Advertisement

 

அத்தியாயம் – 2

பொங்கல் விடுமுறைக்கு பொள்ளாச்சி சென்றதில் இருந்தே ரவிக்கு இதயம் தாறுமாறாய் அடித்தது. ப்ரியா வேறு நொடிக்கு ஒருதரம் வீட்டில் பேசினாயா என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.

அவள் கேட்க கேட்க, ரவியோ திவ்யாவை பாடாய் படுத்திக்கொண்டு இருந்தான். “சரி சரி…. ரொம்ப படுத்தி எடுக்காத… ஊருக்கு திரும்ப போறதுக்குள்ள பேசிடுறேன் போதுமா…?? லவ் பண்ணும் போது எங்க போச்சு இந்த பயமெல்லாம்..” என்று லேசாய் சலித்துக்கொண்டே அவனை சமாதானம் செய்வதற்குள் அவளுக்கு தான் தாவு தீர்ந்தது.

ஆனால் ரவியின் காதல் விசயம் பேசுவதற்கு முன்னே, தனக்கு திருமணம் நிச்சயம் ஆகும் என்று அவள் நினைத்து கூட பார்கவில்லை.

‘இன்று எப்படியாவது ரவியின் விஷயம் பேசிவிடவேண்டும்..’ என்று எண்ணியிருந்தவளிடம்,

“திவ்யா சாயங்காலம் உன்னைய பொண்ணு பார்க்க வர்றாங்களாம்..” என்ற செய்தி அப்படியே அனைத்தையும் மறக்கடிக்க வைத்தது.

திகைத்து போய், யாரிடமும் பேசாமல், தைரியமாய் மறுப்பையும் சொல்ல முடியாமல், என்ன ஏதென்று கேள்வி எல்லாம் கேட்க தோன்றாமல் அப்படியே சிலையாய்  அமர்ந்திருந்தவளிடம் மகேஸ்வரி தான் பேசினார்.

“இங்க பாரு பாப்பா… நாங்க எல்லாம் உனக்கு கெடுதல் செஞ்சிடுவோமா?? நல்ல இடம்டா தோதா இருக்கு நமக்கு எல்லாமே.. வந்து பாக்கட்டும்.. அப்புறம் எதுனாலும் பேசிக்கலாம்…” என்று கூற, தலையை மட்டுமே ஆட்டிட முடிந்தது அவளால்.

திவ்யாவின் அம்மா விசாலம் வேறு, “என்ன பாப்பா… உங்க அப்பாக்கு அவ்வளோ சந்தோசம்.. நீ இப்படி உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்…??” என்று கேட்க மனதில் மறுத்து பேசவேண்டும் என்று இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணமும் பறந்தோடியது.

தெய்வேந்திரனும், தர்மலிங்கமும் குணத்தில் ஒன்று. ஒரு முடிவெடுத்துவிட்டால் அதில் எவ்வித மாற்றமும் இல்லை.

ஆகையால் இது தந்தையின் முடிவு என்று தெரியவும் அமைதியாகவிட்டாள்.  நடப்பது நடக்கட்டும்.. நல்லதாய் நடக்கட்டும்.       

ஆனால் ரவி தான் இவளிடம் வந்து தாட் பூட் என்று குதித்தான்.

‘அதென்ன திடீர்னு இவங்களா சொல்றது…. ’

‘நீ இதுக்கு சம்மதிக்காத…. ’

‘உனக்கு பிடிக்கலைன்னா தைரியமா சொல்லு..’ என்று அவன் சொன்ன அனைத்துமே, தர்மலிங்கத்தை கண்டதும் காற்றில் ஓடி போனது.

விசாலமும், தெய்வேந்திரனும் வந்தவர்களை இன்முகமாய் வரவேற்க, ராகவ் தன் குடும்பம் சகிதமாய் வந்தான். அங்கே வேண்டா வெறுப்பாய் நின்றவன் ரவி மட்டுமே. 

கையில் தட்டோடு குனிந்த தலை நிமிராமல், மெல்லிய அலங்காரத்தில் நடந்து வந்தவளை காண ரவிக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை. ஒரு புதுவிதமான உணர்வு அவனை ஆட்கொண்டது. முதல் முறையாய் ஒரு சில நொடிகள் திவ்யாவின் மீது ஆர்வமாய், ஆராய்ச்சியாய் தன் பார்வையும், மனமும்   படிவதை உணர்ந்தான். பிறந்ததில் இருந்து பார்த்து பழகியவள் ஆனால் இன்று ஏனோ அவனுக்கு புதிதாய்.

ஆனால் சட்டென்று அவனே தலையை உலுக்கிக்கொண்டான்.

“ச்சி என்ன இது…” என்று தன்னை தானே கடிந்து கொண்டவனின் பார்வை அடுத்து ராகவ் மீது பாய்ந்தது.

“இந்த மூஞ்சிக்கு திவ்ஸ் கேக்குதா… ஆனாலும் குடுத்து வச்சவன்..” என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.

இது இவன் எப்பொழுது நினைக்கும், கூறும் ஒன்று தான். ப்ரியாவிடம் கூட அடிக்கடி சொல்லியிருக்கிறான். ‘நம்ம திவிக்கு புருசனா வரவன் குடுத்து வச்சவன்..’ என்று அவன் சொல்லும் போதெல்லாம் ப்ரியாவிடம் இருந்து ஒரு முறைப்பு வரும்.

“ஏன் டா என்னைய பார்த்தா எப்படி தெரியுது… அப்போ என்னை மேரேஜ் பண்ணா நீ குடுத்து வச்சவன் இல்லையா??” என்று அவன் தலையை பிடித்து உலுக்குவாள். ஆனாலும் அவளுக்கு திவ்யாவை பற்றி தெரியும்.

அலட்டிக்கொள்ளாத ரகம். தேவையில்லாத பேச்சுக்களோ, செயல்களோ இருக்காது. பொறுமையாய் அடுத்தவரை பேசவிட்டு பின் தனக்கு தோன்றியதை பேசுபவள் இப்படி இன்னும் இன்னும் அவளை பார்த்து நிறைய தன்னை மாற்ற முயற்சித்திருக்கிறாள். ஆனால் பிறவி குணம் என்று ஒன்று உள்ளதே.

“ஹி ஹி டார்லிங்… நீ ஏன் அவளை காப்பி பண்ற…” என்று ரவி கேட்டு அதற்கும் திட்டு வாங்கியது இப்பொழுது நினைவு வந்து தொலைத்தது அவனுக்கு. தன் சிந்தனைகளை விடுத்து நடப்பவற்றை வேடிக்கை பார்க்க தொடங்கினான்.  

வழக்கமான பெண் பார்க்கும் படலம் தான். பெண் வீட்டிற்கும் சரி, மாப்பிள்ளை வீட்டிற்கு சரி, அனைத்தும் பிடித்துவிட்டது.

திவ்யாவிடம் முடிவை கேட்டபோது அவளுக்கு வேண்டாம் என்று சொல்ல காரணங்கள் எதுவுமே இல்லை என்பது போல் இருந்தது. நல்ல வேலை, சம்பளம், பார்க்கவும் ராகவ் நன்றாகவே இருந்தான். ஆகையால் சம்மதமாய் தலையை ஆட்டினாள்.

ராகவ் அமைதியாகவே அமர்ந்திருந்தான். அங்கே நின்று, இங்கே நின்று எப்படியோ ரவி ரகவ்விடம் இடம் பிடித்து அமர்ந்து தன் பாணியில் விசாராணை தொடங்க, இரு வீட்டாரும் பேசி தட்டை மாற்றி, மாசி மாதம் திருமணம் என்று முடிவாகியது.

ரவிக்கு முதலில் இந்த திடீர் திருமண ஏற்பாடு பிடிக்கவில்லை என்றாலும் ராகவ்விடம் பேசிய பிறகு அவனுக்குமே வேண்டாம் என்று சொல்ல எதுவும் காரணம் இருப்பதாய் தெரியவில்லை.

ஆனாலும் மனதில் ஒரு சின்ன உறுத்தல்.

அனைத்தும் முடிந்து வந்திருந்தவர்கள் எல்லாம் கிளம்பி சென்ற பின்,  திவ்யாவிடம் “ஹ்ம்ம் உன்னை என் கல்யாணம் பத்தி வீட்ல பேசச் சொன்னா, நீ உனக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்ட…” என்று தலையில் கொட்டினான் ரவி.

“ம்ம்ச் லூசு.. நானே இதை எதிர்பார்க்கல ரவி..”

“அதெல்லாம் சரி.. உண்மைய சொல்லு உனக்கு ராகவ்வ பிடிச்சிருக்க இல்லையா?? வீட்ல கேட்டாங்கனு சரி சொல்லாத..”

காதில் அணிந்திருந்த ஜிமிக்கியை கலட்டியபடி, “ஹ்ம்ம் உனக்கு எரிஞ்ச பல்ப் எல்லாம் எனக்கு எரியலை தான். ஆனாலும் வேணாம்னு சொல்ல எந்த காரணமும் இல்லை. இனி பேசி பார்த்தா தானே தெரியும்..” என்றால் கண்களை மட்டும் நிமிர்த்தி.

ரவிக்கு இன்று அவளது பாவனைகள் எல்லாமே வித்தியாசமாய் புதிதாய்  பட்டது. அவள் அப்படியா??? இல்லை அவனுக்கு அப்படியா என்று தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் அமைதியாய் நின்றவனை, சீப்பால் ஒரு அடி அடித்து,

“ஏய் என்ன ப்ரியா கூட ட்ரீம்ஸ் போயிட்டியா..” என்று திவ்யா கேட்ட பிறகு தான், ப்ரியா என்ற பெயரை கேட்டதும் ரவிக்கு மனம் சற்று தெளிந்தது போல் இருந்தது.

இத்தனை நேரம் ப்ரியாவை மறந்திருந்தான் என்பதே உண்மை.

“ஹே!!! ப்ரியாக்கு சொல்லணும்ல மறந்தே போயிட்டேன் பாரு..” என்று தலையில் லேசாய் அடித்துக்கொண்டே தன் அலைபேசியை எடுத்தவளை தடுத்து, தானே அழைத்தான்.

விசயத்தை கேட்டதும் ப்ரியாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. ரவியோடு பேசியதை விட திவ்யாவோடு தான் அதிகமாய் பேசினாள். ஆனால் இருவரையும் பேச விடாமல் அவனோ வம்பு செய்தான்.

விசாலம் வந்து இவர்களை அழைக்க, கூடவே மகேஸ்வரியும் வந்து, “இங்க பாரு டா… இப்படியெல்லாம் இனிமே பாப்பாகிட்ட விளையாட கூடாது..  தள்ளி நின்னு பேச பழகு.. உங்கப்பா பார்த்தா அவ்வளவு தான்…” என்று மகனை அழைத்து சென்றார்.

இந்த வார்த்தைகள் ரவி, திவ்யா இருவரின் உள்ளத்திலுமே சற்று அதிர்வை கொடுத்தது. பிறந்ததில் இருந்து ஒன்றாய் சுற்றுபவர்கள். இதுவரை தங்களுக்குள் இப்படியெல்லாம் வித்தியாசம் பார்த்ததில்லை. ஆனால் இன்று..??

திவ்யாவை திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான் ரவி. அவளுக்குமே எப்படியோ தான் இருந்தது.

ஆனால் அதையெல்லாம் கவனிக்காமல் விசாலம் வந்து மகளிடம், “கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேலைக்கு போகவேணமாம் பாப்பா… எவ்வளோ நல்லவங்க பாரு.. உங்கப்பாக்கு மாமாக்கு அவ்வளோ நிம்மதி..” என்று தன் மகிழ்ச்சியை சொல்ல அதற்குமேல் அவளுக்கு வேறு நினைக்க எல்லாம் நேரம் இல்லை.

எப்படியோ வீட்டில் பேசி, வேலையை விடவேண்டும் என்றால் நிறைய பார்மாலிடீஸ் இருக்கிறது என்றெல்லாம் சொல்லி, ஒருவழியாய் ரவியோடு மீண்டும் சென்னை பயணித்தாள்.

இதற்கு நடுவே ராகவ்வின் அலைபேசி எண்ணை வேறு அவன் தங்கை கொடுத்துவிட்டு சென்று இருந்தாள்.

“நானா எப்படி ரவி பேசுறது…” என்று அதையும் ரவியிடமே கேட்க, அவனோ

“அதெல்லாம் வேணாம் நீ கொஞ்சம் கெத்தாவே இரு.. பேசணும்னா அவங்களே முதல்ல பேசட்டும்…” என்றான்.

அவனுக்கே தெரியவில்லை தான் ஏன் இப்படி கூறுகிறோம் என்று.

ஆனால் ஒருமுறை திவ்யா ராகவ்விடம் பேசியிருந்தால் நன்றாய் இருந்திருக்குமோ என்னவோ.

பேசுவோமா, வேண்டாமா என்று அவளும் குழப்பத்திலேயே இருக்க, நாட்களும் நகர்ந்தது. ரவியும் ப்ரியாவும் சேர்ந்து திவ்யாவை ஒரு வழி ஆக்கினர்.

ஆனால் இவளோ, “இங்க பாரு ப்ரியா, என் கல்யாணத்துக்கு அப்புறம் நீ இங்க தனியா இருக்க கூடாது. அம்மா கூட போய் வீட்ல இருக்கணும்..” என்று அவளுக்கு அறிவுரை செய்துகொண்டு இருந்தாள்.

நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. திவ்யாவிற்கு வேலையை விடவே மனமில்லை. ஆனாலும் அவளுக்கு வேறு வழியும் இருப்பதாய் தெரியவில்லை. ராகவ் அவளோடு பேசியிருந்தாலாவது ஒரு தெளிவு கிடைத்திருக்கும். ஆனால் அவனும் பேசுவதாய் தெரியவில்லை.

திருமண சேலை எடுக்க, நகை வாங்க என்று இரு வீட்டாருமே சென்னையில் அலைந்த போது கூட ராகவ் தலைக் காட்டவில்லை. கேட்டதற்கு வேலையை காரணம் காட்டினர் அவன் வீட்டினர்.

என்னதான் வேலை என்றாலும் திருமணம் செய்ய போகிறவளிடம் ஒரு வார்த்தை கூடாவா பேசிட தோன்றாது. அதுவும் இன்னும் சிறிது நாட்களில் திருமணம் எனும் போது. இவளாய் ஒருமுறை அழைத்து பேசியதற்கும் தாமரை இலை நீர்போல் தான் அவனது பேச்சு இருந்தது. 

திரும்ப அழைத்து பேசிட அவளுக்குமே மனம் தடுத்தது.

திவ்யாவின் குழம்பிய முகம் கண்டு ரவியும் ப்ரியாவும் கூட, சற்று குழம்பினர்.

“திவி.. உனக்கு இதுல விருப்பம் இல்லைன்னா இப்போவே சொல்லு… வீட்ல பேசலாம்…” என்று ரவியும்,

“திவி இப்போவும் நீ ஒரு முடிவுக்கு வரலைனா இது நல்லதில்ல..” என்று ப்ரியாவும் மாறி மாறி கேட்க,

அவளோ, “அடடா அதெல்லாம் இல்லை… ஏனோ ஒரு குழப்பம் அவ்வளோ தான்.. மத்தபடி பெருசா எல்லாம் எதுவுமில்ல.. நம்ம வீட்ல நமக்கு தப்பான ஆள் பாப்பாங்களா என்ன…???” என்றவள்,

“என் கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளே நான் வீட்ல உங்க விசயம் பேசுறேன்… அப்போ எனக்கு இன்னும் கொஞ்சம் மதிப்பு கூடியிருக்கும்ல..” என்று இருவரையும் பார்த்து சிரிக்க அவர்களுக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.

மூவரும் சேர்ந்து சுற்றி திரிந்தனர். அது இதென்று வாங்கி குவித்தாள் ப்ரியா. திவ்யா வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல இருவரும் அவளுக்காக எக்கச்சக்கமாய் வாங்கினர்.

அவளுக்கு ப்ரியாவை காணும் போதெல்லாம் ரவியின் காதலை அவன் வீட்டில் ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்று இருந்தது. மகேஸ்வரி இன்றளவு கூட தன் கணவர் முன்னே அமர்ந்தது இல்லை. அப்படியே அமர நேர்ந்தாலும் அவர் காலுக்கு கீழே தான் அமர்வார்.

ஆனால் ப்ரியா முற்றிலும் நேர்மார்.

தன் விஷயம் மறந்து அவளுக்கு இதெல்லாம் ரயிலில் நினைவு வந்து மனதை சிந்தனை படகில் மிதக்க வைக்க, அவளை பார்த்தால் யாரும் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் ஆக போகிறவள் என்று கூறவும் மாட்டார்கள்.

ரயில் போலவே அவள் மனமும் தடதடத்ததுக் கொண்டு இருந்தது.

அங்கே ப்ரியாவோ ரவியின் தோளில் சாய்ந்தபடி தங்கள் திருமண பேச்சில் மூழ்கியிருந்தாள்.

“திவி கல்யாணத்துக்கு எப்படியும் அம்மாவையும் கூட்டிட்டு வந்துடனும் ரவி.. நம்ம விஷயம் பேசும் போது அம்மாவும் இருந்தா நல்லாதானே இருக்கும். நீயே உங்க வீட்ல பேசுவன்னு நினைச்சேன்..” என்றவளுக்கு மனதில் எதுவோ ஏமாற்றமாகவும் இருந்தது.

“ச்சு இல்ல ப்ரியா.. உனக்கு எங்கப்பா பத்தி தெரியாது.. இப்போ திவ்ஸ்  கல்யாணமே எடுத்துக்கோ, எங்கம்மா தான் அவக்கிட்ட பேசுனாங்க. மறுபேச்சு இல்லாம சரின்னு சொன்னா. அதேபோல தான் எங்க வீட்லயும், திவி ஒருவிசயம் சொன்னா அதை கண்டிப்பா யோசிச்சு பார்ப்பாங்க… திவி ஆரம்பிக்கட்டும், மேல நான் பார்த்துக்கிறேன்.. நீ தைரியமா இரு…” என்று ஆறுதல் கூறினான்.

ப்ரியாவிற்கு இன்னுமே கூட இந்த விசயம் முழு திருப்தியை குடுக்கவில்லை. அவளை பொருத்தமட்டில் அவர்களது காதலுக்கு அடுத்தவர் பொறுப்பேற்பதா என்று தோன்றியது. திவ்யா உயிர் தோழி தான், இருந்தாலும் இதற்கு ரவியல்லவா முழு மூச்சாய் இறங்க வேண்டும். அனைத்திற்கும் திவ்யாவை கை காட்டினால் என்ன அர்த்தம் என்று தோன்றியது.

அவள் முகம் லேசாய் சுணக்கம் காட்ட, “என்ன டி இப்படி ரியாக்ட் பண்ற. என்மேல நம்பிக்கை இல்லையா…??” என்றான் லேசாய் அணைத்தபடி.

“உன்னைய வீடுக்குள்ள விட்டது தப்பா போச்சு போலவே…கிளம்பு கிளம்பு…” என்று அவனை கிளப்பிட முயற்சித்தாள்.

“ஹே!!! என்ன ப்ரியா.. நீ மட்டும் தனியா இருப்பியா?? உன்னை விட்டு போக என்  மனசு கேக்குமா?? உனக்கு துணைக்கு நானும் இருக்கேனே..” என்று வேண்டுமென்றே வால்பிடியாய் அவள் பின்னே சுற்றினான்.

யாருமில்லா தனிமை, கண்ணெதிரே அவன் காதலி. அவனுக்கு கிளம்ப மனம் வருமா என்ன?? ப்ரியாவை உரசியபடி அவள் செல்லும் பக்கமெல்லாம் சென்றான்.

அவளுக்குமே மனதில் ஒரு இனம் புரியா பரவசம் தான். முதல் முறையாக அவளும், ரவியும் மட்டும் தனித்து இருக்கின்றனர். இத்தனை நாள் திவ்யா இருப்பாள். இவர்கள் தனியே பேசட்டும் என்று எழுந்து சென்றும் விடுவாள் தான் ஆனாலும் மனதில் ஒரு தயக்கம் இருவருக்குமே இருந்ததுண்டு. ஆனால் இன்று..

மனதில் என்னென்னவோ தோன்ற,

“ப்ளீஸ் கிளம்பு ரவி…” என்றாள் எழும்பாத குறலில் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளியபடி..

ஆனால் ரவியோ அவள் கைகளை பிடித்தபடியே, “ப்ளீஸ் ப்ரியா… போக சொல்லாத..” என்றான் கண்களில் காதலை நிரப்பி..

இருவரும் இப்படியேஇருந்திருந்தால் அடுத்து என்ன நடந்திருக்குமோ, ஆனால் விதிக்கு இவர்கள் இப்படி உல்லாசமாய் இருப்பது பிடிக்கவில்லையோ என்னவோ, ரவிக்கு அவன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டது.

“அப்பா…!!!!”

…..

“எனக்கு லீவ் கிடைக்கல ப்பா… இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவேன்…”

….

“ம்ம் சரிங்கப்பா.. இல்லா திவி சாப்டிட்டு தான் கிளம்பினா…”

..

“ம்ம்ம் சரிங்கப்பா….” என்று அழைப்பை துண்டித்தவனுக்கு மனம் கனமாய் இருந்தது.

இது தான் தர்மலிங்கம். அனைத்துமே அவருக்கு சரியாய் நடந்திட வேண்டும். திவ்யாவை ரவியை நம்பித்தான் இரு குடும்பமுமே சென்னைக்கு அனுப்பியது. ஆகையால் அவளை பற்றி என்ன விசாரிக்க வேண்டும் என்றாலும் மகனிடம் தான் கேட்பார் சொல்வார்.

அவனுக்கு தந்தைக்கு பதில் சொல்ல வேண்டும் என்ற காரணத்தினாலேயே இன்னும் கூடுதலாய் திவ்யாவை கவனிப்பான்.

அவ்வளவு தான் இதற்குமேல் ரவிக்கு ரொமான்ஸ் செய்திடும் மனநிலை இருக்குமா?? அவன் முகத்தை பார்த்ததுமே ப்ரியா சிரித்துவிட்டாள்.

“என்ன சிரிக்கிற..??”

“இல்ல உங்கப்பா போன்ல பேசினதுக்கே இவ்வளோ பம்மல்.. அவர் நேர்ல நம்மள பார்க்கணும் அவ்வளோ தான்…” என்று கிண்டல் செய்தாள்.

“சரி சரி… நீ லீவுக்கு சொல்லிட்டியா?? என்ன சொன்னான் உன் ஹெட்…??”

“ம்ம்ச் எப்படியும் கல்யாணம் அன்னிக்கு காலைல தான் வர முடியும்னு நினைக்கிறேன். அம்மாக்கு முதல் நாள் எதோ கேஸ் இருக்காம்.. சோ…”

“சோவும் இல்ல, விசுவும் இல்ல… நீ கண்டிப்பா வந்துடனும் அவ்வளோதான்.. நம்ம விஷயம் பேசும் போது நீ, ஆன்ட்டி இருந்தா நல்லது…”

“சரி சரி.. கண்டிப்பா.. திவி மேரேஜ்க்கு நான் இல்லாமையா..” என்றவள் கடிகாரத்தை பார்த்துவிட்டு,

“சரி நீ கிளம்பு ரவி.. நேரமாச்சு..” என்க, அவனும் மேற்கொண்டு எதுவும் வம்பு செய்யாமல் கிளம்பிவிட்டான்.

ரவி சென்ற பிறகும் கூட, ப்ரியாவின் சிந்தனை அவனையே சூழ்ந்திருந்தது.. தோழிக்காக இத்தனை பார்ப்பவன், தன் மனைவிக்காக எத்தனை பார்ப்பான் என்று கற்பனையில் மூழ்கினாள்.

ஆனால் ரவியோ, அவன் தந்ததை கடைசியாய் கூறியதிலேயே இருந்தது.

“ஊருக்கு வந்தா எப்போ பாரு பாப்பா கூட சேர்ந்துட்டு இருக்க கூடாது.. அடுத்த வீட்டுக்கு போற பிள்ள, நம்மனால அதுக்கு ஒரு பேரு வந்திட கூடாது. ஒழுங்கா பொறுப்பா வந்து கல்யாண வேலையை பாக்கணும். புரிஞ்சதா…” என்று அவர் சொன்னதற்கு சரியென்பதை தவிர வேறு என்ன கூறிட முடியும்.

இனி திவ்யாவிடம் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று எண்ணும் பொழுதே அவனுக்கு அத்தனை எரிச்சல், கோவம், கவலை, ‘அதெல்லாம் முடியாது.. நான் இப்படிதான் இருப்பேன். அவளும் என்னிடம் அப்படிதான் இருப்பாள்..’ என்று கத்த வேண்டும் போல் வந்தது.

சிறு வயதில் இருந்து உடனிருப்பவள், இப்பொழுது ஒருவன் வந்து தாலி கட்டிவிட்டால் இத்தனை வருடம் பழகியது எல்லாம் ஒன்றுமில்லை என்றாகி விடுமா??

இதே எண்ணத்திலே தன்னறைக்கு சென்றவனுக்கு மேற்கொண்டு எதுவுமே மனதில் நிற்கவில்லை.

அதில் ப்ரியாவும் சேர்த்தி…

பாதைகள் வேறு.. பயணங்கள் வேறு… மீண்டுமொரு முறை  சந்திப்போமா..

 

Advertisement