பார்த்திபன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் கயலை லேசாக அனைத்த படி அமைதியாக அமர்ந்திருந்தான். அது வரை இருந்த இதம் மூவருக்கும் தொலைந்தே போனது.
“ஏய் எதுக்கு டி நீ இங்க வந்த? எங்க உயிரை எடுக்கவா? ஒழுங்கு மரியாதையா வெளிய போ”, என்று கத்தினார் சேது.
“நான் எதுக்கு போகணும்? இது என் வீடு”, என்றாள் கனகா.
“நேத்து வாங்கினது பத்தலையா? இன்னும் இந்த வீட்ல உன்னை விட்டு வச்சா என் பிள்ளைகளை நீ கொன்னுருவ. வெளிய போ”, என்று உச்சக்கட்ட கோபத்தில் பேசினார். அவர் கோபத்தில் பார்த்திக்கு தான் தந்தைக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயமாக இருந்தது.
“எப்ப பாத்தாலும் பிள்ளைங்க பிள்ளைங்கன்னு சொல்லி சொல்லி என் உயிரை வாங்காதீங்க. அதனால தான் நான் முன்னாடியே இவங்க ரெண்டு பேரையும் ஹாஸ்டல்ல சேக்க சொல்லி சொன்னேன்? என் சந்தோஷமே இவங்களை வளத்ததுல போயிருச்சு. இப்ப இதுகளால தான் உங்களை வேற பிரியுற மாதிரி ஆகிருச்சு”, என்று கனகா பேசிக் கொண்டே இருக்க பிள்ளைகள் இருவரும் அவளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பிள்ளைகள் முகத்தில் இருந்த வேதனையை பார்த்த சேது தன்னுடைய பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து தன்னுடைய மாமனாரை தான் அழைத்தார்.
“சொல்லுங்க மாப்பிள்ளை, என்ன காலைலே கூப்பிட்டுருக்கீங்க?”, என்று கேட்டார் ஆறுமுகம்.
“இப்ப நானும் என் பிள்ளைகளும் வாழணும்னு நினைக்கிறீங்களா? இல்லை மூணு பேரும் விஷம் குடிச்சு சாகணும்னு நினைக்கிறீங்களா மாமா?”, என்று கேட்க அவர் சொன்னதைக் கேட்டு இங்கே இருப்பவர்களுக்கே அதிர்ச்சி என்றால் ஆறுமுகமும் பதறி போனார்.
“மாப்பிள்ளை காலைலே என்ன வார்த்தை பேசுறீங்க?”
“அது தான் காலைலே எங்க உயிரை வாங்க இங்க வந்து நிக்காளே உங்க பொண்ணு. இன்னுமா நாங்க உயிரோட இருக்கணும்னு இருக்கு. இவ எங்களை வாழ விட மாட்டா. நாங்க சீதா போன இடத்துக்கே போறோம். இவளை நம்பி என் பிள்ளைகளை இனி விட்டுட்டு போக மாட்டேன். நீங்க உங்க பொண்ணு உங்க பையன் கூட நிம்மதியா இருங்க”, என்றார்.
“ஐயோ இந்த கழுதை அங்க வந்தது எனக்கு தெரியாது மாப்பிள்ளை. ஒரு நிமிஷம் போனை ஸ்பீக்கர்ல போடுங்க. நான் அவ கிட்ட பேசுறேன்”, என்றார் ஆறுமுகம்.
சேதுவும் அதை செய்ய “ஏய் கனகா காலைலே அங்க என்ன டி பண்ணுற? உன்னை யாரு அங்க போகச் சொன்னா? என்னை சாகடிக்கனும்னே எனக்கு மகளா வந்து பிறந்துருக்கியா?”, என்று கேட்டார் ஆறுமுகம்.
“அப்பா இது என் வீடு. இங்க நான் வரக் கூடாதா?”
“உன் வீடா? உன் வீடு உன் புருஷன்ன்னு சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு? அருமை போல மாப்பிள்ளை, அழகான பிள்ளைங்கன்னு கிடைச்சும் வாழ வக்கில்லாத நாய் இப்ப அங்க போய் அவங்களை மொத்தமா சாகடிக்க நினைக்கிறியா? ஒழுங்கா கிளம்பி வா. இனி அங்க போன காலை உடைச்சு போட்டுருவேன்”
“நான் வர மாட்டேன். இங்க தான் இருப்பேன்”, என்று கனகா சொல்ல “மாப்பிள்ளை இவ பாம்பு. நம்ம காலை சுத்தினா கூட பரவால்ல. கழுத்தை சுத்தி இருக்கா. அறுத்து தான் எறியனும். நீங்க கவலைப் படாதீங்க. கொஞ்சம் பொறுத்துக்கோங்க, நான் இப்பவே போலீஸ் ஸ்டேஷன் போறேன். என் மூத்த பொண்ணை இவ தான் கொன்னான்னு சொல்ல போறேன்”, என்று ஆறுமுகம் சொல்ல “அப்பா”, என்று அலறினாள் கனகா.
“ஆமா டி அப்படி தான் சொல்லுவேன். மாப்பிள்ளை மேல இருந்த ஆசைல எங்க மூத்த பொண்ணுக்கு ஜன்னி வர வச்சு இவ தான் கொன்னான்னு சொல்லுவேன். இவ்வளவு வருஷம் அந்த பிள்ளைகளையும் கொடுமை படுத்திருக்க. இப்ப தான் எங்களுக்கு உண்மை தெரியும்னு உன் மேல கேஸ் கொடுக்க போறேன். ஒரு அப்பா பொண்ணு மேல கேஸ் கொடுத்தா கண்டிப்பா உடனே ஆக்ஷன் எடுப்பாங்க. உன்னை எல்லாம் சாகுற வரைக்கும் ஜெயில்ல போட்டு களி திங்க வைக்கணும். அப்ப தான் எனக்கு மனசு ஆரும். இனி இந்த வீட்டு பக்கம் வந்தா உன் அண்ணியே உன்னை செருப்பால அடிப்பா. நீங்க வைங்க மாப்பிள்ளை. இப்ப போலிசோட வரேன்”, என்று ஆறுமுகம் சொன்னதும் அதிர்ந்து போனவள் “அப்பா அப்படி எல்லாம் செய்யாதீங்க. நான் உடனே அங்க வந்துறேன். இனி இங்க வர மாட்டேன், அண்ணி கிட்டயும் சொல்லாதீங்க”, என்று சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து சென்று விட்டாள்.
சேதுவும் ஆறுமுகத்திடம் “அவ கிளம்பி போய்ட்டா இனி இங்கே வராத படி பாத்துக்கோங்க மாமா, நானும் என் பிள்ளைகளும் இனியாவது நிம்மதியா வாழந்துக்குறோமே”, என்று சொல்லி போனை வைத்தார். அவர் சொன்னதைக் கேட்டு ஆறுமுகத்துக்கு அவ்வளவு வேதனையாக இருந்தது.
பிள்ளைகள் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க “அவ வந்தா என் கிட்ட இருந்து விலகி போவியா பாப்பா நீ? அப்பாவுக்கு கஷ்டமா இருக்கு”, என்றார் சேது, அவர் கண்களும் கலங்கியது.
“உங்க கிட்ட பேச வந்தாலே திட்டுவாங்கப்பா. அதான் என்னையே அறியாம அப்படி செஞ்சிட்டேன். இனி பயப்பட மாட்டேன். எனக்கும் அண்ணாவுக்கும் சாப்பாடு ஊட்டுங்களேன்”, என்று கயல்விழி கொஞ்சிய படியே தந்தையை சமாதானப் படுத்த “ஆமா ஆமா, உங்க கையால எனக்கும் சாப்பிடணும் போல இருக்கு”, என்று பார்த்திபனும் தந்தையின் மனநிலையை மாற்றினான்.
நிறைவான மனதுடன் பிள்ளைகளுக்கு உணவு ஊட்டியவர் மகனிடம் பார்த்து கவனமாக செல்ல வேண்டும் என்று எச்சரித்து விட்டு கூடவே அவன் சட்டை பையில் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுகளை திணித்து விட்டு மகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
போகும் வழியில் மகளுக்கு டூர் போவதற்காக பணத்தையும் எடுத்துக் கொடுக்க கயல்விழி முகம் மத்தாப்பாக மலர்ந்து போனது. தந்தைக்கு எப்படி தெரியும் என்று கேட்க கவின் வந்து பார்த்திபனிடம் பேசியதை சொன்னார். கவினுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டு தந்தையின் தோளில் சந்தோஷமாக சாய்ந்த படி சென்றாள் கயல்விழி.
பள்ளிக்கு வந்ததும் பணத்தை ஆசிரியரிடம் கொடுத்து விட்டு தன்னுடைய வகுப்பறைக்கு வந்த கயலின் கண்கள் தேடியது கவினைத் தான்.
அவன் இன்னும் வரவில்லை என்றதும் நேராக எழுந்து சைக்கிள் ஸ்டாண்ட்க்கு தான் சென்றாள். அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் வந்து விட அவளை கண்டதும் புன்னகைத்தான் கவின்.
அவளும் சிறு சிரிப்போடு அவனை நெருங்கினாள். “என்ன அழுமூஞ்சி மேடம் இன்னைக்கு உங்க முகம் இவ்வளவு பிரைட்டா இருக்கு?”, என்று கேட்க அவள் சந்தோஷம் அப்படியே வடிந்தது.
“ஹேய் சாரி, நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் கயல்”
“எனக்கு தெரியும் கவின், அதை விடு. நான் எதுவும் நினைக்கலை”
“சரி என்ன இங்க நிக்குற? கிளாஸ்க்கு போகலையா?”
“உன்னை பாக்க தான் நிக்குறேன்”, என்று சொல்ல அவன் புருவம் உயர்ந்தது. “என் கிட்ட ஏதாவது சொல்லணுமா கயல்?”
“ஆமா தேங்க்ஸ் சொல்லணும்?”
“இது எதுக்கு?”
“எனக்காக அண்ணன் கிட்ட பேசிருக்க?”
“ஏய் அது நீ மட்டும் டூர் வரலைன்னு சொன்னது ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சு. அதான் உன் பிரண்ட்ஸ் பேசச் சொன்னாங்கன்னு உங்க அண்ணா கிட்ட பொய் சொன்னேன். எதையாவது உளறி வச்சிறாத”
“சரி நான் எதுவும் சொல்லலை. வா கிளாஸ்க்கு போவோம்”
“போறதுக்கு முன்னாடி உன் கிட்ட ஒண்ணு சொல்லணும் கயல்”
“என்ன? சொல்லு”
“நேத்து மாதிரி இனி எப்பவும் அழாத. சத்தியமா அதை என்னால பாக்கவே முடியலை”, என்று சொல்ல சட்டென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் என்ன அர்த்ததில் சொன்னானோ தெரிய வில்லை. அவளுக்கும் இது என்ன உணர்வு என்று தெரிய வில்லை. ஆனால் தனக்காக அவன் இப்படிச் சொன்னது அவள் மனதை நிச்சயம் தொட்டது.
அவள் அமைதியாக பார்த்த படி இருக்க “ஏய் என்ன ஆச்சு? பிரீஸ் ஆகிட்ட? சொல்லணும்னு தோணுச்சு. அதான் சொன்னேன். சரி வா கிளாஸ்க்கு போகலாம்”, என்றதும் அவளும் அவனுடன் நடந்தாள்.
டூர் செல்வதற்கு என்னவெல்லாம் எடுத்து வரவேண்டும் என்று அவன் பேசிய படியே செல்ல அவளும் அதை கவனித்துக் கொண்டே சென்றாள். ஆனால் அவனிடம் என்ன தான் சாதாரணமாக பேசினாலும் அவன் அக்கறையாக சொன்ன வார்த்தை அவள் ஆழ் மனதில் நிச்சயம் பதிந்து தான் போனது.
அண்ணன் தந்தைக்கு பிறகு அவளுக்கு கிடைத்த ஆறுதல் கவினுடையது. அப்படி இருக்க அதை எப்படி மறப்பாளாம்?