Advertisement

அத்தியாயம் – 2
“சஹா… இந்த மிக்ஸி ஓகே வான்னு பாரு…” அன்னையின் குரலில் திரும்பிய சஹானா கண்டதுமே மனதில் சாரல் வீசும் அழகோடு இருந்தாள். பளிச்சென்ற வெள்ளை சல்வாரில் நெற்றியில் ஒரே ஒரு கறுப்புப் பொட்டு தவிர எந்த அலங்காரமும் இல்லை. காது, கழுத்து எல்லாமே காலியாய் கிடக்க ஒளி வீசும் கண்களில் மட்டும் ஒருவித வெறுப்பு நிறைந்திருந்தது.
“உனக்குப் பிடிச்சதை வாங்கிக்கம்மா…” சொல்லி முடித்துக் கொண்டவள் கையில் வைத்திருந்த லிஸ்டில் வேறு பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தாள்.
“ஊரிலிருந்து எல்லா பொருளையும் கொண்டு வந்திடலாம்னு சொன்னா கேட்டாத் தானே… இங்கயே வாங்கிக்கலாம்னு சொல்லறே… எவ்ளோ தான் வாங்க முடியும்…” அலுத்துக் கொண்டே சசிகலா கேஸ் அடுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர்களின் சொந்த வீடு பாலக்காட்டில் இருக்க வங்கியில் அசிஸ்டன்ட் மானேஜராய் பணிபுரியும் மகளின் உத்தியோக மாற்றல் காரணமாய் திருப்பூருக்கு வந்திருந்தனர். சசிகலாவும் கணவர் சாமுவேலும் காதலித்து மணம் புரிந்தவர்கள். மதங்கள் காதலுக்கு குறுக்கே வர அதை உடைத்து இரு குடும்பங்களையும் எதிர்த்து காதலில் வென்று கல்யாண வாழ்வைத் தொடங்கியவர்கள்.
திருச்சி ரயில்வேயில் பணிபுரிந்த சாமுவேலுக்கு பாலக்காடுக்கு மாற்றல் வர அங்கே வந்தவர்களுக்கு ஒரே பிரசவத்தில் முத்தாய் இரு பெண் பிள்ளைகள் பிறக்க அங்கேயே செட்டில் ஆயிருந்தனர். சாதனாவுக்கு ஐந்து நிமிடம் முன்பு பிறந்ததால் சஹானா அக்காவாகப் பதவி உயர்வு பெற்றிருந்தாள். அசப்பில் ஒரே போல இருந்தாலும் இருவரின் குணமும் சற்று வித்தியாசமானது.
சஹானா அமைதியானவள்… எந்த ஒரு பிரச்சனையையும் அமைதியாய் யோசித்து தீர்வு காண்பாள். படிக்கும்போதே நிறைய பாங்க் எக்ஸாம் எழுதிக் கொண்டிருப்பாள். காலையில் பத்து மணிக்கு தொடங்கி ஐந்து மணிக்கு வீடு திரும்பும் உத்தியோகம் என்பதோடு எல்லா அரசு விடுமுறைகளும் கிடைக்கும்… சம்பளமும் அதிகம் என்பதால் அவளுக்கு பாங்கில் வேலைக்குப் போக வேண்டுமென்பது மிகவும் விருப்பமாய் இருந்தது. அதற்காகவே பாங்கு வேலைக்கான எந்த பொதுத் தேர்வையும் விடாமல் எழுதி வந்தவளுக்கு வங்கியிலேயே வேலையும் கிடைத்து இப்போது பதவி உயர்வில் இட மாற்றலும் கிடைத்துவிட்டது.
சாதனா நேர்மாறானவள். கண்ணெதிரே எந்த குற்றத்தைக் கண்டாலும் தைரியமாய் தட்டிக் கேட்கும் சூட்டிப்பானவள்… அவளுக்கு மக்களுக்கு சேவை செய்யும் நேர்மையான போலீஸ் அதிகாரியாய் வரவேண்டும் என்பது விருப்பம். ஆனால் தந்தை சாமுவேல் ஒரு ரயில் விபத்தில் இறந்து போக வாரிசு முறையில் அவளை ரயில்வே வேலைக்கு தேர்வாக்க பனி நியமனதிற்காய் காத்திருந்தனர். இரு பெண் பிள்ளைகளையும் அவர்கள் விருப்பப்படியே படிக்க வைத்திருந்தனர் அவர்களின் அன்புப் பெற்றோர்.
“அந்த குக்கர் எடுங்க…” சஹானா எடுத்த குக்கரைப் பார்த்த சசிகலா, “பாரேன்… முக்கியமா வாங்க வேண்டியதை மறந்துட்டேன்…” என்று அவரும் சேர்ந்து கொள்ள மற்ற பொருட்களையும் வாங்கிக் கொண்டிருந்தனர்.
“என்னம்மா, இன்னும் வாங்கி முடியலையா… ஸ்ரீ குட்டியை தூங்க வைக்குற டைம் ஆச்சு… சீக்கிரம் முடிங்க…” கூறிய சாதனாவை ஏறிட்ட சசிகலா அவள் இடுப்பில் பொம்மை போல் அமர்ந்திருந்த அழகான குழந்தையை நோக்கிக் கை நீட்ட ஆவலுடன் பாய்ந்து வந்து அவர் கழுத்தை சிநேகத்துடன் கட்டிக் கொண்டது ஸ்ரீகுட்டி என்னும் ஸ்ரீ லயா… இரண்டு வயதில் பொம்மைக்கு கை கால் வைத்தது போல் அழகாய் அவரை நோக்கி சிரித்தது. குண்டுக் கன்னத்தைக் செல்லமாய் கடித்து கொஞ்சினார் சசிகலா.
“என்னடா செல்லம், ஸ்ரீ குட்டிக்கு தூக்கம் வருதா…” அவர் கேட்கவும், “ம்ம்…” என்றுவிட்டு உறக்கம் தேங்கி நின்ற கண்களுடன் தலையாட்டி தோளில் சாய்ந்து கொண்டது.
அவை எதையும் கண்டு கொள்ளாமல் வாங்கிய பொருட்களை பில்லுக்கு கொண்டு சென்ற சஹானா பணத்தைக் கொடுத்து வாங்கிக் கொண்டு வாசலுக்கு நகர, “குடு சஹா… நானும் பிடிச்சுக்கறேன்…” என்று அவளிடம் இருந்ததில் பாதியை வாங்கிக் கொண்டாள் சாதனா.
பார்க்கிங்கில் இருந்த காரை நோக்கி நகர்ந்தவர்கள் பின்னில் பொருட்களை வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர். சசிகலாவின் மடியில் குழந்தை உறங்கத் தொடங்கியிருந்தது.
சஹானா காரைக் கிளப்ப சாலையில் கலந்தனர்.
“நம்ம ஊருக்கு திருப்பூர் ரொம்பவே டிராபிக் தான்… எல்லாரும் ரூல்ஸ் பார்க்காம இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுறாங்க… நாம சரியா போனாலும் எதிர்ல வர்றவங்களைப் பார்த்து பயமா இருக்கு இல்ல சஹா…” வெளியே பார்த்துக் கொண்டிருந்த சாதனா கூறவும்,
“ம்ம்… கொஞ்ச நாள்ல நாமும் பழகிடுவோம்… எப்படி தப்பா வண்டி ஓட்டலாம்னு…” என்றாள் சஹானா.
“நாளைக்கு தான நீ டியூட்டில ஜாயின் பண்ணனும்… பாங்கு எங்கிருக்குன்னு விசாரிச்சுட்டியா…”
“நம்ம வீட்டுல இருந்து கொஞ்சம் தூரம் தான்… ஆனாலும் வண்டி இருக்கே… சமாளிச்சுக்கலாம்…”
சொல்லிக் கொண்டே மங்கலம் ரோடில் காரைத் திருப்பியவள் அபார்ட்மென்ட்க்கு வண்டியை விரட்டினாள்.
சரியாய் பத்தாவது நிமிடத்தில் கோகுலம் அபார்ட்மென்ட்ஸ் போர்டைத் தாங்கியிருந்த கேட்டுக்குள் காரை நுழைத்து பார்க்கிங்கில் விட்டு இறங்கினர். சசிகலா உறங்கும் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு முன்னில் நடக்க சஹானாவும், சாதனாவும் கையில் பெரிய பார்சல் கவருடன் இறங்கினர். அவர்களைக் கண்டு அருகில் ஓடிவந்த செக்யூரிட்டியின் உதவியுடன் லிப்ட்டுக்கு நடந்தனர்.
உள்ளே நுழைந்து நான்காம் எண்ணைத் தட்டவும் விர்ரென்று மேலே உயரத் தொடங்கியது அந்தத் தானியங்கி. லிப்ட் நின்று வெளியே வந்தவர்கள் அவர்களின் பிளாட்டை நோக்கி நடக்க முன்னில் நின்று பேசிக்கொண்டிருந்த இரு பெண்மணிகள் இவர்களை சிநேகமாய் பார்த்து சிரித்தனர்.
“நீங்க தான் இங்கே புதுசா வந்திருக்கிங்களா… நான் சரளா, பக்கத்துக்கு பிளாட்… இவ பிரவீணா, எதிர் பிளாட்… இவங்க ரெண்டு பேரும் ஒரே போல இருக்காங்களே…” தங்களைப் பரிச்சயப்படுத்திக் கொண்டே மூவரையும் ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் வெறுமனே புன்னகைத்த சஹானா கதவைத் திறக்க செல்ல, “ஆமா ரெண்டு பேரும் இரட்டைப் பிள்ளைங்க… அவ மூத்தவ சஹானா, ஸ்டேட் பாங்குல அசிஸ்டன்ட் மானேஜரா வொர்க் பண்ணுறா… நாளைக்கு இங்கே ஜாயின் பண்ணப் போறா…” என்றவரிடம் “குழந்தையைக் குடுங்கம்மா…” என்ற சாதனா வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல, இவ இளையவ சாதனா… ரயில்வே வேலை நியமனத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கா…” என்றார் புன்னகையுடன்.
“ஓ… அப்படியா…” என்ற பிரவீனா குழந்தையை ஆர்வத்துடன் பார்க்கவும், “சரி, நீங்க பேசிட்டு இருங்க… இதெல்லாம் உள்ள கொண்டு போயி வைக்கணும்… நாளைக்குப் பேசறேன்…” என்று சசிகலா இருவரிடமும் சொல்லி விட்டு கவருடன் வீட்டுக்குள் நுழைந்தார்.
“என்ன சரளா, இவங்க பொம்பளைங்க மட்டும் தான் இருக்காங்களோ… அப்ப, அந்தக் குழந்தை யாரோடது… அதைப் பத்தி ஏதும் சொல்லலையே… பொண்ணுங்க கழுத்துல தாலியும் காணோம்… ஆனா அந்தப் பொண்ணுங்க ஜாடைல மூக்கும், முழியுமா இருக்கு… என்னவாருக்கும்…” பிரவீணா யோசனையாய் கேட்க, “யாருக்குத் தெரியும்… ஆளைப் பார்த்தா எல்லாம் நல்லவங்க போல தான் இருக்காங்க… எந்தப் புத்துல எந்தப் பாம்புன்னு பழகினா தான தெரியும்… பார்த்துக்கலாம் விடு…” என்றாள் சரளா.
“ம்ம்… அதானே, இந்தக் காலத்துல யாரையும் நம்பவே முடியறதில்லை… எனக்கென்னவோ அந்தக் குழந்தையைப் பத்தி அவங்க எதும் சொல்லாதாதால ஒரு டவுட்டாவே இருக்கு… சரி நான் கிளம்பறேன்… என் வீட்டுகாரர் லஞ்சுக்கு வந்திருவார்…” சொல்லிக் கொண்டே அவள் வீட்டுக்கு நடக்க சரளாவும் இவர்களைப் பற்றிய யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள்.
“என்னம்மா, அவங்களை வீட்டுக்குள்ள கூப்பிடாம அப்படியே பேசி அனுப்பிட்டிங்க…” கேட்ட சாதனாவிடம், “அவங்க ரெண்டு பேர் பார்வையுமே சரியில்லடி… வாய் என்கிட்டே பேசிட்டு இருந்தாலும் பார்வை நம்ம எல்லாரையும் ஆராய்ச்சி பண்ணிட்டே இருந்துச்சு… குறிப்பா நம்ம ஸ்ரீக்குட்டி மேல… விட்டா phd பண்ணி பட்டமே வாங்குவாங்க போல… சரியான வம்பு பிடிச்சவங்களா தோணுச்சு… அதான் பேச்சைக் கட் பண்ணிட்டு உள்ளே வந்துட்டேன்… சரி நான் சீக்கிரம் சமையலை முடிக்கறேன்… நீ இதெல்லாம் எடுத்து வை…” சொல்லிவிட்டு அடுக்களைக்கு நடந்தார்.
சிறிது நேரத்திலேயே சமையல் தயாராகிவிட வாங்கிய பொருட்களை ஒதுக்கி வைத்து உணவை முடித்துக் கொண்டனர். அந்த பிளாட் வங்கியில் பணிபுரியும் ஒருவரின் நண்பருக்கு சொந்தமானது. அவரது குடும்பம் இப்போது வெளிநாட்டில் இருந்ததால் சிலதைத் தவிர கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறி, சோபா, டீவி என்று வீட்டு உபகரணங்கள் அனைத்தும் இருந்தது. வீட்டிலிருந்து வங்கிக்கான தூரமும் வாடகையும் சற்று அதிகம் என்றாலும் எல்லா வசதிகளுடனும் சௌகர்யமாய் இருந்ததால் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அபார்ட்மென்ட் உள்ளேயே ஒரு குழந்தைகளுக்கான பார்க், அருகிலேயே கோவில் என்று அழகான சூழ்நிலையோடு ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக அமைதியாகவும் இருந்தது.
உணவு முடிந்து சஹானா கையில் ஒரு புத்தகத்துடன் அறைக்குள் ஒதுங்கிக் கொள்ள, சாதனாவும் சசிகலாவும் டீவியில் ஏதோ சினிமாவைப் பார்த்து செண்டிமெண்ட் சீனில் மனமுருகி உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.
அறையில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீகுட்டி கண்ணைத் திறந்து மலங்க மலங்கப் பார்க்க சஹானா மட்டுமே பார்வைக்குக் கிடைக்க சிணுங்கலாய் அழத் தொடங்கினாள். குழந்தையின் அழுகையைக் கண்டதும் முகத்தை சுளித்தவள் கத்தினாள்.
“சாதனா, உன் குழந்தை அழுகற சத்தம் கேட்குதா இல்லையா… வந்து எடுத்திட்டுப் போ… சனியன்… என்னைப் பார்த்ததுமே கத்தத் தொடங்கிருச்சு…” என்றாள் கோபத்துடன்.
அவள் குரலில் டீவியின் கவனம் கலைந்து அவசரமாய் அறைக்குள் நுழைந்த சாதனா, “ஸ்ரீக்குட்டி… சரிடா செல்லம்… அழக்கூடாது… அம்மா வந்துட்டேன்ல…” சொல்லிக் கொண்டே அவளை தட்டிக் கொடுத்து வெளியே எடுத்துச் சென்றாள்.
“பாவம், பிள்ளைக்குப் பசிக்குமாருக்கும்… நீ போயி சாதம் எடுத்திட்டு வா… அவளை என்கிட்டே கொடு…” என்று வாங்கிக் கொண்டார் சசிகலா.
மசிய வேக வைத்த பருப்பும் நெய்யும் கலந்து குழைத்த சாதத்தை குழந்தைக்கு ஊட்ட அது பசியில் வேகமாய் வாங்கிக் கொண்டு மெல்ல அவளை நோக்கி சிரித்தது.
“என் செல்லத்தை சனியன்னு சொல்ல இந்த அக்காவுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ… ச்சே… சரியான ராட்சசி… நீ சாப்பிடுடா செல்லம்… என் ஸ்ரீக்குட்டி யாரு செல்லம் சொல்லுங்க…” கேட்டுக் கொண்டே ஊட்டினாள்.
“நானு பாத்தி செல்லம்…” தலையை ஆட்டிக் கொண்டே குழந்தை சொல்ல சோகமாய் முகத்தை வைத்துக் கொண்ட சாதனா, “பார்த்தியா… அம்மா உனக்குப் பிடிக்காதா… நீ அம்மா செல்லம் இல்லியா…” என்றாள் உதட்டைப் பிதுக்கி.
“இல்ல… நானு அம்மா, பாத்தி செல்லம்… மம்மி நானா… டூ…” குழந்தை கண்ணை உருட்டி தலையாட்டியபடி சொன்னது.
“ம்ம்… அப்படி சொல்லுடி… என் செல்லக் குட்டி…” அவள் குழந்தையைக் கொஞ்சுவதையே பார்த்துக் கொண்டிருந்த சசிகலா ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்ற அவர் மனதில் கசப்பாய் சில நிகழ்வுகள் வந்து போக முகம் வாட யோசனையுடன் அமர்ந்திருந்தார்.
அறைக்குள்ளிருந்து அவர்கள் பேசுவது அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டிருந்த சஹானாவின் முகம் கோபத்திலும் வெறுப்பிலும் சிவந்திருக்க கையிலிருந்த புத்தகத்தைத் தூக்கி எறிந்தவள் சோர்வுடன் கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.
கண்ணிலிருந்து சூடாய் இரு கண்ணீர்த் துளிகள் காதை நனைக்க காதுக்குள் அந்தக் குரல் கரகரப்பாய் ஒலித்தது.
“சீக்கிரம் வந்திடுவ தான சஹிம்மா…”
நீ சென்றபின்னும்
மறையவில்லை…
என்னுள்ளத்தில்
நீ வந்த சுவடுகள்…

Advertisement