“வாங்க சார், வேலைக்கு போன பிஸில என்னை மறந்துருப்பீங்கன்னுல நினைச்சேன்?”, என்றாள் புன்னகையாக.
அவள் எதிரே அமர்ந்தவன் “ஓஹோ, அப்ப மேடம் வேலைல இருந்தா என்னை நினைக்க மாட்டீங்க? அப்படி தானே? இதுக்கு என்ன பதிலோ அது தான் என்னோட பதிலும்?”, என்று அவளையே வாரினான்.
அவள் எப்படி மறுப்பாளாம்? ஒரு பக்கம் வேலை நடந்து கொண்டிருந்தாலும் அவன் நினைவு அவ்வபோது அவளை அலைகழிக்க தானே செய்தது?
அவள் அமைதியாக இருக்க பேச்சை மாற்றும் விதமாக வேலையைப் பற்றி அங்குள்ளவர்களைப் பற்றி அனைத்தையும் சொன்னான். ஒரு கணவன் மனைவியிடம் அன்றைய நிகழ்வுகளை எப்படி பரிமாறுவானோ அது போலவே இருந்தது அவன் செய்கை.
சிறிது நேரம் கழித்தது அவளுக்கு வகுப்பு இருப்பதால் “சரி நீ பாரு. நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு எழுந்து கொண்டான்.
அவனுடன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருந்தாலும் வேலை இருப்பதால் சரி என்று சொன்னாள்.
அவனுக்கும் அவளை விட்டுச் செல்லவே மனதில்லை. காதலர்கள் அதிகம் ஆசைப் படும் தனிமை அவர்களுக்கு கிடைக்க அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனது பரபரத்தது.
ஆனாலும் வேலை செய்யும் இடத்தில் அவளை தீண்டி தர்மசங்கடத்துக்கு ஆளாக்க அவன் விரும்ப வில்லை. யாராவது திடீரென்று வருவார்கள் என்பதால் தான் தயங்கினான்.
எழுந்து நின்றவன் அவளையே பார்த்த படி இருக்க “என்ன ஆச்சு?”, என்று கேட்டாள்.
“உன்னை இறுக்கி கட்டி பிடிச்சு ஒரு முத்தமாவது கொடுத்துற மாட்டோமான்னு இருக்கு டி. ஆனா சூழ்நிலை சரியா இல்லை. நான் வரேன்”, என்று சொல்லி அவளை சிவக்க வைத்து விட்டே சென்றான்.
அன்று இரவு அவன் அவளை போனில் அழைக்க அதை எடுத்து காதில் வைத்தவள் “சொல்லுங்க பார்த்தி”, என்றாள்.
“ஜன்னல் பக்கம் வா டி”, என்று சொல்ல “வந்துட்டீங்களா? சாப்பிட்டுட்டு இருப்பீங்கன்னு நினைச்சேன்”, என்ற படி சென்று நின்றாள்.
தோட்டத்தில் இருந்து வந்த விளக்கின் வெளிச்சமும் தெரு விளக்கின் வெளிச்சமும் வேப்ப மரக் காற்றின் குளுமையும் மட்டுமே அந்த இடத்தை ஆக்கிரமிக்க அவர்களுக்கு அந்த தருணம் மிக ரம்மியமாக இருந்தது.
சுவீட் நத்திங்ஸ் என்னும் விதமாய் வெகு நேரம் அவர்கள் பேச்சு கடக்க “நாளைக்கு வேலைக்கு போகணும் தானே? போய் தூங்குங்க”, என்றாள் கண்டிப்பாக.
“சரிங்க அரசியாரே. ஆனாலும் ஒரு மாதிரி இருக்கு டி”, என்றான்.
“என்ன ஆச்சு?”
“கல்யாணம் வரைக்கும் உன்னை தனியாவே பாக்க முடியாதான்னு இருக்கு. அதும் இன்னைக்கு சென்டர்ல என் பக்கத்துல இருந்த. ஆனா கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத மாதிரி இருக்கு”
“நானா உங்களைப் போகச் சொன்னேன்?”, என்று அவள் மெதுவாக முனங்க “ஏய் என்ன டி இப்படிச் சொல்ற?”, என்றான்.
“ஆமா நமக்கு கல்யாணம் பிக்ஸ் ஆனது அவங்களுக்கு தெரியும். அப்புறம் எப்படி இண்டீசெண்ட்டா உள்ள வருவாங்க? எனக்கு கால் தான் பண்ணுவாங்க”, என்றாள்.
“இழுத்தா தான் என்னவாம்?”, என்று அவன் கிசுகிசுப்பாக கேட்க அவனை மிரட்டி உருட்டி படுக்கச் சொல்வதற்குள் அவள் தூக்கம் தூரச் சென்றிருந்தது.
அதற்கு அடுத்து நாட்கள் மெதுவாக நகர அவர்கள் நிச்சயதார்த்த வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்திருந்தது. சேது அதிக சொந்தங்களை எல்லாம் அழைக்க நினைக்க வில்லை. அதை திருமணத்திற்கு சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணி நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்தார்.
மண்டபம் எல்லாம் பிடிக்காமல் இரண்டு வீட்டுக்கும் இடையில் இருந்த இடத்திலே உணவு பரிமாறிக் கொள்ளலாம் என்றும் முடிவு எடுத்திருந்தார்கள்.
நெருங்கிய சொந்தங்களுக்கு அழைத்த சேதுவுக்கு மிக நெருங்கிய சொந்தமான மாமனார் மற்றும் மச்சினன் குடும்பத்தை அழைக்க அவ்வளவு தயக்கம். அவர் தயங்கியது கனகாவை நினைத்து தான்.
அதற்காக பார்த்தியின் சொந்த தாத்தா மற்றும் தாய்மாமாவிடம் சொல்லாமல் இருக்க முடியாதே. தாய் மாமா தானே நிச்சயத்தில் எல்லாம் செய்ய வேண்டும்.
அரை மனதாக தான் அவர்கள் வீட்டுக்கு சென்றார். அவரைக் கண்டது முதலில் கோதை தான். “அண்ணே நீங்களா? வாங்க வாங்க”, என்று வரவேற்றாள்.
“எப்படி மா இருக்க? பிள்ளைங்க எல்லாம் எப்படி இருக்கு? மாமாவையும் மச்சானையும் எங்க?”, என்று கேட்டார்.
“நீங்க உக்காருங்க அண்ணா. நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். இருங்க எல்லாரையும் கூப்பிடுறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.
அப்போது தான் வேலை முடிந்து வந்த கனகா “என்னங்க”, என்ற படி அவர் அருகே வந்தாள் அவளைக் கண்டு அவர் முகத்தை திருப்ப “மாமா, என்னை பாக்கவா வந்தீங்க? நம்ம வீட்டுக்கு கூப்பிட வந்தீங்களா? போவோமா? நான் வேலைக்கு எல்லாம் போறேன் தெரியுமா? வேலை ரொம்ப கஷ்டமா இருக்கு மாமா”, என்று ஆர்வமாக பேசிக் கொண்டே இருக்க அப்போது அந்த வீட்டில் உள்ள அனைவரும் அங்கே வந்தார்கள். சேது கனகா புறம் திரும்பவும் இல்லை. அவள் பேச்சுக்கு செவி சாய்க்கவும் இல்லை.
“வாங்க மாப்பிள்ளை”, என்று ஆறுமுகம் வரவேற்க சந்தானமும் வீட்டு மாப்பிள்ளையை வரவேற்றார். “ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு வந்தேன் மாமா. தயவு செஞ்சு உங்க பொண்ணை என் கிட்ட பேச வேண்டாம்னு சொல்லுங்க”, என்றார் சேது.
“கனகா எதுக்கு அவரை டென்ஷன் பண்ணுற தூரப் போ”, என்று கோதை சொல்ல கனகாவிற்கு அவ்வளவு அவமானமாக இருந்தது.
“நம்ம பார்த்திக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்கேன் மாமா. வர ஞாயிறு அன்னைக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்கேன். எல்லாரும் குடும்பத்தோட வரணும். இப்ப வந்து சொல்றது தப்பு தான் மச்சான். சில பேர் இடையில இல்லாம இருந்திருந்தா உங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டு தான் முடிவு எடுத்திருப்பேன். மாமா கிட்டயும் உங்க கிட்டயும் கலந்துக்காம முடிவு எடுத்தது வருத்தமா தான் மச்சான் இருக்கு”, என்று சொல்ல அனைவருக்கும் அந்த செய்தி அதிர்ச்சி தான்.
இதை அவர்கள் எதிர் பார்க்கவே இல்லை. கோதை முகம் கூட சுருங்கிப் போனது. மூத்த மகளை பார்த்திபனுக்கு மணம் முடித்து வைக்க அவ்வளவு ஆசை பட்டாள் கோதை.
“உங்க நிலைமை எங்களுக்கு புரியுது மாப்பிள்ளை. ஆனாலும் இவ்வளவு பெரிய விஷயத்தை இப்ப வந்து சொல்றீங்கனு வேதனையா இருக்கு”, என்றார் ஆறுமுகம்.