Advertisement

அத்தியாயம் – 29
“நிதின், காபி கேட்டியே இந்தாப்பா…” டீவியில் பார்வையைப் பதித்திருந்த நிதின் அன்னை நீட்டிய காபி கோப்பையை வாங்கிக் கொண்டு புன்னகைத்தான்.
“அப்புறம் போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுதா…” அவர் கேட்கவும் அவன் முழிக்க, “”என்னடா முழிக்கற, புது ஆர்டர் விஷமா நாலு நாள் வெளியூர் போயிட்டு வந்தியே… என்னாச்சுன்னு கேட்டேன்…” என்றார் அவர்.
“ஓ… அதுவா… நினைச்சதை விட சிறப்பா முடிஞ்சது மா…”
“ஹூம்… நீயும் அடிக்கடி வெளியூர் போயிடற… தனியா இங்க எனக்குப் பைத்தியம் பிடிக்குது… பேசாம உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிடலாம்னு இருக்கேன்…” எனவும் ஆர்வத்துடன் அன்னையை நோக்கினான் நிதின்.
“வாவ், சூப்பர் ஐடியா மா… நானும் தனியா வெளியூர் போகாம ஜோடியா போயிட்டு வரலாம்… எனக்கு இப்படி ஒரு ஐடியா தோணாமப் போயிருச்சு பாருங்க…” என்று சிரிக்க மகனை முறைத்தவர், “உனக்கு நான் பேசுறது விளையாட்டா இருக்கா… பிரபா இருந்தப்ப தெரியலை… இப்ப என்னமோ தனியா இருக்கற பீல் ஆகுது…” என்றார் வருத்தத்துடன்.
அவரது மனநிலை புரிய நெகிழ்ந்தவன், “அச்சோ… என்னமா நீங்க… நான் சும்மா கிண்டல் பண்ணினேன்… இனி எனக்கு அடிக்கடி வெளியூர் எல்லாம் போக வேண்டாம்… உங்களுக்கு கம்பெனிக்கு நானிருக்கேன்…” சொல்லிக் கொண்டே அவர் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி, தலையில் தன் தலையை முட்டிய மகனை அதிசயமாய் பார்த்தார் மீனாட்சி.
சிறு வயதில் அவன் அப்படிதான் அடிக்கடி அன்னையைக் கொஞ்சுவான்… இப்போதெல்லாம் நின்று சரியாகப் பேசுவது கூட இல்லாமல் போயிருக்க மகனின் இந்த உற்சாகமான மாற்றம் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. அவரது முகத்தில் தோன்றிய உணர்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த நிதின், “அம்மா… உக்காருங்க…” என்று அருகில் அமர்த்தி அவர் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டான்.
நெடுநாட்களுக்குப் பிறகு மகனின் செய்கையில் மனம் நெகிழ்ந்தது மீனாட்சிக்கு. இன்று ஏனோ அன்னையைப் பார்க்கையில் நிதினுக்கு யசோதாவின் நினைவு வந்தது.
“யசோம்மா எத்தனை நல்லவர்… அவரது அன்பிலும் கவனிப்பிலும் வளர்ந்த மகன் இப்படி ஒரு தறுதலையாய் போய் விட்டானே… எல்லாத் தாயும் பிள்ளைகளை கண்ணுக்குள் மணியாகத் தான் கவனித்துக் கொள்கின்றனர்… விதம் வேண்டுமானால் மாறுபடலாம்… தாயென்னும் குணம் என்றும் மாறாது… என் அன்னையும் அப்படிதானே வளர்த்தார்… அப்பா இறந்தபிறகு நானும் பிரபாவும் மட்டும் தானே இவரது உலகம்… இனி அம்மாவின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…” என நினைத்துக் கொண்டான்.
மகனின் தலையை வருடிக் கொண்டிருந்த மீனாட்சி, “நிதின்… பிரபாவையும், மாப்பிள்ளையும் விருந்துக்கு அழைக்கணும்… எப்ப அழைக்கலாம்பா…” என்றார்.
“எப்ப வேணும்னாலும் வர சொல்லுங்கம்மா…”
“ம்ம் சரிப்பா, வர்ற ஞாயிற்றுக் கிழமை வர சொல்லலாம்… நீயும் மாப்பிள்ளை கிட்டப் பேசிடு…”
“சரிம்மா…” என்றவன் கண்ணை மூடிக் கொள்ள, மகனின் முகத்தில் வழிந்த சந்தோசத்தைப் பார்த்தவர், “என்னப்பா… இன்னைக்கு ரொம்ப உற்சாகமா இருக்கே… ஆமா, ஏதோ பிரண்டு விஷயமா வருத்தப்பட்டு பேசிட்டு இருந்தியே… என்னாச்சு, அந்தப் பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுச்சா…” என்றார் ஆர்வத்துடன். அவர் கேள்வியில் சட்டென்று அவனுக்குள் ஒரு ஐடியா தோன்ற எழுந்து அமர்ந்தவன் சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டான்.
“எங்கேம்மா, அந்தப் பொண்ணுக்கும் இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இருக்கும்னு தான் தோணுது… ஆனா அவன் குடும்பத்தில் ஏதாச்சும் சொல்லிடுவாங்களோன்னு பயந்து தான் ஒத்துக்க மாட்டேங்கிறா போலருக்கு…”
“ஓ… அந்தப் பையன் அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியுமா… அவங்களையே பேச சொல்லிடலாமே… அப்படிப் பேசினா ஒருவேளை அந்தப் பொண்ணு சம்மதிச்சிடுவான்னு எனக்குத் தோணுது…” என்றார் அவர் யோசனையுடன்.
“ஆமா, இது நல்ல யோசனைதான்… ஆனா, இதை எல்லா அம்மாவும் உங்களைப் போல இவ்வளவு ஸ்போர்டிவ்வா எடுத்துப்பாங்களான்னு தெரியலியே… பக்குவமா அந்தப் பொண்ணுகிட்ட பேசி சம்மதிக்க வைக்கணும்… ம்ம், நீங்க பேசிப் பாக்குறீங்களா…” மகன் கேட்கவும் திகைத்தார்.
“நானா… நான் எப்படிப்பா, முன்னப் பின்னத் தெரியாத பொண்ணுகிட்ட பேச முடியும்…” அவர் தயங்கினார்.
“அந்தப் பொண்ணை உங்களுக்கு முன்னமே தெரியும் மா… உங்களுக்கு மட்டுமில்ல… நம்ம பிரபா, சரவணனுக்கும் தெரியும்… சரவணன் பாங்குல அசிஸ்டன்ட் மானேஜரா வொர்க் பண்ணற பொண்ணுதான்… பிரபா கல்யாணத்துக்கு கூட வந்திருந்தாங்க… பேசாம அவங்களை விருந்துக்கு அழைக்கும்போது இந்தப் பொண்ணையும் நம்ம வீட்டுக்கு வர சொல்லட்டுமா… நீங்க பேசிப் புரிய வைக்குறீங்களா…”
“ஓ அந்தப் பொண்ணா, பாவம்… நல்ல அழகான பொண்ணு… சரி, நீ என்ன விளையாடறியா… நான் பாட்டுக்கு அந்தப் பொண்ணுகிட்டப் பேசி அது ஓகே சொல்லிட்டு லாஸ்ட்ல அந்தப் பையனோட அம்மா சம்மதிக்கலேன்னா… சும்மா இருந்த பொண்ணு மனசுல ஆசையை வளர்க்கிறது பாவம் இல்லையா…” என்றார் மீனாட்சி.
“நீங்க சம்மதிச்சா அவன் அம்மாவும் சம்மதிச்ச மாதிரிதான்… ப்ளீஸ் மா… ஓகே சொல்லுங்களேன்…” கெஞ்சினான் மகன். “சரி, இவ்ளோ சொல்லற… யாரு அந்த பிரண்டுன்னு சொல்லவே இல்லையே…” அன்னை கேட்கவும் திகைத்தான்.
“நீங்க முதல்ல அந்தப்பொண்ணு கிட்ட சம்மதம் வாங்குங்க… நான் என் பிரண்டையும் அம்மாவையும் இங்கயே வரசொல்லி உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன்…” என்ற மகனை யோசனையுடன் பார்த்தார் மீனாட்சி.
“என்னமோ சொல்லற, இதெல்லாம் எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்னு தெரியல… சரி, வரச் சொல்லு… பேசிப் பார்க்கறேன்…” அவர் சம்மதிக்கவும், “தேங்க் யூ மா…” என்று அவர் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு உற்சாகமாய் கூற சிரித்தார் மீனாட்சி.
“என்னமோ, உன் கல்யாணத்துக்கு நான் பேசப் போற போல இந்தக் குதி குதிக்கறே… சரி, பிரண்டு கல்யாணத்துக்கு இவ்ளோ யோசிக்கறியே… உனக்கும் கல்யாணத்துக்குப் பார்க்கத் தொடங்கிடவா…” என்றார் ஆர்வத்துடன்.
“அம்மா, இந்தக் கல்யாணம் மட்டும் ஓகே ஆகட்டும்… அப்புறம் உங்க ஆசைப்படி சீக்கிரமே என் கல்யாணமும் நடத்திடலாம்…” என்றவன், “அம்மான்னா அம்மா தான்… லவ் யூ மீனுக்குட்டி…” என்று எழுந்து செல்ல அவர் முழித்தார்.
“இவனுக்கு என்னாச்சு… சட்டுன்னு இப்படி மாறிட்டான்… ம், எப்படியோ உர்ருன்னு இருந்தவனை உற்சாகமா பாக்குறதும் நல்லாதான் இருக்கு…” அவர் மனம் சந்தோசத்தில் மிதந்தது. “பாவம், நான் பேசி அந்தப் பொண்ணு மனசு மாறினா நல்ல விஷயம் தானே…” என நினைத்துக் கொண்டார்.
ஞாயிற்றுக் கிழமை…
“இன்னும் ஒரே ஒரு வாய் தான்… ஆ காட்டு செல்லம்… பாட்டிக்கு நிறைய வேலை இருக்கு…” இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு சசிகலா கெஞ்சிக் கொண்டிருக்க அவள் உதட்டை இறுக்க மூடிக் கொண்டு வாயைத் திறக்க மாட்டேனென்று தலையாட்டிக் கொண்டிருந்தாள்.
சாதனா துவைத்த துணிகளை மாடியில் காயப் போட சென்றிருக்க, சஹா அலமாரியில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். அன்னையின் கெஞ்சலும் ஸ்ரீக்குட்டியின் “ம்ஹூம்…” என்ற மறுத்தலும் காதில் விழ வெளியே வந்தாள்.
“அம்மா, அவளைக் கொடுங்க… நான் ஊட்டி விடறேன்… நீங்க வேலையைப் பாருங்க…” என்ற மகளை அதிசயமாய் பார்த்து நிற்க, கண்டு கொள்ளாமல் குழந்தையை அவரிடமிருந்து வாங்க முயல பாட்டியை இறுகப் பிடித்திருந்த குழந்தை அவள் இழுக்கவும் சிணுங்கிக் கொண்டே அவளது கைக்கு வந்தாள். “ஸ்ரீக்குட்டி, இன்னைக்கு மம்மி உனக்கு ஊட்டி விடறேன்… சமத்தா சாப்பிடணும்…” என்றவள் அவளை சோபாவில் அமர்த்திவிட்டு டீவியில் கார்ட்டூன் சானலை வைக்க ஸ்ரீக்குட்டி குஷியானாள்.
“ஹை சோத்தா பீம்…” சந்தோஷமாய் கை தட்டியவள் அதைப் பார்க்கத் தொடங்க அருகே அமர்ந்து அதில் வரும் கதாபாத்திரங்களின் பெயரை சஹானா கேட்க, “உனக்கும் பீம் பிதிக்குமா…” என்று ஆர்வத்துடன் பதில் சொன்னாள் ஸ்ரீக்குட்டி. அப்படியே கையிலிருந்த பிளேட்டும் காலியாக குழந்தையின் வயிறோடு பெற்றவளின் மனமும் நிறைந்தது.
நடப்பதை சந்தோஷமாய் பார்த்துக் கொண்டு சசிகலா வேலையில் மும்முரமாய் இருக்க, சோட்டா பீமை பலவித பாவனைகளுடன் ரசிக்கும் ஸ்ரீக்குட்டியை தானும் ரசித்துக் கொண்டிருந்தாள் சஹானா. அப்போது அழைப்பு மணியின் “கிர்ர்ரர்ர்ர்” கேட்டு எழுந்தவள் கதவைத் திறக்க வெளியே நின்ற நிதினைக் கண்டதும் இன்பமாய் அதிர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டாள்.
அமைதியாய் வழி விட்டவளைக் கடந்து புன்னகையுடன் உள்ளே வந்தான் நிதின். அவனைக் கண்டதும் “டாதி…” என்று ஓடி வந்து காலைக் கட்டிக் கொண்ட குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டான்.
“ஸ்ரீக்குட்டி… என்னடா செல்லம் பண்ணறே…”
“சோத்தா பீம் பாக்கதேன் டாதி… மம்மிக்கும் பிதிக்குமாம்… உனக்குப் பிதிக்குமா…” என்று கேட்க, “மம்மிக்குப் பிடிச்ச எல்லாம் டாடிக்கும் பிடிக்கும் செல்லம்… சரி, நீ போயி பாரு…” என்றவன் அவளை சோபாவில் அமர்த்த, அவன் குரல் கேட்டு எட்டிப் பார்த்தார் சசிகலா.
“வாங்க தம்பி… காபி எடுக்கட்டுமா…”
“ம்ம்… குடுங்கமா…” என்றவன் “சஹி, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” என்றதும், “என்ன பேசணும்… அதான் எல்லாமே பேசி முடிச்சாச்சே…” என்றவளை முறைத்தவன், “சீக்கிரம் கிளம்பு… நாம இப்ப வெளிய போறோம்…” என்றான்.
“நான் எங்கயும் வரலை…” என்றவளின் முன்னில் கோபமாய் நின்றவன், “நீயா வரலேன்னா, தூக்கிட்டுப் போயிருவேன்… ஒழுங்கா போயி ரெடியாகிட்டு வா…” என்றான் மிரட்டலாக.
“இதென்ன வம்பாருக்கு… நான் எங்கயும் வரலை…” மீண்டும் அவள் அதே சொல்ல சசிகலா எதுவும் புரியாமல் விழித்தார்.
“சாரிம்மா, உங்க முன்னாடி இப்படி பண்ணறதுக்கு மன்னிச்சுக்கோங்க…” என்றவன் அடுத்த நொடி அவளைத் தூக்கிக் கொண்டு அவளது அறைக்கு செல்ல சசிகலாவே அதிர்ந்து நோக்க சஹாவின் லப்டப் அதிகமானது.
“ஏய், என்னை இறக்கி விடு… உனக்கென்ன கிறுக்குப் பிடிச்சிருக்கா…” கை காலை உதறியவளை கட்டிலில் போட்டவன், “அஞ்சு நிமிஷம் தான் உனக்கு டைம்… ரெடியாகி வெளிய வர்றே…” என்றதும், “எதுக்கு இப்ப வம்பு பண்ணிட்டு இருக்கே…” என்றவளின் கையைப் பிடித்தவன், “ப்ளீஸ் சஹி… நம்ம வாழ்க்கைல முக்கியமான முடிவெடுக்க வேண்டிய கட்டத்துல இருக்கோம் மறுக்காம வா…”
கெஞ்சலாய் கேட்டவனிடம் மேலும் பிகு செய்ய முடியாமல், “சரி வர்றேன்… வெயிட் பண்ணு…” என்றதும் “என் செல்லக் குட்டி… வெல்லக்கட்டி…” கொஞ்சிவிட்டு வெளியேறினான்.
வெகு நாட்களுக்குப் பிறகு அந்தக் கொஞ்சலும், கெஞ்சலும் மனதுக்கு இதமாய் இருக்க புன்னகையுடன் எழுந்தவள் உடை மாற்றி எளிமையாய் புறப்பட்டு வந்தாள். “எதற்கு வெளியே போய் பேசக் கூப்பிடுகிறான்…” என்ற கேள்வி மனதுக்குள் அரித்தாலும் எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் கிளம்பினாள். அவள் வருவதற்குள் காபி குடித்து சசிகலாவிடமும், வேலை முடிந்து வந்த சாதனாவிடமும் சஹாவைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிய நிதின் அன்னையிடம் தான் பேசியதையும் கூறினான்.
“ஸ்ரீக்குட்டி, டாடி கிளம்பறேன்… ஒரு உம்மா கொடு…” என்று கன்னத்தைக் காட்ட முத்தமிட்டவள், ”நானும் வதேன் டாதி…” என்று கிளம்ப, “இன்னொருநாள் அழைச்சிட்டுப் போறேன்டா செல்லம்…” என்றதும் ஏமாற்றமாய் நோக்க, “நீங்க கிளம்புங்க நிதின்… நானும் ஸ்ரீக்குட்டியும் பார்க்குல விளையாடப் போறோம்…” சாதனா கூறவும் குழந்தை குஷியாகி, டாட்டா சொல்லி வழியனுப்ப கிளம்பினர். இருவரும் ஜோடியாய் செல்வதைக் கண்ட சரளா பிரவீணாவிடம், “இத்தனை நாளா இந்தத் தம்பி சாதனாவைத் தேடி வருதுன்னு நினைச்சேன்… இப்ப சஹானாவைக் கூட்டிட்டுப் போகுது…” என்றாள் வியப்புடன்.
“ம்ம்… அதானே… கேட்டா சரியான பதிலும் வராது… அந்த வீட்டுல என்னமோ சரியில்லை…” என்று சொல்லிக் கொண்டே திரும்பிய பிரவீணா, சாதனா குழந்தையுடன் அங்கே நிற்பதைக் கண்டதும் அசடு வழிந்தாள்.
“இப்ப உங்களுக்கு என்ன தெரியணும்… உங்களுக்கெல்லாம் வீட்டுல வேலையே இருக்காதா… எப்பப் பார்த்தாலும் அடுத்த வீட்டை எட்டிப் பார்த்து என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறது தான் வேலையா… போங்க, போயி புருஷன், புள்ளைக்கு சோறு பொங்கிப் போடுங்க…” எரிச்சலுடன் சொல்லிவிட்டு சென்றவளை முறைத்துக் கொண்டே சென்றனர்.
நிதின் பார்கிங்கில் இருந்த பைக்கை எடுத்து வர, “பைக்கா… கார்ல போயிடலாமே…” சாவியை நீட்ட அவன் முறைத்தான்.
“ஏன், நாம இதுக்கு முன்னாடி பைக்ல ஒண்ணாப் போனதே இல்லையா… இப்ப மட்டும் என்ன…”
“ப்ச்… எதுக்கு இப்ப அடம் பிடிக்கற…” உதடுகள் கேட்டாலும் உள்ளம் பைக்கில் செல்லவே ஆசைப்பட பிகு செய்து பிறகு அவள் ஒத்துக்கொள்ள மனதுக்குள், “உனக்கு எது பிடிக்கும்னு எனக்குத் தெரியாதா…” உதட்டுக்குள் சிரித்துக் கொண்டான்.
சில வருட இடைவேளைக்குப் பிறகு அவனுக்குப் பின்னில் பைக்கில் அமர்ந்தவளின் மனம் பழைய சந்தோஷ நினைவுகளுக்கு செல்ல உடைந்து முடமாகிப் போன சந்தோஷச் சிறகுகள் மீண்டும் புதிதாய் முளைத்துக் கொள்ள இதயத்தில் ஏதோ ஒன்று சுகமாய் உணரச் செய்தது. சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருந்தவள், “இப்பவாச்சும் நாம எங்க போறோம்னு சொல்லப் போறியா இல்லியா ரூபன்…” என்றாள் அதட்டும் குரலில்.
“சொல்லறேன்…” என்றவன் அங்கிருந்த அம்மன் கோவில் முன்பு வண்டியை நிறுத்தி, “சாமி கும்பிட்டு வரலாம் வா…” என்று முன்னில் நடக்க, அவளும் தொடர்ந்தாள்.
அழகான அலங்காரத்துடன் கருணை வடிவாய் வீற்றிருந்த அம்பிகையை வணங்கி பிரசாதம் வாங்கிக் கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்தனர்.
“சஹி…” அருகில் நின்றவன் அழைக்க, என்னவென்று பார்த்தவளின் நெற்றியில் கையிலிருந்த குங்குமத்தை வைத்து விட அவள் திகைப்புடன் விழிகளை விரித்தாள்.
“ரூபன், என்ன இது… ஏன் இப்படிப் பண்ணறீங்க…”
சிடுசிடுத்தவளை நெகிழ்வுடன் நோக்கிய நிதின், “சஹி… இந்த அம்பாள் சாட்சியா சொல்லறேன்… எனக்கு மனைவின்னு ஒருத்தி வந்தா அது நீ மட்டும் தான்… நீயில்லாம என் வாழ்க்கை முழுமையாகாது… தயவுசெய்து என் காதலைப் புரிஞ்சுக்க… நீ எனக்கு வேணும்…” என்றான் கண்ணீருடன்.
அவனைத் தன் நெஞ்சோடு சேர்த்து ஆறுதல் சொல்லி, “எனக்கும் நீ இல்லாத வாழ்க்கை நரகம் தான்டா முட்டாள்… ஆனா, என்னைப் போல ஒருத்தியை மருமகளா ஏத்துக்க உன் வீட்டுல சம்மதிப்பாங்களா…” என்று கதறத் துடித்த மனதை அடக்கிக் கொண்டு அமைதியாய் நிமிர்ந்தாள்.
“ரூபன்… உன் காதல் எனக்குப் புரியாம இல்லை… என்னோட காதல் அதில் குறைஞ்சதும் இல்ல… நாம ரெண்டு பேரும் சேரணும்னு நாம நினைச்சாலும் நம்ம விதி அப்படி நினைக்கலை… ஒருவேளை நான் சம்மதிச்சாலும் என்னை மருமகளா உன் வீட்டுல ஏத்துக்கறது ரொம்ப கஷ்டம்… அது வாழ்நாள் போராட்டமா நம்ம காதலை அசிங்கப்படுத்திடும்… அதுக்கு இப்படி விலகி நிக்கறது தான் நம்ம காதலுக்குக் கொடுக்கிற மரியாதையா நான் நினைக்கிறேன்… புரிஞ்சுக்க…”
கண்களில் கண்ணீர் பளபளக்க உருகிய குரலில் அவள் கூறியதைக் கேட்ட நிதின், “உன் பிரச்சனை என் வீட்டுல சம்மதிக்க மாட்டாங்கன்றது தான… அவங்க சம்மதிச்சுட்டா, ஓகே சொல்லிடுவியா… சொல்லு…” வேகமாய் கேட்டான்.
அவன் கேள்வியில் திணறியவள் என்ன சொல்வதென்று யோசித்துவிட்டு, “ம்ம்… முதல்ல அவங்க முழுமனசோட சம்மதிக்கட்டும்… அப்புறம் பார்க்கலாம்…” என்றாள்.
“ஓகே, போதும்… எனக்கு இது போதும்… இப்ப நாம என் வீட்டுக்குத்தான் போறோம்… அம்மா சம்மதிச்சா நீ மாத்திப் பேசக் கூடாது, சரியா…” என்றவன் அவள் கையைப் பிடித்து பைக்குக்கு அழைத்து செல்ல திகைத்தாள்.
மறுத்துக் கொண்டே
சம்மதிப்பதும்…
உறைந்து கொண்டே
உருகிப் போவதும்
உன் அருகில் மட்டுமே
சம்பவிக்கும் அதிரடி
ரசாயன மாற்றங்கள்…

Advertisement