பார்த்திபனோ உணவு உண்ணக் கூட மனதில்லாமல் அமர்ந்திருந்தான்.

கடந்த இரண்டு நாட்களாக தான் அவன் மங்கை மீதிருக்கும் அன்பையே உணர்ந்திருக்கிறான். அவனுக்குள் இருப்பது காதல் என்று கூட அவன் இன்னும் தெளிவு பெற வில்லை. ஆனாலும் அவளை அல்லாமல் வேறு பெண்ணைத் தந்தை பார்த்திருக்கிறார் என்று எண்ணி அவனுக்கு மனது பாரமாக இருந்தது.

ஆக மொத்தத்தில் எனக்கு எந்த நல்லதுமே நடக்காது போல? இனி எப்படி தந்தையிடம் பேச முடியும்? அதுவும் மங்கை தான் வேண்டும் என்று எப்படி சொல்ல முடியும்? இப்போது அவரிடம் எதுவென்றாலும் பேசலாம் என்றாலும் மங்கை மனது புரியாமல் அவன் எப்படி அதைச் சொல்வான்?

கூடவே அவளுக்கு எப்படி தன்னை பிடிக்கும் என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது அவனுக்கு. தனக்கே அவள் தான் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறாள். தனக்காகவும் கயலுக்காகவும் அன்று தந்தையிடம் பேசியதும் அவள் தானே? தன்னை அவள் ஒரு பயந்தவனாக தானே நினைத்திருப்பாள்? என்னை எல்லாம் அவளுக்கு எப்படி பிடிக்கும்? என்று எண்ணிக் கொண்டான். ஆனாலும் அவனைக் காணும் போது அவள் முகத்தில் வரும் வெட்கமும் அவனுக்கு சிறு குழப்பத்தை தான் கொடுத்தது.

அவள் நினைவிலே உணவை அரை குறையாக முடித்தவன் எல்லாம் எடுத்து வைத்து விட்டு அறைக்கு வந்தான். தூக்கம் வருவேனா என்று அடம் பிடித்தது. மங்கை மனதில் தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரிந்த பிறகு தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என்று புரிந்தது.

நாளை அவளிடம் காதலைச் சொல்லலாமா? சொன்னால் ஏற்றுக் கொள்வாளா? எப்படிச் சொல்வது? உனக்கு உதவி செய்ததற்கு நல்ல கைமாறு செய்து விட்டாய் என்று திட்டுவாளோ என்றும் பயமாக இருந்தது.

ஆனால் அவள் பார்வை சிறிது நம்பிக்கை விதையை அவனுக்குள் தூவி இருந்தது. அதனால் அவளிடம் நாளை மனதில் இருப்பதைக் கூறி விட வேண்டும் என்று முடிவு எடுத்த பிறகு தான் தூக்கம் அவன் அருகே வந்தது.

அடுத்த நாள் காலை அனைவருக்கும் சாதாரணமாக விடிய பார்த்திபனுக்கு மட்டும் கொஞ்சம் சோர்வாக தான் இருந்தது. நிறைய விஷயங்கள் அவன் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.

புது வேலை, டிரைவிங் கிளாஸ் செல்லப் போவது, அதனுடன் திருமண விஷயம், மங்கை மீதான காதல் எல்லாம் சேர்ந்து வெகுவாக குழம்பி இருந்தான்.

அப்போது அவனுக்கு அழைத்தாள் மங்கை. ஏனோ அவள் அழைத்ததும் அவன் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல மலர்ந்தது.

அதை எடுத்தவன் “சொல்லு மங்கை”, என்றான்.

“இன்னைக்கு டிரைவிங் கிளாஸ் வரீங்க தானே?”, என்று கேட்டாள்.

“நீ டைமிங் சொல்லவே இல்லையே?”

“ஓ ஆமால்ல? ஒரு மணி நேரம் கிளாஸ் இருக்கும். நீங்க வேலைக்கு போன அப்புறம் நைட் ஒன்பது மணில இருந்து பத்து மணி வரை கிளாஸ் இருக்கும். ஓகே வா? அந்த டைம்க்கு இன்னொருத்தங்களுக்கு தான் எடுத்துட்டு இருந்தேன். இப்ப அவங்க மார்னிங் வரேனு சொல்லிட்டாங்க”

“எனக்கு ஓகே தான். அப்படியே நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா வீட்டுக்கு வந்துரலாம்?”

“யார் நீங்க தானே? அன்னைக்கு கூப்பிட்டதுக்கு நீங்க வர மாட்டேனு சொல்லி நடந்து தானே வந்தீங்க?”

“உன் கூட வரது எனக்கு கசக்குமா என்ன? உன்னை யாரும் ஏதாவது சொல்லிற கூடாதுல்ல? அதான் வேண்டாம்னு சொன்னேன்”, என்று சொல்ல தனக்கான அவன் அக்கறையில் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.

அடுத்து என்ன பேச என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க “மங்கை”, என்றான்.

“ம்ம்”

“உன் கிட்ட ஒரு விஷயம் பேசணும்”

“சொல்லுங்க”

“இல்லை நேர்ல தான் பேசணும். நைட் தான் உன்னை பாக்க முடியுமா?”, என்று கேட்க என்ன பேச போகிறான் என்ற குழப்பம் வந்தாலும் “பதினொரு மணிக்கு எனக்கு கிளாஸ் இல்லை. அப்ப வரீங்களா? டிரைவீங்க கிளாஸ் ஸ்டார்ட் பண்ண மாதிரியும் ஆச்சு. நீங்க பேச வந்ததையும் பேசிறலாம்? ஆனா அப்படி என்ன பேச போறீங்க?”, என்று கேட்டாள். அவளுக்கு உள்ளுக்குள் சிறு தடுமாற்றம்.

“அதை போன்ல சொல்ல முடியாது. நேர்லயே சொல்றேன்”, என்று அவன் சொல்ல அரை மனதாக சரி என்று சொல்லி போனை வைத்து விட்டு அறையை விட்டு வெளியே வர அங்கே அமர்ந்திருந்தார் தந்தை.

ஏனோ தந்தையை பார்த்ததும் சிறு குற்ற உணர்வு அவளுக்கு. இது வரை அவரிடமோ தாயிடமோ அவள் எதுவுமே மறைத்தது இல்லை. இன்று மறைத்தது மட்டும் அல்லாமல் அது அவர்களுக்கு தெரிந்தது வேறு சங்கடத்தை கொடுத்தது.

கூடவே மணி பத்து ஆகி இருக்க இன்று தந்தை வேலைக்குச் செல்ல வில்லையா என்ற குழப்பமும் வந்தது.

தன்னை சமாளித்துக் கொண்டவள் அவர் அருகில் சென்று அமர்ந்த படி “அப்பா நீங்க ஆபீஸ் போகலையா?”, என்று கேட்டாள்.

“இல்லை மா, ஒரு மணி நேரம் பர்மிஷன் போட்டுருக்கேன். பதினொரு மணிக்கு போகணும்”

“ஏன்  பா? உடம்பு ஏதும் சரி இல்லையா?”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை மா. உன் கிட்ட கொஞ்சம் பேசணும், அதான்”, என்று சொல்ல திக்கென்று இருந்தாலும் “என்னப்பா?”, என்று கேட்டாள்.

“முதல்ல சாப்பிடு மா, அப்புறம் பேசலாம்”, என்றவர் “கோமு மங்கைக்கு டிபன் கொண்டு வா”, என்று சொல்ல அங்கே வந்த கோமளம் சந்தோஷமாக மகளுக்கு காலை உணவை பரிமாறினார்.

இருவரின் முகத்தில் இருந்த ஆர்வத்தைக் கண்டவளுக்கு சிறு குழப்பம் வந்தாலும் எதையோ யோசித்த படி உணவை உண்ண ஆரம்பித்ததாள். அவள் உண்ணும் போதே தாயும் தந்தையும் ஏதோ கண்ணால் பேசிக் கொள்வது போல அவளுக்கு பட்டது.

உணவை உண்டு விட்டு தட்டை சிங்கிள் போட்டு கை கழுவியவள் தந்தை எதிரே வந்து அமர்ந்த படி தந்தையைப் பார்த்தாள்.

கோமளமும் அவர்கள் அருகே வந்து அமர்ந்தாள். மங்கைக்கு தாயும் தந்தையும் தன்னையே பார்த்த படி இருக்க அப்போது தான் மங்கைக்கு பதட்டமும் பயமும் வந்தது.

“ஒரு வேளை பார்த்தி பத்தி பேச போறாங்களோ? அப்படினாலும் அதுல பேச என்ன இருக்கு? எதுக்கு வேலை வாங்கிக் கொடுத்தன்னு கேப்பாங்களோ? சே சே அப்படி எல்லாம் கேக்க மாட்டாங்க. வேற என்னவா இருக்கும்?”, என்று அவள் கற்பனை எங்கெங்கோ செல்ல அதற்குள் சந்திரனே பேச்சை ஆரம்பித்தார்.

“மங்கை உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு நானும் அம்மாவும் முடிவு பண்ணியிருக்கோம்”, என்று சொல்ல அதிர்ந்து அவர்களைப் பார்த்தாள், ஏனோ தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

இவ்வளவு நாள் எப்படியோ இப்போது அவள் மனம் முழுவதும் பார்த்திபனே நிறைந்திருக்க அவளால் இதற்கு எப்படி எதிர் வினை புரிவது என்று கூட தெரிய வில்லை.

“என்ன டா பாப்பா அமைதியா இருக்க?”, என்று கேட்டார் சந்திரன்.

“திடீர்னு இப்படிச் சொன்னதும் ஒரு மாதிரி அதிர்ச்சி ஆகிருச்சு பா. எதுக்கு அப்படிச் சொன்னீங்க?”

“நல்ல வரன் வந்திருக்கு டா”, என்று அவர் சொல்ல அது யார் என்ன என்று விவரம் கூட கேட்காமல் “எனக்கு வேண்டாம் பா”, என்றாள் முடிவாக.

“யாரு என்னன்னு கூட கேக்கலையே மா?”

“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்”, என்று சொல்ல பெரியவர்கள் முகத்தில் குழப்பம் சூழ்ந்தது.

“உனக்கு என்ன பைத்தியமா டி? அப்பா சொல்ல வரதைக் கூட முழுசா கேக்காம வேண்டாம்னு சொல்ற?”, என்று கோமளம் கேட்க மனைவியை அடக்கிய சந்திரன் “சரி எப்ப பண்ணிக்கணும்னு சொல்லு. இப்ப நிச்சயம் மட்டும் வச்சிக்கலாம். அப்புறம் ரெண்டு இல்லை மூணு வருஷம் கழிச்சு கூட கல்யாணம் வச்சிக்கலாம்”, என்றார்.

தந்தை அவ்வளவு உறுதியாக சொல்ல அவளுக்கு வியப்பாக இருந்தது. இது வரை அவள் எப்படி அவர் சொன்னதை தட்டாமல் செய்வாளோ அது போல அவளுக்கு பிடிக்க வில்லை என்றால் அவருமே கட்டாயப் படுத்த மாட்டார். ஆனால் இன்று பிடிவாதமாக சொல்ல அவளுக்கு குழப்பம் தான்.

“அவ்வளவு நாள் யாரு வெயிட் பண்ணுவாங்க பா? அதெல்லாம் வேண்டாம்”

“நான் பாத்திருக்க மாப்பிளை வெயிட் பண்ணுவாங்க. நீ அதெல்லாம் கவலை பட வேண்டாம் மா. நிச்சயத்துக்கு மட்டும் சம்மதம் சொல்லு”

“அப்பா வேண்டாம் பா”, என்று சொன்னவளின் கண்களால் லேசாக கலங்கிப் போனது.

“என் பொண்ணு என் பேச்சை தட்ட மாட்டான்னு சொல்லிட்டு வந்துருக்கேன் பாப்பா”

“நீங்க என்ன சொன்னாலும் கேக்குறேன் பா. இது மட்டும் வேண்டாம்”, என்றவள் அழுதே விட பெரியவர்களுக்கு திக்கென்று இருந்தது. மங்கை அழுவதும் அவர்களுக்கு புதிராக தான் இருந்தது.

“ஏய் என்ன டி அழுற? கல்யாணம் பத்தி தானே பேசுறோம்?”, என்று பதறிய படியே கேட்டாள் கோமளம்.

“வேண்டாம் மா, பிளீஸ் மா”, என்று அவள் கண்களில் நீருடன் கெஞ்ச கோமளம் எதுவோ சொல்லப் போக “விடு கோமு. அவ தான் சொல்லிட்டாளே. விட்டுரு”, என்றவர் மகள் புறம் திரும்பி “உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியலை. அன்னைக்கு நாங்க வேண்டாம்னு சொல்லியும் பார்த்தி தம்பிக்காக அவங்க வீட்ல பேச போனல்ல? அதனால அந்த கனகா உன்னையும் பார்த்தியையும் பத்தி ஊருக்குள்ள தப்பா பேசிக்கிட்டு இருக்கு. அதான் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிறலாம்னு பேசினோம். அவங்க வீட்லயும் சம்மதிச்சிட்டாங்க. ஆனா உனக்கு வேண்டாம்னா விட்டுறலாம் டா. நீ கஷ்டப் படாதே”, என்று சொல்லி முடிக்க கண்கள் தெறித்து விடும் அளவுக்கு அதிர்ந்து பார்த்தாள் மங்கை.