“ஏமா உன் அக்கா பிள்ளைகளை உன் பிள்ளைகளா பாத்தியே தாயி? உனக்கா இந்த நிலைமை?”, என்று ஒரு பாட்டி கனகாவிடம் கேட்க “என்ன பண்ணுறது பெரியம்மா? இந்த உலகத்துல நல்லதுக்கு காலம் இருக்கா என்ன? என் கண்ணுக்குள்ள வச்சு தான் அவங்களைப் பாத்துகிட்டேன். இப்ப என் மூத்த மகனுக்கும் பக்கத்து வீட்ல ஒரு சிங்காரிக்கும் ஏதோ தொடர்பு இருந்துருக்கும் போல? அத நான் கண்டு பிடிச்சு கேட்டுட்டேன்னு தான் என் புருஷன் என்னை இங்க விரட்டிட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்தாள் கனகா. இப்படி தானே அவள் ஊர் முழுக்க பரப்பியது.

கனகா வீட்டு வாசலில் நின்று ஒரு பாட்டியுடன் பேசுவதைக் கண்ட கோதைக்கு அவர்கள் பேசுவது கேட்க வில்லை என்றாலும் கனகா நல்லதை பேச போவதில்லை என்று மட்டும் புரிந்தது.

அதனால் அங்கே சென்ற கோதை “கனகா, எனக்கு பிள்ளைகளை காலேஜ்க்கு அனுப்ப வேண்டிய வேலை இருக்கு. அதனால உள்ள வந்து கிடக்குற இந்த பாத்திரங்களை மட்டும் கழுவி போட்டுரு”, என்று லேசாக அதிகாரமாகவே சொன்னாள் அவளது அண்ணன் மனைவி கோதை.

உள்ளே வந்து பார்த்த கனகா “என்னது நான் இவ்வளவு பாத்திரத்தையும் விளக்கணுமா? எப்படி அண்ணி முடியும்? நேத்து சாயங்காலம் டீ குடிச்சதுல இருந்து எல்லாமே கிடக்கு”, என்றாள்.

“அதுக்கென்ன பண்ண முடியும்? நம்ம வீட்டு வேலையை நம்ம தானே செய்யணும்?”, என்றாள் கோதை காரியமாக.

அதில் இருந்த அர்த்தம் சாதாரணமாக இருந்தாலும் “நீ இந்த வீட்ல தானே இருக்க? இந்த வீட்டு வேலையை செய்து தான் ஆக வேண்டும்”, என்று இருந்தது.

“இவள் சொல்லி நம்ம செய்யணுமா?”, என்ற தலைக்கணம் கனகாவுக்கு வர “இல்லை அண்ணி, எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு. நீங்க பிள்ளைகளை அனுப்பிட்டு வந்து பாத்திரத்தை விளக்குங்களேன்”, என்று சொன்னாள்.

கோதை அவளை முறைத்து பார்க்க கனகா உள்ளுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். அடுத்த நொடி “அப்பா”, என்று கத்தி அழைத்தார் சந்தானம். இது வரை ஒரு ஓரமாக நின்று அவர்கள் இருவரும் பேசியதை கேட்டுக் கொண்டு தான் இருந்தார் என்பதால் தங்கையை கண்டு அவ்வளவு கோபம் வந்தது அவருக்கு.

சந்தானம் நல்ல மனிதர் அல்லவா? அவர் எப்படி மனைவிக்கு ஒரு அநியாயம் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருப்பார். சந்தானம் சத்தமாக அழைத்ததும் கனகா மற்றும் கோதையின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. கூடவே அவரின் பிள்ளைகளும் அங்கே வந்து விட்டார்கள்.

கனகாவும் குழப்பத்துடன் அண்ணனை பார்க்க “என்ன சந்தானம்? எதுக்கு கூப்பிட்ட?”, என்று கேட்ட படி அங்கே வந்தார் ஆறுமுகம்.

“என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணும் போது அவளை மகாராணி மாதிரி பாத்துக்குவேன்னு சொல்லி தான் கூட்டிட்டு வந்தேன். ஆனா சில பேர் அவளை வேலைக்காரி மாதிரி வச்சிருக்காங்க”, என்று சொல்ல கோதை கணவனை காதலாக பார்த்தாள். இது தானே ஒவ்வொரு மனைவியும் கணவனிடம் எதிர் பார்ப்பது.

“என்ன ஆச்சு சந்தானம்? எனக்கு நம்ம மருமகளை பத்தி தெரியாதா? சூட்டிப்பா இருப்பா. நம்ம அவளை சந்தோஷமா தானே வச்சிருக்கோம்?”

“சூட்டிப்பா இருக்க அவளுக்கு ஒண்ணும் இளமை திரும்பலை பா. ரெண்டு நாளா அவளுக்கு உடம்பு வேற சரி இல்லை. நானே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்ன்னு தான் நினைச்சிட்டு இருக்கேன். அப்படியும் சமையல் வேலை வீட்டு வேலை எல்லாம் அவ தான் பாக்குறா. இப்ப நாலு பாத்திரத்தை விளக்கி கொடுன்னு உங்க மக கிட்ட கேட்டதுக்கு முடியாதுன்னு சொல்றா? என் பொண்டாட்டி உங்களுக்கு எனக்கு எங்க பிள்ளைகளுக்கு தான் செய்வா. கண்டவங்களுக்கு எல்லாம் அடிமை வேலை செய்யணுமா?”, என்று கேட்க ஆறுமுகம் மகளை முறைத்து பார்த்தார்.

அந்த பார்வையில் பயந்து போனவள் “அண்ணிக்கு உடம்பு சரி இல்லைன்னு எனக்கு தெரியாது பா”, என்றாள்.

“அதெல்லாம் போஸ்டர் அடிச்சா ஓட்ட முடியும்? எந்த நேரத்துல பிறந்தியோ? யாரையும் நிம்மதியா இருக்க கூடாதுன்னு முடிவு எடுத்துருக்கியோ? ஓசில உக்காந்து திங்க தெரியுதுள்ள? மருமகளுக்கு கூட மாட உதவியா இருக்கணும்னு எண்ணம் வராதா உனக்கு? நல்லா திங்கணும் தூங்கணும், அடுத்தவங்க குடும்பத்தை கெடுக்கணும்? என்ன தான் பிறவியோ? ஒழுங்கா போய் பாத்திரம் விளக்கு, இனி என் மருமக சமையல் வேலை மட்டும் தான் செய்வா. நீ தான் சுத்தம் பண்ணுற வேலை எல்லாம் செய்யணும்? பாத்திரம் நீ தான் கழுவனும். வீடு கூட்டுறது வெளியே எல்லாம் பெருக்குறது எல்லாம் உன் வேலை தான்”

“அப்பா இவ்வளவு வேலையை நான் எப்படி செய்ய?”

“இவ்வளவு வருஷம் கோதை தானே செய்யுறா? இங்க இருக்கணும்னா எங்க பேச்சுக்கு கட்டு பட்டு தான் ஆகணும்”, என்று சொல்லி விட்டு அவர் செல்ல மற்றவர்களும் கலைந்தார்கள்.

கோதையும் கனகாவும் மட்டும் அங்கே இருக்க “நான் சொன்னப்பவே சரி விளக்குறேன்னு சொல்லியிருந்தா இவ்வளவு அவமானம் வந்திருக்குமா?”, என்று சிறு சிரிப்புடன் கேட்ட கோதை அங்கிருந்து சொல்ல கனகா முகம் அவ்வளவு விகாரமாக மாறியது.

“என்னயா அதிகாரம் பண்ணுறீங்க? எல்லாருக்கும் ஒரு நாள் இருக்கு”, என்று வன்மமாக எண்ணிக் கொண்டாள்.

மங்கை வீட்டில் அனைவரும் இரவு உணவை உண்டு கொண்டிருந்தார்கள். மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு சாப்பிட ஆரம்பித்தார் சந்திரன்.

உணவு முடிந்ததும் “அம்மா பார்த்தி வாங்கி தந்த சுவீட் இருந்தா தாங்களேன்”, என்றாள்.

“அது முடிஞ்சிருச்சு டி. ஒண்ணு இருந்துச்சு. நான் காஞ்சிரும்னு சாப்பிட்டுட்டு கவரை தூர போட்டுட்டேன்”, என்றாள் கோமளம்.

அதில் அவள் முகம் வாட “நான் நாளைக்கு அப்பாவை வாங்கிட்டு வரச் சொல்றேன்”, என்றாள் கோமளம்.

“அதெல்லாம் வேண்டாம் மா”, என்று சொன்னதும் அவள் மனதில் சிறு ஏமாற்றம்.

மகளை ஒரு நொடி அழ பார்த்தவர் “ஆமா பார்த்தி தம்பிக்கு என்ன வேலை கிடைச்சிருக்கு? எப்படி வேலை கிடைச்சது கோமு? அந்த தம்பி ஏதாவது சொன்னானா?”, என்று கேட்டவர் மகளை நோட்டம் விட்டார்.

“அதானே? எப்படி கிடைச்சது?”, என்று கோமளம் கேட்க “நான் உன்னைக் கேட்டா நீ என்னைக் கேக்குற? அந்த தம்பி உன் கிட்ட சொல்லலையா?”, என்று கேட்டார் சந்திரன்.

“எனக்கு எப்படி தெரியும்?”

“உன் கிட்ட தானே சுவீட் கொடுத்தான்?”

“என் கிட்ட எங்க கொடுத்தான்? மங்கை தான் கொண்டு வந்தா”, என்று சொல்ல ஒரு அகபட்ட உணர்வுடன் விழித்தாள் மங்கை. இதற்கு மேல் மறைக்க முடியாது என்று புரிந்தது தான். ஆனால் மறைத்ததை இப்போது சொல்ல தான் அவ்வளவு தயக்கமாக இருந்தது.

சந்திரன் அவளை கேள்வியாக பார்க்க “அது வந்து பா… பார்த்தி… வந்து.. நான்”, என்று அவள் தடுமாற தாயும் தகப்பனும் அவளை வியப்பாக பார்த்தார்கள்.

மங்கையிடம் தடுமாற்றமா என்று எண்ணி அவர்களுக்கு வியப்பாக இருந்தது. இனி மறைக்க முடியாது என்று எண்ணி அனைத்தையும் சொன்னவள் கடைசியாக அவன் டிரைவிங் சேர இருப்பதையும் சேர்த்து சொன்னாள். இன்னொரு முறை அதை மறைக்க முடியாதே?

“ஏன் டி, இவ்வளவு விஷயம் நடந்துருக்கு? என் கிட்ட ஒண்ணுமே சொல்லலை?”, என்று கோமளம் கேட்க மங்கைக்கு பதில் சொல்ல முடியவில்லை. எப்படிச் சொல்ல முடியும்? வேண்டும் என்று மறைத்தது அவள் தானே?

அதுவும் அவளால் தந்தையை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை. மகள் தவிப்பை அதற்கு மேல் பார்க்க முடியாமல் “சரி மங்கை நீ போய் தூங்கு”, என்று சந்திரன் சொன்னதும் சிட்டாக பறந்து விட்டாள்.

தொடரும்…