கனகாவின் தந்தைக்கு அதே ஊர் தான் என்பதால் அடுத்த பத்து நிமிடத்தில் அவரும் அவருடைய மூத்த மகனும் வந்து விட்டார்கள்.
அந்த நேரத்தில் அனைவரும் வெளியே நிற்பதைக் கண்டவர்களுக்கு “ஒரு வேளை பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட சண்டையா? அதுக்கு தான் நம்மை வரச் சொல்லி இருக்கிறார்களோ?”, என்ற எண்ணம் தான் வந்தது.
“கனகா.. மாப்பிள்ளை.. என்ன எல்லாரும் வெளிய நிக்குறீங்க? அதுவும் இந்த நேரத்துல?”, என்று கேட்டார் பார்த்திபனின் தாத்தா ஆறுமுகம்.
“அதானே? ஏதாவது பிரச்சனையா டா பார்த்திபா. எதுக்கு அவசரமா வரச் சொன்ன?”, என்று கேட்டார் அவனின் மாமா சந்தானம்.
“நான் சொல்றேன் அண்ணா, உன் மாப்பிள்ளை கிட்ட எல்லாரும் என்னைப் பத்தி தப்பு தப்பா சொல்லிக் கொடுத்து எங்களைப் பிரிக்க பாக்குறாங்க அண்ணா. நான் இந்த வீட்டு மேலயும் இந்த பிள்ளைகள் மேலயும் என் புருஷன் மேலயும் எவ்வளவு பாசம் வச்சிருந்தேன்? அதெல்லாம் பொய்ன்னு சொல்றாங்க அண்ணா. அப்பா கேளுங்க பா. இத்தனை வருஷம் இந்த குடும்பத்துக்காக வாழ்ந்த என்னை எப்படி சொல்லிட்டாங்க பாருங்க”, என்று ஏற்ற இறக்கத்தோடு பேசி கனகா கண்ணீர் வடிக்க முதல் முறையாக சேதுராமன் மனைவியின் நடிப்பு திறனை நேருக்கு நேர் கண்டார்.
“என்ன மாப்பிள்ளை இதெல்லாம்? என் மூத்த மக செத்து போனதுக்கு அப்புறம் உங்களுக்காகவும் அக்கா பிள்ளைகளுக்காகவும் தன்னுடைய வாழ்க்கையையே கொடுத்தவ என் பொண்ணு. அவளை இப்படி பேசுவீங்களா?”, என்று கேட்டார் ஆறுமுகம்.
“இவ்வளவு நாளும் நானும் உங்களை மாதிரி முட்டாளா தான் இருந்தேன் மாமா. இப்ப தான் உங்க பொண்ணு பத்தி எல்லாம் தெரியுது. இவ ஒரு நய வஞ்சகி மாமா. என்ன நடந்ததுன்னு சொல்றேன். அதுக்கப்புறம் நீங்களே ஒரு முடிவு சொல்லுங்க”, என்று ஆரம்பித்த சேது மங்கை சொன்ன அனைத்தையும் சொல்லி முடிக்க ஆறுமுகமும் சந்தானமும் அதிர்ந்து தான் போனார்கள்.
பார்த்திபனும் கயல் விழியும் வேறு யாருடைய பிள்ளைகளாக இருந்திருந்தால் கூட கனகாவிற்காக பேசி இருப்பார்கள்? ஆனால் அவர்கள் அவர்களுடைய ரத்தமாயிற்றே. சீதாவும் அவர்கள் வீட்டு பெண் அல்லவா? அப்படி இருக்க பார்த்திபனும் கயல் விழியும் அவர்களின் ரத்த உறவு ஆயிற்றே?
மகள் தன்னுடைய பேரப் பிள்ளைகளுக்கு செய்த விஷயங்களை கேட்டு ஆறுமுகம் வாயடைத்துப் போய் பார்க்க “என்ன கனகா இதெல்லாம்? மாப்பிள்ளை சொல்றது எல்லாம் உண்மையா?”, என்று கேட்டார் சந்தானம்.
கனகா என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்க “எங்களுக்கும் இந்த விஷயம் தெரியாது மாப்பிள்ளை. பார்த்தியையும் கயலையும் இந்த பிசாசு நல்லா பாத்துக்குறான்னு தான் நம்பினோம். இவளுக்குள்ள இப்படி ஒரு அரக்கி இருப்பான்னு தெரியாம போச்சு”, என்றார் சந்தானம்.
“ஆமா மாப்பிள்ளை, நீங்க நல்லா இருக்கணும்? நம்ம வீட்டு பிள்ளைங்க அம்மா இல்லாம கஷ்டப் படக் கூடாது, வேற ஒரு பொண்ணு வந்தா அவங்களை சித்தி கொடுமை பண்ணுவான்னு தான் இந்த நாயை உங்களுக்கு கட்டி வச்சோம். ஆனா இவளே என் பேரப் பிள்ளைகளுக்கு எமனா இருந்திருப்பான்னு தெரியாம போச்சே? ஐயோ என் பிள்ளைங்க எவ்வளவு அழுதுச்சோ?”, என்று புலம்பிய ஆறுமுகம் பார்த்திபனையும் கயல்விழியையும் அணைத்துக் கொண்டார்.
“இவ பண்ணுறதை எல்லாம் இந்த தாத்தா கிட்ட சொல்லி இருக்கலாமே?”, என்று கேட்ட பெரியவர் “பெத்த அப்பன் கிட்டயே உங்களைப் பேச விடாதவ எங்க கிட்டயா சொல்ல விட்டுருக்க போறா? ஐயோ சீதா உன் பிள்ளைக இப்படி ஒரு வாழ்க்கை வாழுறதைப் பாத்து உன் ஆன்மா எப்படி துடிச்சதோ? நீ இருந்துருந்தா உன் பிள்ளைகளுக்கு இப்படி ஆகிருக்குமா?”, என்றவர் மூத்த மகளின் நினைவில் அழுதார்.
“இவளை எல்லாம் அடிச்சே கொல்லனும் பா”, என்றார் சந்தானம்.
“மாப்பிள்ளை, உங்களைக் கட்டாயப் படுத்தி இவ குணம் தெரியாம பிள்ளைகள் பத்தி பேசி கல்யாணம் பண்ணி வச்சு பெரிய தப்பு பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிருங்க. உங்க மேல நான் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கேன். இனி நீங்க சொல்றது தான் முடிவு”, என்றார் ஆறுமுகம்.
“நான் இனியாவது என் பிள்ளைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கணும்னு நினைக்கிறேன். என் பிள்ளைகளுக்காக தான் இவளை கல்யாணம் பண்ணுனே தவிர இவ மேல விருப்ப பட்டு இல்லை. எப்ப என் பிள்ளைகளையே இப்படி வேதனைப் பட வச்சாளோ இனி இவளுக்கு இங்க வேலை இல்லை. என் பொண்டாட்டி ரெண்டு பேருமே செத்துப் போய்ட்டாங்க. இனி எனக்கு என் பிள்ளைகள் மட்டும் தான். அவங்களுக்கு நான் மட்டும் தான். இவ முகத்துல கூட நான் விழிக்க விரும்பலை. தயவு செஞ்சு உங்க பொண்ணைக் கூட்டிட்டு போயிடுங்க. அவ சம்பந்த பட்ட எதுவும் இங்க இருக்க கூடாது. இந்த வயசுல டைவர்ஸ் அது இதுன்னு போக வேண்டாம். அது எல்லாருக்கும் அசிங்கம். அதனால அமைதியா வெட்டிக்கலாம், அவ பொருளை எல்லாம் எடுத்துட்டு கிளம்புங்க”, என்றார் சேது ராமன்.
அவர் அப்படிச் சொன்னதை யாராலுமே நம்ப முடியவில்லை. மங்கை வீட்டினருக்கு கூட இது அதிர்ச்சி தான். கனகாவை அடிப்பார் திட்டுவார் அவளது வீட்டினரை வர வைத்து கண்டிக்கச் சொல்லுவார் என்று மட்டுமே நினைத்தனர். இப்படி உறவையே வெட்டி விடுவார் என்று யாரும் எதிர் பார்க்க வில்லை.
பார்த்திபனுக்கோ தந்தை எடுத்த முடிவு தவறோ என்று தான் தோன்றியது. தாங்கள் என்ன தான் பிள்ளைகள் என்றாலும் கனகா அவரின் மனைவி அல்லவா? தவறே செய்திருந்தாலும் உறவை முறிப்பது எப்படி சரியாகும் என்று எண்ணி “அப்பா அதெல்லாம் வேண்டாமே? அவங்க இங்கயே இருக்கட்டும். தாத்தா வீட்டுக்கு அனுப்ப எல்லாம் வேண்டாம்”, என்றான் பார்த்திபன். அவனை வியப்பாக பார்த்தாள் மங்கை. எதிரிகளுக்கு கூட இறங்கும் குணம் யாருக்கு வரும். சந்திரனும் அவனை வியப்பாக தான் பார்த்தார்.
ஆனால் சேது உறுதியாக இருந்தார். அடுத்த ஒரு மணி நேரத்தில் கனகா அங்கிருந்து கிளம்பி இருந்தாள். அவள் கணவனிடம் மண்டியிட்டு மன்னிச்சிருங்க என்று கதறியும் சேது இறங்க வில்லை.
கடைசியில் வேறு வழி இல்லாமல் தந்தை மற்றும் அண்ணனுடன் கிளம்பினாள் கனகா. அவள் கண்கள் அங்கிருந்த அனைவரையும் முறைத்து பார்த்தது. இப்போதும் அவள் செய்த தவறுகளும் அதனால் அவர்கள் அடைந்த பாதிப்பும் தெரிய வில்லை.
அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகு அனைவரும் அமைதியாக இருக்க “இவ்வளவு பெரிய முடிவு எடுக்கணுமா?”, என்று கேட்டார் சந்திரன்.
“பாம்புன்னு தெரிஞ்ச அப்புறமும் அதை கூடவே வச்சுக்கிட்டு கொத்துமா கொத்தாதான்னு வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்க முடியுமா?”, என்று கேட்டார் சேது.
அவர் கேள்வி நியாயமாக இருக்க வேறு யாரும் எதுவும் பேச வில்லை. “சரி ரொம்ப நேரமாகிருச்சு. எல்லாரும் போய் தூங்குங்க. நாளைக்கு எல்லாம் பேசிக்கலாம். பார்த்தி அப்பாவையும் தங்கச்சியையும் பாத்துக்கோ பா. உனக்கு வேலைக்கு நானும் சொல்லி வைக்கிறேன்”, என்று சந்திரன் சொல்ல “ரொம்ப நன்றி சார்”, என்றான் பார்த்திபன்.
மீண்டும் ஒரு முறை அவர்களுக்கு நன்றி சொன்ன சேதுராமன் பிள்ளைகளுடன் உள்ளே சென்றார். போகும் முன் திரும்பி பார்த்திபன் மங்கையை ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வையைக் கண்டு திகைத்து போனாள் மங்கை. இது வரை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பம் வர வில்லை என்றாலும் அவன் இப்படி எல்லாம் பார்த்ததே இல்லை.