அத்தியாயம் 5 

காதலில் மட்டுமே 

எண்ணங்கள் வண்ணங்களாகும் 

கற்பனைகள் கவிதைகளாகும்!!!

இங்கே அனைவரும் நிம்மதியான உறக்கத்தில் இருக்க உறக்கம் மட்டும் இல்லை மொத்த நிம்மதியையுமே தொலைத்திருந்தாள் கனகா.

சற்று நேரத்துக்கு முன்பு அந்த வீட்டில் இருந்து கிளம்பியதும் தகப்பனும் சரி அண்ணனும் சரி கனகாவிடம் எதையுமே பேச வில்லை.

காரில் சென்று கொண்டிருக்கும் போது அவளாகவே “அப்பா”, என்று அழைத்தாள்.

“இன்னொரு தடவை அப்பான்னு கூப்பிட்ட நான் மனுசனா இருக்க மாட்டேன். இந்த மாதிரி கொடுமையை எல்லாம் பாக்க கூடாதுன்னு தான் என் பொண்டாட்டி போய் சேந்துட்டா போல? நீ எல்லாம் ஒரு பொம்பளையா தூ? அடுத்த வீட்டு பொண்ணை மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்துருந்தா கூட பிள்ளைகளை நல்லா வச்சிருந்துருப்பா. ஆனா நீ சொந்த அக்கா பிள்ளைகளை கொடுமை படுத்திருக்க? உன்னை எல்லாம் மன்னிக்க கூட மாட்டேன்”, என்றார் ஆறுமுகம்.

“அண்ணா, அப்பா எப்படி பேசுறார்ன்னு பாரு”, என்று சொல்ல அதற்கு சந்தானம் எந்த பதிலையுமே சொல்ல வில்லை. “உன்னை எல்லாம் மனுஷியா கூட நினைக்க மாட்டேன்”, என்று சொல்லாமல் செயலில் காட்டி விட்டார்.

இப்படி தன்னை அவமானப் படுத்துபவர்கள் உடன் செல்கிறோமே என்று அவ்வளவு தன்னிரக்கமாக இருந்தது கனகாவிற்கு. இவர்களே இப்படி என்றால் அண்ணனின் மனைவி கோதை என்ன சொல்வாளோ என்று அவ்வளவு திகைப்பு.

ஏனென்றால் இது வரை கனகா கோதையை அண்ணி என்று எண்ணி மரியாதையாக நடத்தி இருந்தால் இந்த பயம் வராது.

தான் தான் இந்த வீட்டுக்கு மகாராணி போல அவளிடம் நடந்து கொண்டால் அவளுக்கு எப்படி இருக்கும்? கனகா பயந்தது போல தான் ஆனது.

வீட்டுக்கு போனதும் அவர்களை வரவேற்ற கோதை “என்னங்க ஆச்சு? அவசரமா பார்த்தி கூப்பிட்டான்னு போனீங்க? இப்ப உங்க தங்கச்சியோட வந்துருக்கீங்க?”, என்று கேட்டாள். அவள் என்னமோ சாதாரணமாக தான் என்ன நடந்தது என்று விசாரித்தாள்.

ஆனால் குதர்க்கமாக யோசித்த கனகாவோ “என்ன அண்ணி, எதுக்கு வந்தேன்னு என்னைக் கேக்குறீங்களா?”, என்று கேட்டாள்.

“உன் புத்தி இப்படி தானே போகும்? என்ன பிரச்சனைன்னு மருமக சாதாரணமா தான் கேட்டுச்சு. உன் புத்தி தான் அப்படி போகுது”, என்றார் ஆறுமுகம்.

கனகா வாயை  மூடிக் கொள்ள அடுத்த நொடி மடை திறந்த வெள்ளம் போல அனைத்தையும் மனைவியிடம் சொன்னார் சந்தானம். அண்ணன் சொல்ல சொல்ல அண்ணன் மனைவியும் அவர்களின் இரண்டு பெண் பிள்ளைகளும் கனகாவைப் பார்த்த பார்வையில் துளி கூட மரியாதை என்பது இருக்க வில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவருக்குமே பார்த்திபனையும் கயல்விழியையும் அவ்வளவு பிடிக்கும்.

இன்னும் சொல்ல போனால் கோதைக்கு தன்னுடைய மூத்த மகளை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் மலையளவு இருந்தது. அவளின் பிள்ளைகளுக்கு கூட பார்த்தி அத்தான் என்றால் உயிர் தான். கயல் விழி கூட அவர்களுக்கு நெருங்கிய தோழி தான். அப்படி இருக்க இந்த விஷயம் அனைவருக்குமே பேரிடியாக தான் இருந்தது.

“என்ன கனகா இதெல்லாம்? உங்க அண்ணா சொல்றது எல்லாம் உண்மையா? தாயில்லா அந்த பிள்ளைகளுக்கு தாயா இருக்க வேண்டாம். ஒரு மனுஷியா மனிதாபிமானத்தோட நடந்திருக்கலாமே? பார்த்தி இந்த வீட்டுக்கும் சரி அவங்க அப்பா வீட்டு பக்கமும் சரி ஒரே ஆண் வாரிசு. அவனைக் கூட நீ விட்டு வைக்கல போல? வேண்டாம் பா. நான் ஆதங்கத்துல ஏதாவது சொல்லுவேன். நீ இது என் வீடு நான் பிறந்த வீடுன்னு ஏதாவது சொல்லுவ. எனக்கு தேவையா?”, என்றாள் கோதை.

அதற்கு கனகா வாய் திறக்கும் முன் “ஆன் அவ வீடுன்னு சொல்லுவா. இனி சொன்னா கொன்னு போட்டுற மாட்டேன். கூட பிறந்த பாவத்துக்கு மீதி இருக்குறதை போடு. தின்னா திங்கட்டும். இல்லை சாகட்டும்”, என்று சொல்லி விட்டு சந்தானம் சென்று விட “இவளுக்கு எல்லாம் பழையதை கொடு மா கோதை. அப்ப தான் புத்தி வரும். என்ன ஜென்மமோ”, என்று மருமகளிடம் சொல்லி விட்டு மகளை புழுவைப் பார்ப்பது போல பார்த்து விட்டுச் சென்று விட்டார் ஆறுமுகம்.

அவ்வளவு அவமானமாக இருந்தது கனகாவிற்கு. “தப்பா எடுத்துக்காத கனகா. எல்லாரும் ஆளுக்கு ஒரு ரூம்ல இருக்கோம். பிள்ளைகளுக்கும் தனிதனி ரூம் கொடுத்துட்டோம். உன் மருமகளுங்க மாறிக்க சொன்னா கேக்க மாட்டாங்க.  அதனால் பாய் தலையணை தரேன். இங்க ஹால்ல படுத்துக்கோ. கொசு கொஞ்சம் கடிக்கும். போர்வையை போர்த்திக்கோ”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் கோதை.

“சரிங்க அண்ணி”, என்று சொல்லி விட்டு படுத்துக் கொண்ட கனகாவிற்கு இருக்கும் நிலைமையை எண்ணி அவ்வளவு கஷ்டமாக இருந்தது.

இனி இந்த வீட்டில் தன்னுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று முதல் நாளே அவளுக்கு தெரிந்து போனது.

அடுத்த நாள் அழகாக விடிந்திருந்தது. “கோமு விடிஞ்சிருச்சு பாரு”, என்று மனைவியை எழுப்பி விட்டார் சந்திரன்.

கண்ணை கசக்கிய படி எழுந்த கோமளம் “நேத்து தூங்க நேரம் ஆச்சுல்ல? அதான் கண்ணு வலிக்குது”, என்றாள்.

அவள் சொன்னதும் தான் நேற்றைய நினைவு சந்திரனுக்கே வந்தது. “நான் போய் சேதுவை பாத்து நாலு வார்த்தை ஆறுதலா பேசிட்டு அப்படியே பால் வாங்கிட்டு வரேன். வந்து ஆபீஸ் கிளம்பனும், இன்னைக்கு அவங்க வீட்ல என்ன மன நிலைல இருப்பாங்கன்னு தெரியாது. அதனால அவங்க மூணு பேருக்கும் கொஞ்சம் சேத்தே சமைச்சிரு, அவங்க வேண்டாம்னு சொன்னாலும் நாம அதை நைட் சாப்பிட்டுக்கலாம்”, என்றார்.

“சரிங்க, நான் செஞ்சு கொடுத்துறேன்”, என்று சொல்ல காலைக் கடன்களை முடித்து விட்டு சந்திரனும் சேதுவைத் தான் தேடிச் சென்றார். தினமும் பால் வாங்க சேது தான் செல்வார் என்பதால் இன்றும் அதே நேரத்தில் அவரைப் பார்க்கலாம் என்று தான் சென்றார்.

அவர்கள் வீடு பூட்டி இருக்க “ஒரு வேளை அவர் இன்னும் எந்திக்கலையோ? சரி பாலையாவது வாங்கிட்டு வருவோம்”, என்று எண்ணி அவர் கேட்டைத் திறக்க அப்போது தங்களின் வீட்டுக் கதவை திறந்து வெளியே வந்தார் சேதுராமன்.

அவரைக் கண்டதும் சந்திரன் மலர்ந்த முகத்துடன் “வணக்கம் சேது சார்”, என்றார்.

“குட் மார்னிங் சந்திரன். இந்த சார் மோர் எல்லாம் வேண்டாம். பால் வாங்க தானே போறீங்க? இருங்க நானும் வரேன்”, என்றவர் அவருடன் கிளம்பி விட்டார்.

இருவரும் பேசிய படியே சென்றார்கள். “நீங்க ஓகே தானே சேது?”, என்று சிறு தயக்கத்துடன் கேட்டார்.

“ஓகே தான். பிள்ளைகளை பாக்கும் போது தான் அவ்வளவு வேதனையா இருக்கு. நான் நல்ல அப்பாவா இல்லையோன்னு மனசு அப்படி அறிக்குது. நேத்து ஒரு வண்டி வாங்கணும்னு கேக்க மகன் அப்படி தயங்குறான். இத்தனைக்கும் பழைய வண்டி தான் கேட்டான். அப்புறம் மக, அவ டூர் கூட போகலைன்னு ஸ்கூல்ல சொல்லிருக்கா. எனக்கு இந்த விஷயமே தெரியாது”

“அது எல்லாம் சரியா போகும்? முடிஞ்சதை யோசிச்சு வருத்தப் படாதீங்க. இனி எப்படி பாத்துக்கணுமோ அப்படி பாத்துக்கோங்க”

“நானும் அதை தான் நினைச்சேன் சந்திரன்”

“அப்புறம் வண்டி வாங்கணும்னு சொன்னீங்களே? வாங்குறது தான் வாங்குறீங்க பழைய வண்டி எதுக்கு? பார்த்திக்கு புதுசாவே வாங்கிறலாம்? நாங்க டிராவல்ஸ்க்கு கார் வாங்கின ஷோரூம் ஓனர் எனக்கு தெரிஞ்சவர் தான். கம்மி ரேட்க்கு பேசி முடிச்சிக்கலாம்”

“அது.. புது வண்டியா?”, என்று அவர் யோசிக்க “பணம் பத்தி எதுவும் யோசிக்காதீங்க? ஒரு அஞ்சு பேமெண்ட்டா கூட கட்டிக்கலாம்”

“நிஜமாவா? ஈ.எம்.ஐ மாதிரியா? வட்டி அதிகம் வருமே?”

“அதெல்லாம் இல்லை., நான் தான் சொன்னேனே அவங்க தெரிஞ்சவங்க தான்னு. உங்களை வண்டிக்கான பணத்தை தான் கொஞ்சம் கொஞ்சமா கொடுக்குறதுக்கு நான் அவர் கிட்ட பேசுறேன்”

“அப்ப சரி. இப்ப பாதி பணம் இருக்கும். மீதியை ரெண்டு தவனையா கொடுத்துருவேன்”

“சரி இன்னைக்கே போய் பாத்துறலாமா? சாயங்காலம் உங்க வேலை முடிஞ்சதும் நான் சொல்ற இடத்துக்கு வந்துருங்க. ரெண்டு பெரும் சேந்தே போயிறலாம்”, என்று சொல்ல அவரும் சரி என்று சொன்னார்.