“இல்லை, எனக்கும் உங்களைப் பாக்கணும் போல இருக்கு. அட்லீஸ்ட் உங்க நெஞ்சுலயாவது ஒரு முறை சாஞ்சிக்கணும் போல இருக்கு”, என்று ஏக்கமாக சொல்ல இப்போது பேச்சிழந்து நின்றான் பார்த்திபன். ஏதோ அவள் தேடியதில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம்.
“கண்டிப்பா வரேன் மங்கை. சரி நீ வேலையைப் பாரு. அப்படி ஒரு நல்ல சான்ஸ் எல்லாம் மிஸ் பண்ணிற மாட்டேன்”, என்று சொல்லி அவளை சிவக்க வைத்து விட்டே போனை வைத்தான். ஆனால் அதற்கு அவனுக்கு நேரம் இருக்க வேண்டுமே?
சிறிது நேரத்தில் அவன் வண்டியை ஓட்ட தந்தையும் கயலும் பின்னே அமர்ந்திருக்க மூவரும் பஸ் ஸ்டாண்ட் நோக்கிச் சென்றார்கள். வண்டியை அங்கிருந்த ஸ்டாண்டில் போட்டு விட்டு மூவரும் கோயம்பத்தூர் நோக்கி பேருந்தில் சென்றார்கள்.
முதலில் பேருக்காக அவனை நம்ப வைப்பதற்காக கூடவே அவளுக்கும் தேவையாக இருக்கும் பொருள்களை கயலுக்காக வாங்கிக் கொடுத்தார் சேது.
அதற்கு பின் அவன் மறுக்க மறுக்க பார்த்திக்கு தேவையான உடைகள் மற்றும் பொருள்களையும் வாங்கிக் கொடுத்தார்,
“அப்பா எனக்கு எதுக்கு இத்தனை சட்டை? வேண்டாமே?”, என்று அவன் மறுக்க “ஷ் வேண்டாம்னு சொல்லக் கூடாது. நாளைல இருந்து ஆபீஸ் போற? தினமும் போட்டதையா போடுவ?”, என்று சொல்லி அவன் வாயை அடைத்தார்.
அவன் வேண்டாம் என்று சொல்லியும் அவனுக்கு ஒரு ஸ்மார்ட் போனையும் வாங்கிக் கொடுத்தார். “ரொம்ப செலவு பண்ணுறீங்க பா?”, என்றான்.
“ஆசையா என் பிள்ளைகளுக்கு பண்ணுறேன் டா. தடுக்காத. அடுத்த மாசம் தான் நீயும் சம்பளம் வாங்கிருவியே? அதுக்கப்புறம் நீயே வரவு செலவு பாத்து சிக்கனமா இருந்துக்கோ. கயல் கூட உன் பொறுப்பு தான்”, என்று அண்ணனுக்கான கடமையையும் அவனுக்கு நினைவூட்டினார்.
தங்கையை நெகிழ்வாக பார்த்தவன் “இவளுக்கு அத்தனை பவுன் சேத்து வைப்பேன் இத்தனை பவுன் சேத்து வைப்பேன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் பா. ஆனா அவளுக்கு பிடிச்ச டாக்டர் படிப்பை எப்படி பாடுபட்டாவது படிக்க வச்சிருவேன்”, என்று சொல்ல இருவர் முகமும் மலர்ந்து போனது.
“தேங்க்ஸ் அண்ணா”, என்ற படி கயல் அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள அவனும் அவளை அணைத்துக் கொண்டான். அவர்களை நெகிழ்ந்து போய் பார்த்த சேது இருவரையும் சமாதானப் படுத்தி சாப்பிட அழைத்துச் சென்றார்,
விதவிதமான உணவுகள், அண்ணனும் தங்கையும் வாயடிப்பது, அவர்களின் சிரிப்பு சத்தம் என அனைத்தையும் ரசித்தார் சேது.
உணவு முடிந்ததும் “அப்பா அடுத்து வீட்டுக்கு தானே போகணும்?”, என்று கேட்டான் பார்த்திபன். ஏனென்றால் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு மங்கையை ஒரு முறை பார்த்து விடலாம் என்று அவன் காதல் கொண்ட மனம் ஆர்ப்பரித்தது.
“வந்தது தான் வந்துட்டோம். ஒரு படம் பாத்துட்டு போவோம். கயலையும் எங்கயும் கூட்டிட்டு போகலை. அடுத்த மாசத்துல இருந்து அவளும் படிப்பு படிப்புன்னு ஆயிருவா”, என்று சொல்ல அவனும் சரி என்று சொல்லி நல்ல படத்திற்கான ரிவ்யு மற்றும் டிக்கட்டை சோதித்து அவர்களை அழைத்துச் சென்றான்.
படம் முடியவே ஆறு மணி ஆக மூவரும் சந்தோஷமாக தியேட்டரில் இருந்து வெளியே வந்தார்கள்.
அப்போது ஒரு துணிக் கடையில் வேலை கேட்டு விட்டு வெளியே வந்த கனகாவின் கண்களில் அவர்கள் பட அவள் வயிறு எரிந்தது.
கனகாவிற்கு அந்த வீட்டில் மரியாதை துளியும் இருக்க வில்லை. கோதை அந்த அளவுக்கு அவளுக்கு பாடம் எடுத்திருந்தாள். அவளது தந்தையும் அண்ணனும் அவளை ஒரு மனுஷியாக கூட கருதவில்லை. கையில் செலவுக்கு என்று பணம் கூட இல்லை. இப்படியே போனால் எப்படி என்று எண்ணி தான் அக்கம் பக்கத்தில் கேட்டு இங்கே வேலை கேட்டு வந்திருந்தாள்.
அங்கேயும் “உங்களுக்கு கொஞ்சம் வயசு ஆகிருச்சு மா. அதனால சேல்ஸ்ல நிக்க வைக்க முடியாது. வேணும்னா குடவுன்ல வேலை இருக்கு பாக்குறீங்களா? வர புது ஸ்டாக்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டனும். வேற பிரான்ச்க்கு போக வேண்டியதை சரியா பேக்கிங் பண்ணனும். இப்படி வேலை இருக்கும். சம்பளம் பத்தாயிரம் வரும். சாப்பாடு இங்க சாப்பிட்டுக்கலாம். பிஎப் ஈ எஸ் ஐ யும் பிடிச்சிருவோம். சரின்னா நாளைல இருந்து வேலைக்கு வந்துருங்க”, என்று அவர்கள் சொல்ல சரி என்று சொல்லி விட்டு வெளியே வரும் போது தான் அவள் அவர்களைப் பார்த்தது.
“என்னை இன்னொரு வீட்ல இடி சோறு வாங்கி திங்க வச்சிட்டு நீங்க கூட்டணி போட்டு ஜாலியா இருக்கீங்களா?”, என்று எண்ணியவளுக்கு மூவரின் சிரிப்பும் மிளகாயை அரைத்து உடல் எல்லாம் பூசியது போல தான் எரிந்தது. “இருங்க உங்களைப் பாத்துக்குறேன்”, என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டாள்.
நேரம் இப்போது அதிகம் ஆகி இருக்க மங்கையை பார்க்க செல்லும் எண்ணத்தை கை விட்டான் பார்த்திபன். அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் பார்த்திபன் அவனது அறைக்குள் சென்று விட அவனுக்கு தெரியாமல் கயலும் சேதுவும் பிறந்த நாள் ஏற்பாடுகளைச் செய்தார்கள். பெரிய அலங்காரம் எல்லாம் இல்லை. சாதாரணமாக தான். அப்போது சந்திரனும் கவினும் உள்ளே வந்தார்கள். சேது சந்திரனிடம் தான் கேக், சிற்றுண்டி மற்றும் இனிப்பு வகைகளை வாங்கி வரச் சொல்லி இருந்தார்.
“எல்லாம் வாங்கிட்டேன் சம்பந்தி. இந்தாங்க”, என்று சந்திரன் கொடுக்க கயலும் சேதுவும் அதை வாங்கி உள்ளே வைத்தார்கள்.
“புது வண்டி வந்துருச்சா?”, என்று சந்திரன் கேட்க “அதுக்கு தான் கால் பண்ணணும்னு நினைச்சேன்”, என்று பேசிய படியே இருவரும் வெளியே செல்ல உள்ளே கயலும் கவினும் மட்டும் இருந்தார்கள்.