நந்தன் மகன் அருகே தளர்ந்து அமர லதா ஏதோ சொல்ல போனாள். அவளை பேச விடாமல் கையை வைத்தவன் “இவ்வளவு நாள் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசினதுக்கு எங்க வீட்ல எனக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக் கொடுத்துட்ட டி? என் கிட்ட ஒரு மாதிரி பேசிருக்க. என் தங்கச்சி கிட்ட வேற மாதிரி பேசிருக்க அப்படி தானே? இது தெரியாம முட்டாளா இருந்துருக்கேன். உனக்கும் அந்த கனகாவுக்கும் என்ன வித்தியாசம்? உன் மேல போய் அன்பு வச்சு உனக்கு ஏத்தாப்ல ஆடினேன் பாரு. என்னைச் சொல்லணும்? இனி உனக்கும் எனக்கும் சம்பந்தம் இதோ இருக்கானே நம்ம மகன். அவன் மட்டும் தான்”, என்று சொல்லி விட்டு மகன் அருகே படுத்து விட்டான்.

கணவனின் உதாசீனமும் மாமனார் மாமியார் பேச்சும் அவளை வெகுவாக உலுக்கி இருக்க தரையில் சுவரில் சாய்ந்து அமர்ந்தவள் கண்ணீர் விட்ட படியே இருந்தாள்.

கீழே பேசிக் கொண்டிருப்பது தெரியாமல் அறைக்குள் வந்த மங்கை நேராக சென்று நின்றது ஜன்னல் அருகே தான். இன்று அதிசயமாக பார்த்திபனும் அதே ஜன்னல் அருகே நின்று அவளைத் தான் பார்த்திருந்தான்.

அவன் இங்கே பார்த்த படி இருக்கவும் திகைத்து போனாள் மங்கை. இத்தனை நாள் இப்படி எல்லாம் அவன் பார்த்ததே இல்லை.

அதுவும் அவ்வளவு நேசத்தை கண்களில் தேக்கி அவன் அவளைப் பார்க்க அவளுக்கோ அங்கே நிற்கவா வேண்டாமா என்று பெரிய குழப்பம்.

அவனை பார்க்கவும் தயக்கமாக இருந்தது. நகர்ந்து விட்டால் அவன் முகம் சுண்டி போய் அவமானப் பட்டு விடுவானோ என்றும் பயமாக இருந்தது.

அதனால் அவள் அப்படியே இருக்க அவனும் அவளைப் பார்த்த படியே இருந்தான். அதுவும் அவள் விலகிக் கொள்ள வில்லை என்றதும் அவன் உதடுகள் வேறு லேசாக மலர்ந்தது. ஜன்னல் கம்பியில் சாய்ந்து நின்று உரிமையாக அவளை சைட் வேறு அடிக்க அவளுக்கு தான் புதிதாக வெட்கமெல்லாம் வந்து தொலைத்தது.

“இவன் பார்வை வேற என்னமோ செய்யுதே?”, என்று என்று எண்ணிக் கொண்டிருக்க அவனோ கையசைத்தான். அவளும் பதிலுக்கு சைகையால் என்ன என்று கேட்டாள்.

அவள் சைகையில் சிரித்தவன் “போய் தூங்கு”, என்னும் விதமாய் சைகை செய்ய இது தான் சாக்கென்று விளக்கை நிறுத்தி விட்டு படுத்து விட்டாள். அப்படி ஒரு படபடப்பு. இதயம் அவ்வளவு வேகமாக துடித்தது மங்கைக்கு.

அவள் விளக்கை நிறுத்தியதும் பார்த்திபனும் விளக்கை நிறுத்தி விட்டு படுக்கையில் படுத்தான். ஆனால் அவனுக்கு துளி கூட தூக்கம் வர வில்லை. பார்க்கில் தூங்கியதாலா இல்லை அதிக அளவில் இருந்த சந்தோஷமா என்று தெரிய வில்லை. ஆனால் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவனுக்கு. அவன் வாழ்நாளில் அவன் சந்தோஷமாக இருந்தது இந்த தருணமாக தான் இருக்கும்.

ஏனோ இத்தனை வருடங்களுக்கு பிறகு அவர்களது தந்தை அவர்களுக்கு கிடைத்த நிறைவு. கூடவே கனகாவை எண்ணி சிறு குற்ற உணர்ச்சியும் வந்தது. தங்களுக்கு அவர் தந்தை என்றாலும் கனகாவிற்கு கணவர் ஆயிற்றே. சில நாட்கள் பிரச்சனையை ஆறப் போட்டு விட்டு பிறகு கனகாவை இங்கே அழைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் கனகா அவன் கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயங்களை எல்லாம் செய்யக் கூடியவள் என்பதை அவன் அறிய வில்லை.

எவ்வளவோ உருண்டு படுத்தும் அவனுக்கு உறக்கம் வரவில்லை. எழுந்து ஹால்க்கு வந்தான். அங்கே சுவரில் சாய்ந்து சேதுராமன் அமர்ந்திருக்க அவர் மடியில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தாள் கயல்விழி.

தங்கையையும் தந்தையும் பார்த்து அவன் அமைதியாக நிற்க அவனுக்கும் அவர் மடியில் படுத்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

மகன் மகள் பற்றியும் மனைவி பற்றியும் கண்களை மூடி யோசித்துக் கொண்டிருந்த சேது ஏதோ நிழல் ஆடவும் கண்களை திறந்து பார்த்தார்.

மகன் அங்கே நிற்கவும் “பார்த்தி இங்க வாடா”, என்று மெதுவாக அழைத்தார்.

அவரை நெருங்கியவன் “தூங்கலையா பா? பாப்பாவை ரூமுக்கு தூக்கிட்டு போய் படுக்க வச்சிறவா? எவ்வளவு நேரம் நீங்க உக்காந்துட்டே இருப்பீங்க? தூங்க வேண்டாமா?”, என்று கேட்டான்.

“நீ இங்க வா. என் கிட்ட வா”, என்று சொல்லி அவனை இழுத்து தன் அருகே அமர வைத்தவர் “இந்த அப்பாவை மன்னிப்பியா டா?”, என்று கண் கலங்கிய படி கேட்டார்.

அடுத்த நொடி தங்கையை போல அடுத்த பக்கம் அவன் அவர் மடியில் படுத்துக் கொண்டான். மகளை ஒரு கை வருடிக் கொண்டிருக்க இப்போது அவரின் மற்றொரு கரம் மகனையும் வருடி விட்டது.

“எவ்வளவு நாள் ஆசை தெரியுமாப்பா இது?”, என்று ஏதோ கனவில் இருப்பவன் போல மகன் ரசித்து சொல்ல வந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டார் சேது. பிள்ளைகளை எதற்காகவெல்லாம் ஏங்க வைத்திருக்கிறேன் நான் என்று அவ்வளவு கவலையாக இருந்தது.

“உனக்கு அப்பா கிட்ட வேற ஏதாவது சொல்லணுமா டா?”

“எங்க தேடியும் வேலை தான் கிடைக்க மாட்டிக்குப்பா. பேசாம ஏதாவது ஜவுளிக் கடையில அக்கவுண்டஸ் செக்ஷன்ல வேலைக்குச் சேந்துறவா? சம்பளம் ரொம்ப இருக்காது. ஆனா சும்மாவே எவ்வளவு நாள் இருக்குறது?”

“இல்லை நீ உடனே வேலைக்கு போகணும்னு இல்லை. உனக்கு பிடிச்ச வேலை வரும். அப்ப போயிக்கலாம். அப்பா பேசினதை எல்லாம் மனசுல வச்சிக்காத டா பார்த்தி”

“நீங்க பேச மாட்டீங்களான்னு ஏங்கிருக்கோம் பா. நீங்க திட்டினா கூட எங்களுக்கு சந்தோஷம் தான்”, என்று சொன்னவன் என்னவோ சாதாரணமாக சொல்லி விட்டான். அந்த அன்பின் கணம் அவரை தான் அதிகம் அழுத்தியது.

“அப்பா எனக்கு உங்க கிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்”

“சொல்லு பா”

“கயல் குட்டி ஸ்கூல்ல இந்த சனி ஞாயிறுல டூர் போறாங்களாம். பாப்பா எங்கயும் போனது இல்லை பா. அனுப்பி விடுவோமா? நம்ம கவின் தான் வந்து சொன்னான்”

“காலைல அவளை பஸ் ஏத்தி விடப் போகும் போது ஏ.டி.எம்ல இருந்து பணம் எடுத்து கொடுத்துறேன் பார்த்தி. உனக்கு ஏதாவது வேணுமா டா? இப்பவாது இந்த அப்பா கிட்ட உரிமையா கேளு கண்ணா”

“வேணும் தான். ஆனா”, என்று இழுக்க அவன் இத்தனை நாள் கேட்காமல் இப்போது உரிமையாக கேட்க தயங்குவது புரிந்தது.

“கேளு டா பார்த்தி. நான் உன் அப்பா டா. இவ்வளவு நாள் மாதிரி இருக்க வேண்டாமே?”

“ஒரு செகண்ட்ஹேன்ட் வண்டி இருந்தா வாங்கிக் கொடுங்க பா. வேலை தேடி பஸ்ல போறது ரொம்ப கஷ்டமா இருக்கு. டி.வி.எஸ் பிப்டி கூட போதும்”

“அப்பா பாக்குறேன் டா. உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்?”

“சரிப்பா. தூங்க போகலாம். இப்படியே இருந்தா உங்களுக்கு முதுகு வலிக்கும். நான் பாப்பாவை தூக்குறேன்”, என்றான்.

            “அதெல்லாம் வேண்டாம். நீ உள்ள போய் ரெண்டு தலவாணியும் போர்வையும் எடுத்துட்டு வா. நான் இங்கயே பாப்பா கூட படுத்துக்குறேன்”

            “சரிப்பா”, என்றவன் செல்ல போக “நீயும் இங்கயே இன்னைக்கு ஒரு நாள் படுக்கியா பார்த்தி?”, என்று கேட்டார் அவர்.

            பிள்ளைகள் எப்படி அவர் அருகாமைக்காக ஏங்குகிறார்களோ அவரும் பிள்ளைகளுக்காக ஏங்குகிறார் என்று புரிய சிறு சிரிப்புடன் அங்கிருந்து சென்றவன் மூவருக்கும் தலையணை மற்றும் போர்வை எடுத்து வந்தான்.

            முதலில் ஒரு தலையணையை போட்டு தங்கையை அப்பா மடியில் இருந்து நகர்த்தி படுக்க வைத்து விட்டு அவளுக்கு போர்வை மூடி விட்டவன் தந்தைக்கும் தலையணை போட்டு படுக்க சொன்னான். அந்த பக்கம் அவர் அருகே அவனும் படுத்துக் கொண்டான்.

            “பார்த்தி நீ சாப்பிடலை தானே? ஏதாவது செஞ்சு தரவா டா?”, என்று கேட்டார் சேது.

            “நீங்க அமைதியா தூங்குங்க பா. நான் வெளிய சாப்பிட்டு தான் வந்தேன்”, என்று சொல்ல அவரும் கண்களை மூடிக் கொண்டார்.

            இன்று காலையில் மூன்று இட்லி மட்டுமே பார்த்திபன் உண்டிருந்தான். ஆனால் இப்போது அவனுக்கு பசிக்கவே இல்லை. மனம் சந்தோஷத்தில் பூரித்திருக்க அவனுக்கு எப்படி பசிக்குமாம்?

            அடுத்து அவனுக்கு வந்த நினைவு மங்கை. அவள் மட்டும் இன்று பேசி இராவிட்டால் எதுவுமே மாறி இருக்காது. அவள் மேல் அந்த அளவுக்கு நன்றிக் கடன் எழுந்தது. கூடவே அவளை எப்போதும் இழக்கவே கூடாது என்ற பேராசையும். ஆனால் அவள் மனது தன்னைப் பற்றி என்ன நினைக்கும்? தைரியம் இல்லாதவன், கோழை, வேலை இல்லாதவன், அவனையே அவனுக்கு பார்த்துக் கொள்ள தெரியாது, இப்படி தானே அவள் தன்னைப் பற்றி நினைப்பாள் என்று எண்ணி சோர்ந்து போனது.

தொடரும்..