தான் முதல் முறை அவனை திரும்பிப் பார்த்தாள், தாடியும் மீசையுமாய் அழுக்கு லுங்கியோடு, வாயில் எதையோ மென்று கொண்டு அமர்ந்திருக்கும் அவனை பார்த்ததும் ஒரு மிரட்சியே அவள் கண்களில் தெரிந்தது. தன்னை கடிக்க வரும் வெறி நாயைப் பார்ப்பது போது பார்த்தாள்.

அன்றிலிருந்து தன்னுடன் தோழிகள் எப்போதுமே இருக்குமாறு பார்த்துக்கொண்டாள். தனியாக செல்வதை தவிர்த்தாள். அவள் எதற்காக பார்க்கிறான் அழைக்கிறான் என்று யோசிக்க தோன்றாமல் அவனைக் கண்டாலே பயந்தாள். அவன் குரூரப் புன்னகையில் அவளின் கை கால்கள் நடுங்கியது.

அவள் பயப்படுவதைக் கண்டவனுக்கு இன்னும் துணிச்சல் வந்தது, சத்தமாக அழைத்தான் கிண்டல் செய்யத் துவங்கினான். பேச்சுக்கு பேச்சு பதில் பேசத் தெரியாத அவளோ செய்வதறியாது திகைத்தாள்.

இந்த பயம் அவளை உறங்கையிலும் இம்சிக்கத் துவங்கியது. திடீர் தீடிரென பயந்து போய் எழுந்தாள், தூக்கத்திலேயே அழுகத்துவங்கினாள். வெளிப்படையில் அவளிடம் எந்த மாறுதல்களும் இல்லையென்றாலும் அவளுக்குள் சொல்லவொண்ணா பயம் ஏன் எதற்கு எதுவும் அந்த பிஞ்சு இதயத்திற்கு தெரியவில்லை.

தன்னால் இயல்பாக இருக்க முடியவில்லை, எதைக் கண்டோ ஏன் பயப்படுகிறோம் என்று யோசித்தபடியே வந்தவள் அப்போது தான் கவனித்தாள் தான் தனியாக வருகிறோம், உடன் யாரும் இல்லை என்பதை, 

மிகத்துணிச்சலாக அவன் எழுந்து அவளை கிண்டல் செய்து கொண்டே முன்னேற, அவள் திரும்பி மீண்டும் பள்ளிக்குள்ளே ஓடினாள். நேரே தலைமை ஆசிரியரின் அறைக்குச் சென்றவளுக்கு சொல்லவும் முடியாமல் மூச்சு வாங்கியது.

சில கோப்புகளை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்த தலைமை ஆசிரியர் அவள் ஓடி வருவதைக் கண்டு, என்னவென எழுந்து வர, “அங்க அங்க” என்று அவன் இருந்த திசையைக்காட்டியபடியே திணற அவள் கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

ஏதோ பிரச்சனை எனப் புரிந்து கொண்டவர் அவனை நோக்கி நாலே எட்டில் சென்று விட,

“என்னடா ஸ்கூலுக்கு முன்னாடி உக்கார்ந்துகிட்ட கலாட்டா பண்ணுறியா தொலச்சிடுவேன், இனி உன்ன நான் இங்க பார்க்கவே கூடாது ஓடிப்போயிடு” என கர்ஜிக்கும் குரலில் மிரட்ட ஓடியே போனான். அத பின் சில மாதங்கள் அவன் அந்தப்பக்கம் வரவே இல்லை.

அவளும் நிம்மதியாக பழைய உற்சாகத்துடன் வலம் வரத்துவங்கினாள்.

தன் பள்ளித்தோழி நேகாவுடன் விளையாட அவள் வீட்டிற்கு சென்றிருந்த போது, அவளின் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றிருந்ததால் சிறுமிகள் இருவரும் என்ன விளையாடலாம் என ஆலோசித்துக் கொண்டிருந்தனர்.

ஸ்கிப்பிங் கயிற்றை தேடிச்சென்ற தோழியை எதிர்பார்த்தபடியே கட்டிலில் அமர்ந்து கால்களை ஆட்டியபடி வாசலை பார்த்துக் கொண்டிருந்தவள் எதிர்பாராத நேரம், குரூரம் தெறிக்கும் கண்களோடு அவன் வந்து நின்றான்.

வாசலை அடைத்து வந்து நின்றவன், என்னடி அந்த ஹெச் எம் மிரட்டுனா நாங்க பயந்துருவோமா…. என்ற படி அவளை நெருங்க வீடு முழுக்க ஓடினாள் அவள் தப்பிக்க, அந்த பெரிய மரக்கதவை திறக்க முயல அதற்குள் அவன் அவளை நெருங்கியிருந்தான்.

நெருங்கியவனின் நோக்கம் புரியவில்லை ஆனாலும் பயம் பயம் பயம் ஒன்றை சொல்லே அவளை உச்ச ஸ்துதியில் கதற வைத்தது, கயிற்றைத்தேடிச் சென்ற தோழியும் வந்துவிட, எங்கிருந்தோ வந்த தைரியத்தில் கையில் கிடைத்த கட்டையால் அவனை தாக்கிவிட்டு ஓடத்துவங்கினாள்.

மூச்சு வாங்க வாங்க, யாரோ தன்னை அணைத்து ஒன்றுமில்லை ஒன்றுமில்லை பயப்படாதே எனச் சொல்ல நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவள் அன்னை தெரிந்தாள்.

“எங்க போய் என்னத்த பார்த்து பயந்தாளோ, இப்படி தினம் தூக்கத்தில கத்திகிட்டு இருக்கா, என்ன ஏதுன்னு தெரியலை”

நேகா வீட்டில் நடந்ததை அன்னையிடம் சொல்லாமா வேண்டாமா எனத் தெரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்தாள் மாயா.

மாயாவுக்கு பதின் வயது கடந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. தன் பால்ய பருவத்தில் தன்னைத் தாக்கிய அந்த பயத்திற்கு இவ்வளவு வீரியம் இருக்குமென்று அவள் எண்ணவில்லை.

ஆனால் இத்தனை தூரம் தன்னை பாதித்த ஒரு சம்பவம் தன் தோழியின் உயிரைக் குடித்ததை அவள் மறக்கவில்லை.

அன்று அந்த கொடிய மிருகத்தை கையில் கிடைத்த கட்டையால் தாக்கிவிட்டு வந்தவளுக்கு உள்ளூர இருந்த பயத்தில் அங்கிருந்த அவள் தோழி நேகாவின் நிலை ஏனோ ஞாபகத்திற்கு வராமலே போனது.

அடுத்த நாள் காலை நேகா உயிரோடு இல்லை என்ற செய்தி வரும் வரை….

அதிலும் அவள் இறந்ததற்கான காரணம் மர்மமாகிப் போனதும், போலீஸ் கேஸ், பிரேத பரிசோதனை என நேகாவின் இறுதிச்சடங்குகள் நடைபெற நான்கு நாட்கள் பிடித்தது.

அதன் பின் மாயாவிற்கு பிடித்த அந்த மர்ம பயம் இன்று வரை தொடர்கிறது.

தன் தோழிக்கு என்னவாகியிருக்கும் என்று அந்த வயதில் கணிக்க முடியாவிட்டாலும் அவளின் இழப்பிற்கு காரணம் அந்த குரூர மிருகம் தான் என்பது மிகத் தெளிவாய் அவளுக்கு தெரிந்திருந்தது.

அதிலிருந்து ஆண்களைக் கண்டாலே, அவன் முகம் தான் அதில் பிரதிபலித்தது. அதிலும் அவர்களின் சிரிப்பு குரூரமாய்த் தெரிந்தது.

தனக்குள்ளே நத்தையாய் சுருண்டு கொள்ளத் துவங்கினாள் மாயா.

தூக்கத்தில் மிரண்டு போய் அழுவதும், பகலானாலும் தனியாக இருக்க பயப்படுவதும், அவளைச் சுற்றி இருப்போரையும் சேர்த்தே மிரள வைத்தது.

சரியாக நேகா இறந்து ஒரு வருடம் கழித்து ஒரு நாள்,….

பட்டாம்பூச்சியாய் பறந்து கொண்டிருந்தவள் நத்தை கூட்டில் அடைந்து ஒரு வருடம் முடிந்திருந்தது.

படிப்பு இயல்பாகவே வந்துவிட்டாலும், முன் போல அனைவருடனும் கலகலத்தபடி திரியும் அவள் குணம் மறைந்து போயிருந்தது.

அன்று சுற்றுச்சூழல் பாதுகாப்புவிழா பேரணி நடத்த அவள் பள்ளி திட்டமிட்டிருந்தது. ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பே பெரிய படிப்பு, அதிலும் எப்போதும் எதிலும் முன்னிருத்தப்படும் மாயாவே, அந்த பேரணியிலும் முன் நின்றாள்.

ஊரைச் சுற்றிவர, கையில் இயற்கையான சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரி பதாகைகள் ஏந்திய பூஞ்சிட்டுகள் வரிசை கட்டி நின்றது.

செல்லும் பாதையை முன்னே சென்ற தலைமைஆசிரியர் காட்ட, பல நாட்களுக்கு பின் தைரியமாக யார் கையையும் பிடிக்காமல் சுதந்திரமாக நடக்கத்துவங்கினாள் மாயா.

ஒரு சிறு வட்டத்திற்குள் சுற்றி வந்த மாயாவிற்கு அன்று சென்ற இடங்கள் புதுமையாகவே இருந்தது.

அதிலும் சாலையோரத்தில் இருந்த அந்த ஒற்றைக் கல்லறை. நேகாவின் அம்மா அந்த கல்லறையில் விளக்கேற்றி விட்டுச் சென்று கொண்டிருந்தார். அதைக் கண்ட போது தான் மாயாவிற்கு தெரிந்தது அது நேகா உறக்கமில்லாமல் உறங்கவைக்கப்பட்ட இடம் என்று.

கண்களை விலக்காமல் அதை பார்த்தபடியே நின்றுவிட்டாள். பேரணி சென்று கொண்டே இருந்தது. மிக நீண்ட அந்த பேரணியின் இறுதியில் வந்து கொண்டிருந்த ஆசிரியர் பார்க்கும் வரை யார் அழைத்தும் அவள் காதில் விழவில்லை.

”உன்னால தான் நான் இங்க இருக்கேன் மாயா” நேகாவின் குரல் அவளுக்கு மட்டும் கேட்டது. அங்கிருந்த மரங்கள் வேகமாக அசைத்துவங்கியது பலத்த காற்றுடன் புழுதிச் சுழல் கிளம்ப உச்சி நேரத்தை அடைந்திருந்தான் சூரியன்.

“இல்லை இல்லை நான் இல்லை, நான் எதுவுமே பண்ணலை, ”

“உன்னை நான் விடமாட்டேன் மாயா” அரூபமாய் வந்த குரலில் இருந்த உக்கிரம் கோபம் மாயாவை மிரண்டு போய் மயங்கச் செய்தது.

அங்கிருந்த ஆசிரியர்கள் அவளின் விநோத போக்கையும், பயத்தையும் கண்டு மனதளவில் அவள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறாள் என்று அவளை வீட்டில் சென்று ஒப்படைத்தனர்.

மகளின் இந்த நிலையைக் கண்டு மிகவும் நொந்து போயிருந்தார் அவளின் தாயான கற்பகம். கணவன் வந்ததும் அவரிடம் சொல்லி இந்த ஊரை விட்டே போக முடிவு செய்யவேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

மருத்துவமனையில் போட்டிருந்த ஊசிமருந்தின் விளைவில் மாயா நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும், அவளை விட்டு விட்டு சென்று ஊருக்கு செல்ல ஆயத்தமாய் அனைத்தையும் எடுத்து வைக்கத் துவங்கினார்.

ஆனால் மாயாவை ஊருக்கு செல்ல விடக்கூடாது என அவள் அறையின் சன்னல் அருகே குரூரக்கண்களோடு காத்திருந்தாள் நேகா.

அடுத்த சில நொடிகளில் சன்னலில் கதவுகள் மிக பயங்கரமாய் அடித்துக் கொண்டது. அந்த கண்ணாடி ஜன்னல் நொருங்கும் அளவிற்கு சட்டென காற்று வீசுமென அந்த காலனேரத்தில் யாரும் எதிர் பார்க்க முடியாது.

ஆனால் அது நிகழ்ந்தது. மிக ஆக்ரோஷமாய் நிகழ்ந்தது. ஜன்னலில் கண்ணாடிகள் உடைந்து தெரித்து மாயாவின் மேல் விழுந்து அவள் குருதி வாசம் காற்றில் கலக்கும் வரை  அது நிகழ்ந்தது.

உறக்கத்தில் இருந்த மாயாவோ வீரிட்டு எழுந்தாள், ஆனால் அந்த சத்தம் ஏனோ அறை வாசலில் இருந்த அவள் அம்மாவிற்கு கேட்கவே இல்லை.

பதற்றத்தில் இதயத்தில் ஓட்டம் மிக அதிகமாக இருக்கவே கண்ணாடி கிழித்த இடங்களில் நிற்காமல் இரத்தம் வந்து கொண்டே இருந்தது.

மாலைநேரத்தில் இருள் கவியத்துவங்கியிருந்த சமயத்தில் அவளின் அலறல் பன்மடங்கானது.

”நான் என்னவெல்லாம் அனுபவிச்சு செத்தேன்னு தெரியுமா மாயா தெரிஞ்சுக்கோ” என்ற அந்த குரலின் முடிவின் அறையின் ஜன்னல் கதவுகள் அனைத்திலும் இருந்து குரூரச்சிரிப்புடன் அந்த தாடிக்காரன் வந்தான். கண்களை மூடிக்கொண்டு அவள்

”வேண்டா நேகா வேண்டா “ என்று அலற அந்த அரக்கன் இன்னும் அவளருகில் வந்தான், கறைபடிந்த பற்களும் இரத்தச்சிவப்பாய் கண்களும், தலையில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை துடைக்காமல் அவள் முகத்தை மூடியிருந்த கைகளை பிடித்து இழுத்தபடி கோரமான கர்ஜனையில் அவள் முடியை இழுத்து பிய்க்கத்துவங்கினான்.

அறை முழுக்க இரத்தச் சிதறல்கள் கண்ணாடித்துகள்கள் பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஜன்னல் வழியே வெளியே மிதந்தபடி சென்று கொண்டிருந்தாள் நேகா இருளை பின் தொடர்ந்தபடி….

 

Advertisement