“சரி அப்ப போன் பண்ணி சொல்லிரு. அப்புறம் கடைக்கு போகணும் டா. கயலுக்கு வீட்டுக்கு போட கொஞ்சம் டிரெஸ் எல்லாம் வாங்கணும். அப்படியே வெளிய சாப்பிட்டு வந்துறலாம். நீயும் கிளம்பு. வண்டிய பஸ் ஸ்டாண்ட்ல போட்டுட்டு பஸ்ல போய்ட்டு வந்துருவோம்”

“சரிப்பா”, என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்றான்.

அங்கே அவனுக்காக ஒரு ஸ்மார்ட் வாட்ச்சை வாங்கி வைத்துக் கொண்டு காத்திருந்தாள் மங்கை. முதலில் அவனுக்கு ஒரு அலைபேசி வாங்கி கொடுக்க வேண்டும் என்று தான் எண்ணினாள்.

இப்போதைக்கு அதை விட வாட்ச் அவன் வேலைக்கு போகும் போது தேவை இருக்கும் என்பதால் உடனடியாக வாங்கி விட்டாள்.

பதினொரு மணிக்கு தான் அவனுக்கு கிளாஸ் என்று தெரியும். மணி இப்போது தான் பத்தே முக்கால் ஆகி இருந்தது. ஆனாலும் அவனைக் காணததால் மெல்லிய பரபரப்பு அவளிடம்.

நேற்று நடந்த விஷயங்கள் வேறு நினைவில் வந்து அவளை மொத்தமாகவே சிவக்கச் செய்தது. நிச்சயம் நேற்று தான் கொடுத்த முத்தத்தால் இன்று அவன் தைரியம் அடைந்திருப்பான் என்று அவளுக்கு தெரியும். அதனால் அவனுடன் தனியே இருக்கவும் தடுமாற்றமாக இருந்தது.

அவன் தொட்டா விலகி விடு என்று அவள் மனசாட்சி சொல்ல அது எப்படி என்னால முடியும் என்று அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க அவளது எண்ணத்தின் நாயகனே அவளை அழைத்து விட்டான்.

ஆர்வமாக அதை எடுத்தவளுக்கு அவனுக்கு வாழ்த்து சொல்ல தொண்டை வரை ஆர்வம் இருந்தது. ஆனால் அவன் கண்ணைப் பார்த்து நேரில் தான் சொல்ல வேண்டும் என்று எண்ணி கட்டுப் படுத்திக் கொண்டு “சொல்லுங்க பார்த்தி கிளாஸ்க்கு வரலையா?”, என்று கேட்டாள்.

“நான் வரலை மங்கை”, என்று அவன் சொல்ல அவள் ஆர்வம் எல்லாம் அப்படியே வடிந்து போனது.

“புரியலை, எதுக்கு வரலை? வேலையா இருக்கீங்களா நீங்க?”

“இல்ல மா. கிளாஸ்க்கே வரலை. டிரைவிங் கிளாஸ் இப்ப வேண்டாம்”, என்று சொன்னதும் சட்டென்று அவள் ஆர்வம் எல்லாம் வடிந்து அவள் கண்கள் கூட கலங்கி போனது.

பதில் பேச கூட முடியாமல் தினறினாள். அவள் நிலை தானே அவனுக்கும். அதனால் “சாரி மங்கை, நானும் கிளாஸ்க்கு தான் கிளம்பினேன். ஆனா அப்பா, நமக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் கவனமா இருக்கணும். எங்க சித்தி ஏதாவது செய்வாங்கன்னு சொன்னார்”, என்று சொல்ல இப்போது அவன் திருமணம் பற்றி பேசியது கொஞ்சம் சந்தோஷத்தை தந்தாலும் இனி அவனை தனியே பார்க்க முடியாதா என்று ஏக்கமாகவும் இருந்தது.

கூடவே அவன் குரலில் இருந்த கவலையும் புரிய அடுத்த நொடி தன்னைத் தேற்றிக் கொண்டவள் “சரி பார்த்தி எனக்கு புரியுது. மாமா சொன்னதையும் நாம யோசிக்க தான் செய்யணும். எங்க வீட்லயும் அது பத்தி பேசினாங்க. ஆனா கிளாஸ் வேண்டாம்னு சொல்லலை. கவனமா இருங்கன்னு மட்டும் சொன்னாங்க. அதனால நம்ம கவனமா இருக்குறது நல்லது தானே?”, என்று அவனை சமாதானப் படுத்தினாள்.

“அது புரியுது. ஆனா எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருக்கே?”, என்று அவன் வெளிப்படையாகவே சொல்லி விட “கிளாஸ் வந்தா தான் பாக்கணுமா என்ன? என் கிட்ட கால் பண்ணி பிரி டைம் கேட்டுட்டு நேரா இங்க ஆபீஸ்க்கே வந்துருங்க. நாளைக்கு வேலைக்கு வேற போயிருவீங்க. அப்புறம் மீட் பண்ண கூட முடியாது. இல்லைன்னா இருக்கவே இருக்கு உங்க வீட்டு ஜன்னலும் எங்க வீட்டு ஜன்னலும். அது தான் நம்ம மீட்டிங் ஸ்பாட்”, என்று சிரிக்க அவனும் அரை மனதாக சமாதானம் ஆனான்.

“நீ சொல்றது எல்லாம் ஓகே தான். ஆனா எனக்கு இது எல்லாம் பத்துமானு தெரியலை. எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு”, என்று சொல்ல உதடு கடித்து உணர்வுகளை அடக்கியவள் அமைதியாக இருக்க “நிஜமாவே எனக்கு உன் கூடவே இருக்கணும் போல இருக்கு டி. உன்னை பாத்துகிட்டே பேசிக்கிட்டே உன்னை தொட்டுகிட்டே”, என்று அவன் சொல்லிக் கொண்டே போக அவள் முகம் குங்குமமாக சிவந்து போனது.

“பார்த்தி பிளீஸ் இப்படி எல்லாம் பேசாதீங்க. எனக்கு என்னவோ போல இருக்கு?”

“முத்தம் எல்லாம் கொடுத்து உசுப்பேத்திட்டு இப்ப பேச கூடாதுன்னு சொல்றியா? இறங்கும் போது கொடுத்த முத்தத்தை கார்ல ஏறும் போது கொடுத்திருக்கலாம், அப்படியே டெவலப் பண்ணியிருப்பேன்”, என்று வேறு சொல்ல “பார்த்தி”, என்று சிணுங்கினாள்.

“முடியலை டி, இவ்வளவு நாள் எல்லாம் நான் இப்படி இல்லை. உன்னை வளைச்சு வளைச்சு சைட் அடிப்பேன். ஆனா என் கைக்குள்ள இருக்கணும்னு எல்லாம் நினைச்சது இல்லை. இப்ப என் கைக்குள்ள உன்னை இறுக்கி வச்சிக்கணும்னு ஆசையா இருக்கு. என் மூச்சு காத்து கூட உன்னை நினைச்சு சூடாகுது டி”, என்று அவன் தாபத்தை வார்த்தையால் கொட்ட அவள் அதற்கு எப்படி எதிர்வினை புரிவாளாம்?

அவளுக்கும் இந்த உணர்வுகள் எல்லாம் புதிது. அவன் சொல்ல சொல்ல அவளுக்கும் அவனை அவ்வளவு தேடியது. அவனுடன் தனியே நேரத்தை செலவழிக்க அவள் தேகமும் மனமும் பரபரத்தது.

ஆனால் அதைச் சொல்ல நாணம் தடுக்க அமைதியாக இருந்தவள் அவனை இப்போது தேற்றுவது முக்கியம் என்று புரிய “பெரியவங்க சொன்னது சரியா தான் இருக்கு”, என்றாள் பேச்சை மாற்றும் விதமாக கிண்டலாக.

“ஏன் எதுக்கு அப்படிச் சொல்ற?”, என்று கேட்டவனும் தெளிந்து விட்டான்.

“நீங்க பேசுறத பாத்தா கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு ஜூனியர் மங்கையோ இல்லைன்னா ஜூனியர் பார்த்தியோ வந்துருவாங்க”, என்று சொல்ல “ஏய்”, என்று ஆர்ப்பரித்தான். அவன் முகம் குழந்தைகள் நினைவில் கணிந்தது.

“என்ன ஏய்?”

“நீ சொன்னதும் ஒரு மாதிரி சிலிர்த்துருச்சு டி. எனக்கு உன்னை மாதிரி பொண்ணு தான் பா வேணும். என் அம்மா சீதா தான் எனக்கு மகளா பிறப்பாங்க”

“பையன் பிறந்தாலும் ஏத்துக்கணும் பார்த்தி. நம்ம கைல எதுவும் இல்லையே?”

“புரியுது டா, நான் என்னோட ஆசையை சொன்னேன். பேச்சு எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிருச்சு பாரு. அப்புறம் குழந்தைங்க வந்தா சந்தோஷம் தான். ஆனா கல்யாணத்துக்கு முன்னாடியே உன்னை தொட்டு அழுக்காக்கி உனக்கு ஒரு கெட்ட பேர் வாங்கிக் கொடுக்க மாட்டேன்”

“எனக்கு தெரியும் பார்த்தி. நான் சும்மா தான் சொன்னேன்”

“அதுக்காக உன்னை தொடாமலும் இருக்க மாட்டேன். தயவு செஞ்சு என் கைல மட்டும் தனியா மாட்டிறாத. அப்புறம் நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்லை”, என்று சொல்ல மீண்டும் அவள் முகம் சிவந்து போனது.

“சரி இன்னைக்கு என்ன பிளான்?”, என்று விசாரித்தாள். அவளுக்கு வாங்கி வைத்த வாட்ச்சை எப்படி கொடுக்க என்று வேறு கவலையாக இருந்தது.