“சரி மாப்பிள்ளை”, என்று அவர் சிரிக்க அவனும் சிரித்த படி அதை பிரித்தான். மங்கை கவினிடம் போனைக் கொடுத்து பார்த்திபனை வீடியோ எடுக்கச் சொன்னாள். ஏனோ பைக்கைக் கண்டதும் அவன் சந்தோஷம் எப்படி இருக்கும் என்று காலத்திற்கும் பார்க்க வேண்டும் போல இருந்தது.
அவன் ஒரு பக்கம் வீடியோ எடுத்துக் கொண்டிருக்க பார்த்திபன் அவ்வளவு ஆர்வமாக அதை பிரித்தான். உள்ளே வண்டிச் சாவி இருக்க அவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
அப்போதும் அவன் அது புது வண்டி என்றெல்லாம் நினைக்க வில்லை. செகண்ட்ஹேன்ட் வண்டி என்று தான் நினைத்தான்.
“தேங்க்ஸ் பா”, என்று சொல்ல “முதல்ல வெளிய போய் வண்டியைப் பாரு டா”, என்றார் சேது.
அவனும் ஆர்வமாக வெளியே செல்ல அங்கே நின்ற வண்டியைக் கண்டு அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான். நிச்சயம் அவன் அதை எதிர் பார்க்கவே இல்லை.
ஒரு சாதாரண இரண்டாம் தர வண்டியே அவனுக்கு கனவாக இருக்கையில் அங்கே நிற்கும் வண்டி அவனை சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.
“அப்பா”, என்ற படி அதிர்வாக அவரைப் பார்க்க “உனக்கு தான் டா. ஆனா இன்னும் முழு பேமெண்ட் பண்ணலை”, என்று சேர்த்தே சொன்னார்.
“தேங்க்ஸ் பா”, என்ற படி நெகிழ்ந்து அழைத்தவன் அவரை அணைத்துக் கொண்டான். அவன் கண்களில் லேசாக ஈரம் படர அனைவருக்குமே அவன் சந்தோஷம் ஆறுதலைத் தான் தந்தது. பின் வண்டியை நெருங்கி அதை ஆசையாக வருடினான்.
அவனுக்கு பிடித்த கலரில் அதுவும் புல்லட் எல்லாம் அவன் வாழ்நாளில் நடக்கவே முடியாத நிஜமாக இருந்தது. அவன் உணர்வுகள் எல்லாம் வீடியோவாக பதிவு செய்யப் பட தன்னவனை மங்கையும் ரசித்தாள்.
“மாப்பிள்ளை, கயலை அழைச்சிட்டு ஒரு ரவுண்ட் போயிட்டு வாங்க”, என்றாள் கோமளம்.
அவன் எப்படி மறுப்பானாம்? “சரிங்க அத்தை”, என்றவன் “வா கயல்”, என்று சொல்ல அவளும் சந்தோஷமாக அதில் ஏறிக் கொண்டாள்.
இருவரையும் நெகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்த சேதுவைக் கண்டவன் “அப்பா நீங்களும் வாங்க”, என்றான்.
அவரும் ஏறிக் கொள்ள மூவரையும் சிரிப்புடன் பார்த்தனர் மங்கை வீட்டினர். ஒரு ரவுண்ட் சுற்றி விட்டு வந்தவனுக்கு மங்கையை ஏற்றிக் கொள்ள ஆசை தான். ஆனால் அவளை அழைத்துச் சென்று மற்றவர் பார்வையில் விழ வேண்டாம் என்று எண்ணி ஆசையை கை விட்டான். அடுத்து கவின் மற்றும் அஸ்வின் இருவரையும் அழைத்துச் சென்றான்.
சந்திரன் குடும்பத்துடன் கிளம்ப தயாராக “எங்க கிளம்புறீங்க. இருங்க இப்ப சாப்பாடு எல்லாம் வந்துரும். சாப்பிட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்”, என்றார் சேது. அப்போது ஹோட்டலில் அவர் ஆர்டர் செய்திருந்த இரவு உணவுகளும் வந்து விட அதற்கு பின் நேரம் நிற்காமல் சென்றது.
அவ்வபோது மங்கை மற்றும் பார்த்திபன் இருவரும் கண்களால் பேசிக் கொண்டே இருந்தனர். ஏனோ அந்த நாள் இனிய நாளாக இருந்தது இருவருக்கும்.
உணவு முடிந்ததும் பார்த்தி மற்றும் மங்கை திருமண பேச்சு வார்த்தை ஆரம்பிக்க அடுத்த இரண்டு வாரத்தில் அவர்கள் நிச்சயதார்த்தமும் அதற்கு அடுத்து வரும் முதல் முகூர்த்தத்தில் அவர்கள் திருமணமும் செய்து விடலாம் என்று பேசி முடிக்கப் பட்டது.
“அத்தை உனக்கு கல்யாணமா? பாத்தி மாமா கூடயா? அப்ப என்னை எப்ப கல்யாணம் பண்ணுவ?”, என்று அஸ்வின் வேறு மழலை குரலில் கேட்க அந்த இடமே சிரிப்பில் நிறைந்தது.
அதற்கு பின் அவர்கள் வீட்டுக்கு கிளம்பிச் செல்ல கண்களால் அவனிடம் விடை பெற்றாள் மங்கை.
“டிரஸ் மாத்துறதுக்கு முன்னாடி ஜன்னல் பக்கம் வந்து நில்லு மங்கை பிளீஸ்”, என்று மெசேஜ் அனுப்பி அவளை திகைக்க வைத்தான். பின் தங்கை மற்றும் தந்தையை இறுக்கி அணைத்து விட்டு அதற்கு பின் தான் உறங்கச் சென்றான்.
அவன் அறைக்குள் சென்று விளக்கைப் போட்டது தான் தாமதம் அவனது தேவதை ஜன்னல் அருகே வந்தாள். அவன் கண்கள் அவளை இமைக்காமல் பார்க்க அவ்வளவு தூரம் இருந்தாலும் அவள் மேனி சிலிர்த்தது.
“எதுக்கு இப்படி பாக்குறீங்க?”, என்று அவள் கைகளால் சைகை செய்ய போனை காண்பித்தவன் “என் பொண்டாட்டியை நான் சைட் அடிக்கிறேன். உனக்கு என்ன?”, என்று மெசேஜ் அனுப்பி வைத்து மேலும் சிவக்க வைத்தான்.
மெசேஜில் பார்த்தி என்று அவள் சிணுங்க “அவ்வளவு அழகா இருக்க டி. அப்படியே உன்னை இங்க தூக்கிட்டு வரணும் போல இருக்கு. தயவு செஞ்சு கல்யாணம் வரைக்கும் என் கிட்டயே வந்துராத”, என்று வேற சொல்ல அதற்கு பின் அவர்களுக்கான நேரம் அழகாக சென்றது.
அடுத்த நாள் அனைவருக்கும் இயல்பாக விடிந்தது. அவன் ஆசைப் பட்ட வேலைக்கு செல்லப் போகிறான். அவன் மனது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது.
மங்கை பற்றிய நினைவுகளும் தந்தை சொன்ன திருமண விஷயமும் மட்டுமே அவன் எண்ணத்தில் சுழன்று கொண்டிருந்தது. கூடிய விரைவில் திருமணம் என்று தான் சேது சொல்லி இருந்தார். இப்போதே அவனுக்கு கல்யாண களை வந்தது போல இருந்தது. ஆனாலும் மனதுக்குள் ஒரு சஞ்சலம். இந்த திருமணம் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடக்குமா என்று அவனுக்கு பயமாக இருந்தது.
டிப் டாப்பாக உடை அணிந்து கிளம்பி வந்த மகனை பூரித்து போய் பார்த்தார் சேதுராமன். “அண்ணா சூப்பரா இருக்க போ? இன் பண்ணினாலே தனி அழகு தான் போல?”, என்று கயல்விழியும் சொல்ல லேசாக சிரித்து வைத்தான். அவன் வெட்கம் கூட அவ்வளவு அழகாக இருந்தது.
சீதா புகைப்படத்திற்கு முன்பு போய் நின்றவன் “அம்மா நான் முதல் நாள் வேலைக்கு போறேன். நீங்க என் கூடவே இருக்கணும். என் மனசுக்குள்ள இருக்குற சஞ்சலத்தையும் நீங்க சாமியா இருந்து பாத்துட்டு தான் இருப்பீங்க? நான் ஆசைப் பட்ட வாழ்க்கை கிடைக்க நீங்க தான் மா உதவி செய்யணும்”, என்று மனம் உருகி வேண்டி விட்டு கிளம்பினான்.
எப்போதும் போல அவனது பாக்கெட்டில் பணத்தை எடுத்து வைத்த சேதுராமன் தன்னுடைய கையால் வண்டிச் சாவியை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
“தேங்க்ஸ் பா”, என்றவனுக்கு அவ்வளவு நிறைவு.
வேலையில் போய் சேரும் போது கொஞ்சம் படபடப்பாக தான் இருந்தது. ஆனால் அதற்கு பிறகு கொஞ்சம் பழகிக் கொண்டான். அங்கே விக்கி என்ற நண்பனும் கிடைக்க அதற்கு பின் வேலையில் எந்த திணறலும் பார்த்திபனுக்கு இல்லை.
அன்று வேலை முடிந்து தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பியவனுக்கு சந்தோஷமாக இருந்தது. வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு மட்டுமே தெரியும் வேலை கிடைத்ததும் வரும் சந்தோஷம்.
வண்டியை நேராக வீட்டுக்கு எல்லாம் விட வில்லை. முதலில் மங்கையை தான் காணச் சென்றான். அவள் அவனது அரசியாயிற்றே.
அவன் போன நேரம் அவளும் அலுவலகத்தில் அமர்ந்து கணக்கு வழக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைக் கண்டு அவள் முகம் மலர்ந்து போக ஒரு ஆண்மகனுக்கு அதை விட வேறு என்ன வேண்டுமாம்?