Advertisement

அத்தியாயம் – 5

“ரவி நீ பண்ணது ரொம்ப தப்பு. எல்லாரும் பேசிட்டு இருக்கும் போதே பாப்பாவ கூட்டிட்டு வந்தது ரொம்ப தப்பு… நீ பண்ண இந்த விஷயம் இல்லாத ஒன்ன இருக்கிறதா பேசுறவங்களுக்கு நல்ல வாய்ப்பு குடுத்த மாதிரி…” என்று தர்மலிங்க கோவத்தில் ரவியை திட்டிக்கொண்டு இருக்க, மகேஸ்வரியோ கணவருக்கும் மகனுக்கும் இடையில் கைகளை பிசைந்து நின்றுகொண்டு இருந்தார்.

தெய்வேந்திரனும், விசாலமும் ஓய்ந்து போய் அமர்ந்திருக்க, திவ்யா அமைதியாய் நடப்பதை பார்த்திருந்தாள். அவள் மனதில் இப்பொழுது எதையும் சிந்திக்கும் திடம் இல்லை. அவளை கேட்டு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. அவளை கேட்டு எதுவும் நிற்கவில்லை.அனைத்துமே அதனதன் இஷ்டத்திற்கு நடந்த ஒன்று. ஆனால் பாதிப்பு திவ்யாவிற்கு.    

அனைவர்க்கும் சேர்த்து தர்மலிங்கம் தான் பேசிக்கொண்டு இருந்தார். ஆனால் யார் என்ன சொன்னாலும் ரவி அசருவதாய் இல்லை. அவனை பொறுத்த மட்டில் அவன் செய்தது சரியே.

பதில் பேசாது அமர்ந்திருந்தவனை காண காண தர்மலிங்கத்துக்கு பத்திக்கொண்டு வந்தது.

“பாரு பாரு நான் இவ்வளோ சொல்றேன் எப்படி இடிச்சபுளி மாதிரி உட்காந்து இருக்கான்னு.. ஏன் டா எவ்வளோ சொன்னோம் பாப்பாகிட்ட இனிமே நீ விலகி தான் இருக்கணும்னு.. அதான் போட்டோகிராப்பர் எடுத்தார்ல போட்டோ.. அப்புறம் எதுக்கு நீ வேற எடுத்த…”

அவர் கத்துவதை அமைதியாய் பார்த்திருந்தவன், “எனக்கு எடுக்கனும்னு தோணிச்சு எடுத்தேன் ப்பா.. அப்புறம் உங்க எல்லார்கிட்டயும் ஒன்னு சொல்லிக்கிறேன், திவ்ஸ் கூட இனிமே இப்படி இருக்காத அப்படி இருக்காதன்னுலாம் சொல்லவே கூடாது நீங்க.. ஏன் அவளும் நானும் இத்துனூண்டு இருக்கும் போது இருந்து இப்படி தானே இருக்கோம். அப்போ தெரியாத வித்தியாசம் இப்போ என்ன??

அப்போ உங்க யாருக்கும் தெரியலையா இவளுக்கு கல்யாணம் ஆகும், வேற வீட்டுக்கு போவான்னு.. டேய் பாப்பாவ பார்த்துக்கோ பார்த்துக்கோன்னு எப்போவும் என்கிட்டே தானே சொல்வீங்க.. இப்ப வந்துட்டு தள்ளி நில்லுன்னு சொன்னா எப்படிப்பா…” என்று மிக கூலாய் கேட்டவனுக்கு யாருமே பதில் சொல்ல முடியவில்லை.

பலத்த மௌனம் நிலவியது. இருவரது பெற்றோர்களுக்குமே இப்பொழுது என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் இது ஒரு பெண்ணின் வாழ்வு. அதுவும் திருமணம் வரைக்கும் வந்து நின்று போனது என்றால் பின்னாளில் அவளுக்கு நல்லதொரு வாழ்வு அமைவது சிரமமே.

அதுவும் இப்படி ஒரு காரணத்தினால் நிற்கிறது என்றால் அவ்வளவு தானே.

“எல்லாம் சரி தான் ரவி.. ஆனா இனிமே பாப்பாக்கு ஒரு நல்ல வரன் அமைஞ்சு, நல்லபடியா கல்யாணம் நடக்குமா???” என்று தெய்வேந்திரன் வருத்தம் நிறைந்த குரலில் கேட்க,

“அதுக்கு மாமா?? பாத்திங்கல்ல அவங்க எல்லாம் எப்படி பேசினாங்கன்னு.. இப்போவே இப்படி பேசுறவங்க, கல்யாணம் மட்டும் முடிஞ்சு இருந்தா எவ்வளோ பேசியிருப்பாங்க.. நம்ம திவ்ஸ் நல்லா இருப்பாளா அங்க..??” என்று கேட்டு வாயடைத்தான்.

“டேய் முதல்ல இப்படி திவ்ஸ் திவ்ஸ்ன்னு சொல்றத நிறுத்து.. திவ்யா சொல்ல வராதா உனக்கு.. மூணு எழுத்து தானே…” தர்மலிங்கம் கடிந்தார்.

“திவ்ஸ் கூட மூணு எழுத்து தான்..”

ரவியின் இந்த பதிலில் லேசாய் திவ்யாவிற்கு சிரிப்பு வர, அவள் முகம் மலர்வது கண்டு மற்றவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

இனி என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அடுத்தது என்ன என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலே இல்லை. விசாலம் தான் அழுதுகொண்டே இருந்தார். திவ்யா கூட தன் அன்னையை சமாதானம் செய்து பார்த்தாள் ஆனால் இன்னும் அவளை கட்டிக்கொண்டு அழுதாரே ஒழிய அழுகை மட்டும் நின்றபாடில்லை.

“இனி உன் வாழ்க்கை எப்படி அமையுமோ டி…”என்று மகளின் கன்னம் வளித்தவரை பார்க்க அனைவருக்குமே சங்கடமாய் போனது. என்ன நினைத்தானோ ரவி, எழுந்து சென்று தெய்வேந்திரன், விசாலம் காலுக்கு அடியில் அமர்ந்து அவர்களது கைகளையும் பிடித்துகொண்டு,

“அத்தை மாமா… உங்க ரெண்டு பேருக்கும் என் மேல நம்பிக்கை இருக்குதானே.. நான் நீங்க வளர்த்த பையன் தானே.. ” என்று அமைதியாய் கேட்டான்.என்ன கேட்கிறான் இவன் என்பது போல் அனைவரும் காண, அவனது கேள்வியை உள்வாங்கியவர்களோ அவனது முகத்தை மென்மையாய் நோக்கினர்.

“என்ன ரவி இது….” என்று தெய்வேந்திரன் கேட்க,

“ப்ளீஸ் மாமா.. நான் நடந்துகிட்ட விதம் தப்பா இருக்கலாம். ஆனா கொஞ்சம் நினைச்சு பாருங்களேன், அவங்க குணம் நமக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சு போச்சு. இப்படி பட்டவங்க கிட்ட நம்ம திவ்ஸ் வாழ்ந்தா அவ வாழ்கை நல்லா இருக்குமா?? இந்த கஷ்டம் கொஞ்ச நாளுக்கு தான் அதுக்காக தெரிஞ்சே அவளை வாழ்நாள் முழுக்க கஷ்டப்பட அனுப்ப முடியுமா??” என்று கேட்டவனின் வார்த்தைகள் அனைவர்க்கும் நியாயமாகவே பட்டது.

ஆனால் தர்மலிங்கமோ விடாது, “நீ சொல்றது எல்லாம் சரிதான் டா.. அடுத்து நம்ம என்ன செய்றது?? ஊர்ல கேக்குறவங்களுக்கு நாங்க தானே பதில் சொல்லணும்.. இது ஒன்னும் சின்ன விஷயம் கிடையாது..” என்று இன்னும் கோவம் குறையாமல் தான் பேசினார்.

ரவியின் பாவம் சில நொடிகள் யோசனையை காட்ட, பிறகு “நான் நாளைக்கு ஊருக்கு கிளம்புறேன், திவியும் கூட வரட்டும்..” என்றான் முடிவாக.

“என்ன ????!!!” என்று அனைவரும் மீண்டும் அதிர்ச்சி பாவம் காட்ட, அவனோ தன் முடிவில் உறுதியாய் இருந்தான்.

“டேய் உனக்கு அறிவு கிறிவு கெட்டு போச்சா என்ன?? இவ்வளோ நடந்து இருக்கு.. மறுபடியும் பாப்பவ ஊருக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்ற.. என்ன டா நினைச்சிட்டு இருக்க…” என்று ஒரு தந்தையாய் தர்மலிங்கம் கண்டிக்க,

விசாலம் “வேணாம் ரவி.. பாப்பா இங்கவே இருக்கட்டும்.. அவளுக்கு சூட்டோட சூட்டா மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் முடிக்கணும்” என்றார்.

அடுத்த நொடி ரவியின் அமைதி மறைந்துவிட்டது.

“அதானே பார்த்தேன்.. என்னடா இன்னும் இந்த பேச்சு வரலையேன்னு.. இந்த பிரச்சனைய நான் ஆரம்பிக்கலை. ஆரம்பிச்சது ராகவ் பேமலி. அப்புறம் இன்னொன்னு திவ்ஸ் இங்க இருந்தா என்ன நடக்கும் தெரியுமா?? இது தான் சாக்குன்னு வத்தல் தொத்தல் எல்லாம் பொண்ணு கேட்டு வருவானுங்க.. நீங்களும் வேற வழியில்லாம உங்க கடமையை முடிக்கணுமேன்னு அவளை எவனுக்காவது கட்டி வைப்பீங்க..

இல்லையா ஆறுதல் சொல்ல வரேன்னு நாளு பேரு டெய்லி வருவாங்க. வந்து அவங்க பேசுற பேச்சுல திவ்ஸ்க்கு வராத கண்ணீரே வந்திடும். எதோ உலகத்துலேயே பாவப்பட்ட ஜீவன் திவ்ஸ்தான்னு எல்லாம் பார்ப்பாங்க..  இதெல்லாம் தேவையா?? கொஞ்ச நாள் இதை இப்படியே விடுங்களேன்.. எல்லாம் சரியாகும். யார் என்ன கேட்டாலும் தைரியமா பதில் சொல்லுங்க அவ்வளோ தான். திவ்ஸ் நீ உன் ட்ரெஸ் எல்லாம் பேக் பண்ணு..” என்றவன் மாடியேறி சென்றுவிட்டான்.

திவ்யாவிற்கு ஆச்சரியமாய் இருந்தது. ரவியால் இத்தனை தெளிவாய் திடமாய் பேசிட முடியுமா என்று?? ஏனெனில் அவளுக்கு தெரிந்த ரவி எதற்க்கெடுத்தாலும் திவ்யாவிடம் தான் வந்து நிற்பான்.

இதற்கென்ன செய்ய, அதை எப்படி செய்ய, என்று ஏதாவது கெட்டு உயிரை வாங்குவான். அத்தனை ஏன் அவன் மனதில் காதல் இருப்பதையே முதலில் இவளிடம் தானே சொன்னான். அப்படி இருந்தவன் இன்று இத்தனை தெளிவாய் திடமாய் தைரியமாய் அத்தனை பேரின் வாயையும் அடைத்துவிட்டு செல்கிறான் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாகவும் இருந்தது, ஆச்சரியமாகவும் இருந்தது.

திருமணம் நின்ற கவலையை விட, எதிலிருந்தோ தப்பித்த உணர்வு தான் அதிகம். ஒருவேளை ராகவ்வோடு பேசி பழகியிருந்தால் மனம் பாதித்திருக்குமோ என்னவோ. நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை என்றே நினைத்திட தோன்றியது திவ்யாவிற்கு. சென்னை செல்வது சரி என்றுதான் பட்டது அவளுக்கு. நிச்சயம் ஒரு மாற்றம் கிடைக்கும்.

அது எவ்வித மாற்றம் என்பது தான் அவளுக்கு தெரியவில்லை. அவளை பொருத்தமட்டில் ரவி சொல்வது அனைத்தும் சரியே. கண்மூடித்தனமான நம்பிக்கை அவன் மீது இருந்தது.

ஆனால் ப்ரியா விசயத்தில் ரவி நடந்துகொள்வது சரியா என்று மட்டும் தான் இன்றளவும் புரியவில்லை. அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த எண்ணம் இருக்கிறது. தன்னை கவனிக்கும் அளவு ரவி ப்ரியாவை கவனிப்பது இல்லையோ என்று. நிஜமாகவே அவன் மனதில் அவள் மீது காதல் இருக்கிறதா என்று. ஆனால் காதலர்களுக்குள் நாம் நுழைய கூடாது என்று தள்ளியே இருந்து விடுவாள்.

ப்ரியாவிற்கு அழைத்து பார்த்தாள், அவளோ எடுக்கவே இல்லை. சரி சென்னை போன பிறகு பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டாள்.ஒருவேளை பேசியிருக்கலாமோ என்று தோன்றும் நாள் வருமென்று அவளுக்கு தெரியவில்லை.

மறுநாள் ரவியும் திவ்யாவும் கிளம்பும் பொழுது ஆயிரம் அறிவுரைகளை சுமந்துகொண்டே தான் கிளம்பினர். திவ்யா இயல்பாய் இருப்பது போல் தான் தோன்றியது. ஆனால் ரவிதான் அமைதியாய் இருந்தான். அவனது சிந்தனைகள் எல்லாம் அந்த கற்பனை காட்சிகளை சுற்றியே இருந்தது.

மணமகள் கோலத்தில் திவ்யா, அருகில் மாப்பிள்ளையாய் அவன். தாலி கட்டி மேளம் கொட்டி அட்சதை தூவி, அந்த காட்சிகளே மனதில் மின்னல் அடிப்பது போல் பளிச் பளிச்சென்று வந்து செல்ல, அவனையும் அறியாது அவனது பார்வை திவ்யாவின் மீது நிலைத்தது.

அவளோ ஜென்னல் பக்கம் தலை சாய்த்து அமர்ந்திருந்தாள்.கண்கள் வெறித்து வெளியே நோக்கியபடி இருக்க, அவள் முகத்தில் எவ்வித உணர்வும் இல்லை. நிர்மலமாய் இருந்தது. அன்றொரு நாள் இதே போல் தான் சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு இரவு ரயிலில் வந்தாள். திருமண கனவுகள் இல்லையென்றாலும் நிச்சயம் மனதில் ஒரு பரபரப்பு இருந்தது. இன்று அதுவும் இல்லை.

ஆனால் ரவியின் மனமோ அக்காட்சிகளையே நினைத்து நினைத்து, அதிலே எதை கண்டானோ திவ்யாவின் மீது வைத்த பார்வையை மட்டும் அகற்றவே முடியவில்லை. அவனது பார்வை புதிதாய் இருப்பது அவனுக்கே தெரிந்தது. அவனுள் நடக்கும் மாற்றம் மட்டும் இன்னதென்று அறியாமல் இருக்க, ரயிலின் தடதடப்பை விட அவன் மனதில் தடதடப்பு அதிகமாய் இருந்தது.

அவள் மீது உன் மனதை செலுத்தாதே, நீ ஏற்கனவே இன்னொருத்தியை காதலிக்கிறாய் என்று அவன் அறிவு போட்ட சத்தமெல்லாம் அவன் காதுகளுக்கு எட்டவே இல்லை போல. நிச்சயம் இப்படியான ஒரு உணர்வு இதுவரைக்கு ப்ரியாவின் மீது தோன்றியது இல்லை என்பது தான் உண்மை.

எத்தனை வருடங்களாய் திவ்யாவை காண்கிறான் ஆனால் இப்பொழுது முற்றிலும் வேறாய் தெரிந்தாள். பேரழகி என்றெல்லாம் சொல்லிட முடியாது தான். ஆனால் அவளிடம் நிச்சயம் ஒரு ஈர்ப்பு இருக்கும். எவ்வித ஒப்பனையும் இல்லாமல் அமைதியாய் இருப்பவளின் முகம் அவனை தன்பால் இழுப்பது அவனுக்கே தெரியவில்லை.

இத்தனை வருடங்கள் தோழியாய் பார்த்தவனது மனமோ இப்பொழுது அவளை ஒரு பெண்ணாய் பார்க்க தொடங்கியது.

“என்ன செய்கிறாய் ரவி….!!!!!” என்று அவன் அறிவு போட்ட கூச்சலில் சற்றே தன்னை உலுக்கிகொண்டவன் பட்டென்று எழுந்து விட்டான்.

அதன் பிறகு தான் தெரிந்தது எதற்காக எழுந்தான் தெரியவில்லை என்று. திவ்யா திடுக்கிட்டு அவனை காண, அவனுக்கு என்ன பதில் சொல்வதென்பது தெரியாமல் முழித்தான்.

“என்ன ரவி….”

“ஹா.. என்.. என்ன திவ்ஸ்..”

“எதுக்கு இப்படி பட்டுன்னு எந்திரிச்ச.. இங்க உன்கூட சண்ட போடவெல்லாம் யாருமில்லை…” என்று லேசாய் சிரித்தாள்.

திவ்யாவிற்கு சிரிக்கும் பொழுது லேசாய் குழி விழும். இத்தனை வருடங்களாய் அவனுக்கு தெரிந்த ஒன்று தான் ஆனால் இன்றோ முற்றிலும் புதிதாய், என்னுள் விழுந்து நீ புதைந்து போ என்றழைக்கும் புதை குழியாய் தெரிந்தது அவளின் புன்னகை குழி.

பட்டென்று எழுந்தவன் சட்டென்று அமர்ந்துவிட்டான்.

“என்ன ரவி….”

“ம்ம்ம்… ஒண்ணுமில்ல.. தூக்கம் வருது…” என்று கூறி கண்களை இறுக மூடிக்கொண்டான்.

சிறிது நேரத்தில் திவ்யாவும் உறங்கிவிட, அதன் பின் ரவி உறங்கவே இல்லை. அவனது பார்வையும் அவளை விட்டு அகலவில்லை. சென்னை வரும்வரைக்கும் இது தொடர்ந்தது..

“உன்னை வீட்ல விட்டுட்டு நான் ரூமுக்கு போறேன் திவ்ஸ்…” என்றபடியே உடன் வந்தான். அவனுக்கு ப்ரியா அங்கே இருக்க மாட்டாள் என்றே தோன்றியது. நிச்சயம் அவளை அவள் அம்மா வீட்டிற்கு அழைத்து சென்றிருப்பார் என்று நினைத்திருந்தான்.

ஆனால் அவளோ இவர்கள் வரவுக்காய் கதவு திறந்து காத்திருந்தாள். திவ்யாவிற்கு இதில் எவ்வித மாற்றமும் தெரியவில்லை. ஆனால் ரவி தான் ப்ரியாவை கண்டதும்,

“நீ….!!!!” என்றான் தயக்கமாய்.

“நான் தான்.. ஏன் என்னை யாருன்னு தெரியலையா???” என்றாள் குதர்க்கமாய்.

“ஷ்ஷ்..!!! ப்ரியா என்ன டி இது…” என்று திவ்யா லேசாய் அவளை சமாதானம் செய்ய விழைய,

“ப்ளீஸ் திவி இதுல நீ தலையிடாத…” என்றவளின் குரல் நடுங்கியது. ரவிக்கே ப்ரியாவின் முகம் கண்டு சங்கடமாய் போனது. சரியான தூக்கமில்லமால் இருந்திருப்பாள் போல. ஆனால் அவள் முகத்திற்கு மாறாய் ப்ரியாவின் கண்களோ கோவத்தை மட்டுமே பிரதிபலித்தது. 

“நான் அப்புறம் வரேன்..” என்று ரவி கிளம்ப,

“ஏன் பயமா இருக்கா??” என்ற ப்ரியாவின் குரல் நிற்க வைத்தது.

“என்ன பயம்???” சற்று தெனாவெட்டாகவே அவன் குரல் ஒலித்தது.

இருவரும் பேசிக்கொள்ளும் தினுசே சரில்லை என்று புரிய, “ரவி நீ கிளம்பு. ப்ரியா அப்புறம் பேசிக்கலாம்..” என்று திவ்யா சொல்ல,

“ஏய் உன்னை இதுல தலையிடாதன்னு சொன்னேன்ல..” என்று ஆங்காரமாய் கத்தினாள் ப்ரியா. அவ்வளவு தான் ரவியின் பொறுமை காணமல் போனது.

“ஏய் என்ன?? அவளே நொந்து போய் வந்திருக்கா, அவகிட்ட பிடிச்சு கத்திட்டு இருக்க. இப்போ உனக்கு என்ன வேணும் ?? ஹா என்ன வேணும் சொல்லு.. என்கிட்டே தானே பேசணும்.. வா பேசுவோம்.. இன்னிக்கே எல்லாத்தையும் பேசி முடிப்போம்…” என்றவன் கோவத்தை அடக்க பெரும்பாடு பட்டான்.

பொறுமையாய் இருக்கவேண்டும் என்று எண்ணியிருந்தவனுக்கு இன்றே அனைத்தையும் பேசி முடித்திட வேண்டும் என்ற வெறி முளைத்தது. வாழ்வில் சில நேரம் நாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் விஷயம் உண்மையாய் இருக்காது. ஒரு விசயத்தை பற்றிய அதீத சிந்தனையே அதை நிஜத்தில் நடக்கும் ஒன்றாய் நம் மனம் நம்பிக்கொள்ளும். எதார்த்தமாய் நடக்கும் அனைத்தையும் அதனோடு தொடர்பு படுத்தி மேலும் மேலும் தங்கள் சிந்தனைக்கு பலம் சேர்த்துகொள்ளும். 

காதலுக்கும்,காதலென்று நினைத்த ஒன்றுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது தானே. உண்மையான காதல் எப்பொழுது நம்முள் மலர்ந்தது என்று யாரும் அறியார். ஆனால் காதலென்று நினைத்து நம்பிக்கொண்டு இருக்கும் விஷயம் என்றாவது ஒருநாள் அறுந்து போகும் அப்படிதான் ஆனது ரவி ப்ரியாவிற்கு.

அலுவலகத்தில் அனைவருமே ப்ரியாவை ஆஹா ஓஹோ என்று பேச, ரவிக்கு அப்படி என்ன இவளிடம் என்ற ஒரு ஆர்வம் மட்டுமே முதலில். பின் அந்த ஆர்வமே ப்ரியாவை தன்னிடம் பேச வைக்கவேண்டும், பழக வைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்ற, தொடர்ந்து அதை பற்றியே சிந்திக்க, அதை அவன் மனம் காதல் என்று நம்பிக்கொண்டது.

ஆனால் இன்றோ அவன் மனம் திவ்யாவின் பக்கம் தடம்புரள, ரவியை பொருத்தமட்டில் அவன் யாருக்காகவும் எதற்காகவும் திவ்யாவை இழக்க விரும்பவில்லை. ஆனால் அதே நேரம் அது காதலா என்றும் தெரியவில்லை.

காதலென்று கூறினால் திவ்யா என்ன செய்வாள்?? தன்னை தவறாய் நினைப்பாளோ என்று யோசிக்க அதற்கு முன்னே ப்ரியாவிடம் பேசவேண்டி இருந்தது. அதுவும் திவ்யா அறியாமல். ஆனால் ப்ரியா இப்பொழுதே ஆரம்பிக்க அவனுக்கும் வேறுவழியில்லாமல் போனது.

ரவிக்கு இன்னும் ப்ரியாவின் மனதில் பொய்யான ஒரு நம்பிக்கையை விதைக்க எண்ணமில்லை. அவள் தன்னை பற்றி எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளட்டும், ஆனால் இது தான் நான் என்று காட்டி விடும் வேகம் அவனுள் இருந்தது.

அவன் நினைப்பது எல்லாம் ஒன்று தான் திவ்யா தன்னை விட்டு விலகிட கூடாது. அவள் தன்னை பற்றி தவறாய் எண்ணிட கூடாது. இது.. இது மட்டுமே அவன் மனதில் சதா ஒலித்துக்கொண்டு இருக்க, இப்பொழுது அனைத்தையும் கெடுக்கும்படி ப்ரியா பேசுவது அவனுக்கு கோவத்தையும் வேகத்தையும் கொடுத்தது.

“போதும் ரவி.. இதுக்குமேல என்னை நானே ஏமாதிக்க ரெடியா இல்ல.. என்னை பொருத்தவரைக்கும் என் லைப் எனக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்.. எனக்கு இம்பார்டன்ஸ் குடுக்கிற ஒருத்தர் தான் எனக்கு வேணும்.. ஆனா சில நேரம் நம்ம உண்மைய ஏத்துக்க தானே செய்யணும்..” என்று ப்ரியாவுமே கசப்பாய் சற்றே அழுத்தமாய் பேச, ரவிக்கு அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்தது.

கண்டுகொண்டாள் என்றும் தெரிந்தது.

ஆனால் திவ்யாவிற்கு தான் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. திவ்யா முன்னே பேச ரவிக்கு தயக்கமாய் இருந்தது.

தயக்கங்களை தகர்த்தெரியுமோ இவன் கொண்ட மயக்கம்…!!!!

 

 

 

 

Advertisement