அடுத்த நாள் காலையில் பால் வாங்கச் செல்லும் போது சந்திரன் சேதுவிடம் இயல்பாக பேசினாலும் அவர் ஏதோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறார் என்பது புரிய “என்ன ஆச்சு? ஏதோ யோசனையாவே இருக்கீங்க? ஏதாவது பிரச்சனையா சந்திரன்?”, என்று கேட்டார் சேது.
“பிரச்சனையா ஆகிருமோன்னு தான் பயமாக இருக்கு”, என்று அவர் சொல்ல சேது புருவம் உயர்ந்தது.
“என்ன ஆச்சு சந்திரன்?”
“நான் சொல்ல போறது கொஞ்சம் முக்கியமான விஷயம் சேது. நம்ம பிள்ளைங்க வாழ்க்கை விஷயம்”
“எனக்கு புரியலை. தெளிவா சொல்லுங்களேன். பிள்ளைகளுக்கு என்ன? என் மகளுக்கும் மகனுக்கும் எதுவும் பிரச்சனையா?”
“அது… அது வந்து… உங்க வொய்ப் நம்ம பிள்ளைகளை பத்தி தப்பா ரூமர் கிளப்பி விடுறாங்க போல? எனக்கு இன்னைக்கு தகவல் வந்துச்சு. நம்ம கிருஷ்ணன் அண்ணன் தான் சொல்லுச்சு”, என்று அவர் சொன்னதைச் சொல்ல சேது அதிர்ந்து போனார்.
“என்ன சொல்றீங்க சந்திரன்?”
“ஆமா அவங்க ரெண்டு பேரையும் பத்தி தப்பு தப்பா சொல்லிக்கிட்டு இருக்காங்க போல? அதான் உங்க மனைவியை வீட்டை விட்டு விரட்டிட்டோம்னு சொல்லிருக்காங்க. எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி தான்”, என்று சொல்ல சேதுவால் நம்பவே முடிய வில்லை.
கனகா ஒரு நச்சு பாம்பு என்று அவருக்கு தெரியும் தான். ஆனாலும் இந்த அளவுக்கு வாழ வேண்டிய பிள்ளைகள் மீது நஞ்சை கக்குவாள் என்று தெரியாமல் போனது.
அவர் கண்கள் கலங்கி என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் இருந்தார். சேதுவின் உணர்வுகளை சந்திரனால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னால் தன்னுடைய முட்டாள் தனத்தால் தான் பிள்ளைகள் இத்தனை வருடங்கள் கஷ்ட பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையே அவரை கொன்று கொண்டிருக்க இப்போது அவளால் மங்கையும் பாதிக்கப் பட்டதை அவரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
“வருத்த படாதீங்க சேது. எல்லாத்துக்குமே ஒரு காரண காரியம் இருக்கும். அது மட்டும் இல்லை. எந்த பிரச்சனைக்கும் தீர்வு ஒண்ணும் இருக்கும். அதை சரியா செஞ்சா போதும். எனக்கு ஒரு யோசனை தோணுது. ஆனா நீங்க என்ன சொல்லுவீங்கன்னு தெரியலை”
“எதை தின்னா பித்தம் தெளியும்னு இருக்கேன். நீங்க சொல்லுங்க. இதுக்கு தீர்வு இருக்கா? நீங்க என் கிட்ட இந்த அளவுக்கு பேசுறதே பெருசு. ஏன்னா உங்க பொண்ணு பேரும் இதுல இருக்கு. நானாவது பையனை பெத்து வச்சிருக்கேன். எனக்கே கஷ்டமா இருக்குனா பொண்ணைப் பெத்த உங்களுக்கு எப்படி இருக்கும்? இப்ப நீங்க சொல்லுங்க. எனக்கு வர கோபத்துக்கு அந்த ராட்சசியை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு கூட போய்றலாம்ன்னு தோணுது”
“ரொம்ப உணர்ச்சி வசப் படாதீங்க சேது. அவசரத்துல எடுக்குற எந்த முடிவும் தப்பா தான் போகும். கோபம் என்னைக்கும் தீர்வாகாது. இந்த பிரச்சனைக்கு ஒரே ஒரு தேர்வு தான் இருக்கு. யாரைப் பத்தி தப்பா பேசினாங்களோ அவங்க எப்பவும் ஒண்ணா இருந்தா இந்த பேச்சு மாறிரும்னு எனக்கு தோணுது”
“என்ன சொல்றீங்க?”
“அவங்களை சேத்து வச்சு கிளம்பின புரளி அப்படியே மறையனும்னா நம்ம பிள்ளைங்க வாழ்க்கைல ஒண்ணா ஆகணும். பார்த்திக்கும் மங்கைக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்ன? அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா ஆகிட்டா, லவ் பண்ணினாங்க. அதான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அப்படின்னு தானே பேசுவாங்க. ஆனா தப்பா பேசுறதுக்கு இது பரவால்ல தானே? நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்க “சம்பந்தி, எப்ப கல்யாணத்தை வச்சிக்கலாம்?”, என்று சிறு சிரிப்புடன் கேட்டார் சேது.
அவர் சொன்னதைக் கேட்டு சந்திரன் முகத்திலும் புன்னகை. “ஆமா ஆமா சம்பந்தி தான். உங்களுக்கு இதுல எதுவும் மாற்று கருத்து இருக்கா?”, என்று கேட்டார்.
“நீங்க சொல்றதை தவிர இதுக்கு நல்ல தீர்வு இருக்காது? அதுவும் மங்கை எங்க வீட்டுக்கு மருமகளா வர நாங்க கொடுத்து வச்சிருக்கணும். நான் இப்ப உரிமையாவே கேக்குறேன். என் மகனுக்கு வேலை கிடைச்சிருச்சு. கல்யாண வயசும் வந்துருச்சு. உங்க பொண்ணை அவனுக்கு கட்டிக் கொடுப்பீங்களா? அவளை எங்க கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குவோம்”, என்றார் சேது.
“அதெல்லாம் கண்டிப்பா அவங்க நம்ம பேச்சைக் கேப்பாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு. மங்கை எதுவும் மறுப்பு சொல்லுவாளா? அவ மனசுல என்ன இருக்கோ?”
“என் பொண்ணு நான் என்ன சொன்னாலும் சந்தோஷமா கேட்டுக்குவா. ஒரு வேளை பார்த்தி தம்பி..”
“அவனும் அப்படி தான். நான் சொன்னா கேப்பான். நம்ம ரெண்டு பேருமே பிள்ளைங்க கிட்ட பேசிப் பாப்போம். நம்ம பேச்சை அவங்க கேக்காங்கன்னு அவங்க மேல நம்ம விருப்பத்தை திணிக்க வேண்டாம்”, என்று சேது சொல்ல அது சந்திரனுக்கும் சரியாக பட்டது.
“சரி நம்ம அவங்க கிட்ட பேசிப் பாப்போம்”
“எனக்கு நம்பிக்கை இருக்கு. ரெண்டு பேருக்கும் பிடிக்கும். மங்கைக்கு என் மகனை பிடிக்காமலா அன்னைக்கு என் கிட்டயே அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசினா? அதுவும் இன்னைக்கு வேலை எல்லாம் வாங்கிக் கொடுத்துருக்கா?”, என்று உண்மையைப் போட்டு உடைத்து விட அவர் புருவம் உயர்ந்தது.
“மங்கையா? வேலை வாங்கிக் கொடுத்தாளா?”, என்று அதிர்வாக கேட்டார். அவருக்கு இந்த தகவல் புதியதாயிற்றே.
“ஆமா சம்பந்தி, உதவி செஞ்சதை எதுக்கு சொல்லணும்னு பிள்ளை சொல்லலையோ என்னவோ? பார்த்தி அன்னைக்கு ஒரு கம்பெனில இன்டர்வியூ அட்டென்ட் பண்ணான். அன்னைக்கு வேலை கிடைக்கலை. அந்த கம்பெனி ஓனரோட சம்சாரம் மங்கை கிட்ட தான் டிரைவிங் கத்துக்க வருதாம். அது கிட்ட மங்கை பேசி தான் இந்த வேலை கிடைச்சது?”, என்று சொல்ல முதல் முறையாக மகள் மனது மீது சந்தேகம் வந்தது. ஆனால் அந்த சந்தேகம் கூட சந்திரனுக்கு சந்தோஷமாக தான் இருந்தது.
“இப்ப தான் எனக்கும் இந்த கல்யாணம் நடக்கும்னு எண்ணம் வருது சம்பந்தி”, என்று சந்திரன் சொல்லும் போதே அவர் போன் அடித்தது. கோமளம் தான் போன் செய்தாள்.
“சொல்லு கோமு”
“பால் வாங்க தானே போனீங்க. பால் கறந்து எடுத்தட்டு வரணுமா? இல்லை தயிர் ஆன அப்புறம் தான் வருவீங்களா? மணி என்ன ஆகுது தெரியுமா?”
“பேச்சு சுவாரசியத்துல மறந்துட்டோம். இரு வறோம்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு கிளம்பினார். இருவரும் பேசிய படியே வீட்டை அடைந்தனர்.
வீட்டுக்கு வந்த பிறகு சந்திரன் பேசியது சந்தோஷமாக இருந்தாலும் மனதுக்குள் கனகாவை எண்ணி அவ்வளவு வருத்தமாக இருந்தது சேதுவுக்கு.
வாழ வேண்டிய ஒரு பெண் பிள்ளையை பற்றி இந்த அளவுக்கு பேசி வைக்க வேண்டுமா என்று இருந்தது. இப்போது மங்கை தங்கள் வீட்டுக்கு மருமகளாக வந்தால் இந்த பிரச்சனை முடிந்து விடும். இது நடக்காமல் அவள் வேறு வீட்டுக்கு மருமகளாக சென்றால் அங்கே யாராவது அவளை தவறாக பேச வாய்ப்பு இருக்கிறதே? அதற்கு மேல் மங்கை வாழ்க்கை எப்படி சந்தோஷமாக இருக்கும்? அதை எண்ணி தான் பயந்து போனார்.
கனகாவிற்கு ஒரு தீர்வு கட்ட வேண்டும் என்று முடிவு எடுத்தார். “எல்லாரும் இந்த கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் சொல்லட்டும். அதுக்கப்புறம் உன் முகத்தில் கரியை பூசுறேன் டி”, என்று எண்ணிக் கொண்டார்.
ஆனால் கனகா ஒரு சாதாரண நச்சு பாம்பு இல்லை. அது கொடிய விஷம் கொண்ட அறிய வகை உயிரினம் என்று தெரியாமல் போனது. அனைவரின் கற்பனைக்கும் அப்பாற்பட்டு இருந்தாள் அவள்.