Advertisement

அத்தியாயம் – 6
“அண்ணா… அம்மா எவ்ளோ நேரமா சாப்பிட கூப்பிட்டு இருக்காங்க… கீழ வராம என்ன பண்ணிட்டு இருக்கே…” கேட்டுக் கொண்டே அண்ணனின் அறைக்குள் நுழைந்த பிரபா அவனது கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனாள்.
இரவெல்லாம் உறங்காத கண்கள் கொவ்வைப் பழமாய் சிவந்திருக்க தலையெல்லாம் கலைந்து ஆபீஸ் கிளம்ப வேண்டிய நேரத்தில் சோபாவில் எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனைக் கண்டு கலங்கிப் போனாள்.
“அண்ணா, என்னாச்சுண்ணா… உடம்புக்கு முடியலையா… நைட்டும் சாப்பிட ஏதும் வேண்டாம்னு சொல்லிட்டே…” கேட்டுக் கொண்டே அவன் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துப் பார்க்க சாதாரணமாய் தான் இருந்தது.
“என்னண்ணா, எதை கேட்டாலும் பதிலே சொல்ல மாட்டேங்கற… உன்னை இப்படிப் பார்க்க கவலையா இருக்கு… அம்மா உனக்குப் பிடிச்ச டிபன் பண்ணிட்டு சாப்பிட கூப்பிட்டே இருக்காங்க… நீ என்னடான்னா இப்படி உக்கார்ந்துட்டு இருக்கே… நைட் எல்லாம் தூங்கவே இல்லையா… கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு… உனக்கு என்ன தான் பிரச்சனை… சொல்லுண்ணா…” கேட்கும்போதே குரல் தொண்டைக்குள் அடைத்துக் கொள்ள கண்கள் கலங்கக் கேட்டவளை ஏறிட்டான்.
“ப்ச்… எனக்கென்ன, நல்லா தானே இருக்கேன்… அம்மாகிட்ட வந்திடறேன்னு சொல்லிடு…” சொல்லிவிட்டு டவலுடன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
புரியாமல் யோசித்துக் கொண்டே நின்ற நித்யபிரபா “இதை இப்படியே விட்டுவிடக் கூடாது… அண்ணாவோட மனசுல என்னதான் இருக்குன்னு நிச்சயம் தெரிஞ்சுக்கணும்…” என நினைத்துக் கொண்டே அன்னையிடம் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றவள் சரவணனுக்கு அழைத்தாள். நிதினைப் பற்றி மனதில் உள்ள குழப்பங்களை சொல்லி அவனிடம் பேசும் பொறுப்பைக் கொடுத்த பிறகு தான் நிம்மதியானாள்.
ஷவரைத் திருகி குளிர்ந்த நீரின் அடியில் வெகு நேரம் நின்றும் மனதின் கொதிப்பு மட்டும் நிதினுக்கு அடங்கவே இல்லை. முன்தினம் மாலை நடந்த நிகழ்ச்சி மாறாத வலியாய் மனதை வாட்டிக் கொண்டிருந்தது. அவர்கள் சென்றும் வெகு நேரம் அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்தவன் மெல்ல தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
அவள் அத்தனை பேர் முன்னிலையில் தன்னை அடித்தது  கூட அவனுக்குப் பெரிய விஷயமாய் தோன்றவில்லை. தன்னை யாரென்றே தெரியாது என்று அழுத்தமாய் கூறி அதற்காக தன் பெயரைக் கூட மாற்றிக் கூறி விட்டாளே என்று நினைக்கும்போது தான் ஆத்திரமாய் வந்தது.
“இப்படில்லாம் சொல்லிட்டா நான் உன்னை யாரோன்னு நினைச்சுப் பேசாமப் போறதுக்கு கிறுக்குப் பையன்னு நினைச்சுட்டியா… விட மாட்டேன்… நீ இன்னொரு தடவை என் கண்ணுல பட்டே… பட்டுடாதே… பட்டேன்னா கதி கலங்கிப் போயிருவ…”
“மூணு வருஷமா உருகி உருகி காதலிச்சு, என்னை உன் காதலால திணறடிச்சு, அன்புக்கு அடிமையாக்கி, நீயில்லாம நானில்லைன்னு என்னைப் பைத்தியம் போல நினைக்க வைத்து, உன்னைப் பார்க்காம என்னால ஒரு நாள் கூட இருக்க முடியாது ரூபன்னு கொஞ்சிட்டே சொன்னவளுக்கு இப்ப என்னை யாருன்னே தெரியாமப் போயிருச்சா… தெரிய வைக்கிறேன்… நான் யாருன்னு தெரிய வைக்கிறேன்டி… உனக்கு ஜாலியாப் பொழுது போக என்னை ஊறுகாயா யூஸ் பண்ணிருக்கியா… நானும் அது புரியாம லூசு போல இருந்திருக்கேன்…” நினைக்க நினைக்க ஆத்திரம் அதிகமாகிக் கொண்டே செல்ல கண்ணை மூடி வெகுநேரம் நின்றான்.
புறப்பட்டு வந்தவன் அன்னையின் கேள்விக்கு பயந்து பேருக்கு டிபனை முழுங்கிவிட்டு கிளம்பினான். அலுவலகம் வந்தபின்னும் எந்த வேலையிலும் மனது பதியாமல் சண்டித்தனம் செய்ய வெறுப்புடன் அமர்ந்திருந்தான். தலையை குலுக்கியவன் வலுக்கட்டாயமாய் வேலைகளை கவனிக்க சற்று நேரத்தில் அதில் மூழ்கிப் போனான்.
நடுவில் வந்த டீயைக் குடிக்கும் இடைவேளையில் மீண்டும் அந்த நினைவுகள் மனதை ஆக்கிரமிக்கத் தொடங்க சற்று நேரம் வெறுப்புடன் அமர்ந்திருந்தான். அலைபேசி சிணுங்கி அவன் சிந்தையைக் கலைக்க எடுத்துப் பேசினான். சரவணன் தான் அழைத்திருந்தான்.
“ஹலோ சொல்லு மாப்பிள்ள…”
“நான் ஹலோ சொல்லுறது இருக்கட்டும்… நீ இப்ப ப்ரீயா இருந்தா பாங்குக்கு வர முடியுமா…”
“என்ன விஷயம்…”
“புதுசா மெஷினரீஸ் வாங்க லோன் எடுக்கற விஷயமா அப்ளிகேஷன் ரெடி பண்ணோமே… அதை மேனேஜர் கிட்ட பேசி வச்சிருந்தேன்… உன்னை வந்து பார்க்க சொன்னார்…”
“ஓ… சரி இப்ப கிளம்பி வரட்டுமா…” என்றவனை அவன் சரியென்று கூற உடனே பாங்குக்கு கிளம்பினான் நிதின்.
“வா மச்சான்… காபி சாப்பிடறியா…” வருங்கால மனைவியின் அண்ணனை மரியாதையாய் விசாரித்தான் சரவணன்.
“வேண்டாம் மாப்பிள்ள… வரும்போது தான் டீ குடிச்சேன்…”
“ம்ம்… ஏன் டல்லா இருக்கே… வேலை ஜாஸ்தியா…” கேட்டுக் கொண்டே எதிரில் அமர்ந்திருந்தவனை ஒரு ஆழப் பார்வை பார்த்தான்.
“ஹா… ம்ம்… ஆமா, கொஞ்சம் வொர்க் டென்ஷன் அதான்…”
“கல்யாண வேலை எல்லாம் எப்படிப் போகுது…”
“அம்மா எல்லாம் பார்த்துக்கறாங்க… அத்தை சொன்ன மண்டபத்துக்கு அட்வான்ஸ் கொடுத்தாச்சு… நகை, துணின்னு அவங்க எப்ப சொல்லுறாங்களோ எல்லாத்துக்கும் அம்மாவும், பிரபாவும் தயாரா இருக்காங்க… சமையலுக்கும் அத்தையே ஒருத்தரை சொன்னாங்க… அவரைப் பார்த்து பேசி அம்மா அட்வான்ஸ் கொடுத்துட்டாங்க…”
“ம்ம்… அம்மா உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கிறாங்க… தெரிஞ்சும் என்னால ஏதும் சொல்ல முடியல… நான் ஏதாச்சும் சொல்லிட்டா அப்புறம் அது நாளைக்கு பிரபாவுக்கு பிரச்னை ஆகிடக் கூடாதுன்னு அமைதியா இருக்கேன்… பணம் ஏதாவது தேவைன்னா சொல்லு மச்சான்… நான் ஏற்பாடு பண்ணித் தரேன்…”
“ம்ம்… அதெல்லாம் பரவால்ல மாப்பிள்ள… அத்தை பத்தி தான் தெரியுமே… சரி, மேனேஜரைப் பார்த்துடலாமா…”
“ம்ம்… இரு, கேட்டுட்டு வர்றேன்…” என்று எழுந்தவன் மேனேஜரின் அறைக்கு சென்றுவிட்டு இரண்டு நிமிடத்தில் திரும்பி வந்து நிதினை அழைத்துச் சென்றான்.
சாந்தமூர்த்தி கேட்ட சம்பிரதாயக் கேள்விகளுக்கு பதிலை சொன்னவன், எதற்காக லோன், என்ன பட்ஜெட் மெஷினரீஸ் என்றெல்லாம் கூற அவர் இவனது கம்பெனி வீடு, எவ்வளவு லோன் தேவை என்று எல்லாவற்றையும் விசாரித்துக் கொண்டவர் இண்டர்காமை எடுத்து அழைத்தார்.
“ஒரு புது லோன் பிராசஸிங்மா… நம்ம சரவணன் கசின் தான்… என் ரூமுக்கு வர முடியுமா…”
எதிர்ப்புறம் ஏதோ பதில் சொல்லவும், “ஓ… அப்படியா, சரி… நீங்க அந்த கஸ்டமரை முதல்ல பார்த்துட்டு அனுப்புங்க… நான் இவங்களை உங்க காபின்ல வெயிட் பண்ண சொல்லறேன்…” என்று வைத்தார்.
“சரவணன்… எனக்கு வெளிய ஒரு வேலை இருக்கு… நீங்க இவரை லோன் செக்சன் அசிஸ்டன்ட் மேனேஜர் காபினுக்கு அழைச்சிட்டுப் போயி வெயிட் பண்ணுங்க… அவங்க ஒரு கஸ்டமரை அட்டன்ட் பண்ணி முடிச்சிட்டு உங்க அப்ளிகேஷன் பார்ப்பாங்க…” என்று எழுந்து கொள்ளவும், நன்றி கூறி நிதினுடன் வெளியே வந்தான் சரவணன்.
சற்றுத் தள்ளி இருந்த காபினுக்கு நிதினை அழைத்துச் சென்றவன் முன்னில் இருந்த நாற்காலியில் அவனை அமரச் சொல்லிவிட்டு முக்கால்வாசி தடுப்புக்கு மேல் கண்ணாடி பதித்திருந்த அந்த காபினுக்குள் நுழைந்தான்.
எதிரில் இருந்த நபரின் லோனுக்கான எலிஜிபிலிட்டி தொகையை கம்ப்யூட்டர் திரையில் பார்த்துக் கொண்டிருந்த சஹானா நிமிர்ந்து மெல்லப் புன்னகைத்தாள்.
“ஒரு பைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க…” எனவும், அவன் தலையாட்டி வெளியேற அவள் கணினியில் தொடர்ந்தாள். வெளியே வந்த சரவணன் அடுத்திருந்த மேசையில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்க நிதினுக்கு அலைபேசியில் ஒரு முக்கியமான அழைப்பு வரவும், எழுந்தவன் சற்றுத் தள்ளி சென்று பேசிக் கொண்டிருந்தான்.
அந்தக் கஸ்டமர் கதவைத் திறந்து வெளியே வரவும், நிதினின் தோளில் தட்டி சரவணன் “வா…” என்றழைக்க, “நீ போ… வர்றேன்…” என்பது போல் சைகை செய்தான்.
உள்ளே நுழைந்த சரவணன், “அஞ்சு நிமிஷம் மேடம்… அதுக்குள்ளே அவனுக்கு ஏதோ அர்ஜன்ட் கால் வந்திருச்சு போலருக்கு…” என்றுவிட்டு பொதுவாய் அந்த லோனைப் பற்றிய விவரங்களைக் கூற அவள் கேட்டுக் கொண்டாள்.
“இதான் அந்த லோனுக்கான பைல்…” என்று சொல்லி நீட்டும்போதே கதவைத் திறந்து கொண்டு நிதின் உள்ளே வர நிமிர்ந்தவள் அவனைக் கண்டதும் அதிர்ச்சியில் சடாரென்று இருக்கையிலிருந்து எழுந்தாள்.
அவளது உடம்பிலிருந்த குருதி மொத்தமும் உறைந்து விட்டது போல் வெளிறிப் போன முகத்துடன் அதிர்ந்து நின்று கொண்டிருக்க உள்ளே வந்த நிதினின் முகத்திலோ கோபமும் வெறுப்பும் போட்டி போட்டுக் கொண்டு வழிய, அவளை நோக்கி ஏளனமாய் சிரித்தான்.
“ஹோ, இப்பப் புரிஞ்சிருச்சு… புது வேலை, ஏசி, தனி ரூம், பதவி… ம்ம்… வாழ்வு செழிப்பா போகவும் தான் என்னை யாருன்னே மறந்திருச்சோ…” அவன் கேட்கவும் ஒட்டிக் கொண்ட அவள் நாக்கு அசைவேனா என்று அடம்பிடிக்க கண்ணில் முணுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்த்தது.
“மச்சான்… என்னாச்சு, எதுக்கு இப்படிப் பேசற…” சரவணன் கேட்கவும் இடம் உணர்ந்தவன் நிதானமாய் பேசினான்.
“ஏண்டி… எதுக்கு இப்படி நான் போற இடத்துக்கு எல்லாம் என் முன்னால வந்து நின்னு என்னைக் கொல்லற… என்னை வேண்டாம்னா காரணத்தை சொல்லிட்டு போயிருக்கலாமே, அதை விட்டுட்டு ஒரு பைத்தியக்காரன் மாதிரி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தி, அடிச்சு கேவலப் படுத்தி… ச்சீ… நீயெல்லாம் ஒரு பொண்ணா… உனக்கெல்லாம் நேரத்துக்கு ஒரு காதல், சௌகர்யத்துக்கு ஒரு கல்யாணம்னு எப்படி வாழ முடியுது… அதெப்படி… நேத்து எங்கிட்ட உன் பேரை மாத்தி சொன்ன… இப்ப சஹானான்னு நேம் பிளேட் வச்சிருக்க… நாளுக்கு ஒரு பேரு வச்சுப்பியோ…” மேலும் மேலும் அவளைப் பற்றிக் கேவலமாய் பேசிக் கொண்டே போக தலை குனிந்து நின்றிருந்தவளின் கண்கள் தாரை தாரையாய் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தன. நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த சரவணனுக்கு புரிந்தும் புரியாமலும் அந்தக் காட்சி பிடிபட, சஹானாவின் கண்ணீர் மனதை உலுக்கவும் நிதினை அடக்கினான்.
“டேய், எதுக்கு இப்படி பேசற… மேடம் அழுறாங்க பாரு…”
அவனை நோக்கிக் கோபமாய் திரும்பிய நிதின், “இத்தனை நாள் என் தூக்கத்தைக் கெடுத்து என்னோட சந்தோஷம் எல்லாத்தையும் பறிச்சுகிட்டு என்னை ஒரு நடைபிணமா வாழ வச்சவளைப் பார்த்து நான் எப்படிப் பேசணும்… சொல்லு, எப்படிப் பேசணும்…” என்றவன் தொடர்ந்தான்.
“நேத்து அந்தப் பேச்சு பேசிட்டு இன்னைக்கு நீலிக்கண்ணீர் விடறியா… சொல்லுடி, ஏன் அப்படிப் பண்ணின… எதுக்கு என்னை ஏமாத்திட்டுப் போன…” கோபத்துடன் கேட்டுக் கொண்டே அவள் தோளைப் பற்றிக் குலுக்க அவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
பதறிப் போன சரவணன் வேகமாய் ஒருபக்கம் வந்து தாங்க நிதினும் துடித்துப் போனான்.
“சஹா… என்னாச்சுமா… ஏய்… என்னைப் பாருடி… எழுந்திரு…” கலங்கிய கண்களுடன் அவளை தன் மேல் சாய்த்துக் கொள்ள அங்கிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான் சரவணன்.
கண்ணைத் திறக்க முடியாமல் சிரமமாய் பிரித்தவள், “ரூ…ப்… பன்…” என முனங்கிக் கொண்டே மீண்டும் மயக்கத்துக்குப் போக மீண்டும் தண்ணீர் தெளித்தும் உணரவில்லை.
அதற்கு மேல் தாமதிக்காமல் செக்யூரிட்டியை அழைத்து விஷயத்தைச் சொல்ல துணைக்கு மற்றொரு பெண் அதிகாரியும் உடன் வர வங்கியின் காரிலேயே அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். போகும் வழியில் மேனேஜரை அழைத்து சஹானா மயங்கிய விஷயத்தை சொன்ன சரவணனிடம், அவள் வீட்டுக்கு அழைத்து சொல்லுமாறு கூறினார் சாந்தமூர்த்தி.
உணர்வற்றுக் கிடக்கிறாய் நீ…
உயிருக்குள் துடிக்கிறேன் நான்…
என் கண்ணில் உணர்கிறேன்
என் உயிர் துடிக்கும்
மரணவேதனையை…

Advertisement