“என்ன மாமா செய்ய சொல்றீங்க? நிலைமை அப்படி ஆகிருச்சு”
மனைவியின் மனம் தெரிந்த சந்தானம் “கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை. பார்த்திக்கு அப்படி ஒண்ணும் வயசு ஆகலையே? ஒரு ரெண்டு வருஷம் வேலை பாத்ததுக்கு அப்புறம் பண்ணலாமே?”, என்று கேட்டார்.
“நானும் அப்படி தான் மச்சான் நினைச்சேன். ஆணா நம்ம கூட தான் ஒரு பாம்பு சுத்திக்கிட்டு இருக்கே. அதுவும் நல்ல பாம்பு”, என்று சொல்லி அவர் கனகாவை முறைக்க அனைவருக்கும் திகைப்பு.
பார்த்தி திருமணத்திற்கும் கனகாவிற்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுந்தது அனைவருக்கும். “இங்க பாருங்க உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு என் மேல வீணா பழி போடக் கூடாது சொல்லிட்டேன்”, என்றாள் கனகா.
அடுத்த மோடி ஆவேசமாக எழுந்தார் சேது. அவர் அமர்ந்திருந்த சேர் கூட பின்னே சென்று விழுந்தது. கனகாவே ஒரு நொடி ஆடிப் போய் நிற்க “என்ன மச்சான் பண்ணினா இவ?”, என்று கேட்டார் சந்தானம்.
“என்ன பண்ணலைன்னு கேளுங்க. பார்த்தியையும் எதிர் வீட்ல இருக்குற மங்கை பொண்ணை பத்தியும் ஊர்ல நாலு பேர் கிட்ட தப்பு தப்பா பேசிக்கிட்டு இருந்துருக்கா. உண்மையை அந்த பொண்ணு என் கிட்ட சொன்னாங்குற ஒரு கரணத்துக்காக வேண்டிய வயசு பொண்ணு மேல சாணியை அடிக்க நினைச்சா நான் எப்படி சும்மா இருக்குறது? அதான் கல்யாணம் முடிவு பண்ணினேன். இவ கூட எல்லாம் வாழ்ந்ததை எண்ணி எனக்கே என் மேல அருவருப்பா இருக்கு”, என்று சொல்ல கனகா முகம் கோபத்தில் சிவந்தது.
கோதைக்கோ இதற்கு காரணம் கனகாவா என்று அவ்வளவு வெறுப்பாக வந்தது.
“என்ன மாபிள்ளை சொல்றீங்க இவளா?”, என்று கேட்டார் ஆறுமுகம்.
“ஆமா மாமா, ஒரு வயசு பொண்ணை பாத்தி தப்பா சொல்ற இவ எல்லாம் பொம்பளையே கிடையாது. என் பிள்ளைக கூட வாழணும்னு தான் பொறுமையா போறேன். இல்லைன்னா இவளைக் கொன்னுட்டு கூட ஜெயிலுக்கு போயிருவேன்”, என்று சொன்னவரின் குரலில் அவ்வளவு வெறுப்பு.
“எங்க கிட்ட சொல்லி இருக்கலாமே மச்சான்?”, என்றார் சந்தானம்.
“சொல்லி என்ன பண்ண சொல்றீங்க? இவ எப்ப என்ன பண்ணுவான்னு ஏதாவது நமக்கு தெரியுமா? அதான் காதும் காதும் வச்ச மாதிரி பேசி முடிச்சிட்டேன். இப்பவும் இவ என்ன பண்ணி இதை நிப்பாட்டுவாளோன்னு பயமா தான் இருக்கு. நம்ம வீட்லயும் பொம்பளை பிள்ளைங்க இருக்காங்கன்னு கொஞ்சமாவது நெஞ்சுல ஈரம் இருக்குறவ ஒரு வாழ வேண்டிய பொண்ணை அசிங்கப் படுத்துவாளா? இந்த கல்யாணம் நடக்கலைனா என்னை உயிரோட பாக்க முடியாது மச்சான், என் பிள்ளைகளுக்காக தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன். இல்லைன்னா எப்பவோ என் சீதா கூட போயிருப்பேன், அந்த ராமன் மாதிரி வாழணும்னு தான் எனக்கு இந்த பேர் வச்சாங்களோ என்னவோ? அதை மறந்துட்டு ரெண்டாவது கல்யாணம் பண்ணுனதுனால தான் இவ்வளவு கஷ்ட படுறேன். இவளுக்கு பயந்து தான் உங்க கிட்ட சொல்லலை. அதுக்காக நம்ம வீட்ல நடக்குற நல்ல காரியத்துக்கு உங்களையும் மச்சான் குடும்பத்தையும் கூப்பிடாம இருக்க முடியாதே?”
“புரியுது மாப்பிள்ளை. என்ன பண்ணுறது? யாருக்கோ சாவு வருது. இந்த கழுதைக்கு வர மாட்டிக்கு”, என்று சொன்ன தந்தையை வெறுப்பாக பார்த்தாள் கனகா.
“எல்லாரும் வந்துருங்க. வீட்ல தான் ஏற்பாடு செஞ்சிருக்கேன். பார்த்திக்கு அம்மா வழி உறவுனு இருக்குறது நீங்க தான். தாமதமா சொன்னேன்னு வராம இருந்துறாதீங்க. ஆனா இவளை மட்டும் கூட்டிட்டு வந்துறாதீங்க. இவ முகத்துல முழிச்சா என் பிள்ளை நல்லா இருக்க மாட்டான்”
“கண்டிப்பா நாங்க வறோம் மாப்பிள்ளை. மருமகனா இருந்தாலும் பார்த்தி எங்களுக்கு பிள்ளை மாதிரி தான். என்ன நாங்க ஒண்ணு ஆசைப் பட்டோம். எங்க மகளுக்கு தான் கொடுத்து வைக்கலை”, என்றார் சந்தானம்.
“எனக்கும் அந்த எண்ணம் இருந்துச்சு மச்சான். ஆனா விதி. என்ன பண்ண?”, என்று சேது சொல்ல கோதைக்கு கனகாவை கொன்று போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.
மேலும் நிச்சயதார்த்த தகவலை கேட்டார் ஆறுமுகம். எல்லாம் சொன்ன சேது “தப்பா எடுத்துக்காதீங்க. வீட்ல தான் ஏற்பாடு பண்ணிருக்கோம். எல்லாரும் வந்துருங்க. என் மேல என்ன கோபம் இருந்தாலும் பார்த்தியும் உங்க வீட்டு பிள்ளை தான். அவனுக்காக பாருங்க”, என்று கடைசியாக சொல்ல எப்படி அவரிடம் கோபம் காட்டவாம்?
“சரி வந்துறோம். நேரம் ஆச்சு சாப்பிட்டு போங்க”, என்றார் ஆறுமுகம்.
“இல்லை, ஒரு டீ மட்டும் போதும்”, என்று சேது சொல்ல கோதை அதை எடுத்து வந்து கொடுத்தாள். மேலும் சில விஷயங்களை பேசி விட்டு சென்ற சேது கடைசி வரை கனகாவிடம் எதையுமே பேச வில்லை.
அவர் சென்றதும் “இப்ப உனக்கு சந்தோஷமா? என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டியே?”, என்று கோதை புலம்ப அதற்கு கனகா பேச என ஆண்களுக்கு தான் தலை வலியாக இருந்தது.
ஆறுமுகம் தலையிட்டு அவர்களை வாயை மூட வைக்க கனகா அப்போதே முடிவு எடுத்து விட்டாள் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தியே ஆக வேண்டும் என்று.
அது தெரியாமல் மங்கையும் சரி பார்த்திபனும் சரி திருமண கனவில் மிதந்து கொண்டிருந்தனர். சேது கயல் மற்றும் பார்த்திபன் மூவரும் மட்டும் சென்று உடைகளையும் மங்கைக்கான நிச்சய சேலையையும் எடுத்துக் கொண்டு வந்தனர்.
மங்கைக்கு தேவையான ஜாக்கெட் தைக்க அளவு பிளவுஸ் வேண்டும் என்பதால் சேது கயலிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டார்.
ஆனால் அவளை குறுகுறுவென்று பார்த்த படி பார்த்திபன் ஏதோ யோசிக்க “என்ன அண்ணா ஏதோ பிளான் போடுற மாதிரி இருக்கு?”, என்று கேட்டாள் கயல்.
“இல்லை உனக்கு படிக்க வேண்டிய வேலை இருக்கும். நான் சும்மா தானே இருக்கேன்? அதான் வாங்கிட்டு வரலாம்னு”, என்று அவன் அசடு வழிய “ஆமா ஆமா ஒரு நாள் லீவ் எடுத்து துணி எடுக்கும் போது இது மங்கைக்கு நல்ல இருக்காது, அவ கலருக்கு இது தான் நல்லா இருக்கும்னு பேசியே கடை கடையா ஏறி இறங்க வச்சப்ப நான் படிக்கணும்னு உனக்கு நினைவு இல்லை. இப்ப எதிர் வீட்ல போய் அளவு பிளவுஸ் வாங்க போற நேரத்துல தான் படிச்சு கிழிக்க போறேனா? ஆனாலும் அண்ணனா போய்ட்ட. அதனால உன்னை மன்னிச்சு விடுறேன். நீயே போய் வாங்கிட்டு வா”, என்றாள்.
அவள் சொன்னதைக் கேட்டு அசடு வழிந்தவன் சிறு வெட்கத்தோடு அங்கே செல்ல அண்ணனைப் பார்த்த கயலுக்கு அவ்வளவு சந்தோஷம்.
மங்கை வீட்டுக்குச் சென்ற பார்த்திபன் சிறு தயக்கத்துடன் அழைப்பு மணியை அழுத்தினான். அவள் வண்டி அங்கே இருப்பதால் அவள் இருப்பது அவனுக்கு தெரியும் தான். அது மட்டுமல்லாமல் லதாவும் குடும்பத்தோடு காலையிலே வெளியே செல்வதையும் பார்த்திருந்தான். இருந்தாலும் முதல் முறை அவள் வீட்டுக்கு செல்ல சிறு தடுமாற்றம் தான். கயலே அப்படி அவனை கலாய்க்கும் போது இவர்கள் வீட்டில் தான் வந்ததற்கு என்ன சொல்வார்களோ என்று இருந்தது.
லதா இருந்தால் அப்படியே வாசலோடு திரும்பி இருப்பான். கோமளம் மட்டுமே வீட்டில் இருக்க அவளை தனியே சந்திக்க ஆசையாக இருந்தது.