அவரும் இப்படி செய்ய வேண்டும் என்று நினைக்க வில்லை. “அவன் வந்துட்டான் பாருங்க. எங்க போனான்னு, எவ கூட சுத்துனான்னு இப்பவே கேளுங்க”, என்று கனகா சொன்னதும் அப்படியே செயல்படுத்தி விட்டார். பின் விளைவுகளை யோசிக்க மறந்திருந்தார். தான் விசாரிக்க போவது தோளுக்கு மேல் வளர்ந்த தனது மகன் என்ற உணர்வு அப்போது அவருக்கு வரவில்லை.
அவர் என்ன சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருக்க “நான் உங்களை தப்பு சொல்லணும்னு சொல்லலை மாமா. உங்க மூளையை சலவை செஞ்சு மாத்தி வச்சிருக்காங்க. கொஞ்சம் நீங்களும் கண்ணைத் திறந்து உங்க வீட்டைப் பாருங்கன்னு தான் சொல்றேன். அப்புறம் உங்களுக்கு இவங்க முதல் மனைவியோ ரெண்டாவதோ அவங்க உங்களுக்கு மனைவி. ஆனா உங்க பிள்ளைகளுக்கு சித்தி மட்டும் தான். எந்த சித்தியும் அம்மாவா ஆகிற முடியாது”, என்று சொன்னதும் கொதித்து போன கனகா “ஏய் யாரைப் பாத்து என்ன வார்த்தை சொல்ற?”, என்று சண்டைக்கு வந்தாள்.
“கனகா கொஞ்சம் அமைதியா இருன்னு சொன்னேன்”, என்று முதல் முறையாக சேது அழுத்தமாக சொல்ல கனகா வாயை மூடிக் கொண்டாள். ஆனாலும் கனகாவுக்கு முதல் முறையாக பயம் வந்தது. இது வரை நடந்தது எல்லாம் கணவனுக்கு தெரிந்து விடுமோ என்று பயந்து போனாள்.
பார்த்திபன் கவனமும் மங்கையை விட்டு தந்தையிடம் வந்தது. ஏற்கவே அவர் உடல் நிலை பற்றி சிறு கவலை இருக்க அவருக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று பயந்து போனான். ஆனாலும் தனக்காக பேசும் அவளை தடுக்கவும் மனதில்லை.
“அம்மாடி மங்கை, கொஞ்சம் வெளிப்படையா பேசலாமா மா? நீ ஏதோ சொல்ல வர. அது என் புத்திக்கு புரியலை. நீ பேசுறதும் உன் வீட்ல உள்ளவங்க பாக்குறதும் எனக்கு நான் ஏதோ தப்பு செஞ்சிட்டேன்னு புரிய வைக்குது. ஆனா என்ன செஞ்சேன்னு தெரியலையே”, என்றார் சேது.
“நான் இனி எதையும் மறைச்சு பேச விரும்பலை மாமா. எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லிறேன். இத்தனை வருஷம் உங்க ரெண்டு பிள்ளைகளும் சொந்த வீட்ல அகதிகளா தான் வாழ்ந்துருக்காங்க. அகதிகளுக்கு கூட நாம சொந்த நாட்ல இல்லை அப்படிங்குற கவலை மட்டும் தான் இருக்கும். ஏன்னா அவங்களுக்கு மத்த எல்லாம் கிடைக்கும். ஆனா உங்க பிள்ளைகள் சொந்த வீட்ல அடிமைகளா தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. அது தெரியுமா உங்களுக்கு?”, என்று மங்கை கேட்க அவர் புருவம் உயர்ந்தது.
பார்த்திபன் கண்கள் லேசாக கலங்க கயல்விழியோ சத்தமாக அழவே ஆரம்பித்து விட்டாள். மகளின் கண்ணீர் குரலில் கலைந்த சேதுராமன் “பாப்பா இங்க வா டா”, என்று ஒரு வார்த்தை தான் சொல்ல அடுத்த நொடி “அப்பா”, என்று ஓடிச் சென்று அவர் மார்பில் சாய்ந்து கொண்டு ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.
அவள் செய்கையில் ஊன் உருக உடல் எல்லாம் சிலிர்த்து நின்றார் சேது ராமன். மகள் இது வரை இப்படி எல்லாம் அவரை அணைத்ததில்லை. அவர்கள் அவரிடம் அதிகம் பேசியது இல்லை. அவர் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்லி விட்டு கடந்து விடுவார்கள்.
சிறு வயதில் தன்னுடைய மகளை தூக்கி அள்ளி அணைத்து உச்சி முகர்ந்த போது எப்படி அவர் உடல் சிலிர்த்ததோ அதே உணர்வு இப்போதும் அவருக்கு வந்தது. அவளது அழு குரல் அவரை எதுவோ செய்ய மற்றவர்களும் அந்த சிறு பெண்ணின் கதறலில் உயிர் உருக நின்றார்கள்.
கண்களில் தேங்கி இருந்த கண்ணீர் அப்படியே கொட்டி விட்டது பார்த்திபனுக்கு. அவனை சேது பார்க்க அவர் பார்ப்பது தெரியாமல் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டிருந்தான்.
“அழ கூடாது பாப்பா”, என்ற படியே அவள் முதுகை வருடிய படி மகனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார் சேது. கண்ணீரைத் துடைத்து விட்டு பார்த்திபனோ தங்கை தந்தை மார்பில் சாய்ந்திருக்கும் காட்சியை நெகிழ்ந்து போய் பார்த்தான். உதட்டில் சிறு புன்னகையும் கண்களில் கண்ணீருடன் கூடிய ஆறுதலும் கொண்டு அவன் தந்தையைப் பார்க்க மகனின் பார்வையைக் கண்டு வெகுவாக அதிர்ந்து போனார் சேதுராமன்.
இப்படி ஒரு பார்வையை அவர் இது வரை மகனிடம் கண்டதில்லை. கூடவே தந்தை அருகில் செல்ல வேண்டும் என்ற ஏக்கம் அவன் கண்ணிலும் தெரிய உண்மையிலே அந்த தந்தைக்கு அவ்வளவு தவிப்பு.
தான் பெரியதாக ஏதோ பிள்ளைகளுக்கு செய்து விட்டோம் என்ற தவிப்பு அவர் நெஞ்சின் ஓரத்தில் எழுந்து ஒரு வலியை உருவாக்கியது.
“கூடாது, எனக்கு வலிக்க கூடாது. என் பிள்ளைகளுக்கு நான் வேணும்”, என்று உறுதியாக எண்ணியவர் மகனை விட்டுவிட்டு மங்கையைப் பார்த்தார்.
“எல்லாத்தையும் சொல்லிரு மா மங்கை. எனக்கு ஏதோ பெருசா வரப் போகுதோன்னு பயமா இருக்கு”, என்றார்.
“உங்க மனைவி உங்க கிட்ட காட்டுற முகம் வேற. உங்க பிள்ளைங்க கிட்ட காட்டுற முகம் வேற மாமா. எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து ரெண்டு பேரும் கஷ்டப் பட்டுட்டு தான் இருக்காங்க. உங்க பொண்ணுக்கு உடம்பு சரி இல்லைன்னா கூட அவளை தான் எல்லா வேலையும் பாக்க விடுவாங்க. அந்த பிள்ளை ஸ்கூல்க்கும் போய்ட்டு வீட்டு வேலையும் செய்யும். இந்த வயசுல நான் செய்யுறதை விட உங்க மக அதிகம் வேலை செய்யுறா. அப்புறம் உங்க மகன். அப்பப்பா அவர் வாங்கின பேச்சை எல்லாம் என்னன்னு சொல்றது? இவங்க அவரை ஆம்பளையான்னு எல்லாம் கேள்வி கேப்பாங்க. அவரா இருக்க போய் தான் இவ்வளவு பொறுமையா இருந்துருக்கார்”, என்று ஆரம்பித்தவள் தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் சொல்ல மனிதன் பெரிதாக அதிர்ந்து தான் போனார்.
கயல் விழி இப்போது தந்தையிடம் இருந்து விலகி நின்றிருக்க கனகாவை இமைக்காமல் பார்த்தார் சேது. கணவனின் பார்வையில் பயந்த கனகா “அந்த பொண்ணு பொய் சொல்றாங்க. இதை எல்லாம் கேக்காதீங்க. வேணும்னா உங்க பிள்ளைங்க கிட்ட கூட கேளுங்க. எனக்கு எதிரா அவங்க வாயை திறக்கவே மாட்டாங்க. நம்ம அழகான குடும்பத்தை பிரிக்க பாக்குறாங்க. பிள்ளைகளை கூட்டிட்டு வாங்க உள்ள போகலாம். நம்ம குடும்ப விஷயம் வீதிக்கு வர வேண்டாம்”, என்ற படி கணவன் கை பற்ற வந்தாள்.
அடுத்த நொடி அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்திருந்தார் சேதுராமன். இது வரை அவர் அவளை அடித்ததே இல்லை. கனகா அதிர்ந்து விழிக்க மற்ற அனைவரும் அமைதியாக வேடிக்கை தான் பார்த்தார்கள்.
“என் மகனை அவமானப் படுத்த சொல்லும் போது உனக்கு வீட்டு மானம் பத்தி எல்லாம் கவலை இருந்ததா டி? உன்னை எவ்வளவு நம்பினேன்? என் பிள்ளைகளை தங்கமா தாங்குறேன்னு உன் மேல அவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்? ஆனா நீ? சி உன்னைப் பாக்கவே எனக்கு அருவருப்பா இருக்கு”, என்றவர் “பார்த்தி”, என்று அழைத்தார்.
“அப்பா”
“உன் தாத்தாவுக்கு போனைப் போட்டு வரச் சொல்லு. உன் மாமனையும் வரச் சொல்லு”
“அப்பா”, என்று அவன் தயங்க “அப்பா சொல்றேன்ல? போன் பண்ணி வரச் சொல்லு”, என்றார் சேதுராமன்.
வேறு வழியில்லாமல் அன்னையின் தந்தையையும் அண்ணனையும் வீட்டுக்கு உடனே வரும் படி அழைப்பு விடுத்தான் பார்த்திபன்.
அடுத்து அங்கே பெரிய அமைதியே நிலவியது. யாரும் எதுவும் பேச வில்லை. சேது ஒரு மாதிரி தளர்ந்து வாசலிலே அமர்ந்து விட “அப்பா, என்ன ஆச்சு? உங்களுக்கு ஒண்ணும் இல்லையே?”, என்று பதறிய படியே அவரை நெருங்கினான் பார்த்திபன்.
அவன் கையைப் பற்றி கண்ணில் ஒத்திக் கொண்டவர் அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்தார். “எதுக்கு டா இந்த அப்பா கிட்ட எதையுமே சொல்லலை?”, என்று கேட்டவரின் குரலில் அவ்வளவு வேதனை.
“எப்ப இதை சொல்லியிருந்தாலும் நீங்க இதே மாதிரி தான் பா வேதனை பட்டுருப்பீங்க? அப்புறம் எப்படி நானும் கயலும் உங்களுக்கு அந்த வேதனையை கொடுப்போம்?”, என்று கேட்டவனை இழுத்து அணைத்தவர் கதறி விட்டார்.
அவர் அழுவது அனைவருக்குமே கஷ்டமாக இருந்தது. கயலும் ஓடிச் சென்று தந்தை தோளில் சாய்ந்து கொள்ள அவள் அழுவது அங்கே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கவினுக்கு கூட கஷ்டமாக இருந்தது. மங்கை குடும்பமும் மொத்தமும் அவர்களை நெகிழ்ந்து தான் பார்த்தார்கள்.
“அழாதீங்க சார், அடுத்து என்னன்னு தான் பாக்கணும். பழசை பத்தி பேசினா கால விரயம் தான். நீங்க அழுதா பசங்களும் அழுறாங்க பாருங்க”, என்று சந்திரன் ஆறுதல் சொல்ல கண்களைத் துடைத்துக் கொண்டார் சேது.
“ரொம்ப நன்றி சந்திரன், இத்தனை நாள் கழிச்சு என் கண்ணைத் திறந்துருக்கீங்க நீங்களும் உங்க பொண்ணும். இல்லைன்னா ஆயுள் முழுக்க நான் முட்டாளா இருந்து என் பிள்ளைகளை உயிரோட கொன்னுருப்பேன்”, என்று சொன்ன சேது மங்கை புறம் திரும்பி “ரொம்ப நன்றி மா”, என்றார்.
இந்த காட்சியை எல்லாம் வெறித்துப் பார்த்த படி ஒரு ஓரமாக நின்றிருந்தாள் கனகா. அவள் முகத்தில் வஞ்சம் அவ்வளவு நிறைந்திருந்தது.