எப்போது நந்தனுக்கு திருமணம் முடிந்ததோ அப்போது இருந்து சிறியவர்கள் இருவரும் அண்ணனிடம் இருந்து சற்று விலகி கொண்டார்கள். அது கூட அவனிடம் வந்த மாற்றத்தால் தான். அதை அவன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனையான விஷயம்.

கோமளம் அண்ணன் மகளை மகனுக்கு மணம் முடிக்க முக்கிய காரணம் குடும்பத்திற்கு மூத்த மருமகள் சொந்த அண்ணன் மகளாக இருந்தால் எந்த பிரச்சனையும் வராது, தங்கள் கைக்குள் இருப்பாள், குடும்பமும் ஒற்றுமையாக இருக்கும் என்று எண்ணி தான்.

ஆனால் லதா கோமளத்தின் கற்பனைக்கு அப்பாற்பட்டு இருந்தாள். திருமணத்திற்கு முன் அவளுக்கு ஒரு முகம் இருந்தது. ஆனால் திருமணத்திற்கு பின் அவள் காட்டிய முகம் வேறாக இருந்தது.

கவர்ன்மெண்ட்டில் பணிபுரியும் கணவன் அவளுக்கு கிடைத்திருக்கிறது என்ற திமிர் அவளுக்கு உண்டு. ஆனால் கஷ்டப் பட்டு படிக்க வைத்து அந்த வேலை கிடைக்க காரணமாக இருந்தது அவனது பெற்றோர் தான் என்ற எண்ணம் மட்டும் அவளுக்கு இல்லை. அவனிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான பணம் அவளது குணங்களை சற்று மாற்ற வீட்டில் கொஞ்சம் அதிகாரம் செய்ய ஆரம்பித்தாள்.

“லதா இந்த காயை வெட்டிக் கொடு”, என்று மாமியார் சொன்னது போய் “அத்தை எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு. ஒரு காப்பி தாங்களேன். அத்தை எனக்கு இன்னைக்கு வடை சாப்பிடணும் போல இருக்கு. ஈவினிங் செஞ்சு தாங்க”, என்று கேட்பது என அதிகாரமாக மாறிப் போனது.

முதலில் இதை கோமளம் கூட கவனிக்க வில்லை. முதலில் கவனித்தது மங்கையர்க்கரசி தான். “அம்மா அவ உன்னை வேலை வாங்குறா மா”, என்று சொல்லி அன்னையிடம் மூட்டி எல்லாம் விட வில்லை.

நேரடியாக அனைவரும் இருக்கும் போதே “இது உன் வீடு தானே லதா? உனக்கு ஏதாவது செஞ்சு சாப்பிடணும்னு தோணுச்சுனா நீ தான் செஞ்சு சாப்பிடணும்? எதுக்கு எங்க அம்மாவை வேலை வாங்குற?”, என்று கேட்டு விட்டாள்.

அனைவரும் அமைதியாக இருக்க “ஏன் நான் என் அத்தை கிட்ட கேக்க கூடாதா? எங்க அம்மா மாதிரி தானே அவங்களும்? நான் அவங்க கிட்ட உரிமையா கேக்குறேன்? உனக்கு என்ன மங்கை?”, என்று ஐஸ் வைப்பது போல பேசினாள் லதா.

“சரி தானே? இதுல என்ன இருக்கு மங்கை? அவ உரிமையா கேக்குறதுல என்ன தப்பு?”, என்று கேட்டான் நந்தன்.

“உனக்கு எதுவும் தப்பா தெரியாது அண்ணா. அம்மா கிட்ட உரிமையா கேக்குறது தப்பு இல்லை. அவங்க உடம்பு சரி இல்லாதப்பவும் கேக்கணுமா? அவங்களும் மனுஷி தானே? நாலு நாளா அம்மாவுக்கு காச்சல். இப்ப வந்து அவங்க கிட்ட வடை வேணும்னு கேட்டா எப்படி?”

“அத்தைக்கு காச்சலா எனக்கு தெரியாது”, என்றாள் லதா அப்பாவியாக.

“இந்த நடிப்பு தான் வேண்டாம்னு சொல்றேன்”, என்று மங்கை சொல்ல “நான் நடிக்குறேனா? பாருங்க அத்தான் உங்க தங்கச்சி என்ன சொல்றான்னு”, என்று அவ்வளவு உருக்கமாக பேசினாள் லதா.

“மங்கை என்ன பேசுற நீ? அவ எதுக்கு நடிக்கணும்? அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு எனக்கே தெரியாது. அவளுக்கு எப்படி தெரியும்?”, என்றான் நந்தன்.

“நான் தான் மூணு நாள் முன்னாடி உன் பொண்டாட்டி கிட்ட எனக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலை. இன்னைக்கு மட்டும் சமைச்சிருன்னு சொன்னேனே? ஆனா அவ தலை வலிக்குன்னு சொல்லிட்டு போய்ட்டா. அதை விடு எனக்கு உடம்பு சரி இல்லைன்னு லதாவுக்கு தெரியுமே”, என்றாள் கோமளம்.

நந்தன் லதாவை கேள்வியாக பார்க்க “உண்மையிலே எனக்கு தலை வலிங்க. அத்தைக்கும் காச்சல்ன்னு எனக்கு தெரியாது”, என்றாள் லதா.

அதற்கு மகன் என்ன சொல்வான் என்று ஆவலாக பார்த்திருந்தார் சந்திரன். ஏனென்றால் நல்ல மகனாக இருந்திருந்தால் அம்மா உடம்புக்கு முடியாததால் தானே சமைக்க சொல்லி இருக்காங்க. அதற்கு பிறகும் நீ செய்ய வில்லை என்றால் என்ன அர்த்தம் என்று அவன் கேள்வி கேட்பான் என்று எண்ணினார்.

அவனோ “அவளும் அன்னைக்கு தலை வலின்னு சொன்னா மா. அதான் உன்னை பத்தி விசாரிச்சிருக்க மாட்டா”, என்று மனைவிக்கு வக்காலத்து வாங்க மனம் வெறுத்துப் போன சந்திரன் “இங்க பாரு நந்து, உங்க அம்மாவுக்கும் வயசு ஆகுது. அவளுக்கு ஒண்ணும் இளமை திரும்பலை. இப்பவே அவ தான் எல்லா வேளையும் சமைக்கிறா. நாம எல்லாரும் வேலைக்கு போறோம். லதாவும் உங்க அம்மாவும் தான் வீட்ல இருக்காங்க. ஏன் சாயங்கால நேரம் லதா காபி போடுற வேலை எல்லாம் பாக்க மாட்டாளா? இனி அவளுக்குன்னு உங்க அம்மா எதுவும் செய்ய மாட்டா. எல்லாருக்கும் செய்யுறது மட்டும் தான் அவ வேலை. அதுக்கும் மேல உன் பொண்டாட்டிக்கு ஏதாவது சாப்பிடணும் போல இருக்குனா கடைல வாங்கிக் கொடு. கடைல கிடைக்காத விஷயம் வீட்ல கூட இருக்காது”, என்று சொல்லி விட்டு அவர் சாப்பிட ஆரம்பிக்க லதா முகம் சுருங்கிப் போனது.

கோமளத்துக்கு மகன் தங்களின் கையை விட்டுச் சென்று விட்டான் என்று வலி இருந்தாலும் கணவனின் பேச்சு கொஞ்சம் ஆறுதலை தான் தந்தது.

அடுத்து நந்தன் எதுவுமே பேச வில்லை. அமைதியாக உண்ண ஆரம்பித்தான். “இந்த வீட்ல எல்லாரையும் ஆட்டி வைக்க முடிஞ்சாலும் இந்த மங்கையையும் மாமாவையும் மட்டும் ஒண்ணும் சொல்ல முடியலை”, என்று எண்ணிக் கொண்டாள் லதா.

மங்கை எதையும் மனதிற்குள் வைத்து பேசுபவள் அல்ல. அவளுக்கு தோன்றினால் முகத்தில் அடிப்பது போல பேசி விடுவாள். அடிக்கடி அவளுக்கும் லதாவுக்கும் முட்டிக் கொள்ளும்.

அவளை விட லதா இரண்டு வயது தான் மூத்தவள். ஆனால் வா போ என்று தான் சிறு வயதில் இருந்து அழைப்பாள். திருமணத்திற்கு பிறகு கவின் லதாவை அண்ணி என்று அழைக்க மங்கை எப்போதும் போல வா போ என்று தான் அழைத்தாள்.

முகம் சுருக்கிய லதா நேரடியாக மங்கையிடம் அண்ணி என்று அழைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் மங்கையும் அவள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருப்பாள்.

ஆனால் லதாவோ அதை கணவனிடம் குறையாக சொல்லி தனக்கு மரியாதை கொடுக்காதது போல ஏதேதோ பேசி வைத்தாள். அந்த நல்லவனும் தங்கையிடம் என்ன எதுவென்று விசாரிக்காமல் தங்கை மீதிருந்த அன்பைக் கூட மறந்து அவளை கண்டித்து அவளை இனி அண்ணி என்று தான் அழைக்க வேண்டும் என்று அறிவுரை என்ற பெயரில் அவளை கடுப்பேற்றினான்.

அவன் பேசுவதை அமைதியாக கேட்ட மங்கை அவன் பேசி முடித்ததும் “உன் பொண்டாட்டியை இனி எப்படியாவது கூப்பிட்டா தானே பிரச்சனை? இனி எந்த உறவு சொல்லியும் கூப்பிட மாட்டேன் போதுமா? உன் பொண்டாட்டி கிட்ட எதுவும் எதிர்பார்த்தா தானே கூப்பிடனும்? எனக்கு எது செய்யுறதா இருந்தாலும் என் அம்மா அப்பா செய்வாங்க. அவங்க கிட்ட கேட்டுக்குறேன்.  வேற உதவி வேணும்னா கூட கவின் கிட்ட கேட்டுக்குவேன். உன் கிட்டயும், மரியாதைக்குரிய உன் பொண்டாட்டி கிட்டயும் இனி ஏதாவது கேட்டா சொல்லு”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டாள்.

அவள் பேச்சில் நந்தன் தான் நே என்று விழித்தான். மங்கை அப்படி எடுத்தெறிந்து பேசியது அவனுக்கு கடுப்பாக தான் இருந்தது. ஆனால் தங்கையை அதற்கு மேல் கடிந்து கொண்டால் தந்தையிடம் பாட்டு வாங்க வேண்டுமே என்று எண்ணியவன் “அவ கிடக்குறா விடு”, என்று லதாவை தான் சமாதானப் படுத்த வேண்டியது இருந்தது.