பால் வாங்கி விட்டு திரும்பி வரும் போது “பத்து நிமிஷம் பார்க்ல உக்காந்துட்டு போகலாமா?”, என்று கேட்டார் சந்திரன்.
“இல்லை, பாப்பா ஸ்கூல்க்கு போவா. ஏதாவது செஞ்சி கொடுக்கணும்”
“உங்க எல்லாருக்கும் சேத்து தான் கோமு சமைக்கிறா. நான் சொல்லிட்டு தான் வந்தேன். நீங்க வாங்க”, என்று சொல்லி அருகில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து அவரிடம் பேச ஆரம்பித்தார்.
சேதுவும் வெகு நாட்கள் கழித்து ஒரு நல்ல நண்பன் கிடைத்ததும் தன்னுடைய மன இருக்கங்களை எல்லாம் அவரிடம் இறக்கி வைத்தார்.
சிறிது நேரம் கழித்து இருவரும் பேசிய படியே வீட்டுக்கு வந்தனர். மீண்டும் எதுவும் சமைக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு சந்திரன் வீட்டுக்கு செல்ல சேதுவும் உள்ளே சென்றார்.
விடிந்தது கூட தெரியாமல் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள் பார்த்திபனும் கயல்விழியும். இத்தனை நாள் அவர்கள் இவ்வளவு நேரம் எல்லாம் தூங்கியதில்லை.
சேது பால் வாங்கி வரும் போது கயல்விழி ஒன்று படித்துக் கொண்டிருப்பாள் இல்லை அடுப்படியில் வேலை செய்து கொண்டிருப்பாள். பார்த்திபனும் அதே நேரம் ஏதாவது வேலை தான் செய்து கொண்டிருப்பான். தங்கை மற்றும் தந்தை உடையை அயர்ன் செய்து கொண்டிருப்பான். இல்லையென்றால் வீட்டுக்கு பின் பக்கம் பெருக்கிக் கொண்டிருப்பான். இன்றோ நல்ல உறக்கத்தில் இருந்தான். இவ்வளவு நாளும் கனகா அவர்களை காலையிலே அர்ச்சனை செய்து எழுப்பி விடுவாள். இன்று அந்த சுப்பிரபாதம் இல்லாததால் ஆழ்ந்த உறக்கம் பிள்ளைகளுக்கு.
உறங்கும் பிள்ளைகளைப் பார்த்தவருக்கு அப்படி ஒரு நிறைவு. மகனைப் பார்த்தவருக்கு அவன் அழகில் சிறு வியப்பு தான். கயல் விழியும் அழகு தான், ஆனால் நிறம் கொஞ்சம் குறைவாக இருப்பாள். ஆனால் பார்த்தி பேரழகனாக இருந்தான்.
கருகருவென்று அலைபாயும் சிகையும் அகலமான நெற்றியும் அடர்த்தியான புருவமும் கூர் நாசியும் பரந்த மார்பும் என ஆணழகனாக இருந்தான்.
“அப்படியே அவனோட அம்மா மாதிரியே அழகா இருக்கான். பொண்ணு என்னை மாதிரி தான்”, என்று இத்தனை வருடங்களுக்கு பிறகு பிள்ளைகளை ரசித்து மனதுக்குள் சிலாகித்தார்.
பின் சமையல் அறைக்குச் சென்று பால் காய்ச்ச ஆரம்பித்தார். இன்று சமையல் செய்ய வேண்டாம் என்றாலும் நாளையில் இருந்து அவர் செய்து தானே ஆக வேண்டும். கயல்விழிக்கு கொடுத்து விட வேண்டும், அவரும் அலுவலகத்துக்கு கொண்டு செல்ல வேண்டுமே? அதனால் எது எது எங்கே இருக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது வாசலில் நிழல் ஆட திரும்பிப் பார்த்தார். பார்த்திபனும் கயல்விழியும் தான் நின்றார்கள்.
பிள்ளைகளைப் பார்த்து சிரித்தவர் “எந்திச்சிட்டீங்களா ரெண்டு பேரும்? காப்பி போட்டு தரவா? இல்லை டீ வேணுமா?”, என்று கேட்டார். தந்தையை ஒரு நொடி வியப்பாக பார்த்தவர்கள் அடுத்த நொடி அவரை நெருங்கி அணைத்துக் கொண்டார்கள்.
நேற்று நடந்ததை கனவு என்று எண்ணி இருப்பார்கள் என்று எண்ணிய சேதுவுக்கு பிள்ளைகளை நினைத்து மெல்லிய சிரிப்பு.
அடுத்து வந்த நிமிடங்கள் மூவருக்குமே அவ்வளவு அழகான தருணங்கள். மூவரும் கேலி கிண்டலுடன் பேசிய படியே சேது போட்ட காபியை குடித்தனர்.
அப்போது “மாமா”, என்று அழைத்த மங்கையின் குரல் கேட்க மூவரும் எட்டிப் பார்த்தார்கள். வெளியே கையில் பாத்திரங்களுடன் மங்கையும் கவினும் தான் நின்றார்கள். அவர்களை கண்டு மூவருக்கும் முகம் மலர்ந்தது.
காலையிலே சிறப்பு தரிசனம் கொடுக்கும் அவனுடைய தேவதையை அவ்வளவு ஆசையாக சைட் அடிக்க ஆரம்பித்தான் பார்த்தி. எப்படி இந்த தைரியம் இந்த உரிமை எல்லாம் வந்தது என்று தெரிய வில்லை. ஒரு வேளை அவள் அவனை முறைத்துப் பார்த்தால் பார்வையை திருப்பி இருப்பானோ என்னவோ? அவள் முகத்தில் இருந்த ஆச்சரியம், வியப்பு, சிறு வெட்கம் என பார்த்தவனுக்கு அந்த தைரியம் வந்திருந்தது. அந்த தைரியத்தை அவள் அவனுக்கு கொடுத்தாளோ என்னவோ?
மங்கை ஒரு நொடி பார்த்திபனை பார்த்து விட்டு அவன் பார்வையில் திணறி பட்டென்று சேது புறம் திரும்பி “அம்மா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க மாமா”, என்றாள்.
“உள்ள வா மா மங்கை. உன் கால் இந்த வீட்ல படுறதுக்கு நாங்க புண்ணியம் செஞ்சிருக்கணும். கவின் நீயும் வா பா”, என்று அவ்வளவு அன்பாக வரவேற்றார் சேது.
அவள் சிறு கூச்சத்துடன் உள்ளே வர அவள் வலது காலை எடுத்து வைத்து வருவாளா என்று ஏக்கமாக பார்த்தான் பார்த்திபன்.
அவள் வேண்டும் என்று வைக்க வில்லை என்றாலும் அவளது வலது கால் தான் முதலில் வீட்டுக்குள் வந்தது. அதைக் கண்டு அவன் நிம்மதியாக புன்னகைக்க “கயல் கவின் கிட்ட இருந்து பாத்திரத்தை வாங்கு மா”, என்றார் சேது.
கயல் அவர்களை நெருங்க கவினும் அவள் கையில் பாத்திரத்தைக் கொடுத்தான். “உள்ள வாங்க அக்கா”, என்று சொல்லி மங்கையை உள்ளே அழைத்துச் சென்றாள் கயல்.
இருவரும் உணவை உள்ளே வைத்து விட்டு வந்தார்கள். “காலைலைக்கு தனியா, மதியத்துக்கு தனியா சாப்பாடு இருக்கு மாமா. மதியம் வெஜ் பிரியாணி தான் செஞ்சிருக்காங்க. அது தான் உங்களுக்கும் கயல்க்கும் கொண்டு போக வசதியா இருக்கும். பார்த்திக்கு மதிய சாப்பாடு அம்மா கொடுத்துருவாங்க”, என்றாள் மங்கை.
அவள் பேசும் போது அவளது முக மாற்றங்களையும் உதடுகள் குவிந்து விரிவதையும் அதுவும் தன்னுடைய பெயரை அவள் எளிதாக உச்சரிப்பதையும் கண் எடுக்காமல் பார்த்தான் பார்த்திபன். பெண்களுக்கு தான் ஆண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியுமே? அவன் அவளை அடித்து பார்ப்பதை அவளும் அறிந்து தான் இருந்தாள். அவன் பார்ப்பது தெரிந்ததாலே அவள் அவன் புறம் திரும்பவே இல்லை. திரும்ப முடியாத அளவுக்கு வெட்கம் அவளுக்கு வந்திருந்தது. உண்மையில் முதல் முறையாக அவனிடம் சலனம் கொண்டாள் மங்கை.
“பார்த்தி மதியம் இன்டர்வியூக்கு போயிருவான் மா. சாப்பாடு வெளியே பாத்துக்குவான். எங்களால தங்கச்சிக்கு தான் கஷ்டம். நைட்க்கு எதுவும் வேண்டாம் மா, இன்னைக்கு மூணு பேரும் வெளிய போய் சாப்பிடலாம்ன்னு இருக்கோம். நாளைக்கு நானே சமைச்சிருவேன். அம்மா கிட்ட சொல்லிரு”, என்று சேது சொல்ல “சரி மாமா, சூடா இருக்கும் போதே சாப்பிட்டுருங்க, நாங்க வறோம். வரேன் கயல்”, என்றவள் கடைசியில் மின்னல் வெட்டும் பார்வையை பார்த்திபன் நோக்கி வீசி விட்டு தான் சென்றாள். அதற்கே அவ்வளவு தடுமாறினான் பார்த்திபன்.
ஏனோ வெட்டும் பார்வை பார்த்து விட்டுச் செல்லும் அவள் கை பற்றி இழுத்து தன்னுடைய நெஞ்சில் சாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறக்க “காலைலே உசுப்பேத்துற டி”, என்று தனக்குள் முணங்கிக் கொண்டான்.
கயல் குளிக்கச் செல்ல “அப்பா நானும் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு கிளம்பச் சென்றான் பார்த்திபன்.
கயலுக்கும் தனக்கும் தேவையான உணவுகளை வழக்கமாக எடுத்துச் செல்லும் பாத்திரங்களில் அடைத்து வைத்த பிறகே குளிக்கச் சென்றார் சேதுராமன்.
மூவரும் கிளம்பி முடித்து சாப்பிட அமர்ந்தார்கள். ஏனோ இத்தனை வருடம் இல்லாத அழகான காலையாக இருந்தது அவர்களுக்கு. காலை உணவாக இட்லி, சாம்பார், சட்னி, வடை என்று இருக்க நன்றாகவே சாப்பிட்டார்கள். பார்த்திபனுக்கோ அப்போதும் “இதில் எதையாவது மங்கை செய்திருப்பாளா?”, என்று யோசித்து அவள் கை மணத்தை தேடிய படியே உண்டான்.
கயல் விழி எதுவோ அவனை கலாய்க்கவும் தான் மங்கை நினைவில் இருந்து வெளியே வந்தான். அண்ணனும் தங்கையும் மாற்றி மாற்றி விளையாட்டுக்கு சண்டை போட்டுக் கொள்ள பிள்ளைகள் பேச்சை ரசித்து கேட்டிருந்தார் அந்த தந்தை.
இது வரை அவர்கள் இப்படி எல்லாம் பேசியதில்லை என்பதால் அவருடைய பிள்ளைகளுக்கு இந்த அளவுக்கு பேசத் தெரியுமா என்று தான் அவருக்கு வியப்பாக இருந்தது.
அவர்கள் சந்தோஷமாக பேசிய படி பாதி சாப்பாட்டில் இருக்கும் போது அதைக் கெடுப்பது போல “என்னை வீட்டை விட்டு விரட்டிட்டு எப்படி உங்களால நிம்மதியா சாப்பிட முடியுது?”, என்ற கனகாவின் குரல் கேட்டது.
அவள் குரலில் மூவரும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தார்கள். அந்நேரம் அவளை அங்கே யாரும் எதிர் பார்க்கவே இல்லை.
அவளைக் கண்டதும் தந்தையை ஒட்டி அமர்ந்திருந்த கயல்விழி சட்டென்று அவரிடம் இருந்து விலகி அண்ணன் அருகில் சென்று அமர்ந்து கனகாவை பயப்பார்வை பார்க்க மகளின் செய்கையில் சேது உள்ளுக்குள் செத்தே போனார். எந்த அளவுக்கு மகளை பயமுறுத்தி வைத்திருக்கிறாள் இந்த ராட்சசி என்ற கோபம் கண் மண் தெரியாமல் வந்தது அவருக்கு.