அத்தியாயம் 6 

எந்தன் சிந்தையில் ஒருத்தி 

சித்திரமாகிக் கொண்டிருக்கிறாள் 

நித்தமும் அவள் நினைவில்!!!

அந்த ஆட்டோமொபைல் கம்பெனியின் செக்யூரிட்டி கேட்டில் நின்று இன்டர்வியூ பற்றி விசாரித்துக் கொண்டிருந்தான் பார்த்திபன்.

            அவனது தகவல்களை பெற்றுக் கொண்டு அவனை உள்ளே செல்ல வழி காட்டினார் அந்த செக்யூரிட்டி. அவனும் அவர் காட்டிய பாதையில் செல்ல ஏற்கனவே நான்கு பேர் அங்கே அமர்ந்திருந்தார்கள்.

            அடுத்த இரண்டு மணி நேரம் நிற்காமல் நகர்ந்தது. அவனும் இண்டர்வியூவில் பிஸியாகவே இருந்தான். அங்கேயும் அழைப்பு வரும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

அவனுக்கு மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் இத்தனை நாள் இருந்த விரக்தி இன்று இல்லை. சரி இது கிடைக்க வில்லை என்றாலும் வேறு ஏதாவது கிடைக்கும் என்று அவனே அவனை சமாதானப் படுத்திக் கொண்டு வெளியே வந்தான். அந்த தைரியம் அவன் தந்தை அவனுக்கு கொடுத்தது என்று நன்கு புரிந்தது.

அப்போது சரியாக சேது வேறு அழைக்க எடுத்து பேசினான். அவர் இன்டர்வியூ பற்றி கேட்க அவனும் சொன்னான். “இது கிடைக்கலைனாலும் கவலைப்படாத டா பார்த்தி. பொறுமையாவே இரு. உனக்குன்னு இருக்குற வேலை கண்டிப்பா உன்னை தேடி வரும். அது வரைக்கும் அப்பா இருக்கேன் டா. உடைஞ்சு எல்லாம் போக கூடாது சரியா?”, என்று அவர் சொல்ல யானை பலம் வந்தது.

            இதற்கு மேல் அவனுக்கு என்ன வேண்டுமாம்? உனக்கு நான் இருக்கிறேன் என்ற வரி மிகவும் சிறியது தான். ஆனால் அது தரும் பலம் அவ்வளவு பெரியது என்று வலியை உணர்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.

            “சரிப்பா”, என்றான் நிம்மதியாக.

            “சாப்பிட்டியா டா?”

            “இங்கயே டைம் ஆனதுனால கொடுத்தாங்கப்பா. சாம்பார் சாதம் சாப்பிட்டேன். நீங்க சாப்பிட்டீங்களா?”

            “சாப்பிட்டேன் டா, சரி நீ பத்திரமா வீட்டுக்கு கிளம்பு. போய் ரெஸ்ட் எடு. எதுவும் வேலை செஞ்சிட்டு இருக்காத. அப்பா நைட் வந்து பாத்துக்குறேன்”, என்று சொல்லி விட்டு அவர் போனை வைக்க வேலை கிடைக்க வில்லை என்ற கவலை கூட பார்த்திபனுக்கு இருக்க வில்லை.

            ஏனோ இதற்கெல்லாம் காரணமான மங்கை நினைவு அவனுக்கு தன்னாலே வந்தது. ஒரு நொடியில் அவன் வாழ்வையே மொத்தமாக அல்லவா திருப்பி போட்டு விட்டாள்? நிச்சயம் அவள் தேவமங்கை தான் என்று எண்ணிக் கொண்டவன் அவளுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும் என்ற முடிவில் அவளது அலுவலகம் நோக்கி சென்று விட்டான்.

            அங்கே போய் விசாரித்ததும் அவள் அன்று அலுவலகம் வரவில்லை என்று தெரிந்தது. கூடவே அவளுக்கு காச்சல் என்றும் தெரிய வர அவன் மனது பாரமானது.

எப்படி அவளைப் பார்க்க என்று எண்ணிக் கொண்டே வீட்டுக்கு சென்றவன் முதல் வேலையாக தன்னுடைய அறையின் ஜன்னல் அருகே சென்று அவள் அறையைப் பார்த்தான்.

அவள் படுத்திருந்ததால் எதுவும் தெரியவில்லை. மங்கை காலையில் நன்றாக தான் இருந்தாள். பத்து மணிக்கு வேலைக்கு கிளம்பும் போது தான் நெஞ்சை கரித்துக் கொண்டு வாந்தி வந்தது. அப்படியே சோர்வாக படுத்துக் கொண்டாள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவள் உடல் சூடும் அதிகரித்தது.

            கோமளம் மகளுக்கு மாத்திரை கொடுத்து படுக்க வைத்து விட்டே சென்றாள். அவளும் சிறிது நேரத்தில் அலுப்பில் உறங்கி விட்டாள். அதனால் தான் பார்த்திபனால் அவளைப் பார்க்க முடிய வில்லை. அவன் அந்த நேரம் தன்னை தேடுவான் என்று அவளுக்கு தெரியாதே.

            மாலை ஆறு மணி வரைக்கும் பொறுத்து பார்த்தவன் அதற்கு மேல் முடியாமல் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து வந்த பாத்திரங்களை கழுவி எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.

அவன் கண்கள் அவளைத் தேடி அலைபாய்ந்தது. அப்போது சோர்வாக படுத்திருந்த மகளை எழுப்பிக் கொண்டிருந்தாள் கோமளம்.

            “பாப்பா ஆறு மணி ஆகப் போகுது. கொஞ்சம் எந்திச்சு வெளிய வந்து உக்காரு. படுத்தே இருந்தா இன்னும் முடக்கி தான் போடும். அப்பா வந்த அப்புறம் நம்ம பாண்டியன் டாக்டர் கிட்ட போய் ஒரு ஊசி போட்டுட்டு வந்துரு”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது தான் பார்த்திபன் அழைப்பு மணியை அழுத்தினான்.

            “இந்த நேரத்துல யார் வந்திருக்கா?”, என்று தனக்கு தானே பேசிய படியே கோமளம் செல்ல “யாரா இருக்கும்?”, என்று எண்ணி புருவம் உயர்த்திய மங்கையும் வெளியே லேசாக எட்டிப் பார்த்தாள்.

அங்கே நின்ற பார்த்திபனைக் கண்டதும் படக்கென்று அவன் பார்ப்பதற்கு முன் தலையை உள்ளே இழுத்துக் கொண்டவள் கண்ணாடியில் தன்னை பார்த்து அவசரமாக திருத்திக் கொண்டாள்.

            அப்படியும் தான் சகிக்கவே முடியாத தோற்றத்தில் இருக்க இப்படியே வெளியே போக முடியாது என்பதால் மீண்டும் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். அவளைக் காண தான் ஆவலாக வந்திருக்கிறான், அவளைத் தான் தேடிக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் அறிய வில்லை. தெரிந்திருந்தால் தன்னுடைய தரிசனத்தை அவனுக்கு கொடுத்திருப்பாளோ என்னவோ?

            அவனைக் கண்டதும் “வாப்பா பார்த்தி, உள்ள வா”, என்றாள் கோமளம்.

            “இந்த பாத்திரம் எல்லாம் கொடுக்க வந்தேன் அத்தை. சார் வரலையா?”

            “அது என்ன சார்? நான் அத்தைனா அவர் மாமாவா இருந்துட்டு போகட்டுமே?”, என்று கோமளம் கேட்க லேசாக சிரித்தவன் “சரி அத்தை”, என்றான்.

            “மாமா இன்னும் வரலை. கொஞ்சம் நேரம் ஆகும் பா. ஆனா போன் பண்ணி சீக்கிரம் வரச் சொல்லணும்”

            “என்ன ஆச்சு அத்தை, ஏதாவது பிரச்சனையா?”

            “இந்த மங்கை கழுதை தான் காச்சலை இழுத்து வச்சிருக்கா? ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும்”

            “ஐயோ காச்சலா? காலைல சாப்பாடு கொண்டு வரும் போது நல்லா இருந்தாங்களே?”, என்று தெரியாதது போலவே கேட்டான்.

            “அவ அப்படி தான். குறை மாசத்துல பிறந்தவ. பொசுக்கு பொசுக்குன்னு படுத்துருவா. இவளுக்கு எப்படி தான் கல்யாணம் பண்ணி பேர்காலம் பாக்க போறேனோ தெரியலை”, என்று கோமளம் புலம்ப மங்கைக்கு குழந்தைகள் பிறப்பது வரை காட்சிகள் கற்பனையாக அவனுக்கு வந்தது.

“கிளைமேட் மாறினதுனால காச்சல் வந்திருக்கும் அத்தை. கவனமா பாத்துக்கோங்க. நான் வரேன்”

            “சரிப்பா”, என்று சொன்னவர் அவன் திரும்பி சென்றதை பார்த்துக் கொண்டே இருந்தார். அவனுக்கு அங்கிருந்து செல்ல மனதில்லை தான். ஒரு முறையாவது அவளை பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கினான்.

“பாத்திரத்தை இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு கொண்டு வந்திருந்தா மங்கை கண்ணுல பட்டுருப்பாளோ?”, என்று கூட எண்ணினான்.

அவன் சோர்வுடன் வீட்டுக்கு வர மங்கை ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு தந்தை வரவுக்காக காத்திருந்தாள்.

அதே நேரம் தன்னுடைய அலுவலகத்தில் தீவிர யோசனையில் இருந்தார் சேது. எல்லா விஷயங்களும் நடந்து முடிந்திருந்தாலும் அடுத்த என்ன பிரச்சனையை கனகா கொண்டு வருவாள் என்று அவருக்கு கவலையாக இருந்தது. பிள்ளைகளை  நினைக்கும் போது மனதுக்கு அந்த அளவுக்கு கஷ்டமாக இருந்தது.

            இத்தனை நாட்கள் தான் எப்படி ஒரு முட்டாளாக இருந்திருக்கிறோம், தன்னால் தன்னுடைய பிள்ளைகள் எந்த அளவுக்கு கஷ்டப் பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அவருக்கே அவர் மீது வெறுப்பாக இருந்தது.