Advertisement

அத்தியாயம் – 27
வயிற்றுக்குள் ஏற்றுமதி செய்திருந்ததை இறக்குமதி செய்யும் வேலையில் டாய்லட் உள்ளே இருவர் இருக்க, வெளியே சோர்ந்து காத்திருந்த மற்றவர், முன்னில் நின்ற நால்வரைக் கண்டதும் புதிதாய் ஒரு ஹார்மோன் அச்சத்தை சுரக்க வியர்த்துப் போயினர். நிதினைக் கண்டதும் மிரண்டு விழித்தவர்களுக்கு விஷயம் புரிபட பயத்தை மறைத்து கோபத்துடன் முறைத்தனர்.
“ஏய், யாரு நீங்கல்லாம்… டேய், நீதான எங்களுக்கு சாப்பாட்டுல எதையோ கலக்கிக் கொடுத்திருக்கே…” நிதினிடம் பாய்ந்தான் ஷிவா. சஹானாவுக்குத் தங்களை அடையாளம் தெரியாதே என்ற தைரியத்தில். ஒரு கையால் வயிற்றைப் பிடித்துக் கொண்டு மறு கையால் தன்னைப் பிடிக்க வந்தவனை நிதின் ஒரு எத்து எத்தவும் சற்றுத் தள்ளி சுருண்டு விழுந்தான் ஷிவா. அதைப் பார்த்துக் கொண்டிருந்த சஹானாவின் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை மலர கண்கள் ஆர்வத்துடன் பளிச்சிட்டன.
“ஓ… உங்க யாருக்கும் எங்களைத் தெரியாதுல்ல… முதல்ல அறிமுகப் படுத்திக்கறோம்…” என்ற சாதனா, “நான் சாதனா, இது சஹானா, என்னோட ஒட்டிப் பிறந்த உடன்பிறப்பு… இது நரேன்… நான் கட்டிக்கப் போறவர்… இது நிதின்… அவளைக் கட்டிக்கப் போறவர்… வேற ஏதாச்சும் விவரம் வேணுமா…” என்றாள் வெறுப்பான முகத்துடன்.
“உங்களுக்கு இங்க என்ன வேலை… எதுக்கு வந்திங்க, வெளிய போங்க…” கத்திய ஒருவன் மேலே பேச முடியாமல் வயிற்றின் களேபரத்தில் அவஸ்தையாய் நெளிந்தான்.
ஒரு டாய்லட் கதவு திறக்கவும் அங்கே பாய்ந்தவனை பிடித்து வைத்த நிதின், “கேள்வி கேட்டுட்டு எங்கடா ஓடுற… நின்னு பதிலைக் கேட்டுட்டுப் போ…” எனவும், “ஆ… முடியலயே, ஐயோ… போயிட்டு வந்து கேட்டுக்கறேன்… விடுடா…” என்று கையை உதறி வேகமாய் ஓடினான்.
பத்தாவது ரவுண்டை முடித்துக் கொண்டு வெளியே வந்தவன் அங்கே நின்றவர்களை சோர்வுடன் பார்த்துவிட்டு எதுவும் சம்மந்தமில்லாத போல அப்படியே நிலத்தில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டான். அடுத்தவன் வர ஷிவா ஓடினான். யாருக்கும் அவர்களைப் பிரதிகரிக்கவோ, எதிர்க்கவோ தெம்பில்லாமல் இப்போதைக்கு
டாய்லட் கிடைத்தால் போதுமென்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர்.
“டேய், என்னடா மருந்தைக் கலந்த… இந்தப் புரட்டு புரட்டுது… எதுக்குடா இப்படிப் பண்ணினே…” வார்த்தைகளில் மட்டும்  வீரியத்துடன் பரிதாபமாய் கேட்ட ஷிவா அலைபேசியை எடுக்க அமைதியாய் அதை வாங்கி வைத்தான் நிதின். அங்கே அவர்கள் நிற்பதைப் பொருட்படுத்தாமல் டாய்லட்டே சொர்க்கமென்று மாறி மாறி ஓடியவர்களைக் கண்டு சாதனாவுக்கும் நரேனுக்கும் சிரிப்பு வந்தாலும் சஹானாவின் முகம் யோசனையுடன் இறுகிக் கிடந்தது. சிறிது நேரம் அவர்களை ஓடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற நிதின், “என்ன முடியலயா… அதை நிறுத்த என்கிட்ட ஒரு மருந்து இருக்கு…” என்றான்.
வயசான கிழவனைப் போல் நடக்க முடியாமல் கூனிக் கொண்டு வயிற்றைப் பிடித்து வந்தவன் நிதினின் வார்த்தையில் மலர்ந்தான்.
“ப்ளீஸ் அதைக் குடேன்… எதுவா இருந்தாலும் அப்புறம் பேசிக்கலாம்… இந்த அவஸ்தை தாங்க முடியல…” என்றான்.
“ஓகே தரேன்…” என்ற நிதின், பாக்கெட்டில் இருந்த மாற்று குளிகையை எடுத்து ஒவ்வொருத்தருக்கும் கொடுக்க அதை வாங்கியவர்கள், விழுங்காமல் சந்தேகத்துடன் பார்க்க, “அது விஷ மாத்திரை இல்ல, விழுங்கித் தொலைங்க…” எனவும் விழுங்கினர்.
“இப்ப ஒண்ணு பண்ணணுமே…” என்றவன் அருகில் நின்றவனின் இரு கைகளையும் பின்னில் பிடித்துக் கொண்டு கையில் உள்ள கயிற்றால் கட்டினான்.
“டேய்… எதுக்குடா அவனைக் கட்டிப் போடறே…” கேட்டுக் கொண்டே இரும்பு ராடு ஒன்றை எடுக்க முடியாமல் எடுத்த ஷிவாவை நரேன் பிடித்துக் கொள்ள அவனையும் கட்டி வைத்தனர். மற்ற மூவரையும் அதிக சிரமமில்லாமலே கட்டிப் போட்டனர்.
“டேய்… வயித்தைப் பிசையுது… அவிழ்த்து விடுடா…” என்று ஒவ்வொருவனாய் கெஞ்ச கேலியாய் சிரித்தாள் சஹா.
“இந்த அவஸ்தையைக் கூட உங்களால தாங்க முடியலியே… ரெண்டு நாள் என்னைக் கட்டிப் போட்டு மாறி மாறி மிருகங்களைப் போல மேல பாஞ்சிங்களே… அப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும்…” கேட்டுக் கொண்டே ஆத்திரத்துடன் ஒவ்வொருவர் முகத்திலாய் அறைந்தாள் சஹானா.
“ஏய், இங்க பாரு… உன்னை யாரு என்ன பண்ணாங்கன்னு எங்களுக்குத் தெரியாது… நீங்க எதோ தப்பா நினைச்சுட்டு எங்களைப் பழி வாங்க வந்திருக்கிங்க…” என்றான் ஷிவா.
சொன்னவனின் அருகில் சென்றவள், “ஓ… நாங்க தப்பா நினைக்கறோமா… உங்க முகத்தை வேணும்னா முகமூடி போட்டு மறைச்சிருக்கலாம்… ஆனா, உங்க ஒவ்வொருத்தன் குரலும் என் எல்லா செல்லிலும் பதிவாகியிருக்கு…” சொல்லிக் கொண்டே அவன் முடியைப் பற்றி ஆத்திரத்துடன் இழுக்க வலியில் கத்தினான்.
“பொண்ணுங்கன்னா வெறும் சுகம் கொடுக்கிற சதைப் பிண்டங்கள்னு நினைச்சிங்களா… நாங்களும் ரத்தமும், சதையும், அதுக்குள்ளே மனசும் உள்ள மனுஷப் பிறப்பு தான்டா… எங்களுக்கும் எத்தனையோ ஆசை, கனவு, லட்சியம் எல்லாம் இருக்கு… உங்களோட இந்த வக்கிர புத்தியால எங்க வாழ்க்கையையே சிதைச்சு உயிர் இருந்தும் நடை பிணமா ஆக்கி வச்சிடறிங்களே… உங்களைப் பெத்த அம்மாவும், கூடப் பிறந்த அக்கா, தங்கச்சியும் பொண்ணு தான்னு நினைச்சிருந்தா இப்படி ஒரு ஈனத்தனமான எண்ணம் உங்களுக்கு வந்திருக்குமா… அடுத்த வீட்டுப் பொண்ணுன்னா அவ்ளோ இளக்காரமா…” ஆத்திரத்துடன் கேட்டவளின் கண்ணில் அன்றைய நினைவில் கண்ணீர் வழிய பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தனர்.
அவளது ஒவ்வொரு வார்த்தையும் மனதிலிருந்த வலியைப் பிரதிபலிக்க சாதனாவின் கண்களும் நிறைந்திருந்தது.
“அழகான பாட்டாம்பூச்சியா, எத்தனையோ ஆசையோட, ஆயிரம் கனவுகளை சுமந்திட்டிருந்த என் சிறகை இப்படிப் பறிச்சுப் போட்டுட்டிங்களே… உங்களோட அல்ப்ப சுகத்துக்காக எனக்கு ஆயுள் தண்டனை கொடுத்து என் வாழ்க்கையே கேள்விக் குறியாக்கிட்டு இப்ப அடுத்த பொண்ணை சிதைக்கப் பிளேன் போடறீங்களா… உங்கள மாதிரி ஈனப் பிறவிங்களை எல்லாம் இன்னும் உயிரோட விட்டு வைக்கலாமா… சொல்லுங்க…” என்றவள் கீழே கிடந்த இரும்பு ராடால் அவர்களை மாறி மாறி அடிக்க வலியில் கதறினர். மற்ற மூவரும் அவள் மனக் குமுறல், ஆத்திரம் எல்லாம் தீரட்டும் என்று அமைதியாய் பார்த்திருந்தனர்.
அவள் பேச்சும் முகத்தில் தெரிந்த வேதனையும் நிதினின் மனதைத் துளைக்க அவர்களை கண்டம் துண்டமாய் வெட்டிப் போடும் ஆத்திரம் இருந்தாலும் சஹாவே அவர்களை தண்டிக்கட்டும் என்று பொறுமையாய் இருந்தான். ஆத்திரத்துடன் கை வலிக்கும் வரை அவர்களை அடித்தவள் அதைத் தூக்கி எறிந்துவிட்டு பெரிய மூச்சுகளாய் விட்டாள்.
“இவங்க கட்டை அவிழ்த்து விடுங்க…” அனத்திக் கொண்டு கிடந்தவர்களின் கைக்கட்டை அவிழ்த்து விட்டான் நிதின்.
“ப்ளீஸ், எங்களை விட்டுடுங்க… தெரியாமப் பண்ணிட்டோம்… இனி இப்படிப் பண்ண மாட்டோம்… உன் கால்ல வேணும்னாலும் விழறோம்…” எழுந்திருக்க முடியாமல் தவழ்ந்தபடி அவள் காலைப் பிடித்துக் கொண்டு ஒருவன் கெஞ்ச மற்றவர்களும் கெஞ்சத் தொடங்கினர்.
“அடச்சீ… நிறுத்துங்க… பெண்களுக்காக நீங்க எந்த உரிமையைக் கொடுக்கலைனாலும் பரவால்ல… ஒரு சக மனுஷியா இந்த பூமில வாழ அனுமதிச்சாலே போதும்… இப்ப கால்ல விழுந்தா போன என் மானம் திரும்ப வருமா… நீங்க திருந்திட்டேன்னு சொன்னா நடந்த எதுவும் இல்லாம ஆயிடுமா… மன்னிக்கக் கூடிய தப்பா நீங்க பண்ணிருக்கீங்க… உங்க தப்புக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா…” ஆங்காரத்துடன் கேட்டவளை அவர்கள் திகிலுடன் பார்க்க, “நரேன்… சாதனாவைக் கூட்டிட்டு கொஞ்ச நேரம் வெளிய போங்க…” என்றதும் இருவரும் வெளியே சென்றனர். மாத்திரையின் உதவியால் வயிற்றுக்குள் மட்டுப் பட்டிருந்த பிரளயம் இப்போது மீண்டும் தொடங்க அவள் என்ன செய்யப் போகிறாளோ என்ற பயத்தில் நெளிந்தனர்.
“ப்ளீஸ் சஹானா, நாங்க செஞ்சது தப்புன்னு ஒத்துக்கறோம்… எங்களை போலீஸ்ல வேணும்னாலும் பிடிச்சுக் கொடுங்க… ஆனா எதுவும் பண்ணிடாதீங்க…” கெஞ்சினான் ஷிவா.
“நானும் உங்ககிட்ட எவ்ளோ கெஞ்சிருப்பேன்… எத்தனை கதறி இருப்பேன்… ஏதாச்சும் உங்க காதுல வாங்கினீங்களா… இப்ப போலீஸ்ல புடிச்சு கொடுக்க சொல்லறீங்க… கோர்ட்டு கேஸுன்னு போனா, பணத்தைக் கொடுத்து எல்லாத்தையும் சரி பண்ணிட்டு வெளிய வந்திடலாம்னு நினைச்சீங்களா… உங்க எல்லாருக்கும் மூளையா இருந்த ஆகாஷ் இப்ப உயிருக்குப் போராடிட்டு ஆஸ்பத்திரியில் இருக்கான்… அது தெரியுமா… உங்களை மட்டும் எப்படி சும்மா விடறது…” கேட்டுக் கொண்டே மேசை மீதிருந்த சிகரெட் லைட்டரைக் கையில் எடுத்துக் கொண்டு அவனை நெருங்கியவள், “உன் பேண்ட் ஜிப்பைக் கழற்று…” என்றாள்.
அவன் அதிர்ச்சியுடன் நிதினையும் அவளையும் பார்க்க, “என்னடா, அவ சொன்னது காதுல விழலை… கழற்றுடா…” ஓங்கி ஒன்று கன்னத்தில் கொடுத்தான் நிதின்.
“இ..இல்ல, வேணாம்… ப்ளீஸ், எங்களை ஒண்ணும் பண்ணிடாதிங்க… விட்டுடுங்க…” அவன் பதற மற்றவர்கள் திகிலுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆகாஷ் ஆசுபத்திரியில் இருக்கிறான் என்ற செய்தி அவர்களை மேலும் சோர்ந்து போகச் செய்தது.
“ஏய் கழற்றுடா… இந்த உறுப்பு இருக்கிறதால மட்டும் நீ ஒரு ஆம்பளை ஆகிடுவியா… ஒரு பொண்ணோட அனுமதி இல்லாம அவளைத் தொடுறதால அந்த உடம்பு வேணும்னா களங்கப்படலாம்… ஆனா அவ மனசைக் களங்கப்படுத்த முடியாது… ஒரு பொண்ணோட மனசப் புரிஞ்சுகிட்டு அவ உணர்வுகளுக்கும், ஆசைகளுக்கும் மரியாதை கொடுத்து, அன்பால எவன் ஒருத்தன் அவளை அடிமையாக்குறானோ அவன்தான் உண்மையான ஆம்பள…” சொன்னவளின் கண்கள் அர்த்தத்தோடு நிதினை நோக்க அவன் கண்கள் அதைப் புரிந்து கொண்ட பெருமிதத்தில் பனித்தன.
ஷிவா மறுத்தாலும் நிதின் அவனது பேண்ட் ஜிப்பைக் கழற்ற மற்றவர்கள் திகிலுடன் நோக்கியிருந்தனர். அடுத்து மற்றவர்களின் ஜிப்பும் கழற்றப்பட அன்று ஆணென்ற ஆணவத்தில் கொக்கரித்தவர்கள் இப்போது நடக்கப் போகும் அபாயத்தை உணர்ந்து கெஞ்சத் தொடங்க அவர்களின் கைகளை பின்னில் கட்டி வைத்தான் நிதின்.
சஹானா சிகரெட் லைட்டரை ஆன் செய்ய அதிலிருந்து சுடர்விட்டு பிரகாசித்த நெருப்பைக் காட்டிலும் உக்கிரமாய் அவள் மனதுக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது எரிமலை ஒன்று. அவன் ஆணென்னும் அடையாளம் காட்டிய உறுப்பை கைகளால் மறைக்க முடியாமல் கதறினான் ஷிவா. சிகரெட் லைட்டரின் நெருப்பு அவன் அடையாளத்தை எரிக்கத் தொடங்க சிவாவின் அலறல் அந்தக் கட்டிடம் முழுதும் எதிரொலிக்கத் தொடங்கியது.
அடுத்த சில நிமிடத்தில் அவனோடு மற்றவர்களின் குரலும் சேர்ந்து அலற அதோடு தோல் பொசுங்கிய வாடையும்  சேர்ந்து குடோனை நிறைத்தது. மனதில் நெடுநாளாய்  குமுறிக் கொண்டிருந்த எரிமலை வெடித்துச் சிதறியதில் ஆசுவாசமாய் உணர்ந்த சஹானா சிகரெட் லைட்டரை எறிந்துவிட்டு மடிந்து அமர்ந்து அழத் தொடங்கினாள்.
அவள் தோளில் ஆதரவாய் கை வைத்த நிதின், கைப்பற்றி எழுப்பி வெளியே அழைத்துச் செல்ல அந்த ஐந்து பேரின் கதறல் குரல் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. சுகத்தை மட்டுமே அவர்களுக்குக் கொடுத்த உறுப்பு இனி எப்போதும் வலியான சுமையாய், வாழ்நாள் தண்டனையாய் தொடரப் போவதை உணர்ந்து கதறிக் கொண்டிருந்தனர். அறையை சாத்திவிட்டு வெளியே வந்தவர்கள், “நரேன்… பார்த்துக்கங்க… ஹாஸ்பிடல் கிளம்பறோம்…” என்றுவிட்டு சஹாவுடன் வெளியே நிறுத்தியிருந்த காரை நோக்கி நடந்தான் நிதின்.  
“குளோபல் கிளினிக்”
ஆகாஷின் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்ல அவனது ரத்தத்தில் விஷம் கலந்திருப்பதாய் ரிபோர்ட் வந்தாலும் அது எந்த மாதிரி விஷம் என்பதைக் கண்டறிய வேறொரு லாபுக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர்.
கை, கால்கள் இயங்க மறுத்த நிலையில், பேச முடியாமல் வாய் கோணி, கண் பார்வையும் போயிருக்க இதயத் துடிப்பு குறைந்து கொண்டே வந்தது. நரம்பியல் ஸ்பெஷல் டாக்டர் கிளம்பி வந்து கொண்டிருக்க அஜய் அடிக்கடி வந்து ஆகாஷை பரிசோதித்துக் கொண்டிருந்தான்.
கிருஷ்ணன் ஆகாஷைக் காண்பதற்காய் அறைக்குள் சென்றிருக்க யசோ அழுது கொண்டே இருந்தார். ஆஷிகா ஒரு மாதிரி இறுகிய மனோபாவத்துடன் மௌனமாய் இருந்தாள். நிதினும் சஹாவும் அங்கே வருவதை முதலில் கவனித்த ஆஷிகாவிற்கு சாதனாவை முன்னமே கண்டிருந்ததால் இவள்தான் சஹானா என்பது புரிந்தது. அவளைக் கண்டதும் முகம் மாறியவள் அருகிலிருந்த அன்னையின் கையில் இடித்தாள்.
“ம்மா… அந்தப் பொண்ணு வருது…” எனவும் நிமிர்ந்தவர் சஹானாவைக் கண்டதும் நிமிர்ந்தார். சோர்ந்த கண்களில் நிரந்தரம் குடிகொண்டிருந்த வலியை உணர முடிந்தது.
அவர்கள் அருகில் வரவும் எழுந்து கொண்ட யசோதா, சஹாவின் கையை ஆறுதலாய் பற்றிக் கொண்டார். தலை குனிந்து நின்றவர், “தெரிஞ்சோ, தெரியாமலோ எல்லாத்துக்கும் நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்… என்னை மன்னிச்சிடும்மா…” மென்மையான குரலில் கூறியவர் கையில் அழுத்தமாய் தட்டிக் கொடுத்தார்.
“அம்மா, நான் ஆகாஷைப் பார்க்கலாமா…” அவள் கேட்கவும், “ம்ம்… அவன் அப்பா உள்ளே இருக்கார்… வெளிய வந்ததும் போகலாம் மா…” என்றவர் மிகவும் சோர்ந்திருந்தார். ஒரு அன்னையாய் அவர் மனம் படும் பாட்டை சஹானா, நிதினால் புரிந்து கொள்ள முடிந்தது.
“அந்த அஞ்சு பேருக்கும்…” தயக்கத்துடனே அவர் இழுக்க, “கொடுக்க வேண்டிய தண்டனையை கொடுத்தாச்சு மா…” என்றான் நிதின். நடப்பதை ஒரு பார்வையாளராய் பார்த்திருந்த ஆஷிகாவிற்கு எல்லாமே முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விஷயங்கள் என்பது புரியத் தொடங்கியது.
கிருஷ்ணன் ஆகாஷின் அறையிலிருந்து வெளியே வர, “போ மா… பார்த்துப் பேச வேண்டியதை பேசிட்டு வா…” என்றார் யசோதா.
சாதனாவை மூன்று வருடம் முன்னே கண்டிருந்தவருக்கு உள்ளே நுழைந்தவளை எங்கேயோ கண்டது போல் தோன்ற யோசனையுடனே வெளியே வந்தார். அங்கே நின்ற நிதினைக் கண்டதும், “இவங்கல்லாம் யாரு… அந்தப் பொண்ணை எங்கயோ பார்த்த போலருக்கே…” என்றார்.
“ம்ம்… ஆகாஷ் கூடப் படிச்சவங்க… விஷயம் தெரிஞ்சு அவனைப் பார்க்க வந்திருக்காங்க…” என்றார் யசோ கண்ணீருடன்.
“ஓ…” என்றவர், “எப்படி இருந்த புள்ள… இப்ப கிடக்கற நிலமையை நீங்களும் போயி பாருங்க தம்பி…” என்றவர் வேதனையுடன் நகர்ந்து செல்ல நிதினுக்கே கஷ்டமாய் இருந்தது.
உள்ளே சென்ற சஹானா பல மருத்துவ உபகரணங்களுக்கு நடுவே அசைவின்றிக் கிடந்தவனை அமைதியாய் பார்த்து நிற்க கதவு திறக்கும் ஓசையில் மெல்லக் கண் திறந்தவனுக்கு மங்கலாய் ஒரு பெண் உருவம் முன்னில் நிற்பது தெரிந்தது.
“ஆகாஷ்… நான் சஹானா, நீங்க என்னைப் பார்த்ததில்லை… நானும் இப்ப தான் உங்களை முதல் தடவை பார்க்கறேன்… ஆனா அது இப்படிப்பட்ட சந்திப்பா இருக்கணும்கிறது நம்ம விதி… மூச்சு விடவே கஷ்டப்பட்டு கடைசி நிமிஷத்தை எதிர்பார்த்திருக்கிற உங்களை ரொம்பப் பேசி நோகடிக்க விரும்பலை… எல்லாத் தப்புக்கும் தண்டனை இருக்கு… ஆனா அதைத் தப்புன்னே உணராதவங்களுக்கு மரணம் மட்டுமே தண்டனையா இருக்க முடியும்… உங்களுக்கும் அதுவே விதிக்கப்பட்டிருக்கு… ஆனா, மரணத்தை விடக் கொடிய தண்டனை உங்க அம்மாவே உங்களைக் கொல்லத் துணிஞ்சது… அடுத்த ஜென்மத்திலாச்சும் அந்த அம்மாவுக்கு நல்ல மகனாப் பொறந்து வாங்க… குட்பை…” என்றவள் அவன் கிடக்கும் சூழ்நிலை மூச்சு முட்டுவது போலத் தோன்ற அதற்கு மேல் நிற்காமல் கிளம்பி விட்டாள். அவளது இறுதி வார்த்தை காதில் விழுந்ததும் ஆகாஷின் கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.  அவனைப் பரிசோதிக்கும் நர்ஸ் உள்ளே வந்து ECG மானிட்டரைப் பார்க்க அதில் பல்ஸ் குறைந்து கொண்டே வந்ததால் டாக்டரை அழைக்க விரைந்தாள்.
எதிரில் நியூரோ சர்ஜனுடன் ஆகாஷின் அறைக்கு வந்து கொண்டிருந்த அஜயிடம் விஷயத்தை சொல்ல அவன் வேகமாய் அறைக்குள் சென்றான். கிருஷ்ணனும் ஆஷிகாவும் பதட்டத்துடன் அறை முன்னில் நின்று கொண்டிருக்க நாற்காலியில் அமர்ந்திருந்த யசோதா சரிந்து விழுவதைக் கண்ட ஆஷிகா பதறி ஓடி வந்தாள்.
“ஐயோ அம்மா, என்னாச்சு மா… எழுந்திருங்க…” மடியில் அன்னையைக் கிடத்திக்கொண்டு மகள் கதறுவதைக் கண்ட கிருஷ்ணனும் பதறினார்.
“யசோ… எழுந்திருமா, என்னாச்சு…” கதறிய கணவனைக் கண் திறந்து பார்த்தவரின் கடைவாயில் புன்னகையுடன் ரத்தமும் சேர்ந்து வழிய அதை அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.
மனுநீதிச் சோழனோடு
மடிந்து விடவில்லை
மனிதமென்னும் நீதி…
ஆயிரம் கனவுகளோடு
ஆசையாய் பெற்ற மகனின்
அநீதி பொறுக்காமல்
தர்மத்தின் வழிநடந்து
கொலையும் செய்வாள் தாய்…
அன்று கருவறைக் கனவுகள்
கல்லறையில் புதைபடும்…

Advertisement