அத்தியாயம் 2

கவிதை என்றுமே கற்பனை அல்ல

அதன் நிஜமே நீயானால்!!!

            மங்கையின் வீட்டுக்கு எதிரே தான் பார்த்திபன் வீடு இருந்தது. அவனுக்கு வயது இருபத்தி ஐந்து. எம்.காம் முடித்து விட்டு வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் சாதாரண இளைஞன்.

            அவனது தந்தை சேதுராமன் ஒரு கூல்டிரிங்க்ஸ் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிகிறார். ஓஹோ என்று சொல்லும் படியான குடும்பம் இல்லை. அதற்காக கஷ்ட பட்ட குடும்பமும் கிடையாது. அவர் சம்பாத்தியம் வீட்டு வாடகை, குடும்ப செலவுக்கு சரியாக போகும். அதனால் சேமிப்பு என்று சிறிதளவு மட்டுமே. அவருக்கும் ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. அதற்கு முயற்சியும் செய்து கொண்டு தான் இருந்தார்.

            சேதுராமனின் முதல் மனைவி சீதா. அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் பார்த்திபனும் அவளது தங்கை கயல்விழியும். கயல்விழி பிறந்ததும் சீதா இறந்து விட்டாள்.

            பிள்ளைகளை கவனிப்பதற்கும் இளவயதில் இருக்கும் சேதுவின் வாழ்க்கை பாதிக்க படக் கூடாது என்றும் சீதாவின் சொந்த தங்கை கனகாவை சேதுவுக்கு கட்டி வைத்தார்கள்.

            அப்பாவின் இரண்டாவது மனைவி சித்தி தான் என்றாலும் கனகா சொந்த சித்தி. அக்கா பிள்ளைகளை நன்கு பார்த்து கொள்வாள் என்று தான் அனைவரும் எண்ணினார்கள். இப்போது வரை எண்ணிக் கொண்டும் இருக்கிறார்கள்.

            ஆனால் நடந்ததோ வேறு. கனகா சுயநலத்தின் மறுஉருவம். தன்னுடைய சொந்த அக்காவிற்கு திருமணம் நடந்த போதே அக்கா கணவர் மீது மையல் கொண்டிருந்தாள். சேதுவின் அழகின் மீது சிறு ஈர்ப்பு இருந்தது.

            அதனால் அக்கா இறந்ததும் வந்த வாய்ப்பை தட்டிப் பறித்துக் கொண்டாள். “அக்கா பிள்ளைங்க அனாதையா இருக்கு. பாக்கவே பாவமா இருக்குப் பா. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வருவோமா? நான் அவங்களுக்கு அம்மாவா இருக்கேன்?”, என்று நயமாக பேசி தந்தை மனதில் இவளை மாப்பிள்ளைக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவளே தான் விதைத்தாள்.

            கனகாவின் தந்தையும் மாப்பிள்ளையிடம் பேச சேதுராமன் முதலில் மறுத்தார். அவள் சிறுபெண், அவளுக்கு நல்ல வாழ்க்கை காத்திருக்கிறது என்று எவ்வளவோ சொல்லியும் குழந்தைகளைப் பற்றி இரண்டு வீட்டிலும் பேசி அவர்கள் திருமணத்தை முடித்து வைத்தார்கள்.

            கயல் குழந்தையாக இருந்ததால் அவளுக்கு எதுவும் தெரிய வில்லை. பார்த்திபனுக்கு மூன்று வயது என்பதால் கொஞ்சம் அன்னையை அதிகமாக தேடினான். சித்தி பழைய சித்தி தான் என்றாலும் அவளை அன்னையாக அவனால் பார்க்க முடிய வில்லை.

            கனகாவிற்கு தன்னுடைய கணவரை மயக்கி தன்னுடைய நினைப்பில் சுற்ற விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க அவள் பிள்ளைகளை அதிகம் கவனிக்க வில்லை.

            திருமணத்திற்கு முன் அக்கா பிள்ளைகள் என்று இருந்த பாசம் கூட திருமணத்திற்கு பின் சந்தோஷத்திற்கு இடைஞ்சலாக வந்தவர்கள் என்று தான் எண்ண வைத்தது. அதுவும் அவளுக்கு என்று குழந்தைகள் பிறக்கவே செய்யாது என்ற உண்மை தெரிந்த பிறகு பிள்ளைகள் மேல் இருந்த வெறுப்பு அதிகரிக்க தான் செய்தது.

            அந்த சிறு வயதிலே தங்கையை பார்த்திபன் தான் பார்த்துக் கொள்வான். உணவு மட்டுமே கனகா கொடுப்பாள். அதற்கும் அவன் கெஞ்ச தான் வேண்டும்.

“சித்தி பாப்பா அழுது”, என்று பார்த்திபன் சொன்னால் “உன் அப்பா கிட்ட போன் பேசிட்டு இருக்கேன்ல? அடுப்படில பால் இருக்கு. எடுத்து கொடு போ”, என்று போனை பொத்திய படியே அவனை விரட்டுபவள் கணவரிடம் “நம்ம பெரிய பையன் சாக்லேட் வேணும்னு கேக்காங்க. அதான் திங்க கூடாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்”, என்று சமாளிப்பாள். அந்த முட்டாள் சேதுராமனும் மனைவி பேச்சை அப்படியே நம்பி விடுவார். இப்போது வரை அப்படி தான் நம்பிக் கொண்டு இருக்கிறார்.

            கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகள் மேல் சேதுராமனுக்கு வெறுப்பு வரும் படியும் பார்த்துக் கொள்கிறாள். சேதுவும் கொஞ்சம் கொஞ்சமாக பிள்ளைகளிடம் இருந்து விலகி இப்போது என்ன என்றால் என்ன என்ற பேச்சு மட்டுமே இருக்கிறது.

            பார்த்திபனுக்கு முதலிலே சித்தியின் குணம் தெரிந்ததால் அவன் விலகி போயிருக்க வளர வளர கயல்விழிக்குமே சித்தியின் குணம் புரிந்து போனது. அதுவும் தன்னை அன்னை போல பார்த்துக் கொள்ளும் அண்ணன் தான் அவளுக்கு உயிர். கனகா பிள்ளைகளை தகப்பனிடம் நெருங்க விடுவதே இல்லை. அவர்கள் அப்பாவிடம் ஏதாவது பேச வந்தாலே “படிக்க வேண்டியது இருக்குல்ல? போங்க”, என்று விரட்டி விடுவாள்.

தந்தை பிள்ளைகளிடம் பேச வந்தால் “என்னங்க கடைக்கு போகணும். பிள்ளைகள் டிரஸ் எல்லாம் கிழிஞ்சிருக்கு”, என்று சொல்லி கணவனை மட்டும் நயமாக வெளியே அழைத்துச் சென்று விடுவாள். கயல் விழியும் கனகா குணம் புரிந்து  அண்ணனுடன் மட்டுமே ஒட்டிக்கொள்வாள்.

            முதலில் கனகா செய்யும் அடாவடிகளை தந்தையிடம் சொல்ல முயல்வான் பார்த்திபன். அதற்கு கனகாவால் கயல் விழி பாதிக்க பட ஆரம்பித்தாள். தங்கை அடி வாங்குவதை தாங்க முடியாத பார்த்திபன் “பாப்பாவை அடிக்காதீங்க சித்தி. நான் அப்பா கிட்ட எதுவுமே சொல்ல மாட்டேன்”, என்று ஒரு நாள் சொல்லி விட்டான். அதில் இருந்து தான் கயல்விழி தப்பித்தாள்.

            தங்கைக்காக பார்த்திபன் அனைத்தையும் உள்ளுக்குள் வைத்து மறுகிக் கொண்டான்.        தங்கைக்கு எதுவும் ஆகக் கூடாது என்று எண்ணியே பார்த்திபன் ஊமையாக மட்டும் இல்லை அந்த வீட்டின் கயல்விழிக்கு அடுத்து இன்னொரு அடிமையாகவும் மாறி விட்டான்.

            தனக்கு எந்த பாசமும் கிடைக்காததால் சில நேரம் தங்கைக்கு அன்னையாக தந்தையாக அண்ணனாக இருக்க ஆரம்பித்தான். அவனுக்கு மெக்கானிக்கல் இன்ஜினியராக ஆட்டோமொபைல் இன்ஜினியராக ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால் செலவாகும் என்று சொல்லி அக்கவுண்ட்ஸ் படிக்கும் படி செய்து விட்டாள் கனகா.

            அதில் அவனுக்கு விருப்பம் இல்லை என்றாலும் நல்ல முறையில் படிக்க தான் செய்தான். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை தான் கிடைத்த பாடில்லை. இப்போதும் தீவிரமாக வேலை தான் தேடிக் கொண்டிருந்தான். கயல்விழி இப்போது மங்கையின் தம்பி கவின் படிக்கும் பள்ளியில் தான் படிக்கிறாள். கவினும் கயல்விழியும் ஒரே வகுப்பு தான். ஆனால் இருவரும் அதிகமாக பேசிக் கொள்ள மாட்டார்கள்.

            முதலில் மங்கை மற்றும் பார்த்திபன் குடும்பம் ஒற்றுமையாக தான் இருந்தது. இருவரும் ஒன்றாக விளையாட கூட செய்திருக்கிறார்கள்.

            ஆனால் நாட்கள் செல்ல செல்ல கோமளத்துக்கு கனகாவின் பேச்சு வார்த்தை பிடிக்காமல் போக கொஞ்சம் கொஞ்சமாக பேச்சை குறைக்க ஆரம்பித்தாள். ஆனால் கனகா அவர் விலகி செல்வதைக் கண்டு எதிரியாக நினைத்து பேசுவதையே நிறுத்தி விட்டாள்.

            இருவரும் முகம் பார்த்து சிரிப்பது மறந்து முறைத்து கொள்ளும் நிலைக்கு கூட வந்து விட்டது. சில நேரம் மங்கை வீட்டு குப்பை பார்த்திபன் வீட்டு பக்கம் வந்து விட்டால் கனகா பேசியே சாகடித்து விடுவாள்.

            அடுத்து முற்றம் பெருக்குவதற்கு சண்டை வர ஆளுக்கு ஒரு மாதம் பெருக்க வேண்டும் என்று பேசி முடிக்கப் பட்டது. ஆனால் ஒரே காம்பவுண்டில் இருந்தாலும் இரண்டு குடும்பமும் தனிதனி தான்.

            இப்போதெல்லாம் கனகா என்ன சொன்னாலும் “சரி சித்தி”, என்று சொல்லியே பழகி விட்டான் பார்த்திபன். அவன் எதிர்த்து பேசினால் வாயில்லா பூச்சியான கயல்விழி நிச்சயம் பாதிக்கப் படுவாள் என்பதால் தான்.

            “அண்ணா எதுக்குன்னு தெரியலை, சித்தி என் தலைல கொட்டிட்டாங்க வலிக்குது”, என்று அவனிடம் தான் சொல்லி அழுவாள். அவளுக்காகவே அவனும் வாயில்லா பூச்சியாக மாறி கொண்டான்.