Advertisement

அத்தியாயம்  – 7

ஊட்டி குளிருக்கு இதமாய் ரஜாய்க்குள் தன்னை புதைத்திருந்தவளுக்கு, அந்த ரஜாய் தந்த கதகதப்பை விட, ரவி பிராதப்பின் அணைப்பு கொடுத்த கதகதப்பு இதமாய் இருந்தது. இமைகளை விரித்திடவே முடியவில்லை ஆனாலும் எத்தனை நேரம் இப்படியே படுத்திருப்பது. ஊட்டிக்கு வந்து அரைநாள் ஆகிவிட்டது இன்னும் கட்டில் விட்டு நகரவில்லை. ரவி நகரவிடவில்லை.

விழிகளை திறந்து தன் கணவன் முகம் பார்த்தாள். நிம்மதியாய் நிர்மலமாய் உறங்கிக்கொண்டு இருந்தான். எப்பொழுதுமே ரவிக்கு சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழும். திவ்யாவின் கண்கள் அங்கே தான் அடிக்கடி மீண்டு பாயும்.அவன் உறக்கம் கலைந்திடாமல் மெல்ல அவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு எழுந்தவளுக்கு, அவனை எழுப்பிடவும் மனமில்லை. ஒரு சால்வையை போர்த்திக்கொண்டு பால்கனியில் நின்றாள். கண்ணுக்கு எட்டியவரை பசுமை தான்.

இதே போல ஒரு மார்கழி குளிர் காலத்தில் தான் ரவியும் திவ்யாவும் முதன்முறையாய் தனித்து சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த குளிரை உணரவும் திவ்யாவிற்கு அந்த நியாபகங்கள் வந்தது.

அன்றும் அப்படிதான், குளிர் காற்றை “ஊப்…” என்று ஊத்தி தள்ளியபடி வேக வேகமாய் நடந்து வந்து கொண்டு இருந்தாள் திவ்யா. எதிரே யார் வருகிறார்கள், அருகே யார் கடக்கிறார்கள் என்றெல்லாம் அவளுக்கு தெரியவில்லை. அவளை பொருத்தமட்டில் சீக்கிரம் விடுதி போய் சேர்ந்திட வேண்டும் அவ்வளவே.

ஆனால் “நீ என்ன இந்த பக்கம்???!!” என்ற குரல் சட்டென்று அவளை நிற்க வைத்தது. குரலை வைத்தே கண்டுவிட்டாள் ரவி என்று.

“எங்க வீடு இந்த ஏரியால தான் இருக்கு…” என்றாள் சற்றே குழப்பமாய். இவன் எங்கே இந்தப்பக்கம் என்று யோசனை.

“ஓ!!! இங்க வீடு வச்சிட்டு தான் நீ ஹாஸ்ட்டல்ல இருக்கியா..???” சாதாரணமாய் பேச்சை தொடர்ந்தான் ரவி.

“வீட்ல யாருமில்ல.. அப்பா சிங்கபூர்ல வேலை. எனக்கு ஆபிஸ் டிஸ்டன்ஸ். சோ ஹாஸ்ட்டல். நான் ஹாஸ்ட்டல் போகவும் அம்மாவும் இப்போ அப்பாவ பார்க்க சிங்கபூர் போயிருக்காங்க..” அவன் கேட்காமலேயே அனைத்தும் சொன்னாள்.

“ஐஸி… தென் இப்போ எங்க போயிட்டு வர…???” அராய்ச்சியாய் அவன் பார்வை.

ரவியின் பார்வையில் அடிக்கடி இப்படி ஒரு ஆராய்ச்சியை கண்டிருக்கிறாள் திவ்யா. அவளுக்கு அவனிடம் எரிச்சல் தரும் ஒரே விசயம் இது தான்.

“எங்க வீட்டுக்கு தான்…” பல்லை கடித்து பதில் கூறினாள்.

“யாருமில்லைன்னு சொன்ன…”

“ஷ்… வீடு ரொம்ப நாளா பூட்டி இருக்கு. சோ செர்வன்ட்ட வர சொல்லி நேத்து எல்லாம் கிளீன் பண்ணேன். நைட் ஹாஸ்டல் போக முடியாது.. சோ இப்போ கிளம்பிட்டேன்…” என்றவளுக்கு இவன் என்ன என்னை கேள்வி கேட்பது என்ற கோவம் வந்தது.

ஆனால் அவனோ நொடியில் தான் பார்வையை மாற்றிக்கொண்டான். “ஓ..!! நீ இவ்வளோ பொறுப்பா கூட யோசிப்பியா???” என்று கேட்டவனை பதிலுக்கு இவள் கேள்வியாய் நோக்கினாள்.

“இதென்ன எப்போவுமே என்னை பொறுப்பில்லாதவ போலவே சொல்றீங்க.. நான் என் வேலை எல்லாம் சரியா தானே செய்றேன்…”

“ஹ்ம்ம் அதெல்லாம் ஒண்ணுமில்ல.. ஜஸ்ட் உன்னோட பாடி லாங்குவேஜ்ல எப்பவுமே ஒரு அலட்சியம் இருக்கும் அதான்.. இனி உன்னை பத்தின என் திங்கிங்க மாத்திக்கிறேன் போதுமா..” லேசாய் முறுவலித்தான் கன்னக்குழி தெரிய.

என்னை பற்றி நீ ஏன் யோசிக்கவேண்டும் என்று கேட்க நினைத்து கேட்காமலே நடந்தாள் திவ்யா.  பேசிக்கொண்டே நடப்பது நன்றாய் தான் இருந்தது. ஆனால் என்ன புதிதாய் இருந்தது. இன்னும் இவன் எங்கே இந்த பக்கம் என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை.

“என் பிரன்ட் வீடு இந்த ஏரியா தான்.. அவங்க வீட்ல மார்னிங் ஒரு பங்சன்..” அவள் கேட்காமலேயே கூறினான்.

“ஓ !! ஐஸி…”

“அப்புறம்….”

“அப்புறம்… ஒண்ணுமில்லையே..” அவளுக்கு நிஜமாகவே அவனோடு அடுத்து என்ன பேசிடவென்று தெரியவில்லை. நண்பர்களோடு இருக்கும் பொழுது பார்த்தால் கண்டுகொள்ளாமல் செல்பவன் இன்று அவனாய் பேசுகிறான் என்று தோன்றவும் கேட்டே விட்டாள்.

“ம்ம்.. அது.. தேவையில்லாத பேச்சுக்களை அவாய்ட் பண்ணலாமேன்னு தான்..” என்று பேன்ட் பாக்கெட்டினுள் கைவிட்டபடி தோளை குலுக்கினான்.

“ஓ.. அதான் ப்ரியாவ கூட ரிலேடிவ்ஸ்னு வெளிய காட்டிக்க கூடாதுன்னு சொன்னீங்களா??” யோசிக்காமல் கேட்டுவிட்டாள் திவ்யா. ஆனால் ரவிதான் இப்பொழுது யோசனையாய் பார்த்தான்.

“அவ உங்க அத்தை பொண்ணுன்னு தெரியும்…” என்றாள் கெத்தாய்.

“ம்ம்.. வேற என்ன தெரியும்…” என்று அவன் சாதாரணம் போலவே கேட்கவும், இவளும் இத்தனை நாள் இல்லாத திருநாளாய் ரவி நன்றாய் பேசுகிறானே என்றே மிதப்பில் ப்ரியா அவனை பற்றி அள்ளி தெளித்ததை எல்லாம் மொத்தமாய் கொட்ட, அவனும் நன்றாகவே ம்ம் கொட்டினான்.

ஆனால் எத்தனை நேரத்திற்கு இப்படியே பேசிக்கொண்டே நடக்க முடியும். “ஓகே திவ்யா உன்னோட ஸ்டாப் வந்திடுச்சு, நாளைக்கு பார்ப்போம்..” என்று கை காட்டி சென்றுவிட்டான். அவளுமே புன்னகையோடு ஹாஸ்டல் வந்துவிட்டாள்.

மறுநாள் அலுவலகத்தில் வழக்கம் போலவே நேரம் செல்ல, ப்ரியா ரவி அழைப்பதாய்  கூறிச் சென்றாள். திரும்பி வந்தவளின் முகமோ பாகற்காயை பச்சையாய் அரைத்து குடித்தது போல் இருந்தது. அதன் பிறகு ப்ரியா திவ்யாவோடு ஒரு வார்த்தை பேசவில்லை. அவளும் வேலை கவனத்தில் விட்டுவிட்டாள்.

ஆனால் இரவு அறைக்கு திரும்பியதும் தான் தெரிந்தது ப்ரியா தன் மீது கோவமாய் இருக்கிறாள் என்று.“என்ன கோவம் ப்ரியா..” என்று கேட்டது தான் தாமதம், ப்ரியா பிடிபிடியென்று பிடித்துவிட்டாள் திவ்யாவை.

“நான் ரவி மாமா பத்தி உன்கிட்ட சொன்னது எல்லாம் நீ ஏன் டி அவர்கிட்ட சொன்ன.. நம்ம பேசுறதை எல்லாம் நீ அடுத்தவங்ககிட்ட சொல்றியா?? நமக்குன்னு ஒரு பெர்சனல் இல்லையான்னு என்னை எப்படி திட்டினார் தெரியுமா??” என்று ஆங்காரமாய் கேட்டவளை புரியாமல் பார்த்தாள் திவ்யா.

அவளுக்கு நிஜமாகவே புரியவில்லை இதில் தான் என்ன செய்தோம் என்று. ஆனாலும் மனதில் எதுவோ ஒன்று உள்ளது என்றே உறுத்தியது. தவறாய் புரிந்துகொள்வது ப்ரியாவா இல்லை ரவியா?? நம்மை வைத்து இருவருமே எதுவும் விளையாடுகிறார்களா??

அவன் என்னவென்றால் ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி பார்க்கிறான் பேசுகிறான். இவள் திடீரென்று இப்படி நடந்துகொள்கிறாள் என்ன டா இது என்று ஆனது.

இதுபோல் பல குழப்பம் அடுத்தடுத்து ஏற்பட்டது. திடீரெண்டு ரவி திவ்யாவிடம் கடுமையாய் நடந்துகொள்வான் ஏனென்றே தெரியாது. ஆனால் அவளே எதிர்பாரா நேரம் அவனே வந்து சுமுகமாய் பேசி செல்வான் அதுவும் ஏனென்று தெரியாது. எதோ ஒரு மாய திரை இருப்பது போலவே இருந்தது திவ்யாவிற்கு.  

அந்த மாய திரை விலகும் நாளும் வந்தது.

ப்ரியாவின் தாத்தா தவறிவிட்டதாய் செய்தி வர, அவள் அவசரமாய் கிளம்ப வேண்டிய சூழல்.ஹாஸ்டலில் இருந்து வருவதால் திவ்யா உடன் வந்தாள், ரவிக்கு ஊரில் இருந்து அழைப்பு வந்தது ப்ரியாவை பத்திரமாய் பஸ் ஏற்றிவிடும் படி அதனால் அவனும் வந்தான்.

“தேங்க்ஸ் மாமா நீங்க வந்ததுக்கு… நீங்க வர மாட்டீங்களோனு நினைச்சேன்..” என்று கூறிவிட்டு, திவ்யாவிடம் ரகசியமாய், “நான் தனியா ஊருக்கு போறேன்னு வருத்தம் டி அதான் வந்திருக்கார்…” என்றாள் புன்னகையாய்.

சாவு செய்தி வந்திருக்கிறது இவள் சிரிக்கிறாள் என்றே எண்ண தோன்றியது திவ்யாவிற்கு. ரவியை திரும்பி பார்த்தாள் அவனோ வேண்டா வெறுப்பாய் நின்றிருந்தான். ஒருவழியாய் பஸ் கிளம்ப, இவளும் ரவியிடம்  சொல்லிக்கொண்டு கிளம்ப தயாரானாள்.

“போற வழி தானே.. வா நானே டிராப் பண்றேன்…”

“இல்ல.. பரவாயில்ல…” என்று திவ்யா தயங்கி நிற்க, “உன்கூட கொஞ்சம் பேசணும் வா..” என்றான். அவளுக்குமே அவனது அவ்வபோது மாற்றத்திற்கான காரணம் கேட்கவேண்டும் என்று நினைத்தாள்.

காரில் தான் வந்திருந்தான் போல. ஒருவேளை இவள் வருவாள் என்றே கார் கொண்டு வந்தானோ என்னவோ. காரில் எரிய பின்னும் வெகு நேரம் ரவி பேசவேயில்லை. அமைதியாய் தான் இருந்தான். ஆனால் முகம் மட்டும் நிரம்ப யோசனையை காட்டியது.

“ப்ரியாக்கு தாத்தான்னா உங்களுக்கும் தாத்தா தானே. நீங்க ஏன் போகலை…” என்று அவன் மௌனத்தை கலைக்க,

“நீ நினைக்கிறது மாதிரி ப்ரியா என் அத்தை பொண்ணு இல்லை. ஜஸ்ட் எங்க ஊர்கார பொண்ணு கொஞ்சம் தெரிஞ்ச பேமிலி அவ்வளோதான். பட் இங்க வொர்க் பண்ண வந்த அப்புறம், இதை வச்சே எங்க பேமிலி கூட ப்ரியா பேமிலி க்ளோஸ் ஆகிட்டாங்க…”

“ஓ!!!”

“இங்க உங்களை தவிர எனக்கு யாரையும் தெரியாது. நீங்களும் என்கிட்டே கொஞ்சம் ப்ரீயா பேசினா தான் எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும் அப்படி இப்படின்னு சொல்லும் போது நான் வேற என்ன செய்ய முடியும்..”

“சொல்ல போனா என்னைவிட ப்ரியா தைரியமான பொண்ணு…”

“ஹ்ம்ம்..சில விஷயங்கள் அவ சொல்றது நம்ப முடியாதது போல இருக்கும். இப்படியும் இருக்குமா நடக்கும்னான்னு யோசிக்க தோணும். ஆனா பாவம் ஊர்கார பொண்ணு இங்க யாருமில்லன்னு நம்மகிட்ட பேசுறாளேன்னு நானும் சரின்னு இருப்பேன். ஆனா இப்போ அதெல்லாம் பொய்னு புரியும் போது கடுப்பா இருக்கு..”

அவன் பேசுவதை வைத்தே எதுவோ ஒன்று நடந்திருக்கிறது என்று புரிந்தது அவளுக்கு.

“எதுவும் ப்ராபளமா??”

“ஹ்ம்ம் பிராப்ளம்னு பார்த்தா அத்தனை பெருசு இல்லை. ஆனா எல்லாருக்குமே அவங்கவங்க இமேஜ், கேரெக்டர் முக்கியம் தானே..”

“ம்ம்…”

“மார்னிங் ப்ராஜெக்ட் மேனேஜர் பேசினார். எதோ இந்த ப்ரியா கூட நான் டைம் ஸ்பென்ட் பண்றனால தான் இப்போ போற ப்ராஜெக்ட் டிலே ஆகுதாம்..” இதை சொல்லும் போதே அவன் குரலில் அத்தனை கோவம்.

“இதென்ன புது கதை…”

“புது கதை தான் ப்ரியா பின்னின கதை..”

“புரியல…”

“ஸி.. உன்கிட்ட எப்படி நானும் அவளும் க்ளோஸ்னு ஒரு இமேஜ் கிரியேட் பண்ணிருக்காளோ அதே போல ஆபிஸ்ல அவதான் என்னோட பியான்சி அப்படிங்கற மாதிரி ஒரு டால்க் இவளே கிரியேட் பண்ணிட்டா.. ஒன்னும் ஒன்னும் சேர்ந்து இப்போ எல்லாமே என் மேல ஒரு பேட் இம்ப்ரஸன். ஷிட்…” ஸ்டியரிங்கை ஓங்கி குத்தினான்.

அவளுக்கு புரிந்தது நன்றாகவே அனைத்தும் புரிந்தது. இல்லாத ஒன்றை இருப்பதாய் உருவக படுத்துவதாள் ப்ரியாக்கு என்ன லாபம்?? கெடுவது அவளது பெயரும் தானே.

“ஹ்ம்ம் புரியுது.. ஆனா இதில் நான் என்ன செய்ய முடியும்..??” இதை ஏன் இப்பொழுது என்னிடம் கூறுகிறாய் என்ற பாவனையில் கேட்டாள்.

“நம்ம டீம்லயே இப்போ அப்படிதான் பேசிக்கிறாங்க.. எனக்கு மென்டலி இது கொஞ்சம் அபெக்ட் ஆகுது.. சோ ப்ரியா கூட க்ளோஸா இருக்கிற நீ தான் இது இப்படி இல்லன்னு கொஞ்சம் எல்லாருக்கும் புரிய வைக்கணும்…”

“வாட்???!! நானா ???”

“எஸ்..”

“நான் என்ன பண்ண முடியும் இதில..”

“ப்ரியா எப்படி ஒண்ணுமே இல்லாத ஒன்ன இருக்கிறதா சீன் பண்ணாளோ, நீ அது இல்லைனு பிரேம் பண்ணனும் திவ்யா.. நீ அவ கூட இருக்க. சோ எல்லாம் நம்புவாங்க. எனக்கு என் இமேஜ் ரொம்ப முக்கியம்.. ப்ளீஸ் நீ இதில எனக்கு ஹெல்ப் பண்ணிதான் ஆகணும்.. என்னால இதுல தீவிரமா இறங்க முடியாது விஷயம் வேற மாதிரி போகும். அவகிட்ட நேரடியா இதை பத்தி எனக்கு பேசவும் பிடிக்கல..”

திவ்ய பாரதிக்கு ரவி பிரதாப்பின் நிலை நன்றாகவே புரிந்தது. கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல கையாள வேண்டிய விஷயம். ஆனாலும் தன்னை நம்பி கேட்கிறான். அவளையும் அறியாமலேயே இப்படியான பேச்சுக்கள் அவளிடம் வரும் பொழுது அது அப்படியில்லை என்று அழகாய் பேசுவாள்.

ப்ரியா ஊருக்கு சென்றதும் வசதியாய் போனது. ஆனால் பிறகு வந்தத் நாட்கள் ரவிக்கும் திவ்யாவிற்கு அழகிய ஆழமான நட்பை மலர்ந்திட செய்தது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரவி இவளோடு வந்து பேசுவான். இல்லையெனில் அலைபேசியில் கதைப்பான். ஏதோ ஒரு நெருக்கம் இருவருக்கும்.

“என்கிட்ட கிளோஸா பழகினா மட்டும் உன் இமேஜ் டெமேஜ் ஆகாதா??” நக்கலாய் கேட்பாள்.

“ஸி.. நீ பழகுற விதத்துல ஒரு எதார்த்தம் இருக்கு. அது எல்லார் பார்வைக்கும் புரியும். சில விஷயங்கள் நம்ம யாருக்கும் விளக்கம் கொடுக்கணும்னு அவசியம் இல்லை.. ஒருசிலதுக்கு விதிவிலக்கு இருக்கு..” என்று விடுவான்.

திவ்யாவிற்கு, இங்கே பெற்றோர்கள் இல்லாத தனிமை, அறையிலயும் ப்ரியா இல்லாமல் தனித்து இருக்க வேண்டிய சூழல், அவளது தனிமையை எல்லாம் ரவியின் நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்த்தது.

ஆனால் விஷயம் வேறு விதமாய் ரவியின் வீட்டில் இருந்து கிளம்பியது. ப்ரியா ஊருக்கு சென்ற பொழுது எதுவோ தன் வேலையை காட்டிவிட்டே திரும்பியிருக்கிறாள். அதன் விழைவாக, ரவியின் அம்மா மகனை அழைத்து பேசினார்.

“ரவி நம்ம குடும்பத்துல காதல் எல்லாம் சரி வராது…”

ரவிக்கோ ப்ரியாவின் பிரச்சனையோ என்று தோன்றியது. இதில் திவ்யா பேர் வரும் என்று சிறிதும் எண்ணமிட தோன்றவில்லை.

“ம்மா.. நீங்க நினைக்கிற மாதிரி எனக்கும் ப்ரியாக்கும் ஒண்ணுமில்லை..”

“ப்ரியா இல்ல திவ்யா..” வசுந்தராவின் அழுத்தமான குரலில் ரவிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது. அனைத்தும்.

“நீங்களா எதுவும் கற்பனை செய்யாதீங்க..” என்று பேச்சை நிறுத்திவிட்டான்.  

 அந்த நாட்களை நினைக்கும் போது திவ்யாவிற்கு இப்பொழுதும் இதழில் வந்து மென்னகை ஒட்டிக்கொண்டது. அன்று கசப்பாய் இருந்தது எல்லாம் இன்று நினைக்கும் போது கனியமுதாய் இருந்தது. மெல்ல திரும்பி ரவியை பார்த்தாள், இன்னும் உறக்கத்தில் தான் இருந்தான்.

இதற்குமேல் இவனை உறங்க விடக்கூடாது என்று நினைக்கும் பொழுதே அவளது அலைபேசி அழைத்தது.  ரவியின் அம்மா தான்.

“அத்தை… சொல்லுங்க எப்படி இருக்கீங்க..”

….

“ஊட்டி வந்திருக்கோம் அத்தை.. அவர் தூங்குறார்..”

“நல்லாருக்கோம் அத்தை. மாமா எப்படி இருக்கார்..??”

….

“ஓ!! அப்படியா.. நல்ல விஷயம் தான்..”

“ஹ்ம்ம் அவர்கிட்ட சொல்றேன் அத்தை.. அவர் முடிவு தான்..”

மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டாள். ஆனால் வசுந்தரா கூறிய விஷயம் தான் மனதில் போட்டு உறுத்தியது. ப்ரியாவிற்கு திருமண ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். கண்டிப்பாக ரவியும் திவ்யாவும் வர வேண்டும் என்று வசுந்தரா சொல்கிறார்.

ரவி இதற்கு சம்மதிக்கவே மாட்டான். அவனுக்கு ப்ரியாவின் முகத்தை பார்த்திட கூட இஷ்டமில்லை. இதில் அவள் திருமணத்திற்கு வேறு செலவேண்டும் என்றால் அவ்வளவு தான்.

ஆனால் திவ்யா.. அவளுக்கு செல்வது தான் சரி என்று பட்டது. ப்ரியாவை பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டது. திருமணம் என்பதால் நிச்சயம் அவள் மனம் மாறியிருக்கும் என்றே தோன்றியது. கசப்பான அனுபவத்தால் பிரிந்ததால் ஒரு நல்ல நிகழ்ச்சியில் மீண்டும் சந்தித்தால் அந்த கசப்பு மாற வாய்ப்பு இருப்பதாகவே பட்டது. ஆனால் ரவியிடம் இப்பொழுது இதை சொல்லி அவன் மனநிலையை மாற்ற விரும்பவில்லை.

ப்ரியாவின் திருமணம் என்றதுமே அவளுக்கு தான் கதையில் படித்த ப்ரியாவும் நினைவு வந்திட்டாள். அந்த ரவிக்கு திவ்யா மீதிருக்கும் நாட்டம் தெரிந்த பிறகு ப்ரியாவின் முடிவு என்னதாய் இருக்கும் என்று படித்திட ஆவல் கொண்டது.

ஆனால் எங்கே இனி வீட்டிற்கு போன பிறகு தான் தெரியும் என்று சலித்தபடி திரும்பியவளை ரவி பிரதாப் சரசமாய் அணைத்தான்.

“என்ன திவ்ஸ் தனியா எங்க போன…”

“எங்கயும் போகல.. சும்மா வேடிக்கை பார்த்திட்டு இருந்தேன்…”

“வேடிக்கை பார்க்கிறதுக்கா ஊட்டி வந்தோம்…” என்று அவள் காது மடலை இவன் இதழ்கள் தீண்ட, திவ்யாவின் உடல் ஒரு முறை சிலிர்த்து மீண்டது. 

தீரா மயக்கம்.. தெவிட்டா காதல்… இரண்டும் ஒன்றோ..!!! வேறோ..!!!

 

 

 

 

 

Advertisement