அதே நேரம் பார்த்திபன் அன்று பார்க்கில் இருந்து வீட்டுக்கு வந்ததும் நடந்த நிகழ்வை எண்ணிக் கொண்டிருந்தான். அவனது இத்தனை வருட மனப்புழுக்கம் அன்று தகர்ந்தது.
பார்த்திபன் தாமதமாக வீட்டுக்கு வரும் போது மணி பத்தரை ஆகி இருந்தது. அவன் வீட்டுக்கு வருவதற்கு முன் இங்கே கனகா மிகப் பெரிய டிராமா செய்வதற்கு முடிவு செய்திருந்தாள்.
அவன் வந்ததும் வாசலில் நிற்க வைத்தே “எங்க டா ஊர் சுத்திட்டு வர?”, என்று கேட்டார் சேது. அப்படி கேட்க வைத்தாள் கனகா.
“அப்பா அது… வேலை தேடி”, என்று அவன் ஆரம்பிக்க “அவன் பொய் சொல்றாங்க. இவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லையாம். குடிக்கிறான். சிகரெட் அடிக்கிறான். ஏதோ பொண்ணு பின்னாடி வேற சுத்துறானாம்”, என்று கனகா சத்தமாக பேசிக் கொண்டிருக்க மங்கை வீட்டிலும் வெளியே வந்து நடப்பதை கவனித்தார்கள். உள்ளே படித்துக் கொண்டிருந்த கயல்க்கும் கேட்டது. வெளியே போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு வெளியே பேசுவது நன்கு கேட்டது.
இவர்கள் இரண்டு வீட்டின் அருகில் வேறு வீடுகள் அதிகம் இல்லாததால் அங்கே இரண்டு குடும்பம் மட்டுமே இருந்தது.
தந்தை வாசலில் வைத்தே கேள்வி கேட்டிருக்க மங்கை வீட்டினரும் வெளியே வந்து நிற்க பார்த்திபனுக்கு ஒரு மாதிரி அவமானமாக இருந்தது. “அப்பா உள்ள போய் பேசலாம்”, என்றான் அமைதியாக.
“ஏன் துரைக்கு அவமானமா இருக்கா? ஏன்டா படிச்சு முடிச்சு ரெண்டு வருஷம் ஆகுது? ஏதாவது வேலைக்கு போகணும்னு இருக்கியா? இதுல இல்லாத கெட்ட பழக்கம் வேற?”, என்று சொல்ல “அவங்க பொய் சொல்றாங்கப்பா, எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை”, என்றான் அவர் முகத்தை நேருக்கு நேராக பார்த்து.
“ஆத்தாடி நானா பொய் சொல்றேன்? என் அக்கா பிள்ளைகளுக்காக என் வாழ்க்கையே கொடுத்தேனே? நீ தப்பு பண்ணுறதை கூட இத்தனை நாள் உங்க அப்பா கிட்ட சொல்லாம மறைச்சு வச்சு காப்பாத்தினேனே?”, என்று ஒரு கச்சேரியை கனகா ஆரம்பிக்க அறைக்குள் படித்துக் கொண்டிருந்த கயல்விழியும் வெளியே வந்து விட்டாள்.
சித்தி அண்ணனை பேசி கொண்டிருப்பதைக் கண்டு “அப்பா உள்ள போய் பேசலாம் பா. அண்ணன் எந்த தப்பும் பண்ணாதுப்பா”, என்றாள்.
“நீ சும்மா இரு பாப்பா. தோளுக்கு மேல வளந்துட்டான்னு நானும் கண்டுக்காம விட்டுட்டேன். இப்ப தான் உன் சித்தி எல்லாம் சொல்றா? இந்த வயசுல உனக்கு பொம்பளை சோக்கு கேக்குதா டா?”, என்று தந்தை கேட்க பார்த்திபனுக்கு அவ்வளவு வேதனையாக அவமானமாக இருந்தது. பெற்ற தந்தை இது வரை எந்த நல்லதும் செய்ய வில்லை தான். ஆனாலும் அவர் மேல் மரியாதையும் அன்பும் அவனுக்கு இருந்தது.
இப்போது கூட அவனுக்கு அவர் மீது கோபமோ வெறுப்போ வரவில்லை. அவர் பார்வையில் தரம் தாழ்ந்து கெட்ட பெயரை வாங்கிக் கொண்டிருக்கிறோமே என்ற வேதனை தான் அதிகம் இருந்தது.
ஏற்கனவே வேலை கிடைக்க வில்லை என்ற விரக்தி, அடுத்து என்ன தான் செய்ய போகிறோம் என்ற கவலை என இருந்தவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய தந்தையே இப்படி பேச அவன் என்ன செய்வானாம்?
“என்ன மா இந்த பொம்பளை இப்படி எல்லாம் பார்த்தி மேல பழி போடுது? அந்த மாமாவும் நம்புறாங்க பாருங்க. பார்த்திக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது மா”, என்று அன்னையிடம் முணுமுணுத்தாள் மங்கை.
“அந்த பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. குணம் சொக்கத் தங்கம்ன்னு எனக்கும் தெரியும் டி. எந்த பொம்பளையையும் ஏறெடுத்து கூட பாக்காது. அந்த பிள்ளையை போய் இப்படி எல்லாம் சொல்ல இவளுக்கு எப்படி தான் மனசு வருதோ?”, என்று கேட்டாள் கோமளம்.
இப்போதாவது அவனுக்கு சூடு சுரணை வருமா என்று சுவாரசியமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மங்கை. உண்மையிலே என்றாவது ஒரு நாள் பார்த்திபன் கோபத்தில் பொங்க வேண்டும் என்பது அவளது நெடு நாள் கனவாகவே இருந்தது.
“அப்பா நான் நிஜமாவே எந்த தப்பும் செய்யலை”, என்று லேசாக குரல் உயர்த்தினான் பார்த்திபன். “இவ்வளவு தான் இவன் குரல் உயருமா?”, என்று பார்த்தாள் மங்கை.
“என்ன டா குரல் உயருது? அப்படி தப்பு பண்ணாதவனா இருந்தா இந்நேரம் வரைக்கும் ஊரு சுத்துவானா எவனும்? எவ கூட சுத்திட்டு வந்த?”, என்று சேது கேட்க அடுத்து பார்த்திபன் எதுவும் சொல்ல வில்லை.
அவனுக்கு பெற்ற தந்தை இப்படி கேட்க, அதுவும் சித்தி பொய்யாக புகார் சொன்னதற்கு விசாரணை செய்வதே அசிங்கமாக தான் இருந்தது.
அதனால் அவன் அடுத்து எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க “நல்லா கேளுங்க. எப்படி மாடு மாதிரி நிக்கான் பாருங்க”, என்று ஏற்றி விட்டாள் கனகா.
மங்கையின் தந்தை சந்திரனுக்கே பார்த்திபனைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. சேது அவனை மேலும் பேசிக் கொண்டே இருக்க “போதும் நிறுத்துங்க மாமா”, என்று கத்தி விட்டாள் மங்கை. அதற்கு மேல் அவளுக்கு பொறுமை இல்லை. எத்தனை நாள் இதை எல்லாம் வேடிக்கை பார்ப்பது? அதுவும் பார்த்திபன் முகம் அப்படி கசங்கி இருக்க அவளுக்கு எப்படி இருக்குமாம்?
அவள் அப்படி சத்தம் கொடுத்ததும் அனைவரும் மங்கை புறம் திரும்ப “ஏய் சும்மா இரு டி, அந்த கனகா ஒரு மாதிரி. பிரச்சனையை நம்ம பக்கம் திருப்பிருவா டி”, என்று அடி குரலில் மகளை எச்சரித்தாள் கோமளம்.
மகளின் பேச்சு அவளின் தந்தைக்கு மகள் மனதுக்குள் ஓடும் விஷயத்தை உணர்த்த “பாப்பா இது அவங்க வீட்டு விஷயம், நாம தலையிடக் கூடாது கண்ணம்மா”, என்று சொல்லி மகளை தடுக்கப் பார்த்தார் சந்திரன்.
“பாவம் பா ரெண்டு பேரும். இதுக்கு ஒரு முடிவு வர வேண்டாமா? இருங்க வரேன்”, என்று சொன்னவள் அவர்களை நோக்கி சென்று விட்டாள்.
வேறு வழி இல்லாமல் மகளுக்கு பாதுகாப்புக்காக சந்திரன் மற்றும் கோமளம் இருவரும் தங்கள் வீட்டில் இருந்து இறங்கி அவர்களை நெருங்கினார்கள். இப்போது நந்தன் மற்றும் லதா கூட நடப்பதை வேடிக்கை பார்த்தார்கள். அப்போதும் லதா சும்மா இருக்காமல் “உங்க தங்கச்சிக்கு எதுக்கு தேவையில்லாத பிரச்சனை?”, நந்தனிடம் கேட்டு வைத்தாள். அவனுக்கும் அதே எண்ணம் தான் வந்தது.
மங்கை தங்கள் அருகே வந்ததும் “ஏய் உங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் தான் எந்த பேச்சு வார்த்தையுமே இல்லையே? இப்ப எதுக்கு டி இங்க வந்துருக்க? ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து போயிரு”, என்று சொன்னாள் கனகா.
“நான் ஒண்ணும் உங்க கிட்ட பேசலை. நான் மாமா கிட்ட தான் பேச வந்தேன். பேசிட்டு போயிருவேன்”, என்று மங்கை சொல்ல அதற்கு கனகா ஏதோ பேச வரும் முன் அவளை கை நீட்டி தடுத்த சேது “என்ன மா விஷயம்? என் கிட்ட என்ன பேசணும்?”, என்று கேட்டார்.
மங்கையிடம் அவர் அதிகம் பேசியதில்லை என்றாலும் அவள் மேல் அவருக்கு மரியாதை உண்டு. இந்த சின்ன வயதில் டிராவல்ஸ் ஆரம்பித்து உயர்ந்து கொண்டிருக்கும் மங்கையை பற்றி ஊரார் மரியாதையாக அவர் முன்னால் பேசி இருக்க அந்த மரியாதை அவர் மனதிலும் இருந்தது. அந்த மரியாதை அவள் மேல் மட்டும் இல்லை, அவருக்கு அவளது தந்தை சந்திரன் மீதும் மரியாதை உண்டு. அதனால் அவள் பேச்சுக்கு செவி கொடுத்தார்.