Advertisement

அத்தியாயம் – 18
 
சோகமான சிலையொன்று உயிர் பெற்று வந்தது போல அலைபேசி மெசேஜை வாசித்து புன்னகையுடன் எழுந்து நடந்தவளை கோவில் தூணின் பின்னிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த நிதினின் மனதில் அவள் மனதை மாற்றிவிட முடியுமென்ற நம்பிக்கை விதை வேகமாய் வளர்ந்தது. 
 
காலையில் அவள் கோவிலுக்கு கிளம்பியது முதல் அவளறியாமல் அவளுடனே சுற்றிக் கொண்டிருக்கிறான். மூன்று வருடப் பிரிவின் தவிப்பை இப்போது அவளுக்குத் தெரியாமல் எட்டி நின்றாயினும் அவளைப் பார்த்துக் கழித்துக் கொண்டிருப்பதே பெரிய சமாதானமாய் இருந்தது.
 
அவள் வீட்டிலிருந்து கிளம்பி, திரும்பி செல்லும் வரை அவளுக்குத் தெரியாமல் ஒரு நாளில் ஒரு முறையேனும் மறைந்திருந்து பார்த்து விடுவான்… அவளது பார்வை இலக்கில்லாமல் எதையோ தேடிக் கொண்டிருப்பதன் காரணமும் அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
“தவிக்கட்டும்… நேசத்திற்கு முன்னால் மற்ற எதுவும் காணாமல் போய்விடும் என்பது உண்மையானால் எந்தத் தவறும் செய்யாமல் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட இரும்புச் சிறையில் இருந்து அவள் வந்தே ஆக வேண்டும்… அவளது வீம்பும் வைராக்கியமும் எனைக் காணாமல் தேடியலைந்து தவிடு பொடியாய் சிதறிப் போகட்டும்… உன் வேதனைகளை என் தோளில் இறக்கி நிம்மதியாய் என் மடிசேரும் காலம் வரும் சஹிம்மா…  அந்த நாளுக்காய் காத்திருக்கிறேன்…” மனதுக்குள் நினைத்துக் கொண்டவனின் கண்கள் வேதனையில் கசிந்தன.
 
“என்னைக் காணாமல் ஒரு நாளிலேயே தவித்துப் புலம்புபவள் இப்போது தவிர்க்க நினைக்கும் அளவிற்கு மனது வெறுத்துப் போகக் காரணமாய் இருந்தவனை அழிக்காமல் விட மாட்டேன்… ஆகாஷ், உனக்கான அழிவு வெகு தூரத்தில் இல்லை…” யோசித்துக் கொண்டிருந்தவன் சஹானா அந்தப் பக்கம் வருவதைக் கவனித்து வேகமாய் தூணின் பின்னால் ஒளிந்தான்.
அவள் கிளம்பியதும் தானும் கிளம்பினான். கம்பெனியில் முக்கியமான வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டான். பிரபாவின் கல்யாணத்திற்கு ஒரு வாரமே இருந்ததால் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. முன்னைப் போல தனிமையில் ஒதுங்காமல் தங்கையின் கல்யாணத்திற்கு எல்லாவற்றிலும் முன்னில் நின்று கவனித்துக் கொள்ளும் மகனைக் கண்டு மீனாட்சிக்கு மிகுந்த சந்தோஷம்.
 
“என்ன அண்ணி, கல்யாண குஷில இந்த நாத்தனாரை மறந்துட்டியா… பிளவுஸ் எல்லாம் தச்சு வாங்கியாச்சா…” அலைபேசியில் ஆனந்தி கேட்டுக் கொண்டிருந்தாள்.
 
“உன்னை எப்படி மறப்பேன் ஆனந்தி, அங்கே வந்தா நீ தானே எனக்கு எல்லாம்… அப்புறம் அத்தைக்கும், மாமாவுக்கும் என்னென்ன சமையல் பிடிக்கும்னு சொன்னியோ எல்லாம் செய்து பழகிட்டேன்… இப்போ அவருக்குப் பிடிச்சதை எல்லாம் டெய்லி செய்து பழகிட்டு இருக்கேன்…” சொல்லும் போதே நாணம் எட்டிப் பார்க்க ஆனந்தி சிரித்தாள்.
“பரவால்லியே, கல்யாணம் முடிஞ்சு வந்த கையோட எல்லாருக்கும் சாப்பாடு செய்து போட்டே கைக்குள்ள போட்டுக்க போறேன்னு சொல்லு…”
 
“ஹாஹா… அப்படிலாம் இல்ல, எல்லாருக்கும் பிடிச்ச போல நடந்துக்கணும் இல்லையா… அதுக்கு தான்…”
 
“ம்ம்… எங்க எல்லாரையும் சரிக்கட்டினாலும் உன் மாமியார் வாயை அடைக்கறது கொஞ்சம் கஷ்டம் தான்…” என்று ஆனந்தி சிரிக்க, “ஏய்… என் அத்தையை அப்படியெல்லாம் சொல்லாதே…” என்று அதட்டினாள் பிரபா.
 
“பாருடா, அதுக்குள்ளே அத்தை மேல பாசம் வழியுது… ஹூம், நீ பிழைச்சுக்குவே…” என்று சிரிக்கவும் பிரபாவும் சிரித்தாள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கு வந்த மீனாட்சி, “என்ன சொல்லுறா என் மருமக…” என்றார்.
 
“சும்மா பேசிட்டு இருந்தோம்மா…” என்றவள், “ஆனந்தி, உன் அத்தைக்குப் பேசணுமாம் கொடுக்கிறேன்…” என்று நீட்டினாள்.
அவளிடம் சிறிது நேரம் கல்யாண விஷயங்களைப் பேசிவிட்டு வைத்த மீனாட்சி புன்னகையுடன் மகள் அருகே அமர்ந்தார்.
 
“அண்ணி கல்யாணத்துக்குப் போட உனக்கு ஆரம் வாங்கி வச்சிருக்காங்களாம்… என்னதான் கறாரா பேசினாலும் இதுல எல்லாம் சரியா இருக்காங்க…”
 
“ம்ம்… ஆனந்தி சொன்னா மா…”
 
“என் பையனுக்கும் நல்ல வசதியான இடத்துல பொண்ணு பார்த்து, சீர் செனத்தி எல்லாம் வாங்கி ஊரே மெச்சுற போல பிரம்மாண்டமா கல்யாணத்தை நடத்தணும்னு ஆசையா இருக்கு…” கண்கள் விரிய ஆவலுடன் அன்னை பேசிய பேச்சைக் கேட்டதும் அவளுக்குள் அலாரம் அடித்தது.
 
“அம்மா, இப்ப எதுக்கு இந்தப் பேச்சு… வசதியான பொண்ணு இந்த வீட்டு மருமகளா வர்றதை விட அண்ணனுக்குப் பிடிச்ச பொண்ணு எனக்கு அண்ணியா வரணும்னு தான் எனக்கு ஆசையாருக்கு… கல்யாணம் எல்லாம் ஆயுள்கால பந்தம்… மனசோட பிடித்தம் ரொம்ப முக்கியம்…” என்றவளை யோசனையுடன் பார்த்தார்.
 
“நான் எதார்த்தமா தானே சொன்னேன்… நீ எதுக்கு இவ்ளோ யோசிக்கற… சரி, அண்ணன் வந்ததும் காபியோட அடை தோசை ஊத்திக் கொடு… நான் அம்மன் கோவில்ல விளக்குப் போட்டுட்டு வந்திடறேன்…” என்றவர் கிளம்பினார்.
 
சிறிது நேரத்தில் நிதின் வீட்டுக்கு வரவும் அவனுக்கு காபி, அடை என்று கவனித்தவள் ஒன்று போதுமென்று விட்டு அமைதியாய் சாப்பிட்டவனை யோசனையுடன் பார்த்தாள்.
 
“அண்ணா, அதுக்கப்புறம் அவங்களைப் பார்க்கப் போனியா…”
 
அவளது கேள்வி புரியாமல், “யாரை மா…” என்றான்.
 
“அ…அண்ணியை… அப்படி சொல்லலாம் தானே…” என்றாள் தயக்கத்துடன் அவன் முகம் நோக்கி.
 
அந்தக் கேள்வியில் புன்னகைத்தவன், “ம்ம்… தாராளமா சொல்லலாம்… உனக்கு அண்ணின்னு ஒருத்தி வந்தா அது அவ மட்டும் தான்…” என்றான்.
 
“அண்ணி பேரென்ன… மறுபடி அவங்கள பார்த்தியா…”
 
“தினமும் பார்த்திட்டு தான் இருக்கேன்… உன் அண்ணி பேரும் அவளை மாதிரியே ரொம்ப அழகாருக்கும்… சஹானா…” பெயரை அழகாய் உச்சரித்தவன் மனதுக்குள் இனிமையாய் உணர அது முகத்தில் பிரதிபலித்தது.
 
“சஹானா, இந்தப் பேரை நான் கொஞ்ச நாள் முன்னாடி கேட்டேனே…” என்றவளுக்கு அந்த சந்திப்பு மனதில் வர, “அண்ணா, அண்ணி போட்டோ வச்சிருக்கியா…” என்றாள் ஆவலுடன். சஹாவின் பிறந்தநாளன்று அவளுக்குத் தெரியாமல் ஒளிந்து நின்று எடுத்த புகைப்படத்தை அவன் காட்ட அவள் கண்கள் விரிந்து வியப்புக்கு சென்றது. அலுவலகத்திலிருந்து வெளியே வந்தவள் அழகாய் தலை சாய்த்து கூந்தலை ஒதுக்க அப்படியே கிளிக்கியிருந்தான்.
“வாவ், இவங்களா என் அண்ணி… இவங்களை நான் மீட் பண்ணி இருக்கேனே…” என்றவள் அவர்களின் சந்திப்பைக் கூற நிதினுக்கு சந்தோஷமாய் இருந்தது.
 
“இப்படி தேவதை போல இருக்கிற பொண்ணை சீரழிக்க அந்த சைத்தான்களுக்கு எப்படி மனசு வந்துச்சோ… அவங்களை சும்மா விடக் கூடாதுண்ணா…” என்றவளின் கண்கள் கலங்கியிருக்க நிதினின் முகமும் இறுகியது.
 
“நிச்சயம் விட மாட்டேன்… ஆல்ரெடி அதுக்கான வேலைல நான் இறங்கிட்டேன் மா…” என்றான் அவன்.
 
“ம்ம்… அண்ணி அந்த மனநிலைல இருந்து வெளியே வந்து உன்னோட சந்தோஷமா வாழணும் அண்ணா… அதான், நான் இப்ப தினமும் கடவுள் கிட்டே வேண்டிக்கிறேன்…”
 
“நிச்சயம் உன் பிரார்த்தனை பலிக்கும் பிரபா…” என்றவன் அவள் தோளில் தட்டிக் கொடுத்து, “சஹி உன்னோட நல்லாப் பேசி இருக்காளே… ஒண்ணு பண்ணு, அவளை உன் மேரேஜ்க்கு இன்வைட் பண்ணு…” என்றான் ஏதோ யோசித்துக் கொண்டே.
 
“ஓகே அண்ணா, நாளைக்கே மீட் பண்ணிடறேன்…” என்றாள் பிரபா சந்தோஷத்துடன். சொன்னது போல அடுத்த நாள் எதேச்சையாய் அவளை அலைபேசியில் அழைப்பது போல விளித்தாள். அந்த நேரம் சஹானா சற்று பிரீயாக இருக்க இவள் பெயரைக் கண்டதும் புன்னகையுடன் எடுத்தாள்.
 
“ஹாய் அக்கா, ஹவ் ஆர் யூ… எனை நினைவிருக்கா… பிரபா, அன்னைக்கு பஸ்ல மீட் பண்ணோமே…” என்று தன்னை நினைவு படுத்தியவளிடம், “ஹாய் பிரபா, ஐ ஆம் பைன்… வாட் அபவுட் யூ…” என்றாள் புன்னகையுடன்.
 
“ஹப்பா நினைவிருக்கா, எங்க மறந்திருப்பீங்களோன்னு நினைச்சேன்… என் பிரண்டு ஒருத்திக்கு இன்விடேஷன் கொடுக்க வந்தேன்… அப்படியே உங்களையும் பார்க்க தோணுச்சு, நீங்க இப்ப ப்ரீயா அண்ணி… எந்த ஆபீஸ்னு சொன்னா நானே வந்திடறேன்…” என்றாள் பிரபா.
“அட, என்ன திடீர்னு அக்கால இருந்து அண்ணின்னு பிரமோஷன் கொடுத்துட்ட…” என்று அவள் எடுத்துக் கேட்கவும் தான் “சாரிக்கா, ஒரு புளோல சொல்லிட்டேன்…” என்று தன்னைத் தானே தலையில் குட்டிக் கொண்டாள்.
 
“சரி, நான் இப்ப ப்ரீயா தான் இருக்கேன்… வாம்மா…” என்றவள் வங்கியின் பெயரைக் கூறினாள். அவள் எந்த நேரத்தில் ப்ரீயாய் இருப்பாள் என்ற தகவலை சரவணனிடம் இருந்து பிரபா வாங்கி இருந்தாள்.
 
சஹானா கூறியது போல வங்கிக்குள் நுழைந்தவள் முன்னில் இருந்த காபினில் அமர்ந்திருந்த சரவணனிடம் கண்ணிலேயே பேசிவிட்டு மாடிக்கு சென்று சஹானாவைக் கண்டு அன்பும் ஆசையுமாய் கல்யாண அழைப்பிதழைக் கொடுத்தாள். பிரபா சரவ் இன்வைட்ஸ் என்று அவர்களின் நட்புக்களுக்காய் இருவரும் சேர்ந்து அழைப்பது போன்று பிரத்யேகமாய் அடிக்கப்பட்ட அழைப்பிதழ் அது. அதில் குடும்பத்தைப் பற்றிய விவரம் எதுவுமில்லாமல் மண்டபம் தேதி, போன்ற விவரங்களே இருந்தன.
“இன்விடேஷன் ரொம்ப அழகா இருக்கு பிரபா…” என்றவளிடம், “என் அண்ணன் செலக்சன் எல்லாமே அழகா இருக்கும்க்கா…” என்றவள், “நிச்சயம் என் கல்யாணத்துக்கு வருவீங்க தானே… உங்களை ரொம்ப எதிர்பார்ப்பேன் அக்கா…
எனக்கு அக்கா, தங்கை எல்லாம் இல்லை… உங்களைப் பார்த்ததுல இருந்து ஏதோ ரொம்ப நாள் பழகின சொந்தம் போல ஒரு பீல் ஆகுது… கண்டிப்பா என் கல்யாணத்துக்கு வருவீங்களா அக்கா…” என்றாள் ஆவலுடன்.
 
“இதென்ன, இப்படி கட்டாயப்படுத்தி அழைக்கிறாளே…” என நினைத்தாலும் பிரபாவின் முகம் அவளுக்கு மிகவும் நெருக்கமாய் தோன்றியது. அவளது அன்பும், எதார்த்தமான பேச்சும் பிடிக்கவே மறுக்கத் தோன்றாமல் புன்னகைத்தாள்.
 
கல்யாணத் தேதியைக் கண்டதும் அட, இந்தத் தேதியில் தானே சரவணனுக்கும் கல்யாணம் என்று நினைத்தாலும் அந்த சரவணன் தான் இந்த சரவ் என்று தோன்றவில்லை. அந்தக் கல்யாணத்துக்கு செல்லாமல் இருக்க காரணத்தை தேடிக் கொண்டிருந்தவளுக்கு இது போதுமாயிருந்தது.
மேலும் இரண்டு நாட்கள் ஓடியிருக்க சாதனா அவளது வேலை சம்மந்தமாய் சில டாகுமென்ட்ஸ் கொடுக்க பாலக்காடு சென்றவள் அப்படியே இரண்டு நாட்கள் நரேனின் வீட்டில் தங்கி விட்டு வருவதாய் கூறி இருந்தாள்.
 
வீட்டில் சசிகலாவும் ஸ்ரீகுட்டியும் மட்டுமே இருக்க, சாதனா இல்லாமல் குழந்தை மிகவும் ஏங்கினாள். பாட்டியின் பின்னிலேயே சுற்றிக் கொண்டிருந்தவளின் வாய் மூடாமல் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லி முடியாமல் தொலைக்காட்சியை வைத்துக் கொடுத்து பார்க்கும்படி கூறிவிட்டு அடுக்களையில் சமையலை முடித்துக் கொண்டிருந்தார் சசிகலா.
 
ரிமோட்டை அமர்த்திக் கொண்டே வந்த ஸ்ரீகுட்டி தன் வயதில் ஒரு குழந்தையின் திரைப்படத்தைக் கண்டதும் ஆர்வமாய் கவனிக்கத் தொடங்கினாள். அதில் குழந்தைக்கும் அப்பாவுக்குமான காட்சி ஓடிக் கொண்டிருக்க அவர்கள் பேசுவதை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருக்க சசிகலா அருகில் வந்து அமர்ந்தார்.
ஒரு கோப்பையில் குட்டி பிஸ்கட்ஸ் போட்டு அவளுக்காய் நீட்டியவர் அவள் மும்முரமாய் தொலைக்காட்சியில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, “என்னடி செல்லம் பார்க்கற…” என்று திரும்ப அதில் ஒரு பெண் குழந்தை தந்தையிடம் கொஞ்சிப் பேசுவதைக் கண்டவர் மனம் நெகிழ்ந்தது.
 
அதைக் கண்ட ஸ்ரீகுட்டி, “பாத்தி… எல்லாத்துக்கும் டாதி இதுக்காங்க, எனக்கு மத்தும் ஏன் இல்ல…” என்று கேள்வியைத் தொடங்க, பதில் சொல்ல முடியாமல் விக்கித்துப் போனவர் அமைதியாய் இருந்தார்.
 
அதைக் கண்ட ஸ்ரீகுட்டி, “சொல்லு பாத்தி… எனக்கு டாதி இல்லையா…” சின்னக் கண்களை விரித்து தலையை சரித்து உதட்டைச் சுளித்துக் கேள்வி கேட்டவளிடம் பதில் சொல்ல முடியாமல் பரிதாபமாய் முழித்தார் சசிகலா.
 
“டாதி இருந்தா ஜாலியா இருக்கும்ல… விளையாடலாம், வெளிய போகலாம்… நிறைய பொம்மை வாங்கலாம்… சொல்லு பாத்தி… என் டாதி எங்கே…” என்றாள் மீண்டும்.
இரண்டரை வயதுக் குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கலங்கிய கண்ணைத் துடைத்துக் கொண்டவர், “நீ பிஸ்கட் சாப்பிடு ஸ்ரீக்குட்டி…” என்று கோப்பையைக் கொடுக்க அது வாங்காமல் உதட்டைச் சுளித்தது.
 
“போ பாத்தி, எனக்கு பிஸ்கத் வேண்டாம்… டாதி தான் வேணும்…” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டது.
 
தொலைக்காட்சியில் அந்தப் பெண் குழந்தை ஆசையுடன் தந்தையின் கன்னத்தில் முத்தமிட, தந்தை மகளை அன்போடு அள்ளிக் கொண்டதை கண்களில் ஏக்கம் வழிய ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
 
குழந்தையின் கேள்வியில் மனம் ஓவென்று கதறிக் கொண்டிருக்க கண்ணீருடன் அமர்ந்திருந்தார் சசிகலா. அப்போது ஒலித்த காலிங் பெல்லின் ஓசையில் எழுந்து கதவைத் திறந்தவர் வெளியே நின்ற நிதினைக் கண்டதும் அகமகிழ்ந்தார். ஸ்ரீக்குட்டியும் வாசலைப் பார்க்க அவனைக் கண்டதும் ஓடி வந்தாள்.
“ஹாய் ஸ்ரீக்குட்டி…” என்று அள்ளிக் கொண்டவன், இன்னைக்கு உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு…” என்று கையிலிருந்த அழகான கரடி பொம்மை ஒன்றைக் கொடுக்க, கண்கள் விரிய ஆவலுடன் அதை வாங்கிக் கொண்டவள், “ஹே… சூப்பதா இதுக்கு…” என்று அவனைக் கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள்.
 
“வாங்க தம்பி… உக்காருங்க…” என்ற சசிகலாவிடம், “எப்படி இருக்கீங்கம்மா…” என்று நலம் விசாரித்துக் கொண்டே அமர அவன் மடியில் வேகமாய் ஏறி அமர்ந்து கொண்டது ஸ்ரீகுட்டி.
 
அவரிடம் பொதுவாய் பேசிக் கொண்டிருந்தவனை “பாத்தி, இதுதான் என் டாதியா…” என்றாள் ஸ்ரீக்குட்டி.
 
சசிகலா திகைப்புடன் நோக்க, “ஆமா டா ஸ்ரீக்குட்டி, நான்தான் உன் டாடி… அதுல உனக்கு என்ன சந்தேகம்…” என அவன் சட்டென்று கூறவும் அவனைக் கட்டிக் கொண்டு, “என் டாதி…” என்று முத்தமிட சசிகலாவின் கண்கள் பனித்தன.
சற்றுமுன் டீவியில் திரைப்படம் கண்டு அவள் கேட்ட கேள்விகளைக் கூறியவர், “ஒரு பிஞ்சுக் குழந்தையோட கேள்விக்கு பதில் சொல்ல முடியலையே… இவ பெருசானா எப்படி புரிய வைக்க போறோம்னு கலங்கிப் போயிட்டேன் தம்பி…” என்றவரிடம், “எதுக்கும்மா அவளுக்குப் புரிய வைக்கணும்… அதெல்லாம் தேவை இல்லை… இது என் குடும்பம்… இவ என் குழந்தை…” என்றதும் அவர் நெஞ்சத்தில் இருந்து ஒரு விம்மல் வெடிக்க பொங்கி வந்த அழுகையை அடக்க வாயைப் பொத்திக் கொண்டார்.
 
அதைக் கண்ட ஸ்ரீகுட்டி, “பாத்தி ஏன் அழதே… அதான் டாதி வந்தாச்சே… கவலப்பதாத… டாதி பாத்துக்குவார்…” என்று பெரிய மனுஷியாய் சமாதானம் கூறி அவர் கண்ணைத் துடைத்துவிட அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
 
“இதோ வந்திடறேன் தம்பி…” என்றவர் அவனுக்கு காபி கலந்து எடுத்து வர, சிறிதுநேரம் இருந்துவிட்டு பிரபாவின்  கல்யாணத்திற்கு சஹாவை அவள் அழைத்தது பற்றிக் கூறிவிட்டு இவர்களை இப்போது அழைக்க முடியாமைக்கு வருத்தப்பட்டான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவன் கிளம்ப ஸ்ரீக்குட்டி, “போக வேண்டாம் டாதி…” என்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டது.
 
நாளை வேறு பொம்மை வாங்கி வருவதாகக் கூறி சமாதானம் செய்து கிளம்பியவனின் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டு, “டாதி எனக்கு முத்தா…” என்று கன்னத்தைக் காட்டியது. அவள் பட்டுக் கன்னத்தில் இதழ் பதித்தவன் நெற்றியிலும் முத்தமிட்டு டாட்டா சொல்லி கிளம்பினான்.
 
உன் ஈரிதழ் எழுதும்
ஒர்வரிக் கவிதை முத்தம்…
உணர்கிறேன் நான் என்
உயிர் உருகும் சத்தம்…
உனைக் காணாவிடில்
என் நெஞ்சில் பித்தம்…
நீயே என்றும் என்
வாழ்வில் உன்மத்தம்…
 

Advertisement