அத்தியாயம் 7 

கூர்வாளாக தாக்கிக் 

கொண்டிருக்கும் உன் விழிகளில் 

மை அவசியம் தானோ?!!!

கயல்விழி மற்றும் கவின் இருவரும் பள்ளியில் இருந்து டூர் சென்றிருக்க அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தான் மங்கை வேலைக்கு கிளம்பிச் சென்றாள். அவள் கிளம்பி கேட் அடைக்கும் நேரம் தான் அவள் செல்வதே பார்த்திபனுக்கு தெரிந்தது. அவள் பின்னே செல்ல அவன் கால்கள் பரபரத்தது.

ஆனால் அங்கே அவளை நிறுத்தி வைத்து பேச முடியாது என்பதால் சிறிது நேரம் கழித்து கிளம்பி அவள் டிராவல்ஸ்க்கு சென்றான்.

தன்னுடைய அறையில் அமர்ந்திருந்தவளுக்கு அவன் வந்தது தெரியாது. ஜோதி தான் “வாங்க சார்”, என்று சொல்லி அவனை அமர வைத்தவள் அவன் கிளாஸ் பற்றி கேட்க வந்திருக்கிறான் என்று எண்ணி “யாருக்கு சார் கிளாஸ் எடுக்கணும்?”, என்று கேட்டாள்.

“இல்லை நான் மங்கையை பாக்கணும்னு வந்தேன்”, என்று சிறு தயக்கத்துடன் சொல்ல அவனை வியப்பாக பார்த்தாள் ஜோதி. அப்படி எல்லாம் மங்கையை தேடி யாரும் வந்ததில்லை என்பதால் இந்த வியப்பு.

“இருங்க நான் கேட்டுட்டு வரேன். உங்க பேர் என்ன சார்”, என்று கேட்டு அவன் பதில் சொன்னதும்  உள்ளே சென்றாள்.

“என்ன ஜோதிக்கா?”

“உங்களைப் பார்க்க ஒருத்தங்க வந்திருக்காங்க மங்கை”

“என்னையா? யாருக்கா?”

“பார்த்திபன்னு சொன்னாங்க”, என்று சொன்னதும் மங்கைக்குள் சின்ன படபடப்பு. “யாரு பார்த்தியா? உண்மையிலே அவரா வந்திருக்கார்? அவரை உள்ள வரச் சொல்லுங்க அக்கா”, என்று பரபரப்பாக சொல்ல வந்தவனின் முக்கியத்துவம் ஜோதிக்கு நன்கு புரிந்தது.

அவள் வெளியே சென்ற போது அருண் பார்த்திபனிடம் பேசிக் கொண்டிருந்தான். அன்று ஒரு நாள் அவன் மங்கையை தேடி வந்தது அருண்க்கு தெரியும் என்பதால் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தான்.

“உங்களை உள்ள வரச் சொல்லிட்டாங்க சார்”, என்று ஜோதி சொன்னதும் அவன் எழுந்து கொள்ள மங்கையோ தான் சரியாக இருக்கிறோமா என்று அங்கிருந்த கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உள்ள வரலாமா?”, என்ற படி கதவை திறந்தான் பார்த்திபன். அவளும் பதட்டத்தை மறைத்துக் கொண்டு “வாங்க பார்த்தி”, என்றாள்.

அவள் மலர்ந்திருந்த முகம் அவனுக்கும் தயக்கத்தை உதறித் தள்ளியது. சிறு சிரிப்புடன் அவள் எதிரே நிற்க “ஊக்கருங்க பார்த்தி”, என்று சேரைக் காண்பித்தாள்.

அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்தவன் “டிஸ்ட்டர்ப் பண்ணிட்டேனா?”, என்று கேட்டான்.

“அப்படி எல்லாம் இல்லை சொல்லுங்க. திடீர்னு என்ன இங்க வந்துருக்கீங்க?”

“ஏன் வரக் கூடாதா? நாங்க எல்லாம் டிரைவிங் கத்துக்க கூடாதா?”, என்று கேட்டான் பார்த்திபன். அதைக் கேட்டு அவளுக்கு சப்பென்று போனது. அவன் தன்னைப் பார்க்க வரவில்லையோ என்ற கவலை அவள் முகத்தை வாடச் செய்தது.

“அதெல்லாம் கத்துக்கலாம், யார் வேண்டாம்னு சொல்லுவா? நான் டீட்டெயில்ஸ் சொல்லவா?”, என்று முகம் வாடி சொல்ல “ஹேய் மங்கை நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். நான் உன்னைப் பாக்க தான் வந்தேன்”, என்றான்.

அவன் உரிமையாக சொன்ன உன்னை என்ற வார்த்தை கூட அவளுக்கு பிடித்திருந்தது. உங்களை என்று சொல்லி இருந்தால் தான் ஒரு மாதிரி உணர்ந்திருப்பாள்.

அடுத்து என்ன கேட்க என்று தெரியாமல் அவள் அவனைப் பார்க்க “அதை அப்புறம் சொல்றேன். உனக்கு முதல்ல பீவர் எப்படி இருக்குன்னு சொல்லு”, என்று கேட்டான்.

“இப்ப ஓகே தான். சரி ஆகிருச்சு”

“அன்னைக்கு உன் கையை பிடிச்சப்ப தான் தெரியும் அவ்வளவு காச்சல் இருக்குன்னு. டாக்டர் ஊசி போட்டப்ப கூட எனக்கு அவ்வளவு கீட் தெரியலை”, என்று அவன் சொல்ல அவளுக்கு டாக்டர் ஊசி போடும் போது அவன் நெஞ்சில் சாய்ந்திருந்த அந்த நிகழ்வு நினைவுக்கு வந்தது.

அவள் அமைதியாக இருக்க “நிஜமாவே இப்ப நீ ஓகே தானே?”, என்று கேட்டான்.

“ஓகே தான் பார்த்தி. மாத்திரை போட்டதுல கொஞ்சம் அல்சர் தான் அதிகமாகிருச்சு. இப்ப காரம் எதுவும் சாப்பிட முடியலை. அது மட்டும் தான் பிரச்சனையா இருக்கு”

“ஒரு வாரம் அப்படி தான் இருக்கும். அப்புறம் சரி ஆகிரும். அத்தை கிட்ட மாதுளை ஜூஸ் அரைச்சு கொடுக்கச் சொல்லு”

“ஹம்ம் சரி”

“அப்புறம் நாலு நாளாவே உன்னைப் பாக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்? ஆனா நீ இன்னைக்கு தான் இங்க வந்த? அதான் பாக்க வந்தேன்”

“நாலு நாளா வா? ஏதும் முக்கியமான விஷயமா?”

“உனக்கு நன்றி சொல்லணும் மங்கை”, என்று சொல்ல அது எதற்கு என்று புரிந்த அவள் அவனை போலியாக முறைத்தாள்.

“உண்மையிலே உனக்கே தெரியாம நீ அவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க மங்கை. அப்படியே ஒரு தேவதை வந்து ஸ்விட்ச் போட்ட உடனே எல்லாம் மாறும் தெரியுமா அப்படி இருக்கு எங்க லைப்? எங்க அப்பாவை எங்களால தொட்டு எல்லாம் பாக்க முடியுது தெரியுமா? எல்லாம் உன்னால தான்”, என்று பிரமிப்பாக சொல்ல அவன் சந்தோஷத்தைக் கண்டு அவள் கண்களும் லேசாக கலங்கியது.

“நான் பெருசா எதுவும் பண்ணலை பார்த்தி. இது சாதாரண விஷயம் தான். ஆனா எனக்கு உங்க மேல கொஞ்சம் வருத்தம் தான். நீங்களே இதை எப்பவோ சரி செஞ்சிருக்க முடியும்? நாம எப்பவும் எல்லாருக்கும் நூறு சதவீதம் உண்மையா இருக்க முடியாது பார்த்தி. நீங்க உங்க சித்தி பத்தி முன்னாடியே மாமா கிட்ட பேசிருக்கலாம்?”

“அப்பா உடம்புக்கு முடியாதவங்க மங்கை. டாக்டர் வேற கவனமா பாத்துக்க சொன்னாங்க. அவரை கஷ்டப் படுத்தி எங்களுக்கு என்ன சந்தோஷம்ன்னு தோணுச்சு. அது அப்படியே பழகி போயிருச்சு. அன்னைக்கு நீ சொல்லும் போது கூட அப்பா ரொம்ப உணர்ச்சி வசப் படக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டே இருந்தேன். அவருக்கு ஏதும் ஆகி இருந்தா இன்னும் கஷ்டம் ஆகிருக்கும்?”

“சாரி, அப்ப நான் சொல்லி இருக்க கூடாதோ?”

“எங்களுக்காக தானே சொன்ன? அதுவும் நல்ல விதமா தானே முடிஞ்சிருக்கு?”

“நீங்க சந்தோஷமா இருக்கீங்களா பார்த்தி?”

“சந்தோஷம் தான். ஆனா சித்தி பத்தி கொஞ்சம் யோசனையா இருக்கு? என்ன இருந்தாலும் அவங்களுக்கு அப்பா தானே எல்லாமே? அவர் மேல அன்பா தானே இருந்தாங்க? அவங்க பிரிஞ்சு இருக்குறதுல எனக்கு உடன்பாடு இல்லை”

“அதுக்கு காலம் பதில் சொல்லும் பார்த்தி. அவங்களும் அவங்க தப்பை கொஞ்சம் உணரணும் தானே? காத்திருப்போம்”

“ம்ம்”

“அப்புறம் வேலை என்ன ஆச்சு? இன்டர்வியூல என்ன சொல்றாங்க?”

“என்னத்தை சொல்ல? எங்க போனாலும் கால் பண்ணி சொல்றோம்னு சொல்றாங்க. எனக்கு நல்ல இடத்துல வேலை கிடைக்கும்னு நம்பிக்கையே போச்சு”, என்று ஆரம்பித்தவன் அது என்ன கம்பெனி எங்கே இருக்கிறது என்றெல்லாம் சொல்ல கவனமாக கேட்டுக் கொண்டவளுக்கு மண்டையில் பல்ப் எரிந்தது.

ஏனென்றால் அந்த கம்பெனியின் உரிமையாளரின் மனைவிக்கு தான் அவள் டிரைவிங் கிளாஸ் எடுக்கிறாள். அதன் மூலம் ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று அவள் மூளை யோசித்தது. உதவி கிடைத்த பிறகு இவனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டாள். அதற்கு முன் அவனிடம் எதிர்பார்ப்பை உருவாக்க அவள் தயாராக இல்லை.