இன்று பார்த்திபன் மற்றும் மங்கையர்கரசியின் திருமண நாள். அனைவருக்கும் அழகாக விடிந்தது. இருவரும் மண்டபத்தில் இருந்த தங்களின் அறைகளில் தயாராகிக் கொண்டிருந்தார்கள். இருவர் முகமும் அவ்வளவு பூரிப்பாக இருந்தது.
அஸ்வின் குட்டியை தூக்கிக் கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள் கயல். அப்போது “கயல்”, என்று அழைத்த படி அங்கே வந்தான் கவின்.
“என்ன டா?”
“இந்த பூவை அம்மா அக்கா கிட்ட கொடுக்க சொல்லி கொடுத்துச்சு. அங்க பொண்ணுங்களா இருக்காங்க. நீ கொடுத்துறியா?”
“சரி கொடுக்குறேன். ஆமா அது என்ன பொண்ணுங்களா இருக்காங்கன்னு சொல்ற? பொண்ணுங்க இருந்தா நீ சைட் அடிக்கலாம் தானே?”
“நான் தான் இன்னொரு பொண்ணை தீவிரமா சைட் அடிக்கிறேனே? அதை விட்டுட்டு வேற பொண்ணை பாக்க மாட்டேன் பா”, என்று சொல்ல அவளுக்குள் சிறு திணறல். அவன் மனதில் வேறு பெண் இருக்கிறாளா என்று எண்ணி தடுமாற்றமாக இருந்தது.
அதை மறைத்துக் கொண்டு “ஹேய் அது யாரு?”, என்று கேட்டாள்.
“அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனா அவ அவ்வளவு அழகு”
“ஏய் ஆரம்பிச்சிட்ட தானே? யாருன்னு சொல்லு டா. தெரியலைனா என் தலையே வெடிச்சிரும்”
“முதல் முறையா சேலை கட்டி பாக்குறேனா? அவ அதுல அவ்வளவு அழகா இருக்கா. அவ கிட்ட இருந்து என்னால கண்ண எடுக்கவே முடியலை. அவ்வளவு சைட் அடிக்கிறேன் அவளை”, என்று சொன்னவன் கண்கள் அவளை ரசனையாக பார்க்க அவள் முகம் மலர்ந்தது. கூடவே அவளிடம் சிறு வெட்கமும்.
அவனுக்கு பதிலாக அவள் எதுவோ சொல்ல வர “இப்ப எதுவும் சொல்லாத கயல், ஒரு அஞ்சாறு வருஷம் எடுத்துக்கோ. என்னைப் பத்தி என்ன நினைக்கிறேன்னு அப்ப சொன்னா போதும். எனக்கு சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன், அவ்வளவு தான்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவள் மனதில் இருந்ததும் அது தானே? அதனால் சிறு சிரிப்புடன் அங்கிருந்து மணப்பெண் அறைக்குச் சென்றாள். அங்கே மங்கைக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது.
“அண்ணி சூப்பரா இருக்கீங்க. அண்ணன் பாத்தா நிச்சயம் மயங்கிரும்”, என்று கயல் சொல்ல இன்னும் அழகாக சிரித்தாள் மங்கை.
“கயல் சொல்றது சரி தான் மங்கை. நீ ரொம்ப அழகா இருக்க என் மருமகன் எடுத்த சேலை கலர் உனக்கு அம்சமா பொருந்திருக்கு. அப்படியே என் கண்ணே பட்டுடும் போல?”, என்று சொன்ன கோதை மங்கையின் கன்னம் வழித்தாள்.
தன் வெட்கத்தை மறைத்தவாறு அழகாக புன்னகைத்தாள் மங்கை. அலங்காரம் முடிந்ததும் ”அப்போ நாங்க கிளம்பறோம் மேடம்…”, என்று சொல்லி விட்டு அழகு நிலைய பெண்கள் தங்கள் வேலையை முடித்துவிட்டு கிளம்பிவிட, கயல் மங்கையின் அருகே அமர்ந்தாள். இருவரும் பார்த்திபனை கிண்டல் செய்தவாறு பேசிக் கொண்டிருக்க இருவர் முகமும் மலர்ந்தே இருந்தது.
சிறிது நேரம் கழித்து மணமக்களை முழு அலங்காரத்தில் மணமேடையில் அமர வைத்தார்கள். அளவான உயரமும் வளர்ச்சிக்கு ஏற்ற உடல் வாகும் கத்தையான மீசையும் என அழகாக இருந்தான் பார்த்திபன். அவனுக்கு இணையான தோற்றதிலும் அழகிலும் மிளிர்ந்தாள் மங்கை. அனைவருமே அவர்கள் ஜோடிப் பொருத்தத்தை வியந்து தான் பார்த்தார்கள்.
ஆறுமுகம் தாலி எடுத்துக் கொடுக்க உறவினர்கள் வாழ்த்து சொல்ல அவள் சங்கு அவள் ஆசைப்படி மூன்று முடிச்சைப் போட்டான். அதற்கு பிறகு தான் கயல் சில முடிச்சுகளைப் போட்டாள்.
காலில் மெட்டியிடும் போதும் அவன் கண்கள் அவளை நிமிர்ந்து பார்க்க அவள் முகத்தில் அவ்வளவு வெட்கம். மற்ற சடங்குகளும் அவர்கள் ஆசைப்படி சிறப்பாக நடந்தது. பார்த்திபன் மற்றும் மங்கை திருமணம் வெகு சிறப்பாக நடந்து முடிந்திருந்தது. மண்டபத்தில் இருந்து முதலில் அவன் வீட்டுக்குச் சென்றார்கள். கயல் அவர்களுக்கு ஆரத்தி எடுக்க கணவனுடன் உள்ளே வந்த மங்கை பூஜை அறையில் விளக்கேற்றினாள். பின் கணவனுடன் சேர்ந்து சீதா புகைப்படத்தின் முன் விழுந்து வணங்கினாள்.
மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப் பட்டது. இருவரும் அமைதியாக அவர்கள் சொல்லும் சடங்கைச் செய்து கொண்டிருந்தார்கள்.
பார்த்திபன் வீட்டு முறைப்படி படி பெண் வீட்டில் தான் முதலிரவு வைப்பதால் அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள். சேதுவை கேட்கவும் வேண்டுமா. ஆனால் வந்திருந்த யாருமே கனகாவை பற்றிக் கேட்கவே இல்லை. ஆறுமுகமும் சரி சந்தானமும் சரி அவளைப் பற்றி மூச்சு விட வில்லை.
சற்று நேரத்தில் மறுவீட்டுக்கு மங்கை வீட்டுக்குச் செல்ல வேண்டும். எதிர் வீடு தான் என்றாலும் மங்கை வீட்டில் சற்று பரபரப்பு கூடித் தான் இருந்தது. மாப்பிள்ளை வந்து அங்கே தங்க போகிறார் என்றதும் கோமளம் பல ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தாள்.
இன்னும் நேரம் இருப்பதால் மணமக்கள் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க “என்ன சைலண்ட்டா உக்காந்துருக்கீங்க? வாங்க நாம போட்டோ எடுக்கலாம்”, என்று சொன்ன கயல் மூன்று பேரையும் செல்பி எடுத்துக் கொண்டிருந்தாள்.
மணமக்கள் அமைதியாக இருக்க “நான் உங்க ரெண்டு பேரையும் எடுக்குறேன். போஸ் கொடுங்க பாப்போம்”, என்று சொல்ல “பாப்பா விடு டா”, என்றான்.
அதில் கயல் முகம் சுருங்க “ரெண்டு போட்டோ எடுக்குறதுல என்ன வந்துரப் போகுது? நீ எடு கயல்”, என்று மங்கை சொல்ல அவள் பேசியதில் உள்ளம் மகிழ்ந்தாலும் அமைதியாக இருந்து கொண்டான். என்ன தான் மங்கைக்கு அவனிடம் உள்ள கோபம் சென்றிருந்தாலும் அவள் சாதாரணமாக அவனிடம் பேச வில்லை. அவள் வெட்கத்தில் அமைதியாக இருக்க அவனுக்கு தான் அவள் இன்னும் கோபத்தில் இருக்கிறாளோ என்று தோன்றி வைத்தது.
இப்போது அவளே அனுமதி கொடுத்ததும் சந்தோஷமாக கயல் அவர்களை புகைப்படம் எடுக்க ஆரம்பிக்க அப்போது பேமெண்ட் வாங்க வந்த புகைப்படகாரர் “நானே எடுக்குறேன் பாப்பா”, என்று சொல்லி அவர்களை உண்மையிலே ஒரு வழி செய்து விட்டார்.
அப்படி போஸ் கொடுங்க, இப்படி போஸ் கொடுங்க என்று சொல்லி அவர்களை ஒன்றாக நிற்க வைத்தார். அந்த அருகாமை அவர்களை தடம் புரட்டியது மட்டும் உண்மை.
அதுவும் பார்த்திபனின் உணர்வுகளை கேட்கவும் வேண்டுமா? தன்னை தீண்டிச் செல்லும் அவளது அருகாமையும் அவளது மென் தேகத்தின் தொடுகையும் அவனுக்குள் தீயை மூட்டுவது போல தான் இருந்தது, திருமண அலங்காரத்தில் அவள் அழகு இன்னும் கூடிப் போயிருக்க அவள் மீதிருந்து வந்த வாசனையும் மல்லிகை பூவின் நறுமணமும் அவனை மயக்கியது.
அவளை இடையோடு வளைத்திருந்த அவனது கரங்கள் இரண்டும் அவளது வெற்றிடையில் லேசாக உரசிச் செல்ல அவளுக்கும் மூச்சடைக்கும் உணர்வு தான். அவனது தாடையை அவள் கழுத்தில் வைத்த படி கயல் போஸ் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருக்க தங்கைக்காக அதைச் செய்தான்.
அவன் மூக்கு அவள் கன்னத்தை வருடி அவளது வாசனையை அப்படியே நுகர அவனை ஆழிப் பேரலையாக ஒரு உணர்வு அவனை சுருட்டியது. அவளுக்கும் அதே நிலைமை தான். அவனது அருகாமை அவளை தடுமாற வைத்தது.