அவள் அழுகை கூட சட்டென்று நின்று விட்டது. “எது பார்த்திபனா? இதைப் பற்றி தான் அவனும் பேச வந்தானா? ஐயோ மங்கை சொதப்பி வச்சிட்டியே டி”, என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.
சந்திரன் அங்கே இருந்து எழ பார்க்க “அப்பா ஒரு நிமிஷம்”, என்றாள்.
“என்ன டா?”
“பார்த்தியா எனக்கு பாத்துருக்குற மாப்பிள்ளை?”, என்று சிறு கூச்சம் மற்றும் சங்கடத்துடன் கேட்க அவளையும் அவளது முகத்தில் இருந்த உணர்வுகளையும் பார்த்தவருக்கு அவள் மனது தெளிவாக புரிந்து போனது.
ஆனாலும் அதை வெளியே தெரியாமல் மறைத்தவர் “ஆமா மா, அதான் உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டியே. நான் சேது கிட்ட சொல்லிறேன்”, என்றார்.
தடுமாற்றமாக அவரைப் பார்த்தவள் இதற்கு மேல் வாயை மூடிக் கொண்டிருந்தால் முதலுக்கே மோசமாகி விடும். காதலில் என்ன கௌரவம் என்று எண்ணி “பார்த்தின்னு தெரிஞ்சிருந்தா உடனே சரின்னு சொல்லிருப்பேன் பா”, என்றாள் வெட்கத்துடன்.
அதைக் கேட்டு பெற்றவர்கள் முகம் மலர்ந்து போனது. “அட கழுதை அந்த பையனை நினைச்சிட்டு தான் இப்படி அழுதியா?”, என்று கேட்டார் சந்திரன். “திருட்டு கழுதை, இன்னும் எத்தனை விஷயத்தை மறைச்சிருக்க?”, என்று சிறு கோபமாக கேட்டாலும் கோமளம் முகத்திலும் புன்னகை தான்.
“சாரி மா, சாரி பா. நான் எந்த தப்பும் பண்ணலை. ஆனா பார்த்தியை பிடிக்கும் தான். வேற எதுவும் பேசினது இல்லை. அவங்களும் அப்படி தான். இப்ப டக்குன்னு கல்யாணம்னு சொன்னதும் அந்த இடத்துல அவங்களைத் தவிர வேற யாரையும் நினைக்க முடியலை பா”
“உன்னை நாங்க தப்பா நினைப்போமா மங்கை? உன் சந்தோஷம் தான் டா எங்களுக்கு முக்கியம். நீ வேற ஏதோ ஒரு பையனை விரும்பிருந்தா கூட நாங்க சம்மதிச்சிருப்போம்”, என்றார் சந்திரன்.
“தேங்க்ஸ் பா”, என்றவள் சந்தோஷமாக தந்தை தோளில் சாய்ந்து கொண்டாள்.
“பார்த்தி இன்னைல இருந்து கார் டிரைவிங் கிளாஸ் வராங்க பா. என் கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னாங்க”
“கல்யாண விஷயமா சேது ஏதாவது சொல்லிருப்பார். அதனாலயா தான் இருக்கும். மாப்பிள்ளை கிட்ட கவனமா பேசு. சரி நீ பாத்து கிளம்பு மா”, என்று சொல்ல அவள் எழுந்து கொண்டாள்.
“அந்த கனகா ஒரு விஷக் கிருமி டி. என்ன தான் கல்யாணம் பண்ணப் போறீங்கன்னாலும் வெளிய போகும் போது கொஞ்சம் கவனமா இருங்க. எப்ப எப்படி பேசுவான்னு தெரியாது”, என்று ஒரு அன்னையாக எச்சரித்தாள் கோமளம்.
“சரி மா, கவனமா இருக்கேன். கிளம்புறேன். வரேன் பா”, என்று சொல்லி விட்டு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
போகும் போது அவள் மனம் உல்லாசமாக இருந்தது. “என்ன பேசுவான்? எப்படி பேசுவான்? கல்யாணத்துல உனக்கு சம்மதமான்னு கேப்பானோ? லவ் பன்றேன்னு சொல்வானோ?”, என்று பல கேள்விகள் அவள் மனதில் எழுந்தது. இந்த திருமணம் வேண்டாம் என்று மட்டும் அவன் சொல்ல மாட்டான் என்று அவளுக்கு தெரியும். ஏனென்றால் அவன் பார்வையில் இருந்த காதல் அவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்தது.
அலுவலகம் சென்றவள் தன்னுடைய அறையில் அமர்ந்து கனவில் ஆழ்ந்தாள். அவனுக்கு எப்படி டிரைவிங் சொல்லிக் கொடுக்கப் போகிறோம் என்று பதட்டமும் வந்தது. தன்னுடைய காதலையே அவள் சரியாக உணராத போதும் கடவுள் அவர்களை இவ்வளவு விரைவில் சேர்த்து வைத்ததை எண்ணி அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
சரியாக பதினொரு மணிக்கு எல்லாம் பார்த்திபன் அங்கே வந்து விட்டான். அவனை வரவேற்று அமர வைத்தவளுக்கு மெல்லிய பதட்டம். அவனோ அவளிடம் என்ன பேசுவது எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் இருந்தான்.
தான் எப்படி அவளிடம் பேச்சை ஆரம்பிப்பது அதற்கு அவளது எதிர் வினை எப்படி இருக்கும் என்று அவனுக்குள் ஆயிரம் கேள்விகள். அவன் சந்தோஷமாக தன்னிடம் காதலைச் சொல்லி திருமணம் பற்றி பேசுவான் என்று எதிர்பார்த்து அவள் அவனைப் பார்க்க அவன் முகமோ இருள் அடைந்து இருப்பது போல இருந்தது.
“இவங்க என்ன இப்படி இருக்காங்க? முகத்துல ஒரு சந்தோஷமே இல்லையே? ஒரு வேளை இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல வந்துருக்காங்களோ? நான் தான் தப்பா நினைச்சிட்டேனோ? அவங்க மனசுல வேற பொண்ணு இருக்கோ? ஏன் அவங்க அத்தை பொண்ணுங்களை கூட அவங்க விரும்பலாமே? இது தெரியாம அவசரப் பட்டு வீட்ல வேற என் மனசை சொல்லிட்டேனே?”, என்று எண்ணி சோர்ந்து போனாள்.
வந்து ஐந்து நிமிடங்கள் ஆன போதும் அவன் பேசுவது போல இல்லை என்றதும் கொஞ்சம் திக்கென்று இருந்தாலும் “பார்த்தி”, என்று அழைத்தாள்.
“இல்ல நாம காருக்கு போகலாம். இங்க எனக்கு ஒரு மாதிரி மூச்சு முட்டுற மாதிரி இருக்குது”, என்று சொல்ல நிச்சயம் தான் கஷ்டப் படும் விதமாக ஏதோ சொல்ல போகிறான் என்று அவள் மனதுக்கு பட்டது.
“கடவுளே இவன் எனக்கு இல்லை என்ற நிலை வந்தால் அதை தாங்க கூடிய சக்தியைக் கொடு”, என்று வேண்டிக் கொண்டு கார் கீயை எடுத்தவள் அவனை அழைத்துக் கொண்டு சென்றாள்.
அவர்கள் கார் பழக போவது அங்கே இருக்கும் கிரவுண்டுக்கு தான். அங்கே தான் எந்த தொந்தரவும் இருக்காது என்பதால் நேரடியாக அங்கே காரை நிறுத்தினாள். மதிய வெயில் அடித்தாலும் சுற்றி இருந்த மரங்களால் அந்த இடம் கொஞ்சம் பசுமையாக குளிர்ச்சியாக தான் இருந்தது. ஆனால் அதற்கு மாறாக இருவர் மனதும் பதட்டத்தில் தான் இருந்தது.
அங்கே சென்ற பிறகும் அவன் அமைதியாக இருக்க “பார்த்தி இப்படியே அமைதியா எவ்வளவு நேரம் இருப்பீங்க? என்ன விஷயம் சொல்லுங்க”, என்றாள்.
“அது அது வந்து…”, என்று அவன் சொல்ல தயங்க அவளுக்கு தெளிவாக புரிந்தது. அதை மறுக்க தான் வந்திருக்கிறான் என்று எண்ணி அவள் உள்ளம் சோர்ந்து போனது.
“என்னவா இருந்தாலும் , சொல்லுங்க பார்த்தி”
“எனக்கு எங்க வீட்ல கல்யாணம் பேசுறாங்க மங்கை”, என்று சொல்லி விட்டு அவள் முகத்தையே பார்த்தான்.
அவள் முகத்தில் அதிர்ச்சி திகைப்பு என்ற உணர்வை எதிர்பார்த்து அவன் பார்க்க அவளோ இது தான் எனக்கு தெரியுமே என்று சாதாரண பார்வை பார்த்தாள்.
“என்ன இவ ஷாக் ஆகல? அப்ப எனக்கு கல்யாணம் ஆனா இவளுக்கு கவலையே இல்லையா? ஒரு அதிர்ச்சி கூட ஆகலையே?”, என்று எண்ணினான்.
“அதுக்கு என்ன பார்த்தி?”, என்று வேறு அவள் கேட்க “எனக்கு கல்யாணம்னு சொல்றேன். நீ என்ன அமைதியா இருக்க?”, என்று குழப்பத்துடன் கேட்டான்.
“இதுல நான் என்ன சொல்லணும் பார்த்தி?”
“என்ன சொல்லணுமா? எனக்கு கல்யாணம்னா உனக்கு ஒண்ணுமே இல்லையா மங்கை?”
“இல்லை எனக்கு புரியலை. என்ன சொல்ல வரீங்க நீங்க?”
“இன்னுமா உனக்கு என் மனசு புரியலை மங்கை? என்னால வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாது. என் மனசுல நீ மட்டும் தான் இருக்க. எங்க அப்பா வேற பொண்ணை எனக்கு பாத்துருக்கார். நீ உன் மனசுல இருக்குறதைச் சொல்லு. அப்புறமா நான் அப்பா கிட்ட பேசிக்கிறேன்”, என்றவன் சொல்லிக் கொண்டே போக இப்போது திகைத்து அவனைப் பார்த்தாள்.
யார் பெண் என்று அவனுக்கு தெரிய வில்லை என்று புரிய கூடவே அவன் மனதையும் அறிந்ததும் மங்கைக்குள் அவ்வளவு சந்தோஷம்.
“அடபாவி நான் தான் பொண்ணுன்னு தெரியாமலே புரோபோஸ் பண்ணிட்டு இருக்கியா?”, என்று எண்ணிக் கொண்டு “சாரி பார்த்தி, உங்க கல்யாணத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? உங்க மனசுல நான் இருக்கலாம். ஆனா எனக்கு அப்படி ஒரு எண்ணம் கூட இல்லை”, என்றவள் உள்ளூக்குள் சிரித்தாள்.
அதைக் கேட்டு அவன் முகம் சோர்ந்து போனது. “உண்மையிலே உன் மனசுல நான் இல்லையா மங்கை?”
“ஜாலியா பேசினதுனால நீங்க என்னை தப்பா நினைச்சிட்டீங்க போல?”
“ஓஹோ”
“ஆமா, சரி கிளாஸ் ஸ்டார்ட் பண்ணலாமா? முதல்ல உங்க டூவீலர் லைசென்ஸ் ஆதார்கார்ட் ஜெராக்ஸ் எல்லாம் கேட்டேனே? கொண்டு வந்தீங்களா?”
“ம்ம்”, என்று முணுமுணுத்தவன் அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கிப் பார்த்தவளுக்கு நாளை தான் அவனது பிறந்த நாள் என்று வேறு தெரிய வர நாளையே அவன் உண்மையை தெரிந்து கொள்ளட்டும் என்று முடிவு எடுத்தாள்.