Advertisement

மயக்கம் கொண்டேனடித் தோழி – சரயு

அத்தியாயம் – 1

“திவி இந்தா கிரீம் பிஸ்கட் உனக்கு பிடிச்ச ஆரஞ் ப்ளேவர்…. க்ரீம் மட்டும் நக்கிட்டு பிஸ்கட்ட அப்படியே வச்சிடாத… அப்புறம் வாட்டர் பாட்டில் உருண்டு போகாம வச்சிக்கோ.. தேவையில்லாமல் யார் கிட்டயும் பேச்சு குடுக்காத… டிக்கெட் பத்திரம்… ” என்று ஒரு பிஸ்கட் பாக்கெட்டால் அவள் தலையை லேசாய் ஒரு தட்டு தட்டி அவளிடம் இருந்து ஒரு முறைப்பையும் வாங்கிய பிறகே பிஸ்கட் பாக்கெட்டுகளை திவ்யாவின் கைகளில் கொடுத்தபடி ஆயிரம் சூதானங்கள் சொல்லிக்கொண்டிருந்தான். 

இவர்கள் இருவரையும் வேடிக்கை பார்த்தபடி வரும் சிரிப்பையும் தன் வாய்க்குள் அடக்கி நின்றிருந்தாள் ப்ரியா.

“அங்க பாரு….” என்று திவ்யா கண்ணிலே ப்ரியாவை காட்ட ரவியும் திரும்பி பார்த்தான்.

“ஓய்!!!! என்ன லுக்கு….”

“அவ என்ன சின்ன பாப்பாவா??? நீ சொல்றதை கேட்டே அவ பயந்து போயிடுவா.. பாரு திவி இவன் சொல்றதை எல்லாம் கேட்காத.. ஜஸ்ட் ஹேப்பியா கிளம்பு..  நெக்ஸ்ட் டைம் நீ சென்னை டூ பொள்ளாச்சி போறப்போ உன் ஹப்பியோட தான் போவ… அதை நினைச்சுக்கிட்டே இப்போ புல் ட்ரீம்ஸ்லபோ… வீட்டுக்கு போயிட்டு கால் பண்ணு….” என்று திவ்யாவிடம் கூறிவிட்டு,

“நீ முதல்ல கீழ இறங்கு… வா வா…” என்று ரவியின் கைகளை பிடித்து இழுத்தபடியே ரயிலை விட்டு கீழே இறங்கினாள்.

“ம்ம்ச் விடு ப்ரியா… இன்னும் ட்ரையின் கிளம்ப நேரம் இருக்கு…. அவ இது வரைக்கும் தனியா போனதே இல்லை… ட்ரையின் மூவ் ஆகவும் இறங்குவோம்… ” என்று மறுபடியும் ஏறப்பார்த்தவனை பிடித்து நிறுத்தவே பெரும்பாடு பட்டாள் ப்ரியா.

ஒருவழியாக ரயில் தன் புகையை வெளியே பறக்கவிட்டபடி ஆடி அசைந்து மெல்ல நகரத் தொடங்க ஜென்னல் பக்கம் அமர்ந்திருந்தவளோ இவர்களை நோக்கி கையசைத்தாள்.

“பார்த்து போ திவி… அப்பப்போ மெச்செஜ் பண்ணிட்டே இரு…. ரொம்ப தூங்கிடாத…”

“டென்சன் இல்லாம போ திவி… இயர் போன்ல இளையராஜா கேளு… உன் பியான்சிய நினைச்சுக்கோ… செமையா இருக்கும்…” என்றபடி ரவியும், ப்ரியாவும் மாறி மாறி பேசிக்கொண்டே அந்த ரயிலோடு மெல்ல நகர்ந்து வந்தனர்.

“நான் பார்த்துக்கிறேன்.. முதல்ல நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க.. நேரமாச்சு.. ப்ரியா நீ தனியா இருக்காத டி… உங்க வீட்டுக்கு போ… ஊருக்கு போயிட்டு கால் பண்றேன்… ரவி பார்த்து.. நான் இல்லைன்னு ரொம்ப போட்டு அவளை படுத்தாத..” என்றவள் இருவருக்கும் மீண்டும் கையசைக்க, ரயிலும் வேகமெடுத்தது.

திவ்யா – ரவி, இருவருமே பொள்ளாச்சியை சேர்ந்தவர்கள்.  அருகருகே வீட்டில் பிறந்து வளர்ந்து, ஒரே பள்ளி, ஒரு வகுப்பு, ஒரு நண்பர் கூட்டம் என்று ஊரில் இவர்கள் செய்த சேட்டைகள் சொல்லி மாளாது. திவ்யா அமைதியான ரகம் தான். ஆனால் ரவி செய்யும் சேட்டைகளில் எல்லாம் உடன் இருப்பாள். எந்தவொரு விசயத்திற்கும் நண்பனை விட்டுக்கொடுக்க மாட்டாள். அப்படி ஒரு பாசம் அவன் மீது.

அவனுக்குமே அப்படிதான். அன்னை தந்தைக்கு அடுத்தபடி திவ்யா தான். எந்தவொரு விசயத்தையும் அவளிடம் மறைக்க மாட்டான். தன் காதலை கூட முதலில் ப்ரியாவிடம் சொல்லாமல் திவ்யாவிடம் தான் சொன்னான்.

இருவருமே கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு வந்த புதிது. கல்லூரி நேர்முக தேர்விலேயே வெவ்வேறு கம்பெனிகளில் தேர்வாகியிருந்தனர். ரவி சென்னைக்கு போகிறான் என்ற ஒரே காரணத்தினாலேயே திவ்யாவும் கிளம்ப, அதற்கு இரு வீட்டிலும் சம்மதம் வாங்கவே இருவருக்கும் அய்யோடா அப்பாடா என்று ஆனது..  

வீடு – கல்லூரி இதை தவிர வேறு கண்டிறாத திவ்யாவிற்கு சென்னையில் முதலில் கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. எதற்கெடுத்தாலும் ரவியை எதிர் பார்க்கும் சூழல். ஆனால் அவன் அப்படியில்லை வந்த ஒரு சில நாட்களிலேயே நண்பர்களை சம்பாரித்து விட்டான்.

இவளுக்கு தான் துணிந்து யாரிடமும் பழகிட தைரியம் இல்லை. காலையில் கிளம்பி வேலைக்கு சென்றால், மாலையில் அறைக்கு திரும்புவாள். வந்த பிறகும் யாரோடும் அத்தனை ஒட்டாமல், என்ன?? எது என்றளவிலேயே நிற்க, பேசாமல் ஊருக்கே கூட திரும்பிவிடலாமா என்றானது.

அனைத்திற்குமே ரவியை எதிர்பார்ப்பது அவனது சுதந்திரத்தை பறிப்பது போல் இருந்தது. அவனுமே அடிக்கடி வந்து போவது, இவள் தங்கியிருக்கும் விடுதியில் வேறு மாதிரி எண்ணத்தை கிளப்ப, திவ்யாவிற்கு கோவம் வந்தாலும் ஒன்றும் பேசாமல், இனிமேல் ரவியை விடுதிக்கு வந்து என்னை பார்க்க வேண்டாம் என்று கூறிவிட்டாள்.

இப்படியே நாட்கள் செல்ல, ரவிக்கு இந்த பட்டிணத்து வாழ்க்கை மிகவும் பிடித்து போனது. புதிய இடம், புது வேலை, புது நண்பர்கள், வாரம் ஒரு சினிமா, பார்ட்டி அது இதென்று அப்படியே சட்டென்று ஒட்டிக்கொண்டான்.

ஆனால் திவ்யாவிற்கு முதலில் ஹாஸ்டல் சாப்பாடே வாயில் வைக்க பிடிக்கவில்லை. பிறகெப்படி மற்றதெல்லாம் பிடிக்கும். 

“உனக்கு பிடிக்கலைனா பேசாம வீட்டுக்கு வந்துடு பாப்பா…” என்று அவளின் அப்பா அம்மா, ரவியின் அப்பா அம்மா என்று அனைவரும் சொல்ல, பேசாமல் ஊருக்கே போய்விடுவோமா என்று தோன்றியது அவளுக்கு.

சரி இதை பற்றி ரவியிடம் ஒரு வார்த்தை பேசிவிட்டு முடிவெடுப்போம் என்று எண்ணியவள், அவனுக்கு அழைத்து “வடபழனி முருகன் கோவில்ல வெய்ட் பண்றேன் சீக்கிரம் வா… ” என்று மட்டும் கூறிவிட்டு வைத்துவிட்டாள்.

அவனுக்குமே அவளிடம் ஒரு முக்கியமான விஷயம் கூறிட வேண்டும். திவ்யா குழப்ப முகமாய் அமர்ந்திருக்க, அவனோ கும்மாளமிட்ட மனதோடு வந்தமர்ந்தான்.

“என்ன பாஸ் ரொம்பா ஹேப்பி மூட்ல இருக்கீங்க போல….”

“ஆமா ஆமா… ஹேப்பி தான்… ஜாலி தான்… சரி அதெல்லாம் விடு நீ எதுக்கு கூப்பிட்ட….”

“ஹ்ம்ம்… நான் ஊருக்கே போயிடலாம்னு இருக்கேன் ரவி…” 

“வாட்…!!!!” நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தே போனான். அவன் செய்த பாவனையில் சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.

“ஏய் ச்சி என்ன லூசு….”

“இவ்வளோ பெரிய ஊர்ல என்னை மட்டும் தனியா விட்டு நீ போறன்னு சொன்னா என்ன அர்த்தம்….???இதெல்லாம் சரியா?? முறையா??அய்யகோ….!!!!” என்று வராத கண்ணீரை துடைத்தான்.

“ஷப்பா…!!!!!! இப்ப எதுக்கு இவ்வளோ பொங்குற…. ஊருக்கு போகலாம்னு  இருக்கேன்னு தானே சொன்னேன்.. போக போறேன்னு சொல்லலையே…”

திவ்யா மேற்கொண்டு என்ன பேசினாளோ, அமைதியாய் கேட்டபடி இருந்தவன், “உனக்கு நிஜமாவே இங்க இருக்க பிடிக்கலையா திவி…” என்றான்

“ஏன் டா டேய்… நான் அப்போ இருந்து என்ன சொல்லிட்டு இருக்கேன்… நீ திரும்ப அதையே கேட்கிற…”

“ஹ்ம்ம்… இல்லை அது… அது வந்து.. கொஞ்ச நாள் மட்டும் இங்க இரேன் ப்ளீஸ் திவி…” என்றான் ஒரு கெஞ்சல், கொஞ்சல் கலந்த  குரலில்.

‘என்னடா இது நவரசத்தையும் ஒரேதா காட்டுறானே… சரியில்லையே…’ என்று எண்ணியபடி ஒரு ஆராய்ச்சி பார்வையை அவன் மீது வீச, அடுத்த நொடி “ஹி ஹி…” என்று அசடு வழிந்தான்.

“சொல்லி தொலை.. அதுக்குனு இப்படி இளிக்காத…”

“அது.. அது வந்து…” என்றவன் வேண்டுமென்றே கைகளை பிசைந்தபடி கால் கட்டை விரலால் கோலம் போட, அதனை எல்லாம் காண சகிக்காத திவ்யாவோ,
“ஏய் ச்சி ச்சி… என்ன பண்ற..” என்று முகம் சுளித்தாள்.

“அது… அது எனக்கு…”

“என்ன உடம்பு சரியில்லையா…???”

“ம்ம்ஹும்… மனசு தான் சரியில்ல…”

“ஏன் டா என்னாச்சு..?? எதுவும் பிரச்சனையா…??”

“அது வந்து திவ்ஸ்…. எனக்கு… நான்…” என்று அவன் மென்று முழுங்க, அவளுக்கு அவன் திவ்ஸ் என்ற அழைப்பே சொல்லிவிட்டது ‘எதுவோ எதுவோ பையன் கவிழ்ந்துவிட்டான்..’ என்று.

“என்ன லவ்ஸா???” என்றாள்.

“வாவ்…. திவ்ஸ் எப்படி?? எப்படி கண்டுபிடிச்ச…???”

“ஹா!!!! அதான் உன் முகறைய பார்த்தாலே தெரியுதே… சொல்லு யாரந்த பாவப்பட்ட ஜீவன்….”

“ஹி ஹி… எங்க ஆபிஸ் தான் பேரு ப்ரியா.. அப்பா இல்லை, அம்மா மட்டும் தான். தீ பேமஸ் லாயர்.. டீவில கூட நீ பார்த்திருப்ப… இவளுக்கு வேலைக்கு போகணும்னு எல்லாம் கட்டாயம் இல்ல. பொழுது போகணும்ல அதான் வந்திருக்கா.. ரொம்ப பிரன்ட்லியா பழகுவா.. ஆனா என்ன யாரவது கொஞ்சம் வேற மாதிரி பார்த்தா போதும் அவ்வளோதான்…” என்று ஆரம்பித்து அவள் முழு ஜாதகத்தையும் ஒப்பிக்க,

வாய் பிளந்து கேட்டுக்கொண்டு இருந்தாள் திவ்யா. அவளுக்கு தான் எந்த விசயத்திற்காக ரவியை  பார்க்க வந்தோம் என்பதே மறந்துவிட்டது.

“திவ்ஸ் அவ்வளோ தான்… என்ன இன்னும் வாய் திறந்து கதை கேட்டிட்டு இருக்க??” என்று ரவி அவள் தலையை தட்ட.

“ஹா…!!!! சரி… இதுக்கும் நான் ஊருக்கு போகாம இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்…” என்றாள்.

“ஹி ஹி… நீ தான் எனக்கு ஹெல்பு பண்ணனும்.. உன்னை விட்டா எனக்கு யாரு திவ்ஸ் இருக்கா…???” என்றான் கொஞ்சலாய் அவள் கைகளை பிடித்து.

“ஏய் ச்சி தள்ளி போ…. ஏற்கனவே உன்னையும் என்னையும் லவ்வர்ஸ்னு நினைச்சிட்டு இருக்காங்க…” என்று சற்று தள்ளியே அமர்ந்தாள்.

“ஆமாமா எங்க பசங்களே அப்படிதான் நினைச்சானுங்க… இப்போதான் எல்லாம் கிளியர் ஆச்சு.. இங்க பாரு திவ்ஸ், அண்ணன் தங்கச்சி நடந்து போனாலே இந்த ஊரு தப்பா தான் பாக்கும், பேசும்.. அவங்க டிசைன் அப்படி… அதுக்காக எல்லாம் நம்ம பிரண்ட்ஸ்னு நெத்தில எழுதிட்டு சுத்த முடியாது.. நீ யாருன்னு எனக்கு தெரியும்… நான் யாருன்னு உனக்கு தெரியும்….”

“நம்ம யாருன்னு நமக்கு மட்டும் தெரிஞ்சா போதும்… இதை தானே சொல்ல வர…” என்று அவனை பேச விடாமல் பேசி முடித்தாள் திவ்யா.

“ஹி ஹி….”

“இளிச்சு தொலையாத.. சரி இப்ப நான் என்ன செய்யணும்…??”

“ப்ரியாகிட்ட பிரண்டாகி… அப்படியே என்னைய இன்ட்ரோ பண்ணனும்…”

“உன்னைய தான் அவளுக்கு தெரியுமே…”

“ம்ம்ச் சொல்றத மட்டும் கேளு திவ்ஸ்.. நீ அவளுக்கு பிரண்ட் ஆகு, தென் நான் உன்னோட பிரண்ட்னு சொல்லி அப்படியே அவகூட ஆபிஸ்ல இன்னும் க்ளோஸ் ஆகிடுவேன்… அப்படியே அதை வச்சே நான் டிவிளப் பண்ணிக்குறேன்…”

“அதெல்லாம் சரி… நான் எப்படி அவளுக்கு பிரண்ட் ஆக… எனக்கு தான் ப்ரியாவை தெரியாதே…”

“அதான் உன் ரூம் மேட் கோண மூஞ்சி கோகிலா இருக்காளே அவளோட ஒண்ணுவிட்ட அத்தை பொண்ணு தான் நம்ம ப்ரியா….”

“ஏது நம்ம ப்ரியாவா???ச்சு அதெல்லாம் விடு எனக்கு கோகிலாக்கும் ஆகாது.. என்னால அதெல்லாம் முடியாது… அதுவும் இல்லாம நான்… எனக்கு.. இங்க இருக்க பிடிக்கலை… உன் போதைக்கு நான் ஊறுகாயா???” என்று ஒரேதாய் மண்டையை உலுக்க,

“ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்… என் திவ்ஸ்ல.. ஏன் செல்லம்ல… ப்ளீஸ் திவ்ஸ் எனக்கு உன்னை விட்டா வேற யார் இருக்கா… ப்ளீஸ்…” என்று கெஞ்சி கொஞ்சி அவளை ஒருவழியாய் சம்மதம் சொல்ல வைத்தான் ரவி.

இப்படி ஆரம்பித்தது தான் ப்ரியா, திவ்யா நட்பு. ப்ரியாவின் தோழமை கிடைத்த சில நாட்களிலேயே ரவியை பற்றிய உண்மையை சொல்லிவிட்டாள் திவ்யா. அவளால் உண்மையை ப்ரியாவிடம் மறைக்க முடியவில்லை.

அனைத்தும் தெரிந்து ப்ரியா ரவியை ஒரு பிடி பிடித்தாலும், அவளாலும் திவ்யாவின் நட்பை விட முடியவில்லை. இதற்கு நடுவில் எப்படியோ ரவி ப்ரியாவை தன் காதலை ஏற்றுக்கொள்ள செய்திருந்தான்.   

திவ்யா, ப்ரியாவின்  நட்பு இன்னுமின்னும் ஆழமாய் செல்ல, நாளடைவில் ஒரேதாய் வீடெடுத்து தங்கும் அளவு வந்தது. சென்னையை விட்டு கிளம்பும் எண்ணத்தில் இருந்த திவ்யாவிற்கு ப்ரியா வந்த பிறகு வாழ்க்கை இன்னும் சுவாரசியாமாய் ஆனது. அழகானதாய் தெரிந்தது.

“ஏன் டி ப்ரியா உன் வீடு இங்க தானே இருக்கு.. அதை விட்டு நீ ஏன் இப்படி என்கூட தங்க அடம் பிடிக்கிற…” என்று கேட்டால்,

அவளோ “வீட்டில யாரு டி இருக்கா.. அம்மா கேஸ் விசயமா எப்போ போவாங்க வருவாங்கன்னு தெரியாது… வேலைக்காரங்க மட்டும் தான்.. இதுக்கு ஏன் நான் அங்க இருக்கணும்… நீ லீவ் டைம்ல ஊருக்கு போறப்போ நானும் எங்க வீட்டுக்கு போயிக்கிறேன்…” என்பாள் அவள்.

இப்படி ஒரே வீட்டில் தங்குமளவு இருந்தாலும் ரவி, ப்ரியா விசயத்தில் உள்ளே நுழைய மாட்டாள் திவ்யா. ஆனாலும் அவளே ஒதுங்கி போனாலும் ப்ரியா இவளை தனியே விடமாட்டாள்.

என்னவோ தெரியவில்லை இரு பெண்களுக்குள்ளும் அத்தனை பிடிப்பு.

ஆனால் இவர்களிடம் சிக்கித் தவிப்பது மட்டுமே ரவியின் பிழைப்பு.

ப்ரியா எப்பொழுதுமே ஆச்சரியப்படும் விஷயம் ஒன்றுமட்டும் தான், அது அவளை விட ரவி திவ்யாவிடம் அக்கறையாய் இருப்பது. சிறு விஷயம் என்றாலும் ஆயிராம் சூதானம் பார்ப்பது.

திவ்யாவிற்கு சிறு உடல்நலன் கோளாறு என்றால் போதும் ரவி எந்நேரம் என்றாலும் அடித்து பிடித்து ஓடி வருவான். கேட்டால், “என்னை நம்பி அனுப்பியிருக்கிறார்கள்…” என்பான்.

அதே போல வெளியில் சென்றாலும் திவ்யாவிற்கு பார்த்து பார்த்து ஏதாவது செய்துகொண்டே, சொல்லிக்கொண்டே இருப்பான். கேட்டால், “அவள் தனியாய் உணரக்கூடாது..” என்பான்.

இதையெல்லாம் பார்த்து ஒருநாள், “ம்ம் பேசாம நானும் உனக்கு பிரண்டாவே இருக்காலம் போல டா…” என்றால் ப்ரியா.

“ஹே…!!!! ஏன் டி ஏனிப்படி திடீர் முடிவு….”

“பின்ன நீ திவ்யாவ கேர் பண்ற அளவு என்னைய என்னிக்காது பண்றியா…” என்றால் செல்ல கோபத்துடன்.

“அட லூசு இது தான் விசயமா….நீயும் திவ்யாவும் எனக்கு ஒண்ணா… அவ எனக்கு உயிர்னா, நீ எனக்கு வாழ்க்கை…” என்றான் சற்று உணர்வுகள் தாங்கிய குரலில்.

ப்ரியாவோ புரியாமல் பார்த்தாள்.

“என்ன டி அப்படி பாக்குற… திவ்யா எனக்கு இத்துனூண்டுல இருந்து தெரியும்… ஒன்னாவே சுத்திட்டு இருப்போம். என்னவோ தெரியலை திவ்யா ஏன் லைப்ல ஒரு பார்ட் ஆகிட்டா.. அவளை விட்டு என்னால எதுவுமே யோசிக்க முடியாது.. சின்ன வயசுல இருந்தே அவளுக்குன்னு பார்த்து பார்த்து எல்லாம் பண்ணி இப்போ அதுவே எனக்கு ஒரு பழக்கமா கூட ஆகிடுச்சு….    

அண்ட் நீ… நானே எதிர்பார்க்காம, என்னைய யோசிக்க கூட விடாம… எனக்குள்ள நுழைஞ்சவ.. என்னோட சரிபாதினு எல்லாம் சொல்லமாட்டேன்.. நான் தான் நீ… நீ தான் நான்… கண்டிப்பா உன்னை எந்த இடத்துலயும் நான் விட்டுக்குடுத்துட மாட்டேன்.. அது யாருக்காகவா இருந்தாலும் சரி.. இதை மட்டும் நீ புரிஞ்சுகிட்டா போதும்…” என்றான் காதலாய்.

ஒரு பெண்ணை சகோதரியாய் எல்லாம் நினைத்திட வேண்டாம், சக மனுசியாய் கூட நினைக்காத சில ஆண்கள் இருக்கும் இந்தக் காலத்தில், ஒரு பெண்ணின் நட்பை இத்தனை உயர்வாய் நினைப்பவன் தனக்கு வாழ்க்கை துணையாய் வரப்போவதை எண்ணி பெருமை தான் பட்டாள் ப்ரியா.

இதையெல்லாம் ஒன்றுவிடாமல் திவ்யாவிடமும் கூற, அவளுக்கு தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்றே தெரியவில்லை. ரவி, ப்ரியா இருவரது நட்பையும் தான் எந்த காலத்திலும், எதற்காகவும் விடுவிடக் கூடாது என்று மனதினுள் சபதமே எடுத்துக்கொண்டாள்.

இப்படி தொடங்கியது தான் இவர்கள் மூவரது பழக்கமும். ஆண்டுகள் மூன்று ஓடிவிட்ட நிலையில், ப்ரியா தன் காதலை அவள் அன்னையிடம் கூறிவிட, அவரோ ரவியை அழைத்து பேசியவர் மறுப்பதற்கு எக்காரணமும் இல்லாததால் சம்மதம் சொல்லிவிட்டார்.

ரவிக்கு பாதி கிணறு தாண்டிய சந்தோசம். ஆனால் மீதமிருக்கும் பாதி கிணறே, அவன் தந்தையின் ரூபத்தில் முழு கிணறு அளவுக்கு தெரிந்தது.

ஏனெனில் ரவியின் குடும்பம் சற்று கட்டுக்கோப்பானது. இது இப்படிதான் என்றால் இப்படிதான். தாங்களும் மாற மாட்டோம், பிறரும் புதிதாய் வந்து மாற்றிட முடியாது.. அப்படி குணம் படைத்தவர்கள்.

திவ்யாவின் குடும்பமே கூட அப்படிதான். இன்னது என்றால் இன்னது தான். யார் செய்த புண்ணியமோ திவ்யா என்ஜினீயர் படித்ததும், வேலைக்கு செல்வதும். அதுவுமே கூட ரவி காவடி தூக்கியதால் தான்.

“இங்க பாரு திவ்ஸ் நானெப்படி உனக்கு வேலைக்கு போறதுக்கு ஹெல்ப்லாம் பண்ணேன்.. சோ நீ தான் தெய்வமே என் காதலை சேர்த்து வைக்கணும்….” என்று வீராப்பாய் ஆரம்பித்து, படக்கென்று காலில் சாஸ்டாங்கமாய் விழுந்தே விட்டான்.

“ஏய் ச்சி ச்சி லூசு…என்ன பண்ற.. எந்திரி..”

“எனக்கு எங்கப்பாவ பார்த்தாலே பயமா இருக்கு திவ்ஸ்… ப்ரியா அம்மா அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணனும்னு சொல்லிட்டாங்க..” என்றான் வேண்டுமென்றே முகத்தை தொங்க போட்டு.

“ஏய் நடிக்காதடா….. மனசுக்குள்ள அப்படியே ஜிவ்வுன்னு வானத்துல பறக்குற மாதிரி இருக்குமே…”

“ஹி…. ஹி…!!!”

“சரி இப்ப எதுக்கு எங்கிட்ட வந்திருக்க…???”

“அது…. அது… இப்ப பொங்கல் லீவுக்கு ஊருக்கு போறோம்ல… அப்ப நீ தான் மெல்ல எங்கம்மாகிட்ட விசயத்தை சொல்லணும்…”

இதை கேட்டதும் அவளோ “அய்யையோ…!!!!” என்றாள் நெஞ்சில் கை வைத்து.

“என்னாச்சு…!!!???”

“அத்தை கிட்டயா….??? நானா??? முடியவே முடியாது….”

மகேஸ்வரி சாஸ்திரம், சம்பிரதாயம், பூஜை புனஸ்காரம் என்று நிஜாமாகவே அவரை பார்க்கும் போது மகாலட்சுமி என்று தான் சொல்ல தோன்றும். இன்றளவும் கணவர் முன்பு அவர் அமர்ந்தது கூட இல்லை. ரவியின் அப்பா தர்மலிங்கமோ, கண்டிப்பான மனிதர். தப்பென்று மனதில் பட்டால் அது யாராக இருந்தாலும் தப்புதான்.

இவர்களை பற்றியெல்லாம் தெரிந்தே இருந்தும் திவ்யா நண்பனுக்காய் சரியென்று சொன்னாள்.. 

யார் பேச்சை யார் கேட்பார்…  விதியின் வார்த்தை இருக்கும் போது..  

 

 

Advertisement