அடுத்த நாள் காலை அனைவருக்கும் சாதாரணமாக விடிந்தது. இன்றும் பார்த்திபனுக்கு கொஞ்சம் பரபரப்பாக தான் விடிந்தது. அவன் தந்தையுடன் நன்கு பேசிய பிறகு வரும் பிறந்த நாள். அதை விட மங்கை அவனுக்கானவள் என்று தெரிந்த பிறகு வரும் பிறந்த நாள்.
அதனால் இந்த நாளை அவன் ஆவலுடனே எதிர் பார்த்தான். இன்று அவனுக்கு பிறந்த நாள் என்று மங்கைக்கு தெரியாது என்று தெரிந்தாலுமே அவனுக்கு அவள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று ஆசையாக தான் இருந்தது.
அவன் குளித்து கிளம்பி வரும் போது கயல்விழி தந்தையுடன் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருக்க அவர்களை வியப்பாக பார்த்தான்.
“என்ன ரெண்டு பேரும் இன்னும் கிளம்பாம உக்காந்துருக்காங்க. இன்னைக்கு எதுவும் கவர்மென்ட் லீவ் கூட இல்லையே?”, என்று எண்ணிக் கொண்டு அவர்கள் அருகே சென்றான்.
அவனைக் கண்டதும் அவர்களும் சாதாரணமாக பேசினார்களே தவிர அவனுக்கு வாழ்த்து என்ற ஒன்றை அவர்கள் சொல்லவே இல்லை. ஆனால் அவன் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக தான் அவர்கள் லீவ் போட்டிருந்தார்கள்.
அதே நேரம் தாயும் தந்தையும் மங்கையிடம் நேற்று பார்த்திபன் என்ன பேசினான் என்பதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவளும் அவன் மணப்பெண் யாரென்று தெரியாமல் பேசியதை சொன்னாள். அவன் மனதில் இருப்பதையும் சொல்ல பெற்றவர்களுக்கு இதை விட வேறு என்ன வேண்டுமாம்?
“இன்னைக்கு அவங்களுக்கு பிறந்த நாள் பா. இன்னைக்கு தான் சொல்லணும்னு நினைச்சேன். ஆனா ரொம்ப பீல் பண்ணினாங்க. அதான் எல்லாமே சொல்லிட்டேன்”
“ஏங்க என்ன மாப்பிள்ளையை போய் அவன் இவன்னு பேசுறீங்க?”, என்று கோமளம் கேட்க “அதானே நான் கூட மறந்துட்டேன் பாரு, இனி மாத்திக்கிறேன் கோமு”, என்றார்.
“அவர் அப்படி எல்லாம் தப்பா நினைக்கிற ஆள் இல்லை பா. அப்புறம் இன்னைக்கு கிளாஸ்க்கு வருவாங்க. நான் அவருக்கு ஏதாவது கிப்ட் வாங்கி கொடுக்கட்டுமா?”
“சந்தோஷமா கொடு டா. இதை எல்லாம் எங்க கிட்ட கேக்கணுமா என்ன?”, என்று அவர் அனுமதி கொடுக்க அவள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
சந்தோஷமாக செல்லும் மகளைப் பார்த்ததும் சந்திரன் கண்கள் லேசாக கலங்க “என்னங்க என்ன ஆச்சு?”, என்றாள் கோமளம்.
“இந்த கல்யாணம் நல்ல படியா நடக்கணும் கோமு. இல்லைன்னா மங்கை துடிச்சிருவா”, என்று சொல்ல அவளுக்கும் அது உண்மை தான் என்று பட்டது.
மங்கை சீக்கிரமாகவே வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றிருக்க அவளை ஜன்னல் அருகே நின்று தேடிக் கொண்டிருந்தான் பார்த்திபன்.
“அண்ணா சாப்பிட வா”, என்று கயல் அழைத்தது கூட அவன் காதில் விழ வில்லை என்றதும் அவளே அவனைத் தேடி வந்தாள்.
அவன் நிற்கும் நிலை புரிய “என்ன அண்ணா, உன் ஆள் யாருன்னு தெரிஞ்சிருச்சு போல?”, என்ற தங்கையின் குரலில் தான் நடப்புக்கு வந்தான்.,
அவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்தவன் “ஆமா டா, நீ கூட சொல்லலை பாத்தியா? நேத்து மங்கை தான் பொண்ணுன்னு தெரியாம லூசு மாதிரி பேசிட்டேன்”, என்றான் அசடு வழிந்தவாறே.
“ஹா ஹா, பொண்ணு யாருன்னு உனக்கு சின்ன சர்ப்பிரைஸ் கொடுக்கலாம்னு தான் சொல்லலை. மங்கை அண்ணி உனக்கு பெஸ்ட் சாய்ஸ் அண்ணா”
“தேங்க்ஸ் கயல்”
“சரி சாப்பிட வா. அப்புறம் கனவு காணலாம்”, என்று அவள் சொன்னதும் சிறு சிரிப்புடன் அவளுடன் நடந்தவன் “ஆமா நீங்க ரெண்டு பேரும் என்ன லீவ் போட்டுருக்கீங்க?”, என்று கேட்டான்.
“எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டியது இருக்கு அண்ணா. அதான் அப்பா கிட்ட சொன்னேன். அப்பா கடைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. நீயும் வா நம்ம போகலாம்”
“சரி டா போகலாம்”, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்து போனது.
உண்மையில் பார்த்திபனின் பிறந்த நாளைக் கொண்டாட தான் அவர்கள் பிளான் போட்டிருந்தார்கள். இன்று முழுவதும் அவனுடன் சந்தோஷமாக அந்த நாளை செலவிட வேண்டும் என்று தான் சேது சொல்லி இருந்தார். மாலை ஏழு மணி போல கேக் வெட்டி பிறந்த நாளை முடித்து விட்டு புல்லட் வண்டியை அவனுக்கு பரிசளிக்க வேண்டும் என்று கயலிடம் சொல்லி இருந்தார்.
ஆனால் அவர்கள் பிளான் தெரியாமல் “இந்த கயல் கூட ஒரு விஷ் பண்ணலையே”, என்று எண்ணிக் கொண்டு அவர்களுடன் காலை உணவை உண்டான்.
“இத்தனை வருஷம் வாழ்த்து சொல்ற கயலே சொல்லல. அப்பா இது வரைக்கும் சொன்னதே இல்லை. இவங்களே இப்படி இருக்கும் போது என்னோட பிறந்த நாளே தெரியாத மங்கை எப்படி விஷ் பண்ணுவா?”, என்று கவலையாக இருந்தது.
மூவரும் காலை உணவை முடிக்கும் போது பத்து மணி ஆகி இருந்தது. பதினொரு மணிக்கு அவனுக்கு டிரைவிங் கிளாஸ் என்பதால் அவளைக் காண உல்லாசமாக கிளம்பிக் கொண்டிருந்தான் பார்த்திபன்.
அப்போது “டேய் பார்த்தி”, என்றார் சேது.,
“சொல்லுங்கப்பா”
“கிளாஸ்க்கு தானே கிளம்புற?”
“ஆமா பா”
“கிளாஸ்க்கு நீ போக வேண்டாம்”, என்று அவர் சொல்ல அவன் முகம் பியூஸ் போன பல்ப் போல சுருங்கிப் போனது.
“எதுக்கு பா?”, என்றான் தடுமாற்றமாக.
“ஆமா டா போக வேண்டாம். கல்யாணம் வரைக்கும் வேண்டாம் டா. சொன்னா புரிஞ்சிக்கோ. அந்த கனகா எப்ப என்ன செஞ்சி வைப்பான்னு தெரியாது. மங்கை நல்ல பொண்ணு டா. அவ நம்ம வீட்டுக்கு வர நம்ம கொடுத்து வச்சிருக்கணும். உங்க கல்யாணம் முடியுற வரைக்கும் நம்ம கொஞ்சம் கவனமா இருக்கணும் டா. அவளுக்கு எந்த கெட்ட பேரும் வர விடக் கூடாது”, என்று சொல்ல அவர் சொன்னதில் இருந்த நியாயமும் பட்டது. அதற்கு மேல் எப்படி மறுப்பானாம்?
“சரிப்பா”, என்றவனுக்கு இன்று ஒரு நாளாவது அவளை தனியே பார்க்கும் சந்தர்ப்பம் அமையாதா என்று இருந்தது. அதுவும் அவள் நேற்று கொடுத்த அவசர முத்தம் இன்றும் கிடைக்காதா என்று அவ்வளவு ஏக்கமாக இருந்தது.