Advertisement

அத்தியாயம் – 3

“பாப்பா… இந்தா இந்த ஆரத்தை போட்டுக்க.பூ எல்லாம் சரியா இருக்கா..அலங்காரம் எல்லாம் முடிஞ்சதுல. இல்லை இன்னும் இருக்கா..” என்று விசாலம் பேசியபடி தன் மகளை காண, அவரது முகத்தில் அளவிட முடியாத நிம்மதி.

அப்படியே நின்றுவிட்டார்..!! கண்களில் ஆனந்த கண்ணீர்.

“அடடா….!! என்ன விசாலா… இப்படியே நின்னுட்ட.. வா வா… அங்க மாப்பிள்ளை கூப்பிட போயிருக்காங்க.. ஆலம் சுத்தனும்.. இங்க வந்து கண்ண கசக்கிட்டு..” என்ற மகேஸ்வரிக்கும் கூட மனம் லேசாய் கலங்கித்தான் போனது.

“பாப்பா… போற எடத்துல நல்லபடியா அனுசரிச்சு நடந்துக்கணும். உனக்கு நாங்க சொல்ல தேவையில்ல ஆனாலும் பாத்து நடந்துக்க பாப்பா… சரியா…” என்று அவள் கன்னத்தை தடவியவர், வேகமாய் விசாலத்தை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார்.

இன்னும் சிறிது நேரத்தில் திருமணம். அவ்வளவு தான் முழுதாய் திவ்யாவின் வாழ்வு மாறிவிடும். புதிய இடம், புதிய மனிதர்கள், புதிதாய் ஒருவன் அவளுக்கு அனைத்துமாய்.

இதெல்லாம் நினைக்கும் பொழுதே ஒருவித பரப்பரப்பாகவும் இருந்தது. பயமாகவும் இருந்தது. தன்னுணர்வுகளை பகிர்ந்துகொள்ள அவளுக்கு இருப்பதோ ரவியும், ப்ரியாவும் தான்.

ப்ரியாவிற்கு அழைத்தால் அவளோ இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் என்ற பதிலை மட்டுமே கூறுகிறாளே ஒழிய வந்தபாடில்லை.

சலிப்பாய் இருந்தது. உடன் யாராவது இருந்தால் நல்லதோ என்று தோன்றியது. உறவுகளில் சிலர் இருந்தார்கள் தான், ஆனால் யாரும் திவ்யாவின் மனதிற்கு நெருக்கமாய் இல்லை. சரி ரவிக்கு அழைக்கலாம் என்றால் அவனோ இவளை தவிர மற்ற அனைவரையும் கவனித்துக்கொண்டு இருக்கிறான். வேலை அப்படி..

பம்பரமாய் அவன் சுழன்றாலும் அவனது மனமோ வேறு உலகில் சஞ்சரித்துக்கொண்டு இருந்தது. ஒரு இனம் புரியாத குழப்பம்.. பயம்.. மகிழ்ச்சியாய் திவ்யாவை கிண்டல் செய்து அவளோடு வம்பளக்க வேண்டிய தருணத்தில் அவளோடு சாதாரணமாய் பேசிட கூட வார்த்தைகள் தந்தி அடித்தது அவனுக்கு.

ஏனென்று தெரியவில்லை, காலையில் இருந்தே அப்படிதான் இருந்தது. அலங்காரம் முடிந்ததுமே, அவனைத்தான் அழைத்தாள் திவ்யா, எதுவும் தேவையோ என்று போனவனிடம்,

“ரவி… எப்படி இருக்கேன்… ??” என்று புருவம் உயர்த்தி, விழிகளை லேசாய் விரித்து கேட்டவளை கண்டு அவனுக்கு சட்டென்று இதயத்தை எதுவோ பிசைந்த உணர்வு.       

ஆனால் அதற்குள் மகேஸ்வரி எங்கிருந்து தான் வந்தாரோ, “டேய் நீ இங்க என்ன பண்ற?? போ போ இனிமே இப்படியெல்லாம் பாப்பா கிட்ட பேச கூடாது.. மாப்பிள்ளைக்கு தான் முதல் உரிமை…” என்றவர் வேறு எதோ வேலை சொல்லி அனுப்பிவிட்டார்.

அவருக்கு அவர் கவலை. ஆனால் அவனுக்கு??

மாப்பிள்ளை அழைப்பிற்கு நேரம் ஆக ஆக, இவளுக்கு என்னவோ போல் ஆனது. எத்தனை நேரம் தான் இப்படி வெறுமெனே அமர்ந்திருக்க, வெளியே சென்றாலாவது வேடிக்கை பார்க்கலாம் என்று தோன்றியதே ஒழிய ராகவ்வை காணலாம் என்ற ஆசை தோன்றவே இல்லை.

ப்ரியாவுக்கு அழைத்தாள். சற்று நேரத்தில் வந்துவிடுவேன் என்று அவள் சொல்ல, அடுத்து ரவிக்கு அழைத்தாள்.

“ஹே லூசு எங்க போன.. எத்தனை தடவ கூப்பிட.. வெளிய என்னதான்  நடக்குது… இங்க எனக்கு போர் அடிக்குது… என்னை மட்டும் விட்டு எல்லாம் சாப்பிட போயிட்டாங்க…” என்று சோகமாய் திவ்யா சொல்லவும், வேகமாய் வந்தான் கையில் ஒரு மணமணக்கும் காப்பியோடு

“ஹே திவ்ஸ்… இந்தா இதை குடி.. ” என்றவனின் பார்வை அவள் முகம் நோக்கி நிமிரவே இல்லை.

நிமிர்ந்தால் தான் நிலை தடுமாறுகிறதே…

அவள் குடித்து முடிக்கவும் கிளம்பியவனை கண்டு, “ஹே எங்க போற.. இங்க தான் இரு.. போர் அடிக்குது…” என்று அவனை பிடித்து அமர்த்த,

“ஐயோ!!!! இவ வேற படுத்துறாளே…” என்றவன் அமர்ந்தும் விட்டான்.

“ஏய் நீ வேற டிரஸ் தானே எடுத்த… இப்போ என்ன பட்டு வெட்டி சட்டை..  பார்த்துப்பா உன்னைய யாரும் மாப்பிள்ளைன்னு நினைச்சிட போறாங்க…” என்று கிண்டல் செய்தவளை நிமிர்ந்து பார்த்தான்.

மணப்பெண் அலங்கராதில் தேவதையாய் இருந்தவளை கண்டதும் ஒரு நொடி அவன் இதயம் நின்று தான் துடித்தது. எத்தனையோ முறை திவ்யாவை சேலையில் கண்டிருக்கிறான் தான்.

ஆனால் இன்று, என்னவோ தெரியவில்லை.

அன்று பெண் பார்க்க வந்தன்றும் அப்படிதான் இருந்தது. எதுவோ ஒன்று புதியாய் அவனுள்ளே பிறழ்வது புரிந்தது. அது என்னவென்று தான் விளங்கிடவில்லை.

“ப்ரியாக்கு கால் பண்ணியா?? எங்க இன்னும் அவளை காணோம்..” என்று மேலே திவ்யா பேசிக்கொண்டே போக, அவனுக்கு என்னவோ போல் இருந்தது.

பிறகு என்ன நினைத்தானோ, “திவி நம்ம ஒரு செல்பி எடுத்துப்போமா??” என்றான் ஏக்கமாய்.

அவளும் சிரித்த முகமாகவே அவனருகில் வந்து நின்றாள். “சீக்கிரம் ரவி.. அம்மாவும் அத்தையும் மறுபடி வரதுக்கு முன்ன எடு…” என்றவள் எப்பொழுதும் போலவே சிரித்த முகமாய் நிற்க. அவனுக்கு தான் ஒருமாதிரி இருந்தது. இயல்பாய் அவளருகில் இருக்க முடியவில்லை. பயமாய் இருந்தது. வியர்த்தது. என்னென்னவோ செய்தது.    

இன்னும் சிறிது நேரத்தில் இப்படியெல்லாம் உரிமையாய் உறவாய் பேசிட முடியாதாம். முடியாது என்பதை விட கூடாதாம். அவன் அப்பாவும் அம்மாவும் மாறி மாறி சொன்னது இதுதான். ஒரு செல்பி எடுக்க ஆரம்பித்து பத்து பதினைந்து எடுத்தான்..

“போதும் போதும்….” என்று அவள் தான் நிறுத்தினாள். அதே நேரம் அருகில் இருக்கும் மாப்பிள்ளையின் அறையில் இருந்து எதோ கூச்சல் சத்தங்கள் கேட்க,

“என்ன ரவி.. எதோ சத்தம் கேட்குது…” என்று குழப்பமாய் அப்பொழுதும் அவன் முகமே நோக்கினாள்.

“நீ இரு நான் போய் பாக்குறேன்…” என்றவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகமாய் வெளியே விரைந்தான்.  

மாப்பிளையை அழைத்து வாருங்கள் என்று ப்ரோகிதர் கூறி பல நிமிடங்கள் ஓடிவிட்டது. அப்படியிருக்க மாப்பிள்ளையின் அறையில் இருந்து இப்படியான சத்தங்கள் வர, என்னவோ ஏதோவென்று சென்று பார்க்க,

அங்கே ராகவ்வை தவிர அனைவரும் இருந்தனர். ராகவ்வின் அம்மாவோ அழுது புலம்பிக்கொண்டு இருக்க, அவன் தந்தை எதுவும் பேச முடியாமல் அமர்ந்திருந்தார்.

“என்னங்க என்னாச்சு…?? மாப்பிள்ளை எங்க.. நேரம் போகுதே….” என்று தெய்வேந்திரன் கேட்கும் பொழுதே, எதுவோ சரியில்லை என்று மனதில் பட்டது அவருக்கு.

தெய்வேந்திரன் பேசட்டும் என்று அமைதியாய் இருந்த தர்மலிங்கம், அங்கே எதுவும் சரியில்லை என்பதனை உணர்ந்து,

“என்னங்க மாப்பிள்ளை எங்க.. என்ன பிரச்னை??” என்று கேட்க, அங்கே இருப்பவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

ராகவ் அம்மாவின் கைகளில் இருந்த காகிதத்தை வேகமாய் வாங்கி பார்த்தான் ரவி. அதிலிருந்ததை படித்தவனின் முகம் ருத்ர மூர்த்தியாய் ஆனது.

விஷயம் இது தான். ராகவ்விற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. காதலித்த பெண்ணை மணந்துகொண்டு, வெளிநாடு செல்லவேண்டும். வீட்டில் இருப்பவர்கள் வற்புறுத்தலுக்காகவே இத்தனை நாள் அமைதியாய் இருந்ததாம். இனி அவ்வாறு இருக்க முடியாதாம். அவனை நம்பியிருப்பவளுக்கு துரோகம் செய்ய முடியாதாம். இப்படி ஏகப்பட்ட தாம்கள் இருந்தது அந்த கடிதத்தில்.

ஆனால் ராகவ்வின் பெற்றோர்களோ எங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறினர். 

மொத்தத்தில் இந்த திருமணம் நடக்காது.. அவ்வளவே..

அதற்குள் திவ்யா உட்பட அனைவரும் அங்கே வந்துவிட்டனர். மகேஸ்வரி கைகளை பிடித்துகொண்டு, விசாலம் சாய்ந்தே விட்டார். மணமேடை வரைக்கும் வந்து திருமணம் நின்று போனால் அடுத்து மகளின் வாழ்வு என்னாகும் என்று அச்சம் சூழ்ந்தது.

ஆளாளுக்கு ஒன்று பேச, அங்கே கூச்சல் குழப்பம் அதிகமானது.

யாருக்கும் முதலில் என்ன செய்வது என்று புரியவில்லை. யாரை குற்றம் சொல்வது என்றும் தெரியவில்லை.

திவ்யாவோ மாலையை இறுக பற்றியபடி அதிர்ச்சியாய் நின்றிருந்தாள். அடுத்தது என்ன ?? என்ற கேள்விக்கு அவளிடம் பதிலில்லை.

ஏன் இப்படி?? என்ற கேள்விக்கு அவளுக்கு யாரும் பதில் சொல்ல முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிந்தது. ஏமாற்றம் என்பதனை விட அவளுக்கு சங்கடமாய் இருந்தது. ஒருமாதிரி அனைவரும் தன்னை பாவமாய் பரிதாபமாய்  பார்ப்பதே அவளுக்கு இன்னும் அழுகையை கூட்டியது.

தன்னிலை இத்தனை இறங்க வேண்டுமா என்று இருந்தது.         

ரவி தான் கோவமாய் கிளம்பினான்..

“எங்க இருந்தாலும் அவனை இழுத்துட்டு வரேன்…..” என்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கிளம்பியவனை தர்மலிங்கம் தான் தடுத்தார்.

“என்னப்பா….???!!!”

“இது நம்ம பொறுமையா யோசிக்க வேண்டிய நேரம் ரவி…” என்றவர் தெய்வேந்திரனையும், விசாலத்தையும் கண் காட்டினார்.

ஆனால் அதெல்லாம் ரவியின் மனதில் பதியவில்லை. அவனுக்கு திவ்யா கலங்கி நிற்பது ஒன்று மட்டுமே மனதில், புத்தியில், கண்களில் பட்டது. அந்த ராகவ் எங்கிருந்தாலும் இழுத்து வந்து திவ்யாவின் காலடியில் கிடத்த வேண்டும் என்ற வெறி மட்டுமே அவனுக்கு.

ஆனால் தர்மலிங்கமோ, அதற்கு பின்னே என்ற கேள்வியை யோசித்தார்.

“பாப்பா… நீ உள்ள போ.. மகேசு தங்கச்சியும், பாப்பாவையும் கூட்டிட்டு போ” என்றவர்,

“ரவி நீ இங்கயே இரு…” என்றுவிட்டு, ராகவ் வீட்டினரை பார்த்து, “நீங்க போய் உங்க மகனை தேடுங்க… உங்களை நாங்க தப்பா நினைக்கல.. கிளம்புங்க…” என்று கரம் குவிக்கவும், அவர்களும் வேறு வழியில்லாமல் கிளம்பினர்.

“அப்பா… அவங்களை ஏன் ப்பா போக சொல்றீங்க.. இவனுங்களை அடைச்சு வச்சா அவன் தன்னப்போல வருவான்ல….” என்று எகிறினான்.

“வந்து?? நம்ம பாப்பாக்கு வாழ்க்கை குடுன்னு நம்ம எல்லாம் கெஞ்சனுமா??”

தர்மலிங்கம் கேட்ட இக்கேள்விக்கு அவனால் பதில் சொல்ல முடியவில்லை. நின்றுவிட்டான்.

தெய்வேந்திரன் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தார். திடமான உள்ளம் படைத்த அவராலும், மகளின் வாழ்வு இப்படி பாதியில் நிற்பது கண்டு நிலைகுலைந்து போனது.

சில நொடிகள் அங்கே மௌனம்!!! மௌனம்!!! மௌனம்!!! மட்டுமே..   

ராகவ் மட்டும் நேரில் இருந்தான் என்றால் ரவி அவனை கொன்றே போட்டிருப்பான். அத்தனை கோவம் அத்தனை வெறி ‘என் திவ்யாவை இப்படி கலங்கி நிற்க வைத்துவிட்டாயே.. அவளிடம் என்ன குறை என்று நீ இன்னொருத்தியை தேடினாய்..’ என்ற ஆங்காரம். ஆனாலும் அவன் தந்தை கூறிய வார்த்தைக்காக நின்றிருந்தான்.

சில நொடிகள் தர்மலிங்கம் யோசித்தவரோ, “தெய்வா… உனக்கு என்னை சம்பந்தியா ஏத்துக்க சம்மதமா???” என்று நிதானித்து கேட்க,

“தர்மா!!!!” என்று அவரும்,

“அப்பா!!!!” என்று அவனும் ஒரே சேர அதிர்ந்தனர்.

ஆனால் அதெல்லாம் தர்மலிங்கத்தை சிறிதும் அசைக்கவில்லை. தெய்வேந்திரன் கைகளை பிடித்துகொண்டு, “சொல்லு டா தெய்வா… உனக்கு இதுல சம்மதமா?? பாப்பாவ எங்க வீட்டு மருமகளா அனுப்ப சம்மதமா??” என்று கேட்க, அந்த நேரத்தில் திவ்யாவின் அப்பாவாய் தெய்வேந்திரன் வேறு என்ன முடிவு எடுக்க முடியும்.

ஆனால் ரவியோ இடிந்து போய் நின்றிருந்தான்.

திவ்யாவிற்கு அவன் கணவனா?? நினைக்கவே ‘ஐயோ’ என்று இருந்தது. இவர்கள் என்னவேண்டும் என்றாலும் நினைத்துகொள்ளட்டும், ஆனால் என்னால் அப்படி ஒரு காரியத்தை செய்யவே முடியாது. முடியாது என்பதை விட கூடாது. இதற்கு மட்டும் தான் சம்மதித்தால் திவ்யா என்ன நினைப்பாள் அவனை பற்றி.

ஒருத்தியை காதலித்துவிட்டுதன்னை மணக்கிறானே என்று எண்ணுவாள் தானே என்று நினைக்கும் பொழுதே, ப்ரியாவின் நினைவு வந்தது.

முற்றிலுமாக இரு பெண்களின் வாழ்வு இவனால் பாதிக்க படும். யாரோ செய்த தவறுக்கு இவன் என்ன செய்வான்??

ராகவ் போனால் என்ன?? வேறு ஒரு நல்ல மாப்பிளை கிடைக்காமலா போவான்?? இதெல்லாம் தோன்ற, சற்றே குரலில் அழுத்தத்தை கொடுத்து,

“அப்பா…!!!” என்றான்.

ஆனால் அவன் சிந்திக்கும் முன்னே, அங்கே இரு தந்தைமார்களும் முடிவிற்கு வந்துவிட்ட நிம்மதியில் நின்றிருந்தனர்.

“என்ன டா.. போ ரெடியாகு.. அந்த மாலை எடுத்து போட்டுக்கோ.. இல்ல வேண்டாம் இரு… தெய்வா நீ போட்டு விடு…” என்று தர்மலிங்கம் கூற,

“அப்பா ப்ளீஸ்… என்னை கொஞ்சம் பேச விடுங்க.. இது.. இதெல்லாம் வேண்டாம் பா.. திவ்ஸ்… ம்ம்ச் திவ்யாவுக்கு இதெல்லாம் பிடிக்காது.. நாங்க பிரண்ட்ஸ் பா.. வேண்டாம்.. சொன்னா கேளுங்க.. நம்ம திவிக்கு நிச்சயம் அந்த ராகவ்வ விட, என்னை விட நல்லவன் வருவான்.. ப்ளீஸ் ப்பா…” என்று மூச்சை அடக்கி பேச, தெய்வேந்திரன் அதிர்ந்து நிற்க, தர்மலிங்கம் நிதானமாய் மகன் முகம் நோக்கினார்.

அவரது பார்வையே இந்த முடிவில் எம்மாற்றமும் இல்லை என்று கூறியது..

அங்கே மணமகள் அறையிலோ திவ்யா அமைதியாய் அமர்ந்திருக்க, விசாலம் மகேஸ்வரியின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டு இருந்தார்.

“இப்படி ஆயிடுச்சே மகேசு…. இனி என்ன செய்ய???” என்று நெஞ்சில் கை வைத்து அழுதவரை காண திவ்யாவால் முடியவில்லை. கண்களை இறுக மூடி வேதனையை மென்று விழுங்குபவள் போல் அமர்ந்திருந்தாள்.

அவள் கண்கள் மூடியிருந்த நேரம், தர்மலிங்கம் வந்து, இரு பெண்களையும் அழைக்க, அவர்களும் எழுந்து சென்றனர்.

சில நிமிடங்கள் கடந்தது.திருமணத்திற்கு வந்தவர்கள் இருப்பதா கிளம்புவதா என்று குழம்பியபடி இருக்க, அடுத்து இவர்கள் என்ன செய்ய  போகிறார்கள் என்ற ஆவலில் சிலர் இருந்தனர்.

திவ்யாவிற்கு விழிகள் திறந்து யாரையும் காணவே பிடிக்கவில்லை. ஆனாலும் எத்தனை நேரத்திற்கு இப்படியே இருக்க முடியும். கண்களை திறந்து பார்த்தாள், அறையில் யாருமே இல்லை. சுற்றி முற்றி பார்வையை படர விட்டவளுக்கு விசாலமும், மகேஸ்வரியும் சிரித்த முகமாய் வருவது தெரிந்தது.

‘என்ன டா இது…’ என்று கண்களை லேசாய் கசக்கி விட்டபடி பார்த்தாள். அவர்கள் இவளை சமீபித்திருந்தனர்.

“பாப்பா… வா டா கண்ணு… வா… இப்போதான் எங்களுக்கு மனசு நிறைஞ்சு இருக்கு…” என்று மகேஸ்வரி நெட்டி முறிக்க, விசாலம் மகளின் கன்னத்தில் இதழ் பதித்தார். இதுவரை இப்படியெல்லாம் அவர் செய்தது இல்லை.

“என்.. என்னம்மா…” என்றவளுள் ஆச்சரியம், குழப்பம் எல்லாம்.

ஆனால் மகேஸ்வரியோ “எல்லாம் உனக்கு ஒரு நல்லது நடக்க போற சந்தோசம் தான் பாப்பா..  வா வா.. நல்ல நேரம் முடிய போகுது..” என்றவர் அவளுக்கு மாலை அணிவித்து அழைத்து வந்தார்.

எத்தனை மெதுவாய் நடந்தாலும் மணவறை வந்து தான் ஆகவேண்டும். ஆனால் அவளுக்குள் ஆயிரம் கேள்விகள். என்ன இது??? திருமணம் தான் நின்றுவிட்டதே.. இதென்ன புது கதை?? யாரிந்த திடீர் மாப்பிள்ளை..?? என்ற யோசனையோடு அமர்ந்தவள் அங்கே அவ்விடத்தில் தனக்கருகில் மாப்பிளை கோலத்தில் ரவியை சிறிதும் எதிர் பார்க்கவில்லை.

“ரவி…..!!!!!!!” திகைத்து போய்,கண்ணில் நீர் வழிய திரும்பி பார்த்தவளை அவன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

அவ்வளவு தான் திவ்யாவிற்கு அடுத்த நொடி அங்கே அமர முடியவில்லை. முள் மீது அமர்ந்தது போல் இருந்தது. வேகமாய் எழ போனவளை விசாலத்தின் கரங்கள் அழுத்தி அமர வைத்தது.

“ரவி…!!! என்ன இது??? நீ ஏன் இதுக்கு ஓகே சொன்ன.. ப்ளீஸ் டா… எந்திரி… இல்ல ரெண்டு பேரும் சேர்ந்தே எந்திரிப்போம்… காது கேக்குதா…” என்று அவனை துரிதபடுத்த, அவனோ ப்ரோகிதர் சொல்வதை செய்வதே தன் கடமை என்று இருந்தான்.

“டேய் ரவி… எருமை.. என்ன டா செய்ற நீ…???”

அவளுக்கு தன் வாழ்வுக்கு முன்னிருக்கும் கேள்விகள் எல்லாம் இப்பொழுது பெரிதாய் தெரியவில்லை. ரவி மனதில் யார் இருக்கிறாள் என்று தெரியும் ஆகையால் இந்த திருமணம் நடந்திட கூடாது.

‘ஏதாவது செய்… ஏதாவது செய்..’ என்று மனம் கூப்பாடு போட, என்னவென்று யோசிக்கும் முன்னமே , அனைத்தும் முடிந்து விட்டது.

“கெட்டி மேளம் கெட்டி மேளம்..” என்று அய்யர் கூற, மேள தாளங்கள் முழங்க, அனைவரும் ஆட்சதை தூவ, இறுகிய முகத்துடன் திவ்யாவின் கழுத்தில் தாலி கட்டினான் ரவி.

அதே நேரம், சரியாய் தாலி கட்டும் நேரத்திற்கு வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியில் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்த ப்ரியா, மாப்பிள்ளையாய் ரவியை கண்டதும் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

நடப்பவை அனைத்தும் நல்லதற்கே, நடந்தவைகளை என்ன செய்ய…???? 

 

 

 

 

 

Advertisement