மங்கை ஒரு முறை முடிவெடுத்து விட்டால் அதே பிடியில் தான் இருப்பாள். அதை மாற்றிக் கொள் என்று சொன்னாலும் அவள் செய்யவே மாட்டாள். அவள் அடம் பிடிப்பது சரியான விஷயத்துக்கு என்னும் போது அவள் எதற்காக மாற்ற வேண்டும் என்று விவாதம் செய்யும் குணம் கொண்டவள். சந்திரனே அடிக்கடி சொல்லுவார் “மங்கை ஒரு விஷயம் செய்தால் அது சரியாக இருக்கும்”, என்று.
அன்று அண்ணனிடம் சொன்னது போல தான் இப்போது வரை நடந்து கொள்கிறாள். லதாவை இது வரை லதா என்று அழைக்க மாட்டாள். அண்ணி என்று அழைக்க மாட்டாள். வாங்க போங்க என்று கூட அழைக்க மாட்டாள். அதே நேரம் வா போ என்றும் அழைக்க மாட்டாள்.
இன்னும் சொல்லப் போனால் நேரடியாக அவளிடம் பேசக் கூட மாட்டாள். அன்னை அருகே இருந்தால் “அம்மா உங்க மருமக கிட்ட சொல்லுங்க”, என்பாள்.
அண்ணன் இருந்தால் “உன் பொண்டாட்டி கிட்ட சொல்லி வை”, என்பாள்.
அதனால் லதாவுக்கும் மங்கையைக் கண்டாலே கொஞ்சம் கசப்பு தான். அந்த கசப்பை அவள் அஸ்வினை வளர்ப்பதிலும் காட்ட மங்கை தான் ஒதுங்கிக் கொண்டாள். அவள் பிள்ளையை தூக்கினால் தானே ஏதாவது பஞ்சாயத்து வரும். எதற்கு தூக்க வேண்டும் என்று எண்ணி அத்தை என்ற உறவில் இருந்தும் விலகி தான் நின்றாள்.
அதற்கும் லதா கணவனிடம் “இந்த மங்கையை பாருங்க, நம்ம மேல இருக்குற கோபத்துல பிள்ளையைக் கூட தூக்க மாட்டிக்கா”, என்று புகார் வாசிப்பாள்.
அவனும் மங்கையிடம் வந்து “நீ ரொம்ப மாறிட்ட மங்கை. நீ முன்னாடி மாதிரி இல்லை. உனக்கு உன் அண்ணியை பிடிக்காது தான். அதுக்கு அந்த கோபத்தை என் பிள்ளை மேல காட்டுவியா? நீ அவனுக்கு அத்தை தானே?”, என்பான்.
“எதுக்கு அண்ணா பிரச்சனை? நான் உன் பிள்ளையை ஆசையா தூக்குவேன். அப்புறம் நான் தூக்கினதுனால தான் உன் பிள்ளைக்கு வயித்தால போகும். வாந்தி வரும்? எதுக்கு வம்பு?”, என்றாள் மங்கை.
“என்ன மங்கை என்னை ஜாடை பேசுறியா? உண்மைலே அன்னைக்கு அவன் வாந்தி எடுத்தான். அதான் சொன்னேன்”, என்று சண்டைக்கு வந்தாள் லதா.
“ஜாடை எல்லாம் பேசலை. எனக்கு அதெல்லாம் பேச தெரியாது. நேருக்கு நேரா தான் சொல்றேன். அவன் எதுக்கு வாந்தி எடுத்தானோ? ஆனா நான் தூக்கினதுனால தான் வாந்தி வந்துச்சுன்னு தான் என் காதுல விழுந்துச்சு. எனக்கு எதுக்கு உங்க பொல்லாப்பு? உங்க பிள்ளை நீங்களே தூக்கிக்கோங்க”, என்று சொல்லி விட்டு கடந்து விடுவாள்.
ஆனால் மூன்றாவது வயதில் இருக்கும் அஸ்வின் லதாவை விட மிக விவரம். லதா என்ன சொன்னாலும் எதுவும் கேட்காமல் எப்போதும் மங்கை அறைக்குள் தான் கிடப்பான்.
வெளியே எந்த கொஞ்சலும் லதா கண்ணுக்கு தெரியாது. ஆனால் அவளின் அறைக்குள் இருவரும் அவ்வளவு கொட்டம் அடிப்பார்கள். கவினும் சேர்ந்து விட்டால் சொல்லவும் வேண்டாம். அஸ்வின் அத்தை என்று அவளிடமும் கவினிடம் சித்தா என்று அழைத்தும் செல்லம் கொஞ்சுவான். மங்கையின் அறைக்குள் மகன் சென்று விட்டால் வெளியே கையை பிசைந்து கொண்டு கடுப்பில் நிற்பாள் லதா. ஆனால் அவன் வெளியே அவ்வளவு எளிதில் வர மாட்டான்.
அவன் போகும் முன்பு பார்த்து விட்டால் “டேய் படிக்க வேண்டாமா?”, என்று மகனை தடுக்க பார்ப்பாள் லதா.
“படிச்சிட்டேன் மா. அத்தை கூட கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு பறந்து விடுவான். அதற்கு மேல் கட்டாயப் படுத்தினால் நந்தனிடம் “அப்பா அம்மா என்னை அத்தை ரூமுக்கு போய் விளையாடக் கூடாதுன்னு சொல்லுறா”, என்று சொல்ல ஆரம்பித்தான் அஸ்வின்.
அதனால் தான் லதா அடக்கி வாசித்தாள். கணவனை மாற்ற முடிந்த லதாவால் மகனை கொஞ்சம் கூட மாற்ற முடிய வில்லை. எப்படி பழ மரங்களைக் கண்டால் பறவைகள் வருகிறதோ அது போல குழந்தைகள் உண்மையான அன்பைத் தேடிச் செல்வது இயற்கை தானே?
மங்கைக்கும் அஸ்வினை அவ்வளவு பிடிக்கும். என்ன இருந்தாலும் அண்ணனின் மகன் அல்லவா? அந்த வீட்டின் முதல் வாரிசாயிற்றே? நந்தனின் மறு உருவமாக இருக்கும் குழந்தையை எப்படி வெறுப்பாளாம்?
தன்னுடைய அறைக்குள் வந்ததும் அவனை தூக்கி கொள்வாள். போகும் வரைக்கும் அவள் மடியில் தான் இருப்பான். தினமும் அவனுக்கு ஆயிரம் முத்தம் கொடுப்பாள். அவனுக்கு என ஏதாவது வாங்கி வந்தால் அறைக்குள் வைத்து தான் கொடுப்பாள். அவனுக்கு என்று விளையாட நிறைய பொருள்கள் வாங்கி வைத்திருப்பாள்.
கலர் அடிக்க போர்ட், விதவிதமான புத்தகங்கள், உருட்டி விளையாட கிலே முதற்கொண்டு வாங்கி வைத்திருக்கிறாள். ஆனால் அதை வெளியே எடுத்துச் செல்ல மட்டும் விட மாட்டாள்.
“கொண்டு போகாத டா குட்டி. உன் அம்மா தூர போட்டுருவா”, என்று சொல்ல “சரி அத்தை, நான் இங்கயே விளையாடுறேன்”, என்று சமத்தாக சொல்லுவான்.
மங்கையர்க்கரசி இருபத்தி இரண்டு வயதே நிரம்பிய அழகி. பன்னிரெண்டாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறாள். அதற்கு மேல் அவளுக்கு படிப்பும் மூளையில் ஏற வில்லை. அவளும் எவ்வளவோ முயற்சி செய்தாள் தான். பின் தான் விட்டுவிட்டாள். அதற்கும் லதா மங்கையை ஏதாவது மட்டம் தட்டி பேச தான் செய்வாள்.
ஒரு நாள் கவின் பாடத்தில் ஏதோ சந்தேகம் கேட்டுக் கொண்டிருக்க “என் கிட்ட கொடு டா கவின். நான் சொல்லி தரேன். அவ கிட்ட போய் கேக்குற? உன் அக்காவுக்கு தான் படிப்பு மண்டைல ஏறலையே. அவளுக்கு ஒண்ணும் தெரியாது”, என்றாள் லதா.
“எம்.ஏ படிச்சிட்டு சில பேர் என்ன கலெக்டர் வேலையா பாக்குறாளுங்க? ஒருத்தங்களுக்கு பொண்டாட்டியா ஒரு வீட்டுக்கு மருமகளா ஒரு குழந்தைக்கு அம்மாவா தானே இருக்காங்க? நானும் அப்படி தான் இருக்க போறேன்? பன்னிரெண்டாம் கிளாஸ் படிச்சா எனக்கு கல்யாணம் நடக்காதா? இல்லை குழந்தை தான் பிறக்காதா? இல்லை பிள்ளையை வளக்க தான் தெரியாதா? அந்த அறிவாளி கிட்டயே உன் சந்தேகத்தை கேட்டுக்கோ டா கவின்”, என்று பட்டென்று சொல்லி விட்டு சென்று விட்டாள் மங்கை.
லதா இப்படி பேசியது கவினைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. தெரிந்திருந்தால் சந்திரனும் கோமளமும் லதாவை ஒரு வழி ஆக்கி விடுவார்கள். சண்டை வேண்டாம் என்று மங்கை அடிக்கடி கேட்டுக் கொள்வதால் கவினும் அமைதியாக இருந்து விடுவான்.
இப்போதும் தன்னுடைய அக்காவை லதா கடுப்பேற்றி இருக்க “பரவால்ல அண்ணி, நான் அக்கா கிட்டயே கேட்டுக்குறேன். அவ படிக்கலை தான். ஆனா எனக்காக தெரிஞ்சிக்கிட்டு சொல்லித் தருவா. ஃபோன்ல எல்லாம் கத்துக்குவா”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
படிப்பு இல்லை என்றாலும் மங்கையிடம் உண்மையிலே அழகும் திறமையும் கொட்டிக் கிடந்தது. ஒரு முறை அவளைப் பார்ப்பவர்களை மீண்டும் திரும்பிப் பார்க்க தூண்டும் பேரழகு அவளிடம் இருந்தது. அதுவே லதாவுக்கு பொறாமை தான்.
அந்த ஊரில் மங்கைக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அவளது நீண்ட கூந்தலுக்கு பல பெண்களே கூட விசிறிகள் தான். ஏன் லதா கூட அவள் கூந்தலை பொறாமையாக தான் பார்ப்பாள். திருமணம் செய்து வந்த புதிதில் முடிக்கு என்ன எண்ணெய் தேய்க்கிறாள் என்று கூட லதா வேவு பார்த்து விட்டாள்.
ஆனால் கோமளத்துக்கு இயற்கையாகவே நீண்ட அடர்த்தியான கூந்தல் என்பதால் அதை விட அதிகமாகவே மகளுக்கு வந்திருந்தது.