“அம்மா உனக்கே கால் வலி இருக்கு. நான் கவியை அழைச்சிட்டு போறேன்”, என்று சொன்ன மங்கை தம்பி புறம் திரும்பி “ஆட்டோ கூட்டிட்டு வா டா. நம்ம ரெண்டு பேரும் போய்ட்டு வருவோம்”, என்று சொல்ல அவனும் சட்டையை போட்டு விட்டு வெளியே சென்றான்.

            மருத்துவமனைக்கு செல்ல நிச்சயம் மங்கை வெளியே வருவாள். அப்போது அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் பார்த்திபன் வாசலில் தான் அமர்ந்திருந்தான்.

            கவினை பார்த்ததும் “என்ன ஆச்சு டா? எங்க அவசரமா போற?”, என்று கேட்டான்.

            “ஆஸ்பத்திரிக்கு போகணும் அண்ணா, ஆட்டோ கூப்பிட போறேன்”

            “இரு நான் ஆட்டோக்கு கால் பன்றேன்”, என்று சொன்ன பார்த்திபன் தனக்கு தெரிந்த ஆட்டோ டிரைவரை அழைக்க இரண்டு நிமிடத்தில் வருவதாக சொன்னார்.

            “இப்ப வந்துருவார் டா”, என்று அவன் கவினிடம் சொல்ல “சரிங்கண்ணா. நான் அக்காவை கூட்டிட்டு வரேன்”, என்று சொல்ல அவளைப் பார்த்து விடலாம் என்று எண்ணி உள்ளுக்குள் அவ்வளவு குதூகளித்தான் பார்த்திபன்.

            கவின் வீட்டுக்குள் வர “என்ன டா அதுக்குள்ள வந்துட்ட?”. என்று கேட்டாள் கோமளம்.

            “பார்த்தி அண்ணா அவங்களுக்கு தெரிஞ்ச ஆட்டோ அண்ணாக்கு கால் பண்ணிட்டாங்க மா. இப்ப வந்துருவாங்கலாம்”, என்று சொல்ல அனைவருக்கும் நிம்மதி.

            வெளியே ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்கவே கோமளம் மகளை கைத் தாங்களாக அழைத்துச் செல்ல கவினும் உடன் சென்றான்.

            பார்த்திபன் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் என்றால் அவளும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். “இவன் வேற இப்படியே பாத்து உசுப்பேத்துறான். நாம வேற இப்ப கேவலமா இருக்கோமே? தலையை ஒழுங்காவது வாரிருக்கலாம்”, என்று எண்ணிக் கொண்டு தலை குனிந்து கொண்டாள். ஆனால் அவன் கண்களுக்கு தேவமங்கையாக அவள் தெரிவது அவளுக்கு எப்படி தெரியுமாம்?

            அவர்கள் ஆட்டோ அருகே வந்ததும் கதவை திறந்து வைத்து நின்றான் பார்த்திபன். அவள் ஓரப் பார்வையில் அவனைப் பார்த்து விட்டு ஆட்டோவில் அமர்ந்தாள். கவின் அவள் அருகே அமர கோமளமும் உடன் செல்வார் என்று தான் பார்த்திபன் எண்ணினான்.

            “பாத்து போய்ட்டு வாங்க டா”, என்று கோமளம் சொல்ல “நீங்க போகலையா அத்தை?”, என்று வியப்பாக கேட்டான் பார்த்திபன்.

            “இல்லை பார்த்தி, கவின் தான் கூட போறான்”, என்று சொல்ல பார்த்திபன் மூளை படு வேகமாக வேலை செய்தது.

            “சின்ன பிள்ளைங்களை எப்படி அத்தை தனியா அனுப்புறது? நான் கூட போகட்டுமா?”, என்று கேட்க அவள் எப்படி மாட்டேன் என்று சொல்வாள்.

            “நீ கூட போனா எனக்கு சந்தோஷம் தான் பா”, என்று சொல்ல அவசரமாக ஆட்டோ டிரைவருடன் முன் இருக்கையில் அமர்ந்தவன் “அண்ணா கிளம்புங்க”, என்றான்.

            அவரும் வண்டியை கிளப்ப கோமளம் ஆட்டோவை பார்த்த படி நின்றாள்.

            போகும் வழி முழுக்க பார்த்திக்கு அவளை திரும்பிப் பார்க்க வேண்டும் போலவே இருந்தது. ஆனால் கவின் அவள் அருகே இருப்பதால் அடக்கி வாசித்தான்.

            அவ்வபோது அவனைப் பார்த்த மங்கைக்கோ நிச்சயம் இது பழைய பார்த்தி இல்லை என்று தான் தோன்றியது. அதனால் அவனிடம் தனியே பேசவே பயந்தாள். ஆளையே விழுங்கி விடுவது போல ஆழ்ந்து பார்த்தால் அவள் எப்படி தாங்குவாளாம். முதல் முறை பிடிக்கும் என்ற உறவைக் கடந்து அவளுக்குள் அவன் நுழைவது புரிந்தது.

            அவள் நிலைமை புரியாமல் “அப்புறம் அண்ணா, ஸ்கூல் ட்ரிப் எல்லாம் போறீங்களா? எத்தனை பசங்க வராங்க”, என்று ஆட்டோ டிரைவரிடம் பேச்சு கொடுத்து அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பினான் பார்த்திபன்.

            அவரிடம் பேசுவது போல அமர்ந்து கொண்டவனுக்கு இப்போது அவள் முகம் தெரிய அவளோ அவன் புறம் திரும்பவே இல்லை.

            “ஒரு பார்வை பாக்காளா பாரு?”, என்று அவன் மனம் சிணுங்க “ஐயோ திரும்பி உக்காரேன் டா”, என்று மனதுக்குள் அவனைக் கொஞ்சிக் கொண்டாள் மங்கை.

            அவர்கள் மருத்துமனையில் அமர்ந்திருக்க அவர்களுக்கு முன் இரண்டு பேஷண்ட் அமர்ந்திருந்தார்கள். அந்த நேரம் தான் வீட்டுக்குள் நுழைந்தார்கள் சேதுவும் சந்திரனும்.

            கோமளம் வெளியே இருந்த மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் பார்த்த சந்திரன் “என்ன கோமு இந்நேரம் வெளிய உக்காந்துருக்க?”, என்று கேட்டார்.

            “உங்களை மாதிரி மனுசனை கட்டிக் கிட்டு என்ன செய்ய?”, என்று அவள் பட்டென்று கேட்க சந்திரன் நே என்று விழித்தார் என்றால் சேதுவோ லேசாக சிரித்து விட்டார்.

            “என்ன ஆச்சு டி? எதுக்கு இவ்வளவு கோபம்?”

            “ஒரு மனுசி அடிக்கடி போன் பண்ணா என்ன எதுக்குனு கேக்கணும்?”

            “கூப்பிட்டு இருந்தியா? வண்டில வந்ததுல கேக்கல கோமு, என்ன ஏதாவது வாங்கிட்டு வரணுமா?”

            “மங்கைக்கு ஊசி போட தான் கூட்டிட்டு போகலாம்னு கேட்டேன். இப்ப கவின் கூட்டிட்டு போயிருக்கான். கூடவே பார்த்தி தம்பியும் போயிருக்கு. உள்ள கயல் மட்டும் தனியா படிச்சிட்டு இருக்கா. அதான் அவளுக்கு துணைக்கு நானும் இங்க உக்காந்துட்டேன்”, என்று சொல்ல ஆண்களுக்கு சிறு நிம்மதி.

            “மங்கைக்கு என்ன ஆச்சு மா? காலைல நல்லா இருந்துச்சே?”, என்று கேட்டார் சேது.

            “அவளுக்கு திடீர்னு தான் அண்ணா காச்சல் வந்துருச்சு. சரியாகிரும், உங்களுக்கு டீ ஏதாவது போடட்டுமா?”

            “அதெல்லாம் வேண்டாம் மா”

            “பாப்பாவுக்கு ரொம்ப காச்சல் இருக்கா? ஏதாவது சாப்பிட்டாளா?”, என்று கேட்டார் சந்திரன்.

            “மதியம் கஞ்சி கொடுத்தேன். இப்ப வந்ததும் இட்லி கொடுத்துட்டு மாத்திரை போட வைக்கணும். அப்புறம் அண்ணா நீங்க பிள்ளைகளைக் கூட்டிட்டு வெளிய சாப்பிட போகலாம்னு சொல்லி இருந்தீங்களாம். இன்னைக்கு நேரம் ஆச்சு. அதனால நாளைக்கு போய்ட்டு வாங்க, இன்னைக்கு நான் சமைச்சு தந்துறேன்”

            “உனக்கு எதுக்கு மா கஷ்டம்? நான் பாத்துக்குறேன்”

            “நாளைல இருந்து நீங்க பாத்துக்கோங்க. இப்ப நைட்க்கு நான் செஞ்சி தரேன்”, என்று சொல்ல அவரும் சரி என்று சொன்னார். கோமளம் உரிமையாக பேசும் போது அவருக்கு மறுக்கவும் முடிய வில்லை.

            “சரி நான் லேசா குளிச்சிட்டு வரேன் சேது”, என்று சொல்லி விட்டு சந்திரன் உள்ளே செல்ல சேதுவும் உள்ளே சென்று மகளிடம் பேசி விட்டு குளிக்கச் சென்றார்.

            கோமளம் சமையல் செய்து கொண்டிருக்க ஆண்கள் இருவரும் அவர்கள் பார்த்த வண்டியை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

            அதே நேரம் அந்த மருத்துவர் மங்கையை அழைக்க “கவின் நீ இங்கயே இரு டா. நான் பாத்துட்டு வரேன்”, என்று எழுந்து கொண்டாள் மங்கை.

            “அப்படி எல்லாம் தனியா விட முடியாது. நீ இங்க இரு கவின். நான் கூட்டிட்டு போறேன்”, என்று சொன்ன பார்த்திபன் அவளுக்கு முன்பாக உள்ளே நுழைந்திருக்க அவளிடம் சிறு திகைப்பு.

            அவளை பரிசோதித்த டாக்டர் “காச்சல் கொஞ்சம் அதிகமா இருக்கு. நார்மல் பீவர் தான். பயப்பட ஒண்ணும் இல்லை. ஒரு இன்ஜெக்ஷன் போடறேன். நைட் டேப்ளட் போட்டு தூங்கினா சரி ஆகிரும். ஒரு மூணு நாள் ரெஸ்ட் மட்டும் எடுங்க. நம்ம உடம்பு நம்ம கிட்ட ரெஸ்ட் அப்ப அப்ப கேக்கும். கொடுத்துட்டா சரி ஆகிரும்”, என்று அவர் சொல்ல “சரி டாக்டர்”, என்று சொல்லி கேட்டுக் கொண்டாள்.