Advertisement

அத்தியாயம் – 4
“ஸ்ரீக்குட்டி… அம்மாக்கு ஒரு முத்தா குடு…” சாதனா கன்னத்தைக் காட்டிக் கேட்க குழந்தை பச்சக்… என்று அவள் அழகுக் கன்னத்தில் ஈரத்துடன் முத்தமிட்டு சிரித்தது.
“என் செல்லக்குட்டி… வெல்லக் கட்டி…” அவளை அணைத்துக் கொண்டு கொஞ்சியவள் அன்னையின் அழைப்பில் திரும்பினாள்.
“சாது… அபார்ட்மென்ட் முன்னாடி இருக்குற கடைக்குப் போயி கீரை வாங்கிட்டு வந்திடறியா…”
“ஏன்மா… நேத்தே வாங்கி வச்சிருக்கலாம்ல…”
“நேத்து கொஞ்சம் வாடுன போல இருந்துச்சுடி… இப்ப போனா பிரஷா இருக்கும்… ஒரு எட்டு போயிட்டு வந்திடேன்…”
“என் செல்லத்தைக் கொஞ்ச விடாம இந்தப் பாட்டி டிஸ்டர்ப் பண்ணுதே… என்ன பண்ணலாம்…”
கேட்டுக் கொண்டே ஸ்ரீலயாவின் நெற்றியில் தனது நெற்றியை முட்டினாள். அவர்கள் பேசுவதைப் புரிந்து கொண்ட குழந்தை, “ம்மா… நானு…” என்று மடியிலிருந்து வேகமாய் இறங்கி கதவருகில் போய் நின்று கொண்டாள்.
“பாருடி… உனக்கு முன்னாடி என் பேத்தி கிளம்பி நிக்கறா… சீக்கிரம் போயி வாங்கிட்டு வா…” சொல்லிக் கொண்டே ஒரு பிளாஸ்டிக் கூடையை பணத்துடன் அவள் கையில் திணித்துவிட்டு அடுக்களைக்கு நடந்தார் சசிகலா.
குழந்தையை எடுத்துக் கொண்டு கூடையுடன் வெளியே வந்த சாதனா அந்த நேரத்திலும் வீட்டு முன்னில் நின்று இருவரின் மாமியாரையும் மாறி மாறி குற்றம் சொல்லிக் கொண்டிருந்த பிரவீணாவையும் சரளாவையும் கண்டு எரிச்சல் வந்தாலும் புன்னகைத்து லிப்ட்டுக்கு நடந்தாள்.
இவளைக் கண்டதும் சட்டென்று பேச்சை நிறுத்தியவர்கள், “கூடையோட போறா, காய் வாங்கவோ… எப்படித்தான் வெளிய வராம வீட்டுக்குள்ளயே இருக்காங்களோ…”
“ம்ம்… அதான, நம்மால கொஞ்ச நேரம் வீட்டுக்குள்ள இருக்க முடியல… அந்தக் குழந்தை இவங்க ரெண்டு பேருல யாரோடதா இருக்கும்… யோசிச்சு எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலருக்கு…” என்றாள் சரளா.
“ம்ம்… திரும்ப வருவால்ல, கேட்டிருவோம்…” சொல்லிக் கொண்டே மாமியார்க்காரிக்கு புருஷனை பணம் அனுப்ப விடாமல் பண்ணியதை விருது வாங்கிய பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தாள் பிரவீணா. சிறிது நேரத்தில் சாதனா திரும்பி வரவும் அவளை நோக்கித் திரும்பினார்கள்.
“காய் வாங்கப் போனிங்களா சாதனா… ஹேய் குட்டி… உங்க பேரென்ன… செம கியூட்டா இருக்கீங்களே…” கேட்டுக் கொண்டே குழந்தையை கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சவும் சாதனா நிற்க வேண்டியதாய் போயிற்று.
“ம்ம்… கீழ கடைல கீரை வாங்கப் போனேன்… இவ பேரு ஸ்ரீலயா… ஸ்ரீ குட்டின்னு கூப்பிடுவோம்…” என்று அவர்கள் கேள்விக்கு பதிலும் கூறினாள்.
“ஓ… அங்க கீரை பிரஷா வச்சிருப்பான்… பாப்பா அப்படியே உங்க ஜாடை… கலர் தான் கொஞ்சம் கம்மியாருக்கா… ஒருவேளை அப்பா கலரோ…” கேள்வித் தூண்டிலை வீசிவிட்டு பதில் மீனுக்காய் காத்திருந்தாள் சரளா.
ஒரு நொடி முகம் இருண்ட சாதனா சட்டென்று சமாளித்துக் கொண்டு, “இல்ல, இவ அப்பாவும் நல்ல நிறம் தான்…” எனவும், “அவர் எங்கே இருக்கார்… உங்க கூட வரலையா…” அடுத்து கேள்வியை வீசினாள் பிரவீணா.
“அவர் வெளிநாட்டுல இருக்கார்… இப்போதைக்கு வர மாட்டார்… அம்மா கீரைக்கு வெயிட்டிங்… நான் போறேன்…” என்றவள் வீட்டுக்குள் நுழைந்து கதவை இழுத்துச் சாத்த சத்தம் கேட்டு அங்கே வந்த சசிகலா, “கதவை ஏண்டி உடைக்குற போல சாத்துற… வீட்டு ஓனருக்கு ஒழுங்கா திரும்ப ஒப்படைக்க வேண்டாமா…” என்று கேட்டுக் கொண்டே கூடையை வாங்கியவர் அவள் முகம் கோபத்தில் சிவந்து கிடப்பதைக் கண்டு, “என்னாச்சுடி, முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு…” என்று விசாரித்தார்.
“நீ சொன்னது சரிதான் மா… அந்த பக்கத்துக்கு வீட்டு லேடீஸ் ரெண்டு பேரும் வம்புக்கு அலையறவங்க தான் போல… என்னவோ நம்ம மேல அக்கறை உள்ள போல ஸ்ரீக்குட்டி யாரு, அப்பா யாருன்னு எல்லாம் துருவிட்டு இருக்காங்க… நம்ம பிளாட் அசோசியேஷன்ல ஆண்கள் இல்லாம பெண்கள் மட்டும் தங்க அனுமதிக்கக் கூடாதுன்னு கம்ப்ளெயின்ட் பண்ணது கூட இவங்களா இருக்குமோ…”
“இவங்கன்னு நிச்சயமா தெரியாம அப்படி நினைக்கக் கூடாதுடி… விடு, சிலருக்கு எவ்ளோ உயரத்துக்கு வந்தாலும் மனசு பாதாளத்துல தான் இருக்கு… நாம ஒதுங்கிக்கறது தான் நல்லது…” சொல்லி கொண்டே அவர் கீரையை சரி செய்யத் தொடங்க தோளில் தூங்கி வழியத் தொடங்கிய ஸ்ரீகுட்டியை கட்டிலில் கிடத்திவிட்டு வந்தாள் சாதனா.
சற்று நேரத்தில் அவளது அலைபேசி சிணுங்க அந்த பிரத்யேக ரிங்டோனில் அழைப்பது யாரென்று புரிய மனமும் முகமும் சந்தோஷத்தில் மலர வேகமாய் எடுத்தாள்.
“நரேன் காலிங்…” என்று ஒளிர்ந்து கொண்டிருக்க டிஸ்பிளேயில் தெரிந்த அவனது உருவத்தை ரசித்துக் கொண்டே “ஹலோ…” என்றாள்.
“ஹாய் பேபி… ஹவ் ஆர் யூ டார்லிங்…” இனிமையாய் தவழ்ந்து வந்த குரலில் இதமாய் உணர்ந்தவள் எதிரில் அன்னை வந்து நின்று யாரென்று கேட்க, “நரேன் மா…” எனவும், “நல்லார்க்காரா… விசாரிச்சேன்னு சொல்லுடி…” என்று வேலையைத் தொடர, அவள் அறைக்கு நகர்ந்தாள்.
“ஹலோ, எப்படி இருக்கீங்க சார்… போனையே காணோமே, அங்க எதாச்சும் வெள்ளச்சிய செட் பண்ணிட்டாரோ… நமக்குத் தொல்லை விட்டுச்சுன்னு நினைச்சேன்…”
“ஓஹோ… நீ அப்படி வேற நினைப்பியா… இந்த ஜென்மம் மட்டுமில்ல மேடம்… இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் என் தொல்லையை அனுபவிச்சு தான் ஆகணும்னு உன் தலைவிதி… அதை யாராலும் மாத்த முடியாது…” அவன் சொல்லிவிட்டு சிரிக்க அந்த அன்பில் நெகிழ்ந்தாள்.
“ம்ம்… நரேன், நீங்க எப்படி என்னை இவ்ளோ நேசிக்கிறீங்க… நினைக்கும்போது எனக்கே ஆச்சர்யமா இருக்கு… நாம அந்தளவுக்கு வொர்த் இல்லையேன்னு…”
“சாது டியர், உன் அருமை உனக்குத் தெரியாம இருக்கலாம்… ஆனா உன்னை நல்லாப் புரிஞ்சுகிட்டவங்களுக்கு நீ ஒரு விலை மதிப்பில்லா பொக்கிஷம் தான்…” அவன் சொல்லவும், “ஆச்…” என்று தும்மியவள், “ஹப்பா ரொம்ப குளிரடிக்குதே… காய்ச்சல் வரும் போலருக்கு…” என்றாள் சிரிப்புடன்.
“நான் காமெடி பண்ணல செல்லம், உண்மைய சொன்னேன்… அதவிடு… ஸ்ரீக்குட்டி எப்படி இருக்கா… சஹானா, அம்மா நல்லாருக்காங்களா…”
“எல்லாரும் நல்லாருக்கோம்… சஹா இங்க ஜாயின் பண்ணி ஒரு வாரம் ஆச்சு… இது வரைக்கும் எல்லாம் நல்லா தான் போயிட்டு இருக்கு… உங்களைப் பார்க்க முடியலையேன்னு சின்ன வருத்தம் மட்டும் தான்…”
“அடிப்பாவி, சின்ன வருத்தம் தானா… நான் உன்னை எவ்ளோ மிஸ் பண்ணறேன் தெரியுமா…”
“அப்படியா… அப்ப சீக்கிரமே வந்து மிஸ்ஸை மிசஸ் பண்ணிக்க வேண்டியது தானே…”
“ஹஹா… நானும் அந்த நாளுக்கு தான் காத்திட்டிருக்கேன்… சரிம்மா, எல்லாரையும் நீ தான் பத்திரமா பார்த்துக்கணும்… அக்காவுக்கும் அப்பப்ப கால் பண்ணிப் பேசு, உன்னையும் கவனிக்காம இருந்திடாத… ஓகே டா செல்லம்… டேக் கேர்…”
“ம்ம்… ஓகே நரேன்… நீங்களும் உடம்பைப் பார்த்துக்கங்க… மிஸ் யூ யா… உங்க வருக்கைக்கு காத்திருக்கேன்… டேக் கேர் பை…” எனவும் நரேன் அழைப்பைத் துண்டிக்க அதுவரை சஞ்சலம் கொண்டிருந்த மனம் தெளிவடைந்திருந்தது.
நரேன் என்னும் நரேந்திரன் நாயர் ஒரு மலையாளி. சாதனா பாலக்காட்டில் BE முடித்துவிட்டு ஒரு டியூஷன் சென்டரில் கிளாஸ் எடுக்கப் போய்க் கொண்டிருந்தாள்.
சாதனா படித்த காலேஜில் பார்ட் டைம் லெக்சரராக இருந்த நரேனும் அங்கு டியூஷன் எடுக்க வருவான். நரேனுக்கு ஒரு அக்காவும், தங்கையும் மட்டுமே… ஒரு மழைக்காலம் அவர்களுக்கு சொந்தமான வீட்டோடு பெற்றவர்களையும் காவு வாங்கிவிட கல்யாண வயதிலிருந்த நிஷாந்திக்கு தன்னைவிட பத்து வயது சிறியவனான தம்பி நரேனையும், அவனுக்கு ஐந்து வருடம் சிறியவளான தங்கை நிர்மலாவையும் ஒரு நிலைக்கு கொண்டு வருவதே இலட்சியமாகி விட்டது. அவர்கள் படித்து பெரிதாவதற்குள் அவளோ முதிர்கன்னிப் பிராயத்தை எட்டி இருந்தாள்.
நரேனுக்கு சரியான வேலை எதுவும் கிடைக்காமல் படித்த கல்லூரியிலேயே லெக்சரராகப் போய்க் கொண்டு வெளிநாட்டு வேலைக்கும் முயற்சி செய்து வந்தான். அவன் அக்காவைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த முப்பத்தைந்து வயதிலிருந்த அவளோ தீர்மானமாய் இனித் தனக்கு திருமணம் வேண்டாம் என்று மறுத்து தங்கைக்குப் பார்க்கும்படி கூறிவிட்டாள்.
தங்களுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துவிட்ட அந்த நல்ல உள்ளத்தை இனியாவது சந்தோஷமாய் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த நரேன் மூன்று வருட கான்ட்ராக்டில் இப்போது மலேஷியாவில் வேலை செய்து கொண்டிருக்கிறான்.
இன்னும் ஆறுமாதத்தில் அவன் கான்ட்ராக்ட் முடியப் போகிறது. வந்ததும் தங்கைக்கு திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற துடிப்பில் இருந்தான்.
சசிகலா நரேனைப் பற்றிப் பெருமையாய் பேசிக் கொண்டிருக்க, கேட்டுக் கொண்டிருந்த சாதனாவின் செவிக்கோ குளுகுளுவென்று இருந்தது.
“தங்கமான பிள்ளை… உன்னைப் பிடிச்சிருக்குன்னு உனக்கு சொல்லாம என்கிட்டே வந்து அனுமதி கேட்டான்… பெத்தவங்க இல்லேன்னாலும் அவன் அக்கா நல்லா வளர்த்திருக்கா… அவனோட கடமை முடிஞ்சு வர்ற வரைக்கும் நீ காத்திருக்குறதுல தப்பே இல்லை…”
“ம்ம்… ஆமாம் மா, அவரைப் போல ஒருத்தர் புருஷனா வர ஆயுளுக்கும் காத்திருக்கலாம்… அவர் தங்கை கல்யாணத்தை முடிச்சுட்டு எங்களுக்கு கல்யாணம் ஆனாலும் நம்ம ரெண்டு குடும்பமும் ஒண்ணாவே இருக்கணும்னு அவர் சொன்னது எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு… எல்லாரும் நல்லாருக்கணும்னு நினைக்குற அற்புதமான மனசு… அவர் வந்த பிறகு தான் சஹாக்கும் ஏதாவது தீர்மானம் எடுக்கணும்…” அவள் யோசனையுடன் கூற முகம் சுருங்கிய சசிகலா நீண்ட பெருமூச்சுடன் எழுந்து கொண்டார்.
“ம்ம், நம்ம தீர்மானத்துக்கு எல்லாம் அவ கட்டுப்படுவான்னு சொல்ல முடியாது… பார்ப்போம்… அவ தலைல கடவுள் என்ன எழுதி இருக்கான்னு…” வருத்தம் தோய்ந்த குரலில் கூறியவர் வேலையைத் தொடர்ந்தார்.
மாலையில் துவைத்த துணிகளை சாதனா அறையில் மடக்கி வைத்துக் கொண்டிருக்க சசிகலா ஹாலில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். குழந்தை சோபாவில் அமர்ந்து கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள். 
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த சஹானாவின் முகம் இருண்டு கிடக்க மிகவும் சோர்ந்திருந்தாள். அவளைக் கண்டதும் யோசனையுடன் நிமிர்ந்த சசிகலா, “என்னடா சஹா, டயர்டா இருக்கா… உக்காரு… காபி எடுத்திட்டு வரேன்…” என்று அடுக்களைக்கு செல்ல சோபாவில் கண்ணை மூடி அமர்ந்தவள் சட்டென்று அதிகமான டீவி வால்யூமில் கோபத்துடன் நிமிர்ந்தாள்.
குழந்தை டாம் ஜெர்ரியை ரசித்து சிரித்துக் கொண்டே கையிலிருந்த ரிமோட்டில் வால்யூம் பட்டனைப் பிடித்து அழுத்திக் கொண்டிருக்க அவளது கோபம் அதிகமானது.
“ஏய்…” கத்திக் கொண்டே அவள் கையிலிருந்து ரிமோட்டைப் பறிக்க, பயந்து போன ஸ்ரீக்குட்டி சத்தமாய் அழத் தொடங்கினாள். அதைக் கேட்டு சாதனாவும், சசிகலாவும் ஓடி வருவதற்குள் குழந்தையைத் தூக்கி உயர்த்திப் பிடித்த சஹானா, “சனியனே… எதுக்குடி இப்படிக் கத்தறே… எங்காச்சும் ஒழிஞ்சு போ…” என்று கத்த சாதனா பதட்டத்துடன் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
“என்ன சஹா, என்னாச்சு… எதுக்கு இப்படிக் கத்தற… பாரு, பயத்துல குழந்தை எப்படி நடுங்குறான்னு…”
“ஏய்… இவளை என் கண் முன்னாடி கொண்டு வராத… எடுத்திட்டுப் போ…” என்று தங்கையிடமும் கத்தினாள்.
முகமெல்லாம் சிவந்து கோபத்தில் கண்ணில் நீர் நிறைந்து பத்ரகாளி போல நின்றிருந்த மகளைக் கவலையுடன் பார்த்துக் கொண்டே அருகில் வந்த சசிகலா, இளைய மகளுக்கு கண்சாடை காட்ட தன்னை இறுகக் கட்டிக் கொண்டு நடுக்கமாய் தேம்பிக் கொண்டிருந்த குழந்தையுடன் அறைக்குள் சென்று விட்டாள் சாதனா.
சஹானாவின் அருகில் வந்து அமைதியாய் அவளை கை பிடித்து சோபாவில் அமர்த்திய சசிகலா, “சஹாம்மா… இந்தா, காபி குடி…” என்று கையிலிருந்த காபியை நீட்ட, அதை வாங்காமல் அன்னையின் அருகில் அமர்ந்து அவர் மடியில் தலையைக் கவிழ்த்துக் கொண்டவள் குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினாள். அவள் தலையைக் கோதி விட்டுக் கொண்டே அமர்ந்திருந்த சசிகலாவின் உள்ளமும் கலங்கி இருந்தது. மகளின் மனதில் நீறு பூத்த நெருப்பாய் மாறாமல் தங்கி விட்ட வேதனை மீண்டும் புகையத் தொடங்கி விட்டதோ எனக் கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தார்.
குழந்தையுடன் அறையில் அமர்ந்திருந்த சாதனாவின் உள்ளமும் கலங்கிப் போயிருந்தது.
“என் சஹா எவ்ளோ சாப்டா, அன்பா எல்லாரோடவும் பழகுவா… இப்ப அவளோட இந்த நிலைமைக்கு நான் தானே காரணம்…” யோசிக்கும் போதே இதயம் வலிக்க கண்ணீர் கன்னத்தை நனைக்கத் தொடங்கியது.
நினைக்க விரும்பா
மரணம் நீ…
மறக்க விரும்பும்
பிரியம் நீ…

Advertisement