Advertisement

அத்தியாயம் – 5
“நிதின்… இந்த இன்விடேஷன் டிஸைன்ஸ் பாரேன்… உனக்குப் பிடிச்சிருக்கா… உன்னையும் கூட வர சொன்னா வேலை இருக்குன்னு ஓடிட்ட…” அங்கலாப்புடன் சொல்லிக் கொண்டே அவனது கட்டில் மீது நான்கைந்து அழைப்பிதழ் டிஸைன்களை பரப்பினார் மீனாட்சி.
“உங்களுக்கும், பிரபாவுக்கும் பிடிச்சாப் போதும்… சரவணன் வீட்டுலயும் கேட்டுடுங்க… பார்க்காமலே கையிலிருந்த டாகுமென்ட் எதையோ பார்த்துக் கொண்டு சொல்ல அதைக் கேட்டபடி வந்த பிரபாவின் முகம் வாடியது. அவன் அருகில் அமர்ந்தவள், “அண்ணா, உனக்கு இந்த கல்யாணத்துல ஏதாச்சும் விருப்பம் இல்லையா…” அவள் குரலில் வருத்தம் நிறைந்திருக்க சட்டென்று நிமிர்ந்தான்.
“பிரபா, இல்லடாம்மா… உன் கல்யாணத்தை விட பெரிய சந்தோஷம் எனக்கு என்ன இருக்கப் போகுது… கொஞ்சம் வொர்க் டென்ஷன், அதான்…” என்று சமாதானம் கூறினான்.
“நம்ம வீட்டுல ஒரு கல்யாணம் நடக்கும்போது நீதானே முன்னாடி நின்னு பார்த்துக்கணும்… இப்படி யாரோ போல இருந்தா எப்படிண்ணா… அப்பா இருந்தா என் கல்யாணம் இப்படியா இருக்கும்…” கண்ணில் நீர் தளும்ப அவள் கூறவும் தந்தை இருக்கும்போது வீட்டில் இளவரசியாய் அவள் வலம் வந்தது நினைவில் வந்து மனம் வலித்தது.
மீனாட்சியின் மௌனம் அவரும் கணவரின் நினைவில் தவிப்பதை உணர்த்த தனது விலகல் அவர்களுடைய சந்தோஷத்தையும் தொலைப்பதை உணர்ந்து வருந்தினான்.
தங்கையின் தோளை ஆதரவுடன் பற்றியவன், “என்னடா பிரபா… இதுக்கெல்லாம் கலங்கிட்டு… இப்ப என்ன, உன்னோட இன்விடேஷனை நான் பார்க்கணும்… அவ்ளோ தானே…” என்றவன் அதில் மனதுக்குப் பிடித்த ஒன்றை எடுத்தான்.
“இது எனக்கு ரொம்பப் பிடிச்சது… உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கான்னு பாருங்க…”
“வாவ்… சூப்பர் அண்ணா, நான் செலக்ட் பண்ணதை தான் நீயும் சொல்லி இருக்க… இந்த டிசைன் தான் அவருக்கு கூட பிடிச்சுதுன்னு சொன்னார்…” என்றாள் நாணத்துடன்.
“அப்புறம் என்ன, இதே செலக்ட் பண்ணிக்கலாம்… இப்ப உனக்கு சந்தோஷமா…” என்றவன், அவள் தலையாட்டவும் செல்லமாய் தலையில் தட்டி, “அம்மா, புரோக்கர் போன் பண்ணி இருந்தார்… நம்ம நிலத்தை வாங்க ஒரு பார்ட்டி ஒத்து வர்ற போல இருக்குன்னு சொன்னார்… அதான் டாகுமென்ட்ஸ் எல்லாம் சரியாருக்கான்னு பார்த்து எடுத்து வச்சிட்டு இருந்தேன்… போயி பார்த்து பேசிட்டு வந்திடறேன் மா… அட்வான்ஸ் வாங்கிட்டா கல்யாண வேலையை மளமளன்னு தொடங்கிடலாம்…” என்றான்.
“சரிப்பா… போயிட்டு வா…” என்றதும் கிளம்பினான்.
“அப்பா இறந்த பின்னாடி பொறுப்பெல்லாம் அண்ணன் தலைல விழுந்திருச்சு… கடன் வேற… அதான், இப்படி மாறிட்டான்மா… சரியாகிடுவான்…” என்றார் மகளிடம்.
“ம்ம்… அண்ணா பத்தி எனக்குத் தெரியாதா… ஆனா அண்ணா மனசுல ஏதோ ஒரு வலி இருக்குமா… அதை நம்ம கிட்ட சொல்லாம உள்ளயே வச்சிட்டு கஷ்டப்படுது… கேட்டாலும் எதையாச்சும் சொல்லி மழுப்பிடும்… முன்னெல்லாம் எவ்ளோ கேலியும் கிண்டலுமா அண்ணா இருக்குற இடமே ஜாலியா இருக்கும்… இப்போ இப்படி நத்தை மாதிரி தனக்குள்ளேயே ஒதுங்கிக்கிறத பார்த்தா வருத்தமாருக்கு…”
“ம்ம்… உன் கல்யாணம் முடிஞ்சதும் அவனுக்கும் ஒரு நல்ல பொண்ணாப் பார்த்து முடிச்சு வச்சிடணும்… அப்புறம் எல்லாம் தானா சரியாப் போயிடும்…” என்றார் மீனாட்சி.
“ம்ம்… அம்மா, நம்ம ஆனந்திக்கு அண்ணனை ரொம்பப் பிடிக்கும்… பேசாம அவளையே பார்த்தா என்ன…”
“ம்ம்… என் அண்ணன் மகளை மருமகளாக் கொண்டு வர எனக்கு மட்டும் கசக்கவா போகுது… என் அண்ணி அதுக்கு சம்மதிக்கணுமே… அவங்க பெரிய இடமாத் தேடுவாங்க… நமக்கு குடுப்பாங்களா…” என்றார் பெருமூச்சுடன்.
“ம்ம்… அண்ணாக்கு என்னமா குறைச்சல்… ஹீரோ போல இருக்கான்… எந்த கெட்ட பழக்கமும் இல்ல…”
“பார்க்க நல்லாருந்தா போதுமா… பணத்தை தானே அவங்க குணத்தை விட எதிர்பார்க்குறாங்க… ஏதோ உன் ஜாதகம் மாப்பிள்ளைக்கு ஒத்துப் போனதால உன்னை சம்மந்தம் பேச ஒத்துகிட்டாங்க… பொண்ணுக்கு பெரிய இடமா தான பார்ப்பாங்க…” என்றார் அவர்.
“ம்ம்… சரி விடும்மா, எனக்கு அண்ணியா வர யார் தலைல எழுதிருக்கோ… அவங்க வருவாங்க…” சொல்லிவிட்டு அழைப்பிதழுடன் அவள் செல்ல மீனாட்சியும் தொடர்ந்தார்.
பல்லடம் சென்று புரோக்கரைக் கண்ட நிதின் அந்தப் பார்ட்டிக்கு இடத்தைப் பேசி முடித்துவிட்டே வந்தான். அவன் சொன்ன விலைக்கு சற்றுக் கீழே வந்தாலும் நஷ்டமில்லை என்பதால் ஒத்துக் கொண்டான். ஒரு மாதத்திலேயே பத்திரப் பதிவு செய்யவும் அவர்கள் ஒத்துக் கொண்டு அட்வான்சாக ஒரு தொகையையும் கொடுத்து விட்டனர்.
தங்கையின் கல்யாணத்தை நல்லபடியாய் நடத்தி விட முடியும் என்ற நம்பிக்கை மனதுக்கு தெம்பைக் கொடுக்க உற்சாகமாய் வீட்டுக்கு வந்தவன் அன்னையிடம் பணத்தை ஒப்படைத்து தனது அலுவலகத்துக்கு கிளம்பினான்.
கிளாசிக் குரூப் ஆர்டரை பிரிண்டிங் முடித்து செக் பண்ணி மேசையில் அடுக்கிக் கொண்டிருந்தனர். அதை எடுத்துப் பார்த்தவன் திருப்தியாய் உணர்ந்தான்.
“அண்ணே, செக்கிங் முடிஞ்சதும் பாக்கிங் அனுப்பிருங்க… சாயந்திரம் அவங்க வண்டி டெலிவரி எடுக்க வந்திரும்…”
“சரி தம்பி…” கூறிக் கொண்டே அந்த நடுத்தர வயது மனிதர் இளைஞனின் சுறுசுறுப்போடு செயல்பட்டுக் கொண்டிருந்தார். அவன் தந்தை உள்ள போதிருந்தே அவர்தான் அங்கு சூப்பர்வைசராய் இருக்கிறார். நிதின் மனதில் எப்படி நினைத்து சொல்கிறானோ அதை அப்படியே செய்து முடிப்பது அவர் வழக்கம் என்பதால் அவனுக்கு பெரிய சப்போர்ட்டாக இருந்தார்.
வேறு சில கம்பெனிகளின் சின்ன ஆர்டர்களும் இருக்க அதை சரி பார்த்து எப்படி செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு பணம் தர வேண்டிய கஸ்டமர்களை அழைத்து பேசிக் கொண்டிருந்தான். அன்று மாலை வரை வேலை சரியாய் இருக்க முடித்துவிட்டு ஐந்து மணிக்கு எழுந்தான்.
வரும்போது மளிகைப் பொருட்கள் வாங்கி வரும்படி மீனாட்சி வாட்ஸ் அப்பில் பிரபாவின் மூலமாய் லிஸ்ட் அனுப்பி இருந்தார். எப்போதும் வாங்கும் டிபார்ட்மென்டல் கடையை நோக்கி வண்டியை விட்டான்.
மொபைலை நோக்கிக் கொண்டே வரிசையாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களில் வேண்டியதைத் தேர்வு செய்து தள்ளு வண்டியில் போட்டுக் கொண்டே நிமிர்ந்தவன் இடுப்பில் குழந்தையுடன் குழந்தைகளுக்கான ஹெல்த் ட்ரிங்க்ஸ் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு அம்மாவைக் கண்டதும் சட்டென்று ஸ்தம்பித்தான். அந்த முகம், அந்த ஜாடை அவனுக்கு அவளை நினைவுபடுத்த பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
“அம்மா, இன்னும் உங்க பேத்திக்கு வாங்கி முடிக்கலையா… சீக்கிரம் அதை முடிச்சிட்டு இங்கே வாங்க…” ஒரு பெண்ணின் குரல் தடுப்பின் அந்தப் பக்கத்தில் இருந்து கேட்க குழந்தையை கவனித்தவனுக்கு யோசனையாய் இருந்தது.
“இந்தக் குழந்தை அன்று அவள் ஆட்டோவில் ஏறிப் போகும்போது கையில் வைத்திருந்த குழந்தை தானோ…” அன்று அவளைக் கண்ட அதிர்ச்சியில் குழந்தையை சரியாய் கவனிக்காமல் இருந்ததால் குழப்பமாய் யோசித்தான்.
பொருட்களை எடுக்காமல் அப்படியே வழியில் நின்று கொண்டிருந்தவனின் பின்னிலிருந்து அந்தக் குரல் கேட்டது.
“எக்ஸ்கியூஸ் மீ… கொஞ்சம் வழி விடறீங்களா…” என்ற குரலில் அனிச்சையாய் விலகி நின்றவன் தன்னைக் கடந்து அந்தக் குழந்தை வைத்திருந்த பெண்மணியிடம் சென்றவளைக் கண்டு அதிர்ந்தான். அவனது சந்தேகம் காற்றில் கரைய கோபத்தின் அலை முகமெங்கும் அடிக்க வேகமாய் அவளை நோக்கிப் பாய்ந்தான்.
“ஏய், நில்லு…” நகரத் தொடங்கியவர்கள் அவன் குரலில் நின்று திரும்ப அவளையே எரித்துவிடுவது போலப் பார்த்து நின்றான் நிதின்.
“என்னையா சொன்னிங்க… என்ன விஷயம் சார்…”
“ஓ… நான் இப்ப சாராகிட்டேனா… என்ன விஷயம்னு உனக்கு தெரியவே தெரியாதா…” கடுப்புடன் கூற சாதனா புரியாமல் விழித்தாள்.
“சாரி… நீங்க யாருன்னே தெரியல, யாரையோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசறீங்கன்னு நினைக்கறேன்…”
“என்னது, என்னை யாருன்னே தெரியலையா, நான் தப்பா பேசறேனா… அந்தளவுக்குப் போயிடுச்சா…” அவனது குரல் உயர அங்கே பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். சசிகலா நடப்பதை ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவர், எல்லாரும் வேடிக்கை பார்ப்பதை உணர்ந்து தவித்தார்.
“தம்பி, நீங்க யாரு, என்னன்னே எங்களுக்குத் தெரியலை… எதுக்கு இப்படி கோபமாப் பேசறீங்க… என் பொண்ணு தான் உங்களை யாருன்னே தெரியலைன்னு சொல்லறாளே… எதுக்குப் பிரச்சனை பண்ணறீங்க…” நிதானமான குரலில் அவர் சொல்லிக் கொண்டிருக்க கோபத்தில் விம்மித் தணியும் நெஞ்சுடன் அவளையே விடாமல் முறைத்துக் கொண்டிருந்தான் நிதின் ரூபன்.
“உங்களுக்கு வேணும்னா என்னைத் தெரியாம இருக்கலாம்… ஆனா உங்க பொண்ணுக்கு இந்த ரூபனைத் தெரியாம இருக்காது… உங்க முன்னாடி நடிக்கறா…” அவனது கோபம் சாதனாவின் எரிச்சலைத் தூண்ட,
“ஹேய்… நான்தான் உன்னை யாருன்னு தெரியலைன்னு சொல்லிட்டே இருக்கேன்… அப்புறம் ரூபன், கூபன்னு உளறிட்டு இருக்கே… அம்மா, இது ஏதோ லூசுக் கேசு போல, நீங்க வாங்க… நாம போவோம்…” என்று நகர்ந்தவளை, “நில்லுடி…” என்று கையைப் பிடித்து நிறுத்தினான்.
“ஏய், யாரு மேல கை வைக்குற… விடுடா…” என்று அவன் கையை உதறியவள் கோபத்துடன் அவன் கன்னத்தில் அறைந்து விட அவன் ஸ்தம்பித்து நின்று விட்டான்.
அதற்குள் செக்யூரிட்டி அங்கு வந்திருக்க வேகமாய் அவனைப் பிடித்துக் கொண்டவன், “என்ன சார்… எதுக்குப் பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க… அதான் அவங்க உங்களைத் தெரியாதுன்னு சொல்லறாங்களே… விடுங்க சார்… கிளம்புங்க…” என்றான்.
அவள் அறைந்துவிட்ட அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டவன் கண்கள் கலங்கியிருக்க, “எ… என்னையா மா அறைஞ்ச… அப்படின்னா, உன் மனசுல நான் சுத்தமா இல்லவே இல்லையா… ரப்பர் வச்சு அழிச்சாக் கூட எழுதுன அடையாளம் அவ்ளோ சீக்கிரம் போகாது… இத்தனை சீக்கிரம் நாம பழகின பழக்கத்தைத் தூக்கிப் போட உன்னால எப்படி முடிஞ்சது… ரூபன், ரூபன்னு என்னை சுத்தி சுத்தி வந்ததெல்லாம் வெறும் நடிப்பா…” கேட்டவனின் முகத்தைக் கண்டு சாதனாவுக்கே வருத்தமாய் இருந்தது.
“ஐ… ஆம் ரியல்லி சாரி சார்… கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டேன்… சாரி… உங்களோட பீலிங் புரிஞ்சுக்க முடியுது… ஆனா, நீங்க யாரையோ நினைச்சு என்கிட்டப் பேசிட்டு இருக்கீங்க… என் பேரு சாதனா… நீங்க நினைக்குற ஆள் நானில்லை… எனக்கு உங்களைத் தெரியவே தெரியாது… அடிச்சது தப்புதான்… கையைப் பிடிச்சதும் கோபத்துல அடிச்சுட்டேன்… சாரி…” என்றவள் குழந்தை அழுது கொண்டிருப்பதை உணர்ந்து “வாம்மா…” என்று அன்னையின் கை பிடித்து அழைத்துக் கொண்டு நகர்ந்தாள்.
திக்பிரம்மை பிடித்தது போல் அவர்கள் சென்றும் அங்கேயே கன்னத்தைப் பிடித்து நின்று கொண்டிருந்தான் நிதின். அவனை அழைத்துப் பார்த்த செக்யூரிட்டி அவன் வேறு யோசனையில் இருப்பதை உணர்ந்து விட்டுவிட்டு செல்ல வேடிக்கை பார்த்தவர்கள் கலைந்து சென்றனர். பில் போடும் இடத்திலிருந்து அவனைத் திரும்பிப் பார்த்த சாதனா கண்ணில் நீருடன் அவன் தன்னையே பார்ப்பதை உணர்ந்து அதிர்ச்சியுடன் திரும்பிக் கொண்டாள்.
சசிகலாவுக்கு எதுவும் புரியாவிட்டாலும் “பாவம் அந்தப் பையன் யாரையோ காதலித்து ஏமாந்திருப்பான் போலும்… சாதுவைக் கண்டதும் அவனது காதலி என்று தவறாய் நினைத்து விட்டான் போலிருக்கிறது…” என்று பரிதாபப் பட்டுக் கொண்டார்.
சாதனாவின் மனதில் அவனது அதிர்ந்த முகமே பதிந்திருக்க வீடு செல்லும் வழியெங்கும் அங்கு நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தாள்.
குழந்தை மடியில் உறங்கிக் கொண்டிருக்க ஆட்டோ அபார்ட்மென்ட் முன் நின்றதும் இறங்கி நடந்தனர்.
அன்னையின் மௌனம் அவர் மனதிலும் அந்த சம்பவமே ஓடிக் கொண்டிருப்பதை உணர்த்த, “என்னம்மா, அங்கே நடந்ததைப் பத்தியே யோசிச்சிட்டு இருக்கீங்களா…” என்றாள்.
“ம்ம்… என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளைப் பிள்ளையை அத்தனை பேர் முன்னாடி பொது இடத்துல நீ அடிச்சது தப்பும்மா… உன் நியாயம் சரியா இருக்கலாம்… ஆனா, உன்னோட கோபம் சரியில்லை… ஒரு தடவை நீ கோபப் பட்டத்துக்கு கிடைச்ச தண்டனை போதாதா… அந்தப் பையன் லவ் பண்ண பொண்ணு உன்னைப் போலவே இருப்பா போலருக்கு… அதான் தப்பா புரிஞ்சுகிட்டான்…” அவர் சொல்லிக் கொண்டிருக்க முகம் வாடியவளுக்கு சட்டென்று சஹானாவின் முகம் மனதுக்குள் ஓடியது.
“ம்மா… சஹாவா இருக்குமோ…”
மகளின் கேள்வியில் சட்டென்று நின்று விட்ட சசிகலா, “கடவுளே… அப்படியும் இருக்குமோ…” என்று கேட்க, “ம்ம்… சான்ஸ் இருக்கு மா… வா சஹாகிட்ட கேட்டு கன்பர்ம் பண்ணிக்கலாம்…” என்று வேகமாய் நடக்க,
“என்னடி சொல்லற… அவகிட்டே போயி எதையும் கேட்டு வச்சிடாத… அப்புறம் ருத்ரதாண்டவம் ஆடிடுவா… நீ சொல்லும்போது எனக்கும் அந்த சந்தேகம் வரத்தான் செய்யுது… இதைப் பக்குவமா தான் விசாரிக்கணும்…” என்று சொல்லவும் சாதனா யோசனையுடன் தலையாட்டினாள்.
நினைக்க மறுத்தே
மறக்கத் துடிக்கும் மனது…
மறந்தும் மறப்பதில்லை
நினைக்க…
உனை மறந்தால்
அது என் மனதல்ல…
வெறும் கூடு மட்டுமே…

Advertisement