வீட்டில் மாட்டிக் கொண்ட உடன் அவர்களை எதிர்க் கொள்ள மங்கைக்கு அவ்வளவு தயக்கமாக இருந்தது. அதனால் தந்தை தூங்க போ என்று சொன்னது தான் தாமதம் உடனே உள்ளே சென்று விட்டாள்.
அவள் சென்றதும் சந்திரன் யோசனையில் இருக்க “எனக்கு நிஜமா இவ்வளவு நடந்துருக்கும்னு தெரியாதுங்க. மங்கையும் என் கிட்ட ஒன்னும் சொல்லலை”, என்றாள் கோமளம்.
மனைவியிடம் எப்படி இந்த விஷயத்தைப் பற்றி ஆரம்பிக்க என்று தடுமாறிய படி இருந்தார் சந்திரன். அதற்கு அவசியமே இல்லை என்பது போல இருந்தது கோமளத்தின் அடுத்த பேச்சு.
“பார்த்திபன் நல்ல பையங்க. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ? இப்ப நல்ல வேலை வேற அவனுக்கு கிடைச்சிருச்சு. அந்த பையன் நம்ம மங்கைக்கு பொருத்தமாக தான் இருப்பான். ஜோடிப் பொருத்தம் கூட அவ்வளவு அழகா இருக்கும். ஆனா யாருக்கு யாருன்னு நாமளா முடிவு பண்ண முடியும்?”, என்று சொல்லி பெருமூச்சு விட மனைவியை அதிர்ந்து போய் பார்த்தார் சந்திரன். தன்னுடைய மனதில் இருப்பதையே மனைவியும் சொல்ல சிறிது பாரமும் நீங்கியது போல தான் இருந்தது அவருக்கு.
“நீ என்ன சொல்ற கோமு?”
“என் மனசுல பட்டதைச் சொன்னேன்ங்க”
“எனக்கும் அந்த எண்ணம் வந்துச்சு கோமு”, என்று சொல்ல கோமளம் முகம் மலர்ந்தது.
“நிஜமாவாங்க? நம்ம வேணா பேசிப் பாப்போமா? நம்ம மகளும் நம்ம கண்ணு முன்னாடியே இருப்பா. மாப்பிள்ளைக்கு என்ன வேணும்? குணம் நல்லா இருக்கணும்? நல்லா சம்பாதிக்கணும். அதை விட நம்ம பொண்ணை நல்லா பாத்துக்கணும்? பார்த்தி நிச்சயம் நம்ம பொண்ணை நல்லா பாத்துக்குவான். எனக்கு நம்பிக்கை இருக்கு”
“உன் ஆர்வத்தை குறை டி. மங்கை இப்ப தூங்க போய்ட்டா? அவ கிட்ட நாளைக்கு பேசலாம். இப்ப நீயும் தூங்கு”
“தூக்கமா? அது எப்படி வரும்? எனக்கு இப்ப சந்தோஷமா இருக்குங்க? சேது அண்ணன் என்ன சொன்னாங்க? உங்களுக்கு எப்படி இது பத்தி அவர் கிட்ட பேசணும்னு தோணுச்சு? காரணம் இல்லாம திடீர்னு இது பத்தி பேசிருக்க மாட்டீங்களே?”, என்று கேட்க அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் சந்திரன். நடந்ததை எல்லாம் சொல்லி முடித்து அவர் அமைதியாக இருக்க கோமளாவுக்கோ கனகாவை எண்ணி அவ்வளவு கோபம் வந்தது.
“எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம மகளைப் பத்தி இப்படி சொல்லிருப்பா. அவளை சும்மா விடக் கூடாதுங்க”
“விடு மா, மங்கை கல்யாணம் நடக்கட்டும். அது வரைக்கும் எந்த பிரச்சனையும் வேண்டாம். மேலும் ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா நம்ம பிள்ளையை பத்தி தான் ஏதாவது பேசுவாங்க. நல்ல விஷயம் ஆரம்பிக்கும் போதே நம்ம பிள்ளை யார் வாய்லயும் விழ வேண்டாம்”, என்று சந்திரன் சொல்ல கோமளம் சரி என்று கேட்டுக் கொண்டாலும் மனதுக்குள் அந்த கோபம் அப்படியே தங்கிப் போனது.
அதே நேரம் விளக்கை அணைப்பதற்கு முன்பு ஜன்னல் அருகே சென்று நின்ற மங்கையின் கண்கள் அவளவனைத் தேடியது. அந்த நேரம் பார்த்திபன் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்ததால் அவளைக் காண வரவில்லை.
கயல் மற்றும் பார்த்திபனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தார் சேது. ஏனோ பிள்ளைகளுக்கு அதை மறுக்கவே தோன்ற வில்லை. அவர்களின் வெகு நாள் கனவு அல்லவா?
“நீங்களும் அப்படியே சாப்பிடுங்களேன் பா”, என்றான் பார்த்திபன்.
“பரவால்ல டா, நான் அப்புறமா சாப்பிடுறேன். முதல்ல நீங்க சாப்பிடுங்க”, என்றவர் “பார்த்தி”, என்று அழைத்தார்.
“சொல்லுங்கப்பா”
“உனக்கே தெரியாம அப்பா ஒரு முடிவு எடுத்துருக்கேன். நீ சம்மதிப்பியா டா?”
“கேக்கணுமா பா? நீங்க என்ன சொன்னாலும் நான் கேப்பேன்”, என்றான்.
“அண்ணா அப்பா என்ன சொல்றாங்கன்னு தெரியாம வாக்கு கொடுக்காத”, என்று எச்சரித்த படி சிரித்தாள் கயல் விழி. அதைக் கேட்டு அவன் புருவம் உயர்த்தினான்.
“சும்மா இரு டா பாப்பா”, என்று மகளை அரட்டினார் சேது. அப்போது பார்த்திபன் போன் அடிக்க அதை எடுத்துப் பார்த்தான்.
“யாரு டா?”, என்று கேட்டார் சேது.
“ஆபீஸ்ல இருந்து தான் பா. ஒண்ணாம் தேதி வேலைல சேரணும்ல? அது பத்தி பேசவா தான் இருக்கும். இருங்க பேசிட்டு வரேன்”, என்று சொல்லி எழுந்து சென்றான். அங்கேயே பேசலாம் தான். ஆனால் வீட்டுக்குள் மொபைல் சிக்னல் பிரச்சனை இருப்பதால் வெளியே சென்று பேசினான்.
“அண்ணா கிட்ட என்னப்பா பேசப் போறீங்க?”, என்று கேட்டாள் கயல்விழி.
“என்னப்பா திடீர்னு? அண்ணன் இப்ப தான் வேலைக்கே போக போகுது?”
“நல்ல சம்பந்தம் மா, அதான்”
“யாருப்பா எனக்கு அண்ணியா வரப் போறது?”
“நம்ம மங்கை தான் மா”, என்று அவர் சொன்னதும் “என்னது மங்கை அக்காவா? மங்கை அக்கா எனக்கு அண்ணியா வரப் போறாங்களா? அவங்க நம்ம அண்ணாவுக்கு பெஸ்ட் சாய்ஸ் பா. எனக்கு சந்தோஷமா இருக்கு”, என்று குதூகளித்தாள் கயல்.
“இன்னும் சந்திரன் முடிவு சொல்லலை மா. நான் கேட்டு வச்சேன். வீட்ல பேசிட்டு சொல்றேன்னு சொன்னார். எனக்கும் அந்த பொண்ணு உன் அண்ணாவுக்கு பொருத்தமா இருப்பான்னு தோணுச்சு. உன் அண்ணாவும் என்ன சொல்லுவான்னு தெரியலையே”
“ஆமா மா, சந்திரன் ரொம்ப வருத்தப்பட்டார். அப்புறம் தான் கல்யாணம் பத்தி பேசினார். நானும் சரின்னு சொல்லிட்டேன். அவங்க வீட்லயும் கலந்து பேசிட்டு சொல்லுவார். உங்க அண்ணனுக்கு உன் சித்தி இப்படி பேசின விஷயம் தெரிய வேண்டாம் டா பாப்பா”
“சரிங்கப்பா. ஆனா அவங்க ஏன் அப்படி பண்ணனும்? நாங்க இது வரைக்கும் அவங்களை மரியாதைக் குறைவா கூட பேசினது இல்லைப்பா”
“அவ குணம் அது தான்னு தெரிஞ்சிட்டே? விடு டா. நீ ரொம்ப கஷ்டப் பட்டியா பாப்பா? அப்பா கிட்ட சொல்லிருக்கலாம்ல டா?”
“சொன்னா ரொம்ப திட்டுவாங்கப்பா, அண்ணா தான் கண்டுக்காம போயிறலாம்னு சொல்லிட்டான். உங்களுக்கும் நெஞ்சு வலி வந்ததுல இருந்து உங்களுக்கு டென்ஷன் கொடுக்க கூடாதுன்னு யோசிச்சோம்”
தனக்காக யோசித்த பிள்ளைகளை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டோமே என்று கஷ்டமாக இருந்தது.
அப்போது ஃபோன் பேசிவிட்டு வந்த பார்த்திபனிடம் “அண்ணா அப்பா உனக்கு பொண்ணு பாத்துட்டாங்க. கூடிய சீக்கிரம் உனக்கு கல்யாணம்”, என்றாள்.
அதைக் கேட்டு அதிர்வாக அவளைப் பார்த்தவன் தந்தை புறம் திரும்பி “அப்பா கயல் என்ன சொல்றா?”, என்று கேட்டான்.
“ஆமா டா பார்த்தி. படிச்சு முடிச்சு வேலையும் கிடைச்சாச்சு. அடுத்து கல்யாணம் தானே? ஆனா பொண்ணு யாருன்னு இப்ப சொல்ல மாட்டேன். ஆனா அவ அவ்வளவு அழகு. உனக்கு பொருத்தமா இருப்பா. அவங்க வீட்ல பேசிட்டு சரின்னு சொன்னதும் உன் கிட்ட சொல்றேன்”, என்று சொல்லி விட்டு அவர் எழுந்து செல்ல அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது.
“கயல் என்ன டா இது? அப்பா இப்படி சொல்றாங்க?”, என்று பாவமாக தங்கையிடம் கேட்டான்.
“எனக்கு சந்தோஷமா இருக்கு அண்ணா, புது அண்ணி வரப் போறாங்களே?”
“அது யாருன்னு தெரியுமா?”
“எனக்கு தெரியாது பா. அப்பாவைத் தான் கேக்கணும்”
“ஓ”, என்றவனுக்கு மனது அவ்வளவு பாரமாக இருந்தது. அண்ணனைப் பார்த்தவளுக்கு சிரிப்பு தான் வந்தது. நிச்சயம் அண்ணனுக்கு மங்கையைப் பிடிக்கும் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் விளையாடிப் பார்த்தாள். நிச்சயம் நாளைக்குள் அண்ணனுக்கு சொல்லி விடலாம் என்று எண்ணி எழுந்து சென்று விட்டாள்.