அத்தியாயம் 4

வான் முழுவதும் கருமேகக்கூட்டங்கள் முகாமிட்டுக்கொண்டிருந்தது..!! லேசான மின்னல் வெட்டு வேறு..!!

தனது கையிலிருந்த போனை எடுத்து அவனை அழைத்திருந்தாள் ப்ரணீ..!!

Advertisements

“சொல்லுடாமா..”

“எங்கண்ணா இருக்கீங்க..??”

“வந்துட்டே இருக்கேன்ம்மா.. இன்னும் ஒரு மணி நேரம்.. ரீச் ஆயிடுவேன்.. ஏதாவது பிரச்சனையா..??”, கொஞ்சம் பதற்றம் ஒட்டிக்கொண்டிருந்ததோ..

“நான் கூப்பிட்டா எப்பவுமே பிரச்சனைதானா..??”, சலித்துக்கொண்டவள், “ பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்லை.. இங்க மழை வரமாதிரி இருக்கு.. அதான்.. நீ எங்க இருக்கன்னு கேட்கலாம்னு கூப்ட்டேன்..”, என்றாள் அக்கறையாய்..

“உமது அக்கறையில் நாம் குளிர்ந்துபோனோம் தங்கையே.. என்னை நினைத்து நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.. யாம் சற்று நேரத்திரத்தில் தங்களுக்கு தரிசனம் அளித்து அருள் புரிகிறோம்..”, கிண்டல் தொனியில் அவளுக்கு பதிலளிக்க..

“ஒம்மேல அக்கறைப்பட்டு சொன்னேன் பாரு.. என்னைய..”, என்றவள் போனைக் கட் செய்துவிட.. மறுமுனையில் இருந்த பரணியின் இதழ்கள், “கண்ணில் அன்பைச் சொல்வாளே.. யாரும் இல்லை இவள் போலே..”, என்று முணுமுணுத்துக்கொண்டிருந்தது.. விசிலடித்தபடியே..!!

“ச்சே.. இனிமேல் இவனுக்காக அக்கறைப்படவேக் கூடாது..”, இதுவரை கோடி முறையாவது வாய்விட்டுச்சொல்லியிருப்பாள் இதனை..

மேகங்கள் பூமியின் மீது பூக்களை உதிறிகளாக வீசத்துவங்கியது..!!

முதல் துளி ப்ரணியின் நெற்றிப்பொட்டில் அறைய.. எரிச்சல் எல்லாம் வடிந்துவிட்டது அவளுக்கு..!!

கண்கள் இரண்டையும் மூடியவள் வான் நோக்கி தலையை உயர்த்திட சிலுசிலுவென பூமாரியாய் அவள் மீது தூவியது மழைச்சாரல்.. பனிச்சாரலாய்..!!

மழையில் இன்னும் இன்னும் நனையவேண்டும் என்று ஆசை இருந்தாலும்.. ஊட்டியின் குளிர் விடவில்லை..

சில நொடிகளில் உடல் நடுங்கத்துவங்க வீட்டிற்குள் விரைந்து நுழைந்தவள் ஜன்னல் ஓரம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்துகொண்டாள் பரணியின் வரவை எதிர்பார்த்து.. மழைச் சாரலை வேடிக்கைப் பார்த்தவண்ணம்..!!

மழையின் தூறலானது சாளரத்தில் பட்டுத்தெறித்து ஓவியம் வரைந்துகொண்டிருந்தது..!!

அதன் மீது தனது பெயரை பதித்துக்கொண்டிருந்தாள் ப்ரணித்தா..!!

“அக்கா.. ஸ்கூலுக்குப் போகலையா..??”, ப்ரணியின் தோளில் விழுந்தது அரூபாவின் வலக்கை..

“ப்ச்.. இல்லடா..”, என்றவளின் முகத்தில் நேற்று அழுததின் சுவடாய் கொஞ்சம் வீக்கம்..!!

“விஷ்ணு சொல்றதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதேக்கா.. என்ன..??”

ஓருநொடி அசையாது நின்ற ப்ரணியின் விரல்கள் மீண்டும் சாரலின் இசைக்கேற்ப விளையாடத்துவங்கியது..!!

“அ..க்..கா..”

“அவனைப் பத்தி உன்னைவிட எனக்கு நல்லாத்தெரியும் அரூ.. அவனுக்குத் தெரியும் என்னோட வீக் பாயிண்ட் நீதான்னு.. அதான் என்னை ஸ்டாப் பண்ணனும் அப்படிங்கறதுக்காக உன்னோட நேமை யூஸ் பண்ணிருக்கான்..”

விஷ்ணு சொன்ன அதே வார்த்தைகள்..!! எப்படி இவர்களாய் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களைப் படிக்க முடிகிறது..??

ஆச்சர்யமாக இருந்தது அரூபாவிற்கு..!!

“ஆனால் அவன் ப்ளாக் மெயில் பண்றதுக்காக எல்லாம் நான் சும்மா இருக்க மாட்டேன்.. அவன் வாய்ப்பேச்சுக்காக என்னை தடைசெய்யனும்னு அந்த வார்த்தையை சொல்லிருப்பான்.. கண்டிப்பா மனசால வந்திருக்காது வார்த்தைகள்..”

“அதுதான் தெரியுமே எனக்கு..”, சட்டென உளறியவள் நாக்கைக் கடித்துக்கொள்ள..

“ஹோ.. மேடம் அப்ப எனக்காக அவங்கிட்ட சண்டைக்குப் போனீங்களோ..??”, முறைத்தபடி..

“சாரிக்கா.. நான் வேணும்னே கேக்கல அவங்கக்கிட்ட.. நீ அழுதுட்டே இருந்தியா.. சடனா ஒரு கோபம்.. உன்னை எப்படி அழவைக்கலாம்னு.. அதான்..”, தடுமாறினாள் அரூபா..

அவள் அன்பில் எப்பொழுதும்போல் நெகிழ்ந்துதான் போனாள் ப்ரணீ..!!

இருந்தும் அதை வெளிக்காட்டாமல் இன்னும் தங்கையை முறைத்தபடியே இருக்க..!!

முதலில் அதை சங்கடத்துடன் எதிர்கொண்ட அரூபா.. எதுவோ தோன்ற ப்ரணியின் கன்னத்தில் முத்தமொன்றை அழுத்தமாக வைக்க.. இனிப்பாய் புன்னகையொன்று மலர்ந்தது ப்ரணியிடம்..!!

அதைக்கண்ட மோகனின் மனம் பல நாட்களுக்குப் பிறகு நிறைந்துபோனதுபோல்..!!

இன்ஸ்டன்ட்டாக கடவுளிடம் இருவருக்கும் விரைவில் திருமணமாக வேண்டும் என்று கோரிக்கையையும்..!!

ஜனனம் மருத்துவமனை..!!

அந்த மழைக்காலத்திலும் பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது அது..!!

ஒரு நடுத்தற வயது பெண்மணி தனது ஏழு வயது மகளுடன் மருத்துவமனைக்குள் நுழைய.. தாயுடன் ஒட்டிக்கொண்டது அது நெருக்கமாக..!! பயத்துடன்..!!

அவளது கைகளைப் இறுகப்பிடித்துக்கொண்டவர் ரிஸப்ஷனில் அமர்ந்திருந்த பெண்ணிடம், “டாக்டர் விஷ்ணு சத்யாவைப் பார்க்கனும்..”, என்றிட..

“அப்பாயிண்மென்ட் இருக்கா மேம்..??”, என்று கேட்டாள் அவள்..

“அப்பாயிண்ட்மென்ட் எதுவும் இல்லைங்க.. ஆனா டாக்டர்கிட்ட போன்ல காலையிலேயே டைரெக்ட்டாவே பேசியிருக்கேன்..”

“ஹோ.. நித்திலாவா..??”

“ஆமாம்மா.. பொண்ணு பேருதான் அது..”

“செகண்ட் ப்ளோர்ல ரயிட் சைட் போர்த் ரூம் போங்க..”, இடம் சொல்ல..

நித்திலாவுடன் மெல்ல நகர்ந்தார் அவளது தாய் சுதா..

லிப்ட்டை எதிர்பார்க்காமல் ஸ்டெப்ஸில் ஏறத்துவங்க.. தன்னைக் கடந்து செல்பவர்களைக் கண்டு ஏகமாய் நடுக்கம் கண்டது நித்திலாவிற்கு..

தோளோடு அவளை மேலும் இறுக அணைத்தப்படி இரண்டு மாடிகள் ஏறுவதற்குள் மூச்சுவாங்கியது சுதாவிற்கு..!!

விஷ்ணு சத்யா..!! மனநல மருத்துவர்..!!

கதவின் மீதுள்ள தங்கநிற பலகையில் ஆழமாக பொறிக்கப்பட்டிருந்தது..!!

லேசாக அதைத்தட்டிய சுதாவிற்கு நேற்றைய நிகழ்வுகள் நிழல்படமாக..!!

முதல் நாள் மதியம் வரைதான் பள்ளிக்கூடம் என்பதால் சுதா வேலை முடிந்து வீட்டை சென்றடையும் முன்னே வீட்டை அடைந்திருந்தது குழந்தை..!!

பக்கத்துவீட்டுப் பெண்மணியுடன் நித்திலாவை பள்ளியில் இருந்து அப்பொழுதே வீட்டிற்கு அனுப்பிவைந்திருந்தார் சுதா..!! நித்திலா படிக்கும் பள்ளியில் ஆசிரியை அவர்..!!

அன்று சுதாவிற்கு மாலைவரை பள்ளியில் வேலை..!! அத்தனை டயர்டாக வீட்டிற்குள் நுழை/ந்தார் அவர்..!!

முன்க்கதவு திறந்திருக்க காரிருளில் மூடியிருந்தது வீடு..!!

“வீட்டைத் திறந்து போட்டுட்டு விளையாடப்போயிட்டாலா இவ..??”, சத்தமாக முணங்கியவர் லைட்டை ஆன் செய்துவிட்டு தனது அறையின் கதவின் மீது கைவைக்க.. பூட்டியிருந்தது அது..!!

“நித்தீ..??”

“……………………………”

“நித்தீ.. ரும்லயா இருக்க..??”

“……………………………”

“நித்தீமா..??”

“ஹ்ம்..”, கொஞ்சம் முனகல்..

குரல் உடைந்துபோயிருக்க, “என்னாச்சு நித்தீம்மா..?? கதவைத் திற..”, பயம் சூழ்ந்துகொண்டது அவருக்கு..

நித்திலாவின் மாட்டேன் என்ற தலையாட்டல் தெரியவில்லை அவருக்கு..!!

“நித்தீ.. திற நித்தி.. அம்மாக்கு பயமா இருக்குல..??”, சுதாவின் குரலும் பிசிறுதட்ட..

என்ன நினைத்ததோ குழந்தை கதவை வேகமாகத் திறந்து அன்னையை இறுக அணைத்துக்கொண்டது..!!

பனியில் நனைந்த குருவியாய் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருக்க அன்னையில் அணைப்பைவிட்டு பிரியும் எண்ணம் சிறிதும் இல்லாததாய் இறுகப் பிடித்திருந்தது..!!

தன்னைவிட்டு குழந்தையைப் பிரிக்க சுதா முயல மெலும் அவருடன் நெறுங்கிய குழந்தை தன் நகம் பதியும் அளவிற்கு அவரைப் பிடித்துக்கொண்டது.. எங்கே தன்னைவிட்டு அவர் விலகிச்சென்றுவிடுவாரோ என்று..!!

“நித்திம்மா.. இங்க பாருங்க.. என்னாச்சு உங்களுக்கு..?? ஏன் ஒருமாதிரி பன்றீங்க நீங்க..??”, தன்மையாகவே கேட்டிருந்தார் அவர்..

குழந்தையோ அவருக்கு பதிலும் சொல்லவில்லை.. அன்னையைவிட்டுப் பிரியவும் இல்லை..!!

பிரம்மைப்பிடித்தார்போல் இருந்தது அவள் செய்கைகள் யாவும்..!!

அருவியாய் பொழியும் அவள் பேச்சுக்கள்.. குறுப்புகள் என அனைத்தும் தொலைந்துபோய் வெறுமையாக இருப்பதுபோல்..!!

இரவு என்ன முயன்றும் அவளிடம் ஒருவார்த்தை வாங்க முடியவில்லை அவரால்.. இரவு உணவும்கூட இறங்கிடவில்லை இருவருக்கும்..!!

கொஞ்சம் உறக்கம்.. கொஞ்சம் அலறல் சத்தமென மொத்தத்தில் அந்த இரவு ஒருவிதமான சூன்யத்தில் கழிந்தது சுதாவிற்கு..!!

யாரும் எதிர்பார்க்காமல் அடுத்த நாள் காலை கதிரவன் எட்டிப்பார்க்க.. அப்பொழுதான் ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றிருந்தாள் நித்திலா..

இவளை மருத்துவமனை அழைத்துச்செல்லவேண்டும் என்று தீர்மானித்துவிட்டாலும் எங்கு அழைத்துச்செல்வதென்று தெரியவில்லை சுதாவிற்கு..!!

காச்சல் சளி என்றால் பொதுநல மருத்துவரிடம் செல்லலாம்.. பட் அப்படியொன்றும் இல்லையே..

“எதையோ கண்டு பயந்திருக்கிறாள்..”, என்று மட்டும்தான் நினைக்கத்தோன்றிது சுதாவிற்கு..

“மந்திரிக்க அழைத்துச்செல்லாமா..??”, மனதில் தோன்றியபொழுதும்.. படித்த மூளை மருத்துவமனைக்குச் செல் என்று அறிவுறுத்த..

விஷ்ணுவின் முகம் மங்களாக அவரது மனக்கண்ணில் வந்து மறைந்தது சுதாவிற்கு..!!

எதைப்பற்றியும் யோசிக்காமல் அழைத்துவிட்டார் அவனுக்கு..!!

“ஹலோ.. விஷ்ணு சார்.. நான் உங்க பொண்ணு ப்ரீத்தியோட கிளாஸ் மிஸ்.. சுதா பேசறேன் சார்..”, படபடவென கொஞ்சம் தயக்கம் கலந்து..

“உங்க நம்பர் என்க்கிட்ட இருக்கு மிஸ்.. சொல்லுங்க..”

“நேத்துல இருந்து என் பொண்ணு ஒரு மாதிரி பயந்துட்டு இருக்கா சார்.. ஏதோ பிரம்மை பிடிச்சமாதிரி.. பேசமாட்டேங்கறா.. சாப்பிடமாட்டேங்கறா.. சரியா ராத்திரி தூங்கவும் இல்லை.. இடையிடையில் பயந்து சத்தம்போட்டா.. எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. சட்டுன்னு உங்க நியாபகம்தான் வந்துச்சு.. அதான் என்ன பண்றதுன்னு கேட்கலாம்னு கூப்பிட்டேன்..”, கவலை ஒட்டிக்கிடந்தது அந்தத் தாயின் குரலில்..

“கவலைப்படாதீங்க மிஸ்.. ஒன்னும் இருக்காது பாப்பாக்கு.. ஏதாவது பார்த்து பயந்திருப்பாங்க..”, என்றவன், “இப்போ பாப்பா என்ன பண்றாங்க..??”, யோசனையுடன்..

“இப்ப தூங்கறா சார்..”

“தூங்கட்டும் மிஸ்.. தூங்கி எழுந்தா நார்மாலகச் சான்ஸ் உண்டு.. பட் இப் சப்போஸ் எழுந்தப்பறுமும் அவங்க பிஹேவியர் அப்நார்மலா இருந்தா லேட் பண்ணவேண்டாம்.. ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்திடுங்க..”

“ஓகே சார்.. அப்பாயிண்மென்ட் ஏதாவது வாங்கனுமா..??”

“வேண்டாம் மிஸ்.. நான் ரிஸெப்ஷன்ல சொல்லி வைக்கறேன்.. ஜஸ்ட் பாப்பாவோட நேம் சொல்லுங்க.. அவங்க கைட் பண்ணுவாங்க..”

“ஓகே சார்.. தாங்க் யூ சோ மச்..”, என்றுவிட்டு போனை சுதா கட் செய்ய.. விழித்துக்கொண்டாள் நித்திலா..!!

இன்னும் அதே பயத்துடனும்..!! நடுக்கத்துடனும்..!!

விளைவு.. இப்பொழுது தாயும் சேயும் விஷ்ணு சத்யாவின் முன்னிலையில்..!!

நேற்று நடந்த நிகழ்வுகளை மீண்டும் சுதா விவரிக்க முயல.. வேண்டாமென்று தலையசைத்தவனின் கண்கள் குழந்தையையே முகாமிட்டுக்கொண்டிருந்தது..!!

தன்னைக் கண்துடம் குழந்தை தாயுடன் மேலும் ஒன்றியதைக் கண்டுக்கொண்டவனது நெற்றியில் அத்தனை முடிச்சுக்கள்..!!

ஏதோ தவறாய் நடந்திருக்கிறதென்று திண்ணமாய் அவனது அனுபவத்தில் புரிந்துவிட.. நித்திலாவைப் பார்த்துப் புன்னகைத்தான் அவன்..!!

இப்பொழுது தனது முகத்தைத் தாயின் தோளில் புதைத்துக்கொண்டாள் அவள்..!!

“பாப்பா.. பேர் என்ன..??”

“…………………………….”

“இந்த அங்கிள்க்கிட்ட பேசமாட்டீங்களா பாப்பா..??”

இப்பொழுதும் பதிலில்லை நித்தியிடம்..!!

சங்கட்டமாய் அவனைப் பார்த்து முறுவலித்த சுதா குழந்தையிடம், “நித்தீம்மா.. டாக்டர் அங்கிள் கேட்கறாங்கல்ல சொல்லு..”, அவளை ஊக்குவிக்க..

மாட்டேன் என்பதுபோல் தலையசைப்பு..!!

“போலாம்மா.. எனக்கு பயமாயிருக்கு..”, என்றது கூடவே..

“எதுக்குமா பயம்..?? உன் ப்ரெண்ட் ப்ரீத்தி அக்காவோட அப்பா.. ஹாய் சொல்லு..”, முயன்றுபார்த்தார் சுதா..

இருந்தும் அசைவில்லை குழந்தையிடம்..!!

“போலாம்.. போலாம்.. எனக்கு பயமாயிருக்கு..”, திரும்பத் திரும்ப குழந்தை விடாமல் புலம்ப..

என்ன செய்வதென்றே தெரியவில்லை சுதாவிற்கு..!!

அனைத்தையும் ஒரு பார்வையாளராகவே பார்த்துக்கொண்டிருந்தான் அவன்..!!

குழந்தையின் ஒவ்வொறு செயலும் அவளது உணர்வுகளை வெளிச்சம்போட்டுக்காட்டுவதாய்.!!

“மிஸ்.. போதும் இன்னைக்கு கிளம்புங்க.. நாளைக்குப் பேசிக்கலாம்..”, நித்திலாவின் குரலைவிட அவன் குரல் ஓங்கி ஒலிக்க..

சதாவின் கைகளில் அடிக்கலமாகியிருந்த நித்திலாவின் கைகால்கள் யாரும் எதிர்பாராவண்ணம் இழுத்துக்கொண்டது..

அவசரமாக குழந்தை கையில் ஏந்தி படுக்கையில் அவன் படுக்கவைத்துவிட்டு யாருக்கோ கால் செய்யத்துவங்க..

“நித்தீ.. நித்தீ..”, அவளது கன்னத்தைப் பிடித்து சுதா தட்ட.. குழந்தையின் வாயிலிருந்து நுரைத்தள்ளத்துவங்கியது..!!

“சா..ர்.. சா..ர்.. பாப்பாக்கு நுரைதள்ளுது..”, பதற்றமாக..

ஷிட்.. கால்களைத் தரையில் ஓங்கி உதைத்தவன்.. நித்தியைத் தூக்கிக்கொண்டு ஐசியூவிற்கு விரைந்திருந்தான்..!!

சில நிமிடங்களுக்கெல்லாம் தீப்பிடித்ததுபோலானது ஜனனம்..!!

-பற்றி எரியட்டும்..!! தீச்சுடர்..!!