அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் அவன் மூளைக்கான எனர்ஜி டானிக் மங்கையின் உரத்த குரல் மட்டும் தான். அவள் பேசினாலே அவன் முகம் புன்னகை பூக்கும். மங்கை அவள் வீட்டில் பேச ஆரம்பித்தாலே “மங்கம்மா ஆரம்பிச்சிட்டா”, என்று எண்ணிக் கொள்வான்.

            அதற்காக அவள் மீது காதல் என்றெல்லாம் இல்லை. அவனும் மற்றவர்கள் போல அவளை சைட் அடிப்பான் அவளுக்கே தெரியாமல் அவ்வளவு தான். அவள் அழகின் மீது ஒரு ஈர்ப்பு வரவில்லை என்றால் அவன் ஆண் மகனாக இருக்க முடியாதே?

            அவன் சித்தியால் அவனுக்கு என்ன கவலை வந்தாலும் மங்கையின் குரல் கேட்டால் காணாமல் போய் விடும். அவளை நேருக்கு நேர் பார்த்தால் பேசக் கூட மாட்டான். ஆனால் அவளின் குரல் அவனை வசீகரிக்கும். அவ்வளவு ரசித்துக் கேட்பான். தன்னுடைய கட்டை குரலில் ஒருவனின் ஜீவன் சிலிர்க்கிறது என்ற உண்மை மங்கைக்கும் தெரியாது. அவளும் அவனைக் கண்டால் கண்டு கொள்ளாதது போல கடந்து விடுவாள். அவளுக்கு அவனிடம் பேச பயம் என்று இல்லை.

            அவனிடம் பேசுவதை கனகா பார்த்தால் தேவையில்லாத பிரச்சனை வரும். அது மட்டுமல்லாமல் அவளைக் கண்டு அவனே ஒதுங்கிப் போகும் போது ஒரு பெண்ணாக அவள் எப்படி பேசுவாள்?

            அன்றும் வேலை தேடி மூச்சு முட்டி போய் வீட்டுக்கு வந்து சேர்ந்தான் பார்த்திபன். “என்ன இன்னைக்கும் வேலை கிடைச்சிருக்காதே?”, என்று நக்கலாக கேட்டாள் கனகா.  அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவன் அறைக்குள் சென்று மறைய அவளது அர்ச்சனை ஆரம்பமானது. தன்னுடைய அறைக்குள் வந்து அமர்ந்தவனுக்கு அப்படியே வாழ்க்கை வெறுத்து தான் போனது.

            “தண்டச்சோறு திங்க மட்டும் தெரியுது, ஆனா ஆம்பளையா ஒரு வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிச்சு கொடுப்போம்ன்னு இல்லை. வக்கணையா மூணு வேளையும் திங்க மட்டும் தெரியும்”, என்று புலம்ப ஆரம்பித்தாள் கனகா.

            எல்லாம் அவன் காதில் விழ தான் செய்தது. இதயம் வெகுவாக வலிக்க தான் செய்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தந்தை வீட்டுக்கு வந்து விடுவார். தந்தையின் வண்டி சத்தம் கேட்கும் வரைக்கும் கனகா அர்ச்சனை தொடர தான் செய்யும். தன்னை ஆம்பளையா என்று கேட்கும் போதெல்லாம் கனகாவை வெட்டிப் போட்டு விட்டு ஜெயிலுக்கு போய் விட வேண்டும் என்று தோன்றும் பார்த்திபனுக்கு. ஆனால் அவனையே நம்பி இருக்கும் தங்கை, அவளது எதிர்காலம் எல்லாத்தையும் யோசிப்பவன் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருப்பான்.

            அதுவும் இரண்டு வருடத்திற்கு முன்பு சேதுராமன் ஒரு நாள் மயங்கி விழுந்து விட இவன் தான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். அப்போதே டாக்டர் அவரை கவனமாக பார்த்துக் கொள்ளச் சொல்லி அவனிடம் சொல்லி இருக்க அதற்கு பின் தந்தைக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

            இப்போதெல்லாம் வேலை வேறு கிடைக்காமல் இருக்க தன்னால் எதுவுமே முடியாது போல என்ற எதிர்மறை எண்ணம் அவனை அதிகம் ஆட்கொண்டது. அவனும் தெரிந்த இடங்களில் எல்லாம் சொல்லி வைக்க தான் செய்கிறான். நண்பர்களிடம் கூட காலில் விழாத குறையாக கேட்டு விட்டான்.

            சம்பளம் குறைவாக இருந்தாலும் ஒரு டிவி, மிக்சி, பீரோ விற்கும் கடையில் கூட வேலைக்கு கேட்டு விட்டான். ஆனால் அவர்களோ சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்ல அதைக் கொடுத்து விட்டு அவன் என்ன செய்வானாம்? அப்படி இல்லை என்றால் ஒரு மாத சம்பளத்தை பிடித்து வைத்துக் கொள்வோம் என்று பேச அவனால் அதிலும் தைரியமாக சேர முடிய வில்லை.

            இப்போதெல்லாம் பத்தாயிரம் சம்பளம் என்றாலும் சர்டிபிகேட்டை கொடுத்து விட்டு சேர்ந்து விடலாமா? அதுவும் ஹாஸ்டலில் தங்கி விடலாமா என்று கூட அவன் எண்ணம் சென்று கொண்டு தான் இருக்கிறது.

            மனிதன் வாழ்வதே அரை ஜான் வயிற்றுக்காக தான். அதற்கே இடிசோறு சாப்பிட வேண்டிய சூழ்நிலை என்னும் போது அவன் எப்படி இங்கே இருக்க முடியும்?

            கனகா அவனை திட்டிக் கொண்டிருப்பது மங்கை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கேட்க தான் செய்தது. மங்கையின் அன்னை கோமளமோ “பாவம் அந்த பையன், எப்படி திட்டுறா பாரு. வேலை கிடைக்கிறது குதிரை கொம்பா இருக்குற காலத்துல அவன் என்ன செய்வான்? சும்மா எதுக்கு எடுத்தாலும் பேசிக்கிட்டு?”, என்று புலம்பினாள்.

            சந்திரனோ “அந்த பையன் விதி அப்படி கோமு. அவன் அப்பன் இவ்வளவு நாள் பிள்ளைகளை கண்டுக்காம இருப்பானா? இவனாவது பையன். அந்த பொம்பளைப் பிள்ளை நிலைமை தான் என்ன ஆகுமோ தெரியலை? அதையும் அந்த கனகா அந்த பேச்சு பேசுறா?”, என்றார்.

            நந்தன் மற்றும் லதா இருவரும் அதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் கனகா கத்தும் போது மட்டும் “எரிச்சலா இருக்கு, இந்த வீட்ல நிம்மதியா இருக்க முடியுதா? என்னா சத்தம் போடுது இந்த பொம்பளை?”, என்று புலம்பிக் கொள்வார்கள்.

            ஆனால் மங்கைக்கு மட்டும் பார்த்திபனை நினைத்து பரிதாபமாக இருக்கும். சில நேரம் அவனை எண்ணி கோபமாகவும் வரும்.

            “என்ன மனுஷன் இவன்? இப்படியா ஒருத்தன் சூடு சுரணை இல்லாமல் இருப்பான்? ஒண்ணு அந்த பொம்பளையை எதித்து கேள்வி கேக்கணும்? இல்லைனா அவங்க அப்பா கிட்டயாவது சொல்லணும்? எதுக்கு இப்படி அமைதியா இருக்கணும்?”, என்று எண்ணிக் கொள்வாள்.

            கூடவே சேதுராமனிடம் நேராக சென்று நாமே பேசி விடலாமா என்று கூட அவளுக்கு தோன்றும். அவளது தந்தை சந்திரன் தான் “நாம அடுத்தவங்க விஷயத்துல தலையிடக்  கூடாது மங்கை. அப்படி பேசினா வேற மாதிரி கூட அந்த பொம்பளை பிரச்சனையை திருப்ப வாய்ப்பு இருக்கு” என்று ஒரு நாள் மகளைக் கண்டித்து விட்டார். அதனால் அமைதியாக இருக்கிறாள்.

            ஆனாலும் அவனிடம் போனிலாவது பேசி விட வேண்டும் என்று அவன் எண்ணை தேடிக் கொண்டு தான் இருக்கிறாள். கிடைத்த பாடு தான் இல்லை.

            அவனுக்கு என்று நண்பர்களும் இல்லை. எந்த சோஷியல் மீடியாவிலும் அவன் இல்லை. வேலை தேடுவதற்காக ஒரு பட்டன் மொபைல் மட்டுமே வைத்திருக்கிறான் என்று எப்படி அவளுக்கு தெரியுமாம் ?

            நேருக்கு நேர் பார்த்தாலும் அவன் சித்திக்கு பயந்து தலை குனிந்து செல்பவனை அவள் என்ன தான் செய்வதாம்? ஆனால் அவள் அவனைக் கடக்கும் போதெல்லாம் அவளுக்கு தெரியாமல் நிச்சயம் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்ப்பான். அதிலும் அவள் கூந்தல் இடையை தாண்டி தொங்கும் போது அவன் மனம் அவள் பின்னேயே செல்வதைப் போல இருக்கும்.

            அவனுக்கும் அவளிடம் பேச ஆசை தான். ஆனால் அது கனகா காதுக்கு போனது என்றால் அவனை சத்தம் போடுவாள். அது கூட பரவாயில்லை. தேவையில்லாமல் மங்கையைப் பற்றி ஏதாவது பேசி விடுவாளோ என்று எண்ணியே மங்கையிடம் இருந்து விலகிச் சென்று விடுவான்.

            இன்றும் கனகா தன்னுடைய சுப்பிரபாதத்தை ஆரம்பித்திருக்க பார்த்திபன் அமைதியாக அதே நேரம் வேதனையாக கேட்டுக் கொண்டிருந்தான். கயல் விழி பள்ளி விட்டு வந்து டியூஷன் சென்றிருக்க அவன் மட்டுமே இருந்தான்.