அத்தியாயம் 3 

மனம் ரணமாகும் போது 

மற்றொரு காதல் மட்டுமே 

அருமருந்தாகும்!!!

இன்டர்வியூக்கு சென்று கொண்டிருந்த பார்த்திபன் மனதில் அவ்வளவு வேண்டுதல். “சம்பளம் எவ்வளவா இருந்தாலும் இந்த வேலைல கண்டிப்பா சேந்துறனும்? சர்ட்டிபிகேட் கேட்டாக் கூட குடுத்துறலாம். வேலை கிடைச்சிட்டா கயல் டூர் போக இங்க அட்வான்ஸ் மாதிரி கேட்டுப் பாக்கலாம்”, என்று மனக் கோட்டை கட்டி விட்டு உள்ளே சென்றான்.

நேர்முகத் தேர்வு ஆரம்பிக்க அவனும் நல்ல முறையிலே அனைத்தும் அட்டென்ட் செய்தான். இன்டர்வியூ முடிந்ததும் வெளியே அமர்ந்து அவர்கள் பதிலுக்காக காத்திருந்தான் பார்த்திபன்.

அப்போது அவனை அழைத்த ஆபீஸ் பெண் “ஓகே சார் இப்ப நீங்க கிளம்புங்க. மேனேஜர் ஓனர் கிட்ட பேசிட்டு உங்களை கூப்பிடுவாங்க”, என்றாள்.

பார்த்திபனுக்கு கஷ்டமாக இருந்தது. வேலை கிடைத்திருக்கிறதா கிடைக்க வில்லையா என்று கூட தெரியவில்லை அவனுக்கு. இப்படி கூப்பிடுவோம் என்று சொன்னாலே அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை.

“இந்த வேலை நிச்சயமா கிடைக்குமா மேம்? கண்டிப்பா கூப்பிடுவாங்களா?”, என்று கேட்டான்.

“என் கிட்ட கால் பண்ணுவாங்கன்னு சொல்லி அனுப்புங்க அப்படின்னு தான் சார் சொன்னாங்க. சாரி அதுக்கு மேல எனக்கு எந்த தகவலும் தெரியாது”, என்று அந்த பெண் சொல்ல நிச்சயம் இந்த வேலை கிடைக்காது என்று புரிந்து போனது அவனுக்கு.

தளர்ந்த மனதுடன் வெளியே வந்தான். தங்கைக்கு எப்படி பணம் கொடுக்க என்று கூட அவனுக்கு தெரிய வில்லை. தந்தையிடம் கேட்டால் தருவார் தான். ஆனால் கனகாவுக்கு தெரியாமல் கேட்டால் அதற்கு அவள் ஆடும் சாமியாட்டத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு அந்த எண்ணமே பிடிக்க வில்லை.

நல்ல பிள்ளை போல பிள்ளைகளுக்கு பணம் கொடுக்கும்  தந்தையும் உண்மை விளம்பியாக மனைவியிடம் சொல்லியும் விடுவார், அதற்கு பிறகு பாடுபடப் போகிறவர்கள் இவர்கள் இருவரும் தானே? அதனால் அவரிடம் கேட்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டான்.

கடன் கேட்பதற்கும் யாரும் இல்லை. யாரிடம் உதவி கேட்க என்று கூட தெரியவில்லை. வாழ்க்கையே வெறுத்து தான் போனது அந்த நிமிடம்.

காலையில் உணவும் உண்ண வில்லை. கையில் எண்பது ரூபாய் பணம் மட்டுமே இருந்தது, பசி வேறு உயிர் போனது. இரண்டு பரோட்டா சாப்பிடலாமா என்று எண்ணம் வந்தது.

ஆனால் அந்த பணத்தை செலவு செய்து விட்டால் மீண்டும் கனகாவிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியே உண்ணாமல் நடந்து சென்றான். அப்போது அவன் கண்ணில் அருகில் இருந்த பார்க் தென்பட அங்கே சென்றவன் ஒரு மரத்துக்கு கீழே இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து விட்டான். அப்போது மதியம் மூன்று மணி ஆகி இருந்தது. ஏதேதோ எண்ணங்களில் அவன் மனம் அலை பாய்ந்தது. அப்படியே நேரம் நகர்ந்தது. இப்போது மணி ஆறு ஆகி இருந்தது. ஆனாலும் அவனுக்கு அங்கிருந்து செல்ல மனதில்லை.

வீட்டுக்கு செல்ல துளி கூட விருப்பம் இல்லை. எங்கேயாவது கண் காணாத இடத்துக்கு செல்ல வேண்டும் போல இருந்தது.

சுற்றிலும் பார்வையைச் சூழற்றினான். இப்போது நிறைய குழந்தைகள் அந்த பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகளையும் அவர்களை தாங்கும் பெற்றவர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்படி ஒரு வாழ்க்கை அவனுக்கு இல்லையே என்று அவ்வளவு ஏக்கமாக இருந்தது. தன்னுடைய அன்னை மட்டும் உயிரோடு இருந்திருந்தால் தங்களின் வாழ்க்கை இப்படி ஆகி இருக்காதே என்று எப்போதும் நினைப்பதையே இப்போதும் எண்ணிக் கொண்டான்.

அன்னையை எண்ணி கண் கலங்கியவன் சிலுசிலுவென்று வந்த தென்றலின் ஏகாந்தத்திலே அப்படியே பார்க் பெஞ்சிலேயே படுத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் நன்கு உறங்கிப் போனான். அன்னை மடியில் படுத்திருப்பது போல அவனுக்கு தோன்றியதோ என்னவோ?

ஒன்பதரை மணி போல “தம்பி எந்திப்பா. வீட்டுக்கு போகலையா? நேரம் ஆகிருச்சு பா. பார்க்கை அடைக்கணும்”, என்று சொல்லி எழுப்பினார் வாட்ச்மேன். மற்ற யாராக இருந்திருந்தாலும் மரியாதை இல்லாமல் பேசி இருப்பார். ஆனால் பார்த்திபனின் தோற்றம் அவரை அப்படி பேச விட வில்லை. டிப் டாப்பாக உடை அணிந்திருந்ததால் அவனை மரியாதை இல்லாமல் பேசவில்லை.

“மன்னிச்சிருங்க அண்ணா, சும்மா படுத்தேன். நல்லா தூங்கிட்டேன் போல? என்னமோ எனக்கு எங்க அம்மா மடில படுத்திருந்த மாதிரி இருந்துச்சு. அதான் ரொம்ப நல்லா தூங்கிட்டேன்”, என்றான் ஒரு மாதிரி குரலில்.

“உங்களுக்கு அம்மா இல்லையா தம்பி?”

“நான் சின்ன பிள்ளையா இருக்கும் போதே தவறிட்டாங்க அண்ணா”

“அம்மா இல்லைன்னாலே இந்த உலகத்துல அநாதை தான் தம்பி. எந்த உறவா இருந்தாலும் அம்மாவுக்கு ஈடாகாது. கவலைப் படாதே. உன் அம்மா மாதிரி உனக்கு பொண்டாட்டி கிடைப்பா”, என்று சொல்ல ஏனோ அவன் மனது மங்கை மாதிரி மனைவி வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

அந்த எண்ணத்தில் திடுக்கிட்டு அவனே அவனை சரி செய்து கொண்டு “நீங்க கிளம்பலையா அண்ணா?”, என்று கேட்டான்.

“எனக்கும் பெருசா உறவுன்னு யாரும் இல்லை தம்பி. இங்க பக்கத்துல தான் ஒரு சின்ன வீடு எடுத்து தங்கி இருக்கேன். அங்க சீக்கிரம் போய் என்ன செய்ய? தனியா கிடந்து சாகனும்? அதனால நான் கொஞ்சம் லேட்டா தான் போவேன். அப்ப தான் உங்களை பாத்தேன்”, என்று சொல்ல தனிமையும் கொடுமையானது தான் என்று புரிந்தது.

மேலும் சிறிது நேரம் பேசி விட்டு வீட்டுக்கு கிளம்பி விட்டான். ஆனால் அவன் வீட்டுக்கு சென்ற பின் நடந்த நிகழ்வு அவன் தலையெழுத்தையே அழகாக மாற்றி இருந்தது. அதற்கு காரணம் மங்கையை தவிர வேறு யாராக இருக்க முடியும்? அது நடந்து ஐந்து நாட்கள் ஆகி இருக்க அந்த நிகழ்வுக்காக மங்கைக்கு நன்றி சொல்வதற்காக ஆவலாக காத்திருந்தான் பார்த்திபன். ஆனால் அவளோ வைரல் பீவரில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தாள். அவள் குரல் கூட அதிகம் கேட்க வில்லை.

சோர்ந்து படுத்திருந்த மங்கை அருகே அமர்ந்த கோமளம் மகளின் கழுத்தில் தொட்டுப் பார்த்து பின் அவள் நெற்றியில் அலைந்து கொண்டிருந்த முடியை காதோரம் ஒதுக்கி விட்டாள்.

“அம்மா”, என்ற படி அவள் கண் விழிக்க “இப்ப எப்படி டி இருக்கு?”, என்று கேட்டாள் கோமளம்.

“ஓகே தான் மா. ஆனா கொஞ்சம் சோர்வா இருக்கு”

“காய்ச்சல் வந்தா அப்படி தான் இருக்கும். ரெண்டு நாள்ல சரியாகிரும். எந்திரிச்சு இந்த கஞ்சியைக் குடி. மாத்திரை போடணும்”

“கஞ்சியா உவ்வே”, என்று முகத்தை சுருக்க “குழந்தை மாதிரி பண்ணாத டி”, என்று மகளைக் கடிந்து கொண்டாள்.

அன்னையும் மகளும் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்ட லதா “ஆமா இவளுக்கு மட்டும் தான் அதிசயமா காச்சல் வரும் போல? என்னமா தாங்குறாங்க உங்க அம்மாவும் அப்பாவும்”, என்று நந்தனிடம் சொன்னாள்.

அவனும் என்ன மனநிலையில் இருந்தானோ? “அவங்க பிள்ளையை அவங்க தாங்குறாங்க உனக்கு என்ன பிரச்சனை? உன்னை ஒண்ணும் என் தங்கச்சிக்கு சேவகம் பண்ண சொல்லலை தானே? அமைதியா போய் உன் வேலையைப் பாரு”, என்றான் நந்தன். அவ்வபோது அவன் இப்படி தான் நியாயமாக பேசி வைப்பான் என்பதால் அடுத்த நொடி அமைதியாகி விட்டாள். கணவரிடம் கெட்ட பெயர் வாங்க அவள் விரும்ப வில்லை.