“காலைல வாமிட் வேற பண்ணினாங்க டாக்டர். அது எல்லாம் பிராப்லம் இல்லை தானே?”, என்று பார்த்திபன் கேட்க அவனை வியப்பாக பார்த்தவள் மனதில் சிறு பூஞ்சாரல். ஆட்டோவில் வரும் போது கவின் அவளிடம் “காலைல மாதிரி வாந்தி வர மாதிரி இப்ப இருக்கா கா?”, என்று கேட்டதை நினைவில் வைத்து தான் இப்போது டாக்டரிடம் கேட்டான்.

            “அது ஃபீவர்னால வந்தது தான். பிரச்சனை இல்லை”, என்றவர் நர்சை அழைத்து இன்ஜெக்ஷனை எடுத்து வரச் சொல்ல மங்கைக்கு இவன் வெளியே போனா தேவலை என்று இருந்தது.

            அவன் சட்டமாக அமர்ந்திருக்க “பார்த்தி நீங்க கொஞ்சம் வெளிய இருங்களேன்”, என்றாள்.

            “அப்படி எல்லாம் போக முடியாது. ஒண்ணாவே போகலாம்”, என்றான் பட்டென்று. அவள் தர்ம சங்கடமாக பார்க்க அவள் அருகே நெருங்கியவன் “அப்படி தர்ம சங்கடமாக எதுவும் நடக்காது”, என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் முணுமுணுத்தான்.

            அவன் அவளை நெருங்கியதும் அப்படிச் சொன்னதும் தான் அவளுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.

மருத்துவர் ஊசியை அவள் கையிலே போட்டிருக்க எந்த தர்மசங்கடமும் நிகழ வில்லை. ஆனால் ஊசி போடும் போது எப்படி தான் அவளை நெருங்கினான் என்று தெரியாது. அவள் சட்டை கையை இழுத்து விட்டு திரும்பி கண்ணை மூடி இருக்கும் போது அவள் முகம் அவன் மார்பில் புதைந்தது.

            ஊசி போட்டது கூட தெரியாமல் அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். அவனோ அவள் கையை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இதில் “டாக்டர் அவங்களுக்கு வலிக்க போகுது, மெதுவா. நல்லா அழுத்தி தேச்சி விடுங்க, வீங்கிற  போகுது”, என்று வேறு சொல்லிக் கொண்டிருக்க அவன் அருகாமையும் அவள் முகத்தை உரசும் அவன் மார்பின் திண்மையும் அவளை எதுவோ செய்தது.

            டாக்டர் நகர்ந்ததும் அவள் முகத்தை தன் மார்பில் இருந்து விலக்கியவன் “நான் கொஞ்சம் தடவி விடட்டா? அப்படியே விட்டா வீங்கிரும், அப்புறம் கல்லு மாதிரி ஆகிரும்”, என்று சொல்ல தடுமாற்றத்துடன் அவனை பார்த்தாள். அவள் பார்வை என்ன சொன்னதோ? அவனாகவே அவள் கையைப் பற்றி மெதுவாக தேய்த்து விட ஏனோ அவன் தொடுகை அவளை பெண்ணாக உணர வைத்துக் கொண்டிருந்தது.

            அவள் கையை வருடி விட்ட படியே தன்னுடைய சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து டாக்டரிடம் கொடுத்து விட்டான்.

            “என் கிட்ட இருக்கு”, என்று சொன்ன மங்கை அதை எடுக்க முயல “ஷ் மங்கை, இருக்கட்டும், விடு”, என்று சொல்ல அதற்கு மேல் அவனிடம் அவர்கள் முன்னே வழக்கடிக்க விருப்பம் இல்லை.

            இப்போது அவள் கை பற்றிய படியே அவளை வெளியே அழைத்துச் செல்ல அவன் அன்பாக அதே நேரம் உரிமையாக செய்யும் செயல்களை அவளால் தடுக்க முடிய வில்லை.

            அவர்களை பார்த்த கவின் “இப்ப எப்படிக்கா இருக்கு? டாக்டர் என்ன சொன்னாங்க?”, என்று கேட்டான்.

            “உன் அக்காவுக்கு ஒண்ணும் இல்லை டா. சாதாரண காச்சல் தான். ஊசி போட்டுருக்காங்க. காலைல சரியாகிருவா”, என்று பார்த்திபனே பதில் சொன்னான். கவினும் நிம்மதியாக மூச்சு விட “ரெண்டு பேரும் இங்க உக்காருங்க. இதோ வரேன்”, என்று சொன்னவன் மருந்து சீட்டை எடுத்துக் கொண்டு மெடிக்கல் சென்றான்.

            காலையில் தந்தை கொடுத்த பணம் இருந்ததால் டாக்டர் எழுதி கொடுத்த மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்கி விட்டு கூடவே ஒரு ஹார்லிக்ஸ் டப்பாவையும் வாங்கிக் கொண்டு வந்தான்.

            அவன் வந்த பிறகு தான் மருந்து வாங்கியதே அவளுக்கு தெரியும். “நான் வாங்கிருப்பேன்ல அண்ணா”, என்றான் கவின்.

            “இதுல என்ன இருக்கு? இந்தா இதுல மாத்திரை மருந்து எல்லாம் இருக்கு. எந்த மாத்திரை எப்ப போடணும்னு அதுலே டிக் பண்ணிருக்காங்க. பாத்து கொடுக்கக் சொல்லு. சரி வாங்க போகலாம்”, என்றவன் அவர்களை பேசவே விடாமல் ஆட்டோவுக்கு அழைத்துச் சென்றான்.

            போகும் போதும் அவன் கண்கள் அவளையே வருட அவளுக்கோ மெல்லிய படபடப்பு. ஆனால் இந்த முறை பார்வையை வெளியவே வைக்காமல் அவ்வபோது அவனைக் கள்ளப் பார்வை பார்த்த படியே வந்தாள். அதைக் கவனித்தவனுக்கு மனம் உல்லாசமாக இருந்தது. அந்த பயணம் அமைதியில்  அதே நேரம் சந்தோஷமாக கழிய வீடும் வந்தது.

            அவர்கள் போன போது சேது, கயல், சந்திரன், கோமளம் நால்வரும் வெளியே தான் அமர்ந்திருந்தார்கள்.

            அவள் இறங்கும் போது கோமளம் அவளை தாங்கி பிடிக்க வந்தாள். போட்ட ஊசியால் லேசாக மயக்கத்தில் இருந்த மங்கை லேசாக தடுமாற அந்த பக்கம் இருந்த பார்த்திபன் “மங்கை பார்த்து”, என்ற படிய அவள் கையைப் பற்றிக் கொண்டான்.

            அந்த பக்கம் கோமளமும் பிடித்துக் கொள்ள மங்கை சமாளித்துக் கொண்டாள். ஆனாலும் அவளுக்கு அவன் தொடுகை உடலை சிலிர்க்க வைத்தது. அவனுக்கோ “இந்த அளவுக்கு உடல் கொதிக்கிறதே. எப்படி தாங்கிக் கொள்கிறாள்?”, என்று கவலையாக இருந்தது. ஊசி போடும் போது கூட அவள் உடல் சூடு இவ்வளவு அதிகமாக இல்லை. இப்போது இன்னும் கூடி இருந்தது.

            கவின் அவன் பக்கம் வந்து நின்று அக்காவை பிடித்துக் கொள்ள பார்த்திபன் விலகி நின்றான்.

            அவர்கள் அவளை உள்ளே அழைத்துச் செல்ல பார்த்திபனிடம் டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள் சந்திரனும் சேதுவும்.

            அவனும் சொல்லிக் கொண்டிருக்க ஆட்டோ டிரைவர் ஆட்டோவை திருப்பி விட்டு பணம் வாங்க வர “எவ்வளவு அண்ணா?”, என்று கேட்டான் பார்த்திபன்.

            அதைப் பார்த்த சந்திரன் “பார்த்தி இருப்பா, நான் கொடுக்குறேன்”, என்றவர் அவன் மறுத்தும் ஆட்டோவிற்கான பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

            ஆட்டோ கிளம்பியதும் மற்ற அனைவரும் அங்கே அமர்ந்து பேசிக் கொண்டிருக்க கவின் சேது குடும்பத்திற்கான உணவை எடுத்துக் கொண்டு வந்தான்.

            அனைவரும் உள்ளே செல்ல பார்த்திபனும் உள்ளே செல்லப் போனான். கவினும் திரும்பி நடக்க “கவின்”, என்று அழைத்தான் பார்த்திபன்.

            “என்ன அண்ணா?”

            “மங்கை எப்படி இருக்கா?”

            “அம்மா அவ ரூம்ல படுக்க வச்சிருக்காங்க. இனி தான் சாப்பிட வைப்பாங்க”

            “அவ மாத்திரை போடுறாளான்னு பாத்துக்கோ”

            “சரிங்க அண்ணா”, என்று அவன் சொல்லி விட்டுச் செல்ல அவள் நினைவுடனே அறைக்குள் வந்தான் பார்த்திபன். அவன் அறையின் ஜன்னலில் நின்று அவள் அறையை பார்க்க அவள் அறையில் விளக்கு மட்டுமே எரிந்தது. ஆனால் அவள் கண்ணில் பட வில்லை. ஜன்னல் அருகே வந்து நிற்க மாட்டாள், அவளால் நிற்க முடியாது என்று தெரிந்தும் வெகு நேரம் அங்கேயே நின்றான்.

            அடுத்த நாள் முழுக்க அவன் அவளைப் பார்க்க வில்லை. அவள் மாத்திரை போட்டது வீட்டில் செய்த கஷாயம் குடித்தது என அல்சர் வேறு அதிகமாகி இருக்க படுத்த படியே தான் இருந்தாள். மங்கைக்கு ஏபி வகை ரத்த பிரிவு என்பதால் அதிகம் நோய் அவளை அண்டாது. ஆனால் வந்து விட்டால் சாதாரணமாக செல்லாது. அதனால் அதிகமாகவே கஷ்டப் பட்டாள்.

            டிராவல்ஸ் பொறுப்பையும் அருணும் ஜோதியுமே பார்த்துக் கொள்ள அவள் முழுக்க முழுக்க ஓய்வு தான். ஆனால் அவளைப் பார்க்காதது பார்த்திபனுக்கு தான் கஷ்டமாக இருந்தது. அவள் செய்த உதவிக்கு நன்றி சொல்ல கூட அவனால் முடிய வில்லை.

தொடரும்..